புதன், 25 நவம்பர், 2009

லிபரான் கமிஷன் அறிக்கை:வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட 68 பேர் மீது குற்றச்சாட்டு


புது தில்லி, நவ. 24: பாபர் மசூதி இடிப்பை நடத்தி முடித்து வகுப்பு கலவர நிலைக்கு நாட்டை கொண்டுசென்றதில் பாஜக மூத்த தலைவர்கள் வாஜ்பாய், எல்.கே.அத்வானி, சங்க பரிவாரங்களின் நிர்வாகிகள் உள்ளிட்ட 68 பேருக்கு பங்கு உள்ளது என்று லிபரான் கமிஷன் குற்றம்சாட்டியுள்ளது.அயோத்தியில் பாபர் மசூதியானது 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி கரசேவகர்களால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. இதற்கு பாஜக, விஎச்பி, ஆர்எஸ்எஸ் உள்ளிட்டவை காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் இதை மறுத்த பாஜக, சங்கபரிவாரங்கள் இந்துக்களின் மனக் குமுறலே மசூதி இடிப்பில் முடிந்தது என்று குறிப்பிட்டு வருகின்றனர். பாபர் மசூதி இடிப்பு குறித்து விசாரித்த லிபரான் கமிஷன், தனது அறிக்கையை கடந்த ஜூன் 30ம் தேதி அரசிடம் ஒப்படைத்தது. இந்நிலையில் அந்த அறிக்கையின் சில பகுதி ஆங்கில நாளேடு ஒன்றுக்கு ரகசியமாக கசிந்து புயலை கிளப்பிவிட்ட நிலையில் மறுநாள் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டது. வகுப்பு நல்லிணக்கத்தை சீர்குலைக்கச் செய்யும் அளவுக்கு பூதாகர பிரச்னையாகிப்போன பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்துக்கு சங்கபரிவார அமைப்புகள், அதிகாரிகள் உள்ளிட்ட 68 பேர் மீது கடுமையாக குற்றம் சுமத்தியுள்ளது லிபரான் கமிஷன். 4 தொகுப்புகளில் 1000 பக்கம் கொண்டுள்ளது லிபரான் அறிக்கை. இந்த அறிக்கை குற்றம்சுமத்தியுள்ள 68 பேரில் முதலில் இடம்பெறுபவர்களாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி ஆகியோர் உள்ளனர். பாஜக தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, அப்போதைய உத்தரப்பிரதேச முதல்வர் கல்யாண் சிங், விஎச்பி அமைப்பைச் சேர்ந்த கிரிராஜ் கிஷோர், அசோக் சிங்கால் உள்ளிட்டோரையும் இந்த கமிஷன் பாபர் மசூதி இடிப்பில் குற்றம்சாட்டியுள்ளது. 16ம் நூற்றாண்டு வரலாற்றுச்சின்னமாக திகழ்ந்த பாபர் மசூதியை தகர்க்க சங்கபரிவாரங்கள் முடிவெடுத்தாலும் அதில் பாஜகவின் மிதவாதத் தலைவர்கள் எனக் கூறிக்கொள்ளும் வாஜ்பாய், அத்வானி ஆகியோருக்கும் பங்கு உள்ளது என லிபரான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இந்த தலைவர்களுக்கு சந்தேகத்தின் பலனைக் கொடுத்து பாபர் மசூதி இடிப்புக் குற்றத்திலிருந்து விடுவிக்கக்கூடாது என்றும் லிபரான் தெரிவித்துள்ளார். மக்கள் வைத்திருந்த நம்பிக்கைக்கு மாறாக இவர்கள் நடந்துள்ளனர். செய்யக்கூடாத குற்றச்செயலை செய்துள்ளனர் இந்த போலி மிதவாதிகள். இதைவிட பெரிய துரோகமோ குற்றமோ ஜனநாயகத்தில் நடந்து இருக்க முடியாது. மசூதி இடிப்பில் பிரதான பொறுப்பு ஆர்எஸ்எஸ், விஎச்பி, பஜ்ரங் தளம், சிவசேனை, பாஜக ஆகியவற்றின் மேல்சுற்று தலைவர்களுக்கு உள்ளது. இந்துக்களின் மனக்குமுறலால் தன்னிச்சையாக வெளிப்பட்ட ஆவேசம் மசூதி இடிப்பு என்றும், முன்கூட்டியே திட்டமிட்டு இது நடத்தப்பட்டதல்ல என்றும், வெளிநாட்டு சக்திகள் அரங்கேற்றிய சதி என்றும் தமது கற்பனைக்கேற்ப பலர் பலவிதமாக கூறினர். ஆனால் இவையெல்லாம் பொய்யென லிபரான் கமிஷன் மேலும் தெரிவித்துள்ளது.நரசிம்மராவ் மீது குறையில்லை: அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவை பாபர் மசூதி இடிப்பை தடுக்கத் தவறியதாக குறை சொல்ல இயலாது. அயோத்தியில் என்ன நடக்கிறது என்பதை படம்பிடித்துக் காட்டமுடியாதபடி உளவு அமைப்புகள் செயலிழந்து கிடந்தன. அப்போதைய கல்யாண் சிங் அரசு கோரியபடி மத்திய படைகள் அனுப்பப்பட்டபோதும் அந்த படைகளை சம்பவ இடத்தில் நிறுத்தாமல் அப்பால் நிறுத்தியது மாநில அரசு. மேலும் மாநில உயர்நீதிமன்றம் நியமித்த உச்சநீதிமன்ற பார்வையாளரும் நடுநிலைமையாக செயல்படவில்லை. மசூதி கூரைமுகடுகள் இடிக்கப்பட்டபோது அவர் சம்பவ இடத்திலேயே இல்லை என்று கமிஷன் மேலும் குறிப்பிட்டுள்ளது. பாபர் மசூதி இடிப்புக்குப்பிறகு 10 நாள் கழித்து அமைக்கப்பட்ட லிபரான் கமிஷன் 48 முறை நீட்டிப்புப் பெற்றது. கடந்த ஜூன் மாதம் 30ம் தேதி அரசிடம் அறிக்கையை தாக்கல் செய்தது.

கருத்துகள் இல்லை: