வியாழன், 19 நவம்பர், 2009

சேது சமுத்திரம் திட்டத்தின் நிலை ?


சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற மாற்றுப்பாதை குறித்த ஆய்வு அறிக்கை என்னவானது என்று சுப்ரீம் கோர்ட் கேட்டபிறகுதான், இது குறித்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு உருப்படியான காரணமும் இன்றி, இத்திட்டம் குறித்து எந்தவொரு நடவடிக்கையும் மேற் கொள்ளாமல் ஆறுமாத காலம் வீணாக கழிக்கப்பட்டுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.சேது சமுத்திர திட்டத்தை மாற்றுப் பாதையில் நிறைவேற் றிட முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தரும்படி சுப்ரீம் கோர்ட் கேட்டிருந்தது.2008ம் ஆண்டு ஆரம்பத்தில், தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் இது குறித்து வழக்கு விசாரணையின் போது, "ராமர் பாலத்தை தவிர்த்துவிட்டு நான்கு ஏ என்றழைக்கப்படும் மாற்றுப் பாதையில் இத்திட்டத்தை செயல்படுத்த முடியுமா என்று கேட்டது."குறிப்பாக தனுஷ்கோடி அருகில் நிலத்தை வெட்டி அதன் மூலம் செயல்படுத்த முடியுமா என்பது குறித்து, எவ்வளவு விரைவாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அறிக்கையை அளிக்க வேண்டும்' என்றும் உத்தரவிட்டிருந்தது.இதையடுத்து, நோபல் பரிசு பெற்ற பச்சவுரி என்பவர் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு ஆராய்வதாகக் கூறப்பட் டது. சுப்ரீம் கோர்ட் உத்தரவு போட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ரவீந்திரன் மற்றும் பஞ்சால் ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, ஏற்கனவே கேட்டிருந்த அறிக்கை என்ன ஆனது என்று கேட்கப்பட்டது. இதையடுத்து, இரண்டு நாட்களில் அவசர அவசரமாக இந்த பச்சவுரி குழு கூடியது. அப்போது, நான்கு ஏ வழிப்பாதையில் திட்டத்தை நிறைவேற்ற முடியுமா, இல்லையா என்பது குறித்து கோவாவில் உள்ள நேஷனல் ஓசியோகிராபிக் இன்ஸ்டிடியூட் மூலம் ஆராய முடிவு செய்திருப்பதாக இந்த குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது.கடந்த வாரம் புதன்கிழமை அன்று டில்லியில் மிகவும் ரகசியமாக கூடிய இக்கூட்டத்தில் இந்த முடிவை பச்சவுரி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.இந்த முடிவு, கடந்த ஜூன் மாதமே எடுக்கப்பட்டு விட்டதாக தெரிகிறது. ஆனால், உருப்படியாக எதுவும் நடக்கவில்லை. இந்த குழுவில் மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் துறைமுக துறை இணை செயலர் ஸ்ரீவத்சவா என்பவரும் உறுப்பினர். கோவா இன்ஸ்டிடியூட் இயக்குனரும் ஒரு உறுப்பினர்.இவர்கள் தரப்பில் எடுக்கப்பட்ட அப்போதைய முடிவு, கப்பல் போக்குவரத்து அமைச்சகத்துக்கு மட்டும் தெரிவிக்கப்பட்டது. அப்போது இருந்து கடந்த ஆறு மாதமாக இந்த முடிவு வெறுமனே அமைச்சகத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ளது.கடந்த வாரம் கோர்ட் கேட்டபிறகு தான் தெரிவிக்கப்பட்டுள்ளது.தவிர, 2008ம் ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் ஆகிய மூன்று மாதங்களிலுமே பச்சவுரி குழு கூடி ஆலோசனை செய்தது. அந்த மூன்று ஆலோசனை கூட்டங்களிலும் எந்த முடிவும் எடுக்கப்படாமல் காலம் தாழ்த் தப்பட்டுள்ளது.இதில் மிகப்பெரிய வேடிக்கை என்னவென்றால், இந்த பச்சவுரி தலைமையிலான குழுவில் தமிழகத்தில் இருந்தும் இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.ஒருவர் தமிழக அரசின் சுற்றுச்சூழல் பிரிவின் தலைமைச் செயலர். மற்றொருவர் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு கலெக்டர். இவர்கள் மேற்கொண்ட நிலைப் பாடும் வெளியே வரவில்லை.இத்திட்டத்திற்கு என, 700 கோடி ரூபாய் வரை செலவாகிவிட்டது. திட்டப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த டிரெட்ஜர்கள் எனப்படும் மணல் அள்ளும் இயந்திரங்கள் எல்லாம் திருப்பிச் சென்றுவிட்டன. பணிகள் அனைத்துமே நிறுத்தப்பட்டு உள்ளன.மேலும் இத்திட்டத்திற்கு என நிர்ணயிக்கப்பட்ட செலவான 2,500 கோடி ரூபாய் என்பது, தற்போது 4,500 கோடி ரூபாயாக உயர்ந்தும் விட்டது. இது குறித்தும் எந்தவொரு புதிய முடிவும் எடுக்காமல் அமைச்சரவையின் கவனத்துக் கொண்டு செல்லாமல் மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகமும் அமைதியாகவே உள்ளது.காரணங்களே இல்லாமல் காலதாமதம் ஏற்படுத்திக் கொண்டிருப்பதன் மூலம், சேதுசமுத்திர திட்டம் என்பது கேள்விக் குறியாக மாறிக் கொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை: