சனி, 16 ஜனவரி, 2010

கூகுள் -சீன அரசு மோதல் உச்சகட்டம்
 மனித உரிமைகளை தட்டிக் கேட்டு வெப்சைட்டில் வரும் கருத்துக்களை தாங்கிக்கொள்ள முடியாத சீனா, கூகுள் வெப்சைட்டை தணிக்கை செய்ய ஆரம்பித்துள்ளது. இதனால், சீன கம்யூனிச அரசுக்கும், கூகுளுக்கும் இடையே மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.எந்த ஒரு தகவலையும் தெரிந்து கொள்ள இன்டர்நெட் மூலம் வழி செய்வது வெப்சைட்கள். இவைகளை தேடுவதற்காக அமைக்கப் பட்டது தான் யாகூ, கூகுள் போன்ற தேடுதல் சாதனங்கள் (சர்ச் இன்ஜின்). சீன கம்யூனிச ஆதிக்கத்தின் மனித உரிமை மீறிய செயல் களை, கூகுள் வெப்சைட்கள் மூலம் சீனாவைச் சேர்ந்த பலரும் விமர்சித்து வருகின்றனர். இது போதாதென்று, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் உள்ள இந்த சீனர்கள், இன்டர்நெட்டை பயன்படுத்தி, கூகுள் வழியாக பல வெப்சைட்களிலும், சீனாவில் நிலவும் மனித உரிமை மீறல்கள் குறித்து பகிரங்கமாக பல தகவல்களை வெளியிட்டு வருவது, சீன கம்யூனிச அரசுக்கு எரிச்சலை ஏற்படுத்தி வந்தது. இதனால், சீன கம்யூனிச அரசு இரண்டு வழிகளில் கூகுள் வெப்சைட்களை கட்டுப்படுத்த திட்டமிட்டது. ஒரு பக்கம், கூகுள் வெப்சைட்களை "அபகரித்து' அதில் உள்ள தகவல்களை தனக்கு சாதகமாக மாற்றி வெளியிட ஆரம்பித்தது. இப்படி பல வெப்சைட்களைத் "திருடி' வந்தது.இது பற்றி கூகுள் நிறுவனம் கேட்ட போது, தனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. உரிய விசாரணை செய்வதாக மட்டும் கூறியது. ஆனால், தொடர்ந்து, சீனாவில் இருந்து தான் கூகுளில் உள்ள வெப்சைட்கள் "திருடப்படுவது' அதிகரித்தது. அதிலும் குறிப்பாக, சீன மனித உரிமை பற்றி சொல்லும் வெப்சைட்கள் மட்டும் இப்படி "திருடப்பட்டு' சீன அரசுக்கு சாதகமாக வெளியிடப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. அதுபோல, மனித உரிமை மீறலை கிளப்புவோரின், "இ - மெயில்'களும் மாயமாகி விடுகின்றன.இப்படி ஒரு பக்கம் தன் "வேலை'யைக் காட்டிய சீன அரசு, தணிக்கை அதிரடியையும் இன்னொரு பக்கம் ஆரம்பித்து விட்டது; "கூகுள் வெப்சைட்களில் சீனாவின் இறையாண்மைக்கு எதிராக தகவல்கள் வருகின்றன; பலான வெப்சைட்கள் அதிகமாக வருகின்றன; அதனால், தணிக்கை செய்து தான் சீன மக்கள் பார்ப்பதற்கு அனுமதிக்க முடியும்' என்று தணிக்கையை சீனா நியாயப்படுத்தி வருகிறது. இந்த விவகாரம் முற்றியதை அடுத்து, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டனை கூகுள் நிறுவன உயர் அதிகாரிகள் சந்தித்து முறையிட்டுள்ளனர். "கூகுள் தேடுதல் சாதனம் என்பது, உலகில் உள்ள மக்கள் சுதந்திரமாக தகவல்களை தெரிந்து கொள்ளவும், எண்ணங் களை பரிமாறிக் கொள்ளவும் ஏற்படுத்தப்பட்டது. மக்களுக்கு தகவல்களை அளிப்பது தான் இணைய தளங்களின் பொறுப்பு. அதன் நம்பகத்தன்மை பற்றி சந்தேகிப்பது சரியல்ல; சீனா தன் கெடுபிடியை நீக்கி, கூகுள் நிறுவனத்துடன் பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டும்' என்று ஹிலாரி கிளின்டன் தெரிவித்தார்.கூகுள் நிறுவனம் சார்பில் உயர் அதிகாரி டேவிட் ட்ரம்மண்ட் கூறுகையில், "கூகுள் வெப்சைட்கள் அடிக்கடி "திருடு' போவதற்கு, சீனாவில் உள்ள சில கம்ப்யூட்டர் நிறுவனங்கள் தான் காரணம். திட்டமிட்டு இப்படி வெப்சைட்களை "திருடி' தகவல்களை திரிக்கின்றனர்; இப்படி செய்வதால், ரகசியமான தகவல்கள் திருடப்படுவதும், கடத்தப்படுவதும் எளிதாகி விடும். இதை கூகுள் அனுமதிக்க விரும்பாது. சீன அரசு இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதுபோல தணிக்கையையும் நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால், சீனாவில் கூகுள் செயல்பாடுகள் முற்றிலும் நிறுத்தப்பட வேண்டிய கட்டாயம் வரும்' என்று தெரிவித்தார். கூகுள் தேடுதல் சாதனத்தை அதிகம் பயன்படுத்துவோரில் சீன மக்கள் தான் அதிகம்.சீனாவின் கெடுபிடி நிறுத்தப்படாவிட்டால், விரைவில், சீன மக்களுக்கு கூகுள் மூலமான வெப்சைட்கள் கிடைக்காது; அதனால், பெரிய அளவில் சீன தொழில், வர்த்தகர்கள் முதல் சாதா மக்கள் வரை பாதிக்கப்படுவர். சீன அரசுக்கும், கூகுளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலில், கூகுள் பக்கம் அமெரிக்கா உள்ளது. இதனால், சீனாவின் கோபம் அதிகரிக்க வாய்ப்புண்டு. கூகுள் தன் செயல்பாட்டை நிறுத்துவதற்கு முதல் கட்டமாக, பீஜிங்கில் உள்ள தன் அலுவலகத்தை மூட திட்டமிட்டுள்ளது.

நன்றி:
தினமலர்.

கருத்துகள் இல்லை: