ஞாயிறு, 15 நவம்பர், 2009

டாலரின் மதிப்பு டல்லடிக்கிறது ?இனி அடுத்தது என்ன


அமெரிக்க டாலருக்கு வரலாறு காணாத நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இனி உலகிலேயே முன்னணி கரன்சி என்ற அதீத கவுரவம் இனி தொடருமா என்று அலசப்படும் அளவிற்கு, நிலைமை கீழிறங்கி வருகிறது.உலகப் பொருளாதாரத்திற்கு தரப்படும் ஊக்குவிப்புகளால், அடுத் தடுத்து ஓரளவு நிலைமை சீராகும் என்ற கருத்து பேசப்பட்டாலும், அது அமெரிக்க கரன்சியான டாலரின் ஸ்திரத்தன்மைக்கு வலு சேர்க்கவில்லை.பல்வேறு நாடுகளின் கரன்சிகளுடன் ஒப்பிடும் போது, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, கடந்த பதினைந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு ஏற்பட்டிருக்கிறது. உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் கையிருப்பு கரன்சியாக 64 சதவீதம் அமெரிக்க டாலர் இருக்கிறது. அப்படியிருக்கும் போது யூரோ கரன்சி, அல்லது அந்தந்த நாட்டின் கரன்சி எப்படி முன்னுக்கு வரும் என்ற கேள்வி எழும்.சீனாவுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா விஜயம் மேற்கொள்ளும் போது, அந்த நாட்டிற்கும் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள பரிவர்த்தனையில் அமெரிக்க டாலர் வீழ்ச்சி அடையாமல், ஏற்பாடுகள் செய்வார் என்ற பேச்சு இருக்கிறது.நெருடல் உறவு :அதிக அளவு அமெரிக்க டாலரை கையிருப்பாக வைத்திருக்கும் நாடுகளில் சீனாவுக்கு முதலிடம் உண்டு.அமெரிக்காவின் பொருளாதார வெற்றி சீனாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அப்படி எதிர்பார்த்த வெற்றி ஏற்படவில்லை என்றால், அது அமெரிக்க - சீன பொருளாதார உறவை பாதிக்கும். வேண்டுமென்றே தன் கரன்சியான யுவானை சற்று மதிப்புக் குறைவாக சீனா வைத்திருப்பதின் மூலம், அமெரிக்காவுக்கு தன் பொருட்களை அதிக ஏற்றுமதி செய்யப் பார்க்கிறது என்ற பேச்சும் இருக்கிறது. இந்த நெருடல்களை எப்படி அமெரிக்காவும், சீனாவும் பேசித் தீர்க்கப் போகின்றன என்பது இனி தான் முடிவாகும்.கடந்த சில வாரங்களில் ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் கரன்சிகள் அன்னியச் செலாவணி வர்த்தகத்தில் மதிப்பு கூடி நிற்கின்றன. இதில், மற்றொரு கரன்சியான யூரோ அதிக நம்பிக்கை தரும் கரன்சியாக பிரிட்டன் ஸ்டெர்லிங் பவுண்டை விட முந்தி நிற்கிறது. அமெரிக்க டாலர் மதிப்பில் மட்டும் உள்ள பொருட்கள் மவுசு குறைந்து வருகிறது.இவை எல்லாம் பார்க்கும் போது, என்னதான் வளர்ந்த நாடுகள் பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் அதிகப் பணத்தை ஊக்குவிப்புகள் என்ற பெயரில் கொட்டினாலும், மேலும் ஏதாவது அபாயம் வந்து விடுமோ என்ற அச்சம் வந்து விட்டது. அதன் எதிரொலியாக, அதிக அளவு நிதி வைத்திருப்பவர்கள் வழக்கத்திற்கு மாறாக தங்கத்தை வாங்கிக் குவிக்கின்றனர்.ஐரோப்பாவில் எந்த ரசீதும் இல்லாமல் தங்கக் கட்டிகளை வாங்கி சேமிப்பாக வைக்கின்றனர். இதுவரை இல்லாத வகையில், வெள்ளிக்கும் கிராக்கி ஏற்பட்டிருக்கிறது. நூறு கிராம் எடையுள்ள தங்கக்கட்டி உள்ளங்கையில் அடங்கிவிடும், அதன்விலை 3,500 டாலர், அதாவது அதன் மதிப்பு 1.60 லட்சம் ரூபாய். உலக கோல்டு கவுன்சில் தகவலின்படி, இந்த ஆண்டில் இதுவரை 20 சதவீதம் தங்கம் விற்பனை அதிகரித்திருக்கிறது.இந்தியாவில் ரிசர்வ் வங்கியும், கையிருப்பில் உள்ள டாலரைக் கொண்டு 200 டன் தங்கத்தை சர்வதேச நிதி நிறுவனமான ஐ.எம்.எப்.,மிடம் இருந்து வாங்கியிருக்கிறது. மத்திய நிதியமைச்சர் பிரணாபோ, "பணம் இருந்ததால் தங்கம் வாங்கினோம்: இன்னமும் அன்னியச் செலாவணிக்கு போதிய கையிருப்பு இருக்கிறது' என்றிருக்கிறார்.ஆஸ்திரேலிய நாடு, தொழில்துறைக்கு தேவையான கச்சாப் பொருட்களை அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடு. இங்கே, அந்த நாட்டு டாலர் மதிப்பு கூடியிருக்கிறது. அடுத்தாற்போல் தங்கள் நாட்டு டாலர் மதிப்பு சரியவிடாமல் இருக்க யுக்தியை வகுக்கத் திட்டமிட்டிருக்கின்றனர்.முக்கியமாக எண்ணெய் உற்பத்தி நாடுகள் மத்தியில் டாலர் மதிப்பு வீழ்ச்சி கவலை தருகிறது. அமெரிக்காவின் நெருக்கமான நாடான சவுதி எண்ணெய் வர்த்தகம் டாலர் கரன்சியில் தொடர்ந்து இருக்க விரும்புகிறது. ஆனால், கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகள் ( ஒபெக்) கூட்டத்தில் வெனிசூயலா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும், கடந்த இரு ஆண்டுகளாகவே கேள்வி எழுப்புகின்றன.கச்சா எண்ணெயை விற்று டாலராகப் பெற்று, அதை வைத்து நமக்குத் தேவையான பொருட்கள் வாங்கும் போது டாலர் வீழ்ச்சியால் அப்பொருட்கள் கூடுதல் விலை மதிப்பு பெறுகின்றன. இதைத் தடுக்க யூரோ, யென் போன்ற கரன்சிகளுக்கும் வர்த்தகம் செய்தால் என்ன என்பது இவர்கள் கேள்வி. இதற்கு இன்னமும் விடை காணவில்லை.ஆனால் ரஷ்யாவும், சீனாவும் தங்களுக்குள் நடக்கும் வர்த்தகத்தில் டாலர் தேவையின்றி, பரஸ்பரம் இருநாட்டு கரன்சிகளை பயன்படுத்திக் கொள்வது என்ற முடிவுக்கு ஏற்கனவே வந்து ஒப்பந்தமும் ஆகியிருக்கிறது. இப்பாணியில் பிரேசில், இந்தியா பேச்சு நடைபெறுகிறது.இவைகளை எல்லாம் பார்க்கும் போது, அடுத்த சில மாதங்களில் டாலர் வலுப்பெறும் தன்மை அதிகரிக்காத பட்சத்தில், உலக நாடுகள் பலவும் தங்களது கரன்சியை சரிய விடாமல் காக்க, புதிய அணுகுமுறைகளை அமல் படுத்த நேரிடும் நிலைக்கு தள்ளப்படும் புதிய சூழ்நிலை உருவாகி வருகிறது.

கருத்துகள் இல்லை: