ஞாயிறு, 8 நவம்பர், 2009

உரத்த சிந்தனை : விவசாயத்தை அழிக்கும் வேலைத் திட்டம்

இந்தியாவின் இதயம் அதன் கிராமங்களில் இயங்குகிறது' என்றார் காந்தி. பல கோடி மக்கள் கொண்ட இந்தியா, பல அன்னிய ஆக்கிரமிப்புகளுக்குப் பிறகும், தனது உயிரோட்டத்தை இழக்காதிருப்பது, விவசாய மக்களின் தன்னலமற்ற உழைப்பால் தான்!இந்த உண்மையான தேச பக்தர்களுக்கு, அரசு மற்றும் அரசியல்வாதிகள் செய்த கைம்மாறு என்ன? சதா, சர்வ காலத்திற்கும் விவசாயிகள், ஏழ்மை, பசி பட்டினி, அறியாமை, நோய் நொடியில் துன்பப்பட வேண்டும் என்பது தான், இவர்களின் அந்தரங்க ஆசை போலும்.

விடுதலை பெற்று 60 ஆண்டுகள் கடந்த பின், இந்திய விவசாயிகளின் வாழ்க்கைத் தரம், இம்மியளவு கூட உயராமல் இருப்பதன் காரணம் தான் என்ன? அடுத்தடுத்து பதவிக்கு வரும் அரசியல் கட்சிகள், இந்திய மக்கள் தொகையில் 80 சதவீதத்திற்கும் மேலாக கிராமங்களில் வசிக்கும் விவசாயிகளையும், அவர்களின் பரம்பரைத் தொழிலான விவசாயத்தையும் பாழ்படுத்தியது தான், கைம்மாறு போலும்.சமீப காலத்தில், கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை வாக்காளர்களைக் கவர்ந்து, மிக எளிதில் அவர்களின் ஓட்டுகளைப் பெற்று, பதவி சுகத்தை அனுபவிக்கவும், கோடிகள் குவிக்கவும் அரசியல்வாதிகளால் கண்டுபிடிக்கப்பட்டு, மிகச் சிரத்தையுடன் செயல்படுத்தப்பட்டு வருபவை தான், அரசின் இலவச மற்றும் சலுகைத் திட்டங்கள்.இதனால், உடலுழைப்பில், விவசாயிகள் கொண்டிருந்த அதீத நம்பிக்கையை இழக்கச் செய்துள்ளனர். "தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்' என்ற பெயரில், மத்திய அரசால் துவங்கப்பட்டு, கிராமப்புறங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்தால், கிராமங்கள் சோம்பேறிகளின் உறைவிடங்களாக மாறி வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது.



வருடத்தில், 100 நாட்கள் வேலை உத்தரவாதமளிக்கும் இத்திட்டத்தால், பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது விவசாய வேலைகள் தான். தினக்கூலியாக 80 ரூபாய் பெறும் விவசாயி, ஆண்டுதோறும் பல ஆயிரங்கள் விவசாயத்திற்காக செலவு செய்து, இறுதியில் தான் பட்ட கஷ்ட நஷ்டங்களைத் தவிர்க்க, பரம்பரைத் தொழிலான விவசாயத்தை கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.இப்படி கிராமங்கள் தோறும் விவசாயிகள், விவசாயத்தை கைவிட முயன்றிருப்பதால், அதிவிரைவில் உணவு, தானியங்கள் பற்றாக்குறை ஏற்பட்டு, அவற்றை வெளிநாடுகளிலிருந்து பல கோடி ரூபாய் செலவு செய்து இறக்குமதி செய்யும் அவல நிலை ஏற்படும்.தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், பொய்யான பெயர் எழுதப்பட்டு, பணம் கையாடல் செய்யப்படுகிறது. பல கிராமங்களில், 80 ரூபாய்க்கு பதிலாக, குறைவான தொகை கொடுத்து பணம் சுருட்டப்படுகிறது. இப்புகாரால், ஊராட்சித் தலைவர்கள் பதவி நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர்.



இப்போது, 100 நாட்கள் வேலைக்கு பதிலாக, 150 நாட்களாக அதிகரிக்க இருப்பதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. இது, அரசின் தொலைநோக்குப் பார்வையா அல்லது கிட்டப் பார்வையா என்பது புரியவில்லை.உடலுழைப்பின்றி, உண்ணவும், உடுக்கவும், கவலையின்றி படுத்துறங்கவும், வாய்ப்பு கிடைத்துவிட்ட நிம்மதியில், திருப்தி கண்டுவிட்ட விவசாயி, இனி உழைப்பை மூலதனமாகக் கொண்டு, வேளாண் தொழில் பக்கமே தலைவைத்து படுக்க மாட்டான்.இந்த, 100 நாள் வேலை திட்டத்தால், அரசுக் கருவூலம் காலியாவதோடு, விவசாயத்தை கைவிட்டு விட்ட விவசாயி, சோற்றுக்காக பிறரிடம் கையேந்தும் பரிதாப நிலை தான் ஏற்படும்.வேளாண் தொழில் தழைக்க, விவசாயிகள் பயனடைய, கிராமங்கள் வளர்ச்சி பாதையில் நடை போட, முதலில் சுயநலப்போக்கை கைவிட்டு, நாட்டின் மீது, நாட்டு மக்கள் மீது, அரசியல்வாதிகளும், மத்திய - மாநில அரசுகளும் உண்மையான அக்கறை கொள்ள வேண்டும். பதவியில் அமர்ந்து, மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிப்பதை அறவே கைவிட வேண்டும்.வேளாண் தொழில் வளர்ச்சி காண, கீழ்கண்ட திட்டங்களை முழு மூச்சுடனும், இதய சுத்தியுடனும் செயல்படுத்த வேண்டும்.



* விவசாயத்திற்கு ஆதாரமாக இருப்பது தண்ணீர். எனவே, புதிய ஏரி, குளம், கண்மாய்கள், கால்வாய்கள் வெட்டப்பட வேண்டும். மாநிலத்தில் ஓடுகிற அனைத்து நதிகளையும் இணைத்து, மழைக்காலங்களில் கிடைக்கும் மழைநீரை கால்வாய்கள் மூலம், ஏரி, குளங்களில் நிரப்பச் செய்து, கோடையில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையை தவிர்க்க வேண்டும்.
* தரமான நல்ல விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் தட்டுப்பாடில்லாமல், விவசாயிகளுக்கு அரசு இலவசமாக அல்லது குறைந்த விலையில் வழங்க வேண்டும்.
* விவசாயிகளுக்கு வட்டியில்லா கடனும், இயற்கை இடர்ப்பாடுகள் நேரும் போது, அக்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
* வேளாண் விளைபொருட்களை விவசாயிகளிடமிருந்து அரசே நேரடியாக கொள்முதல் செய்து, ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் வினியோகம் செய்ய வேண்டும்.
* வியாபாரிகளையும், இடைத்தரகர்களையும் எக்காரணம் கொண்டும் விவசாயிகளிடமிருந்து விளைபொருட்களை அடிமாட்டு விலைக்கு வாங்க, அனுமதிக்கக் கூடாது. இதற்கான சட்டத்தையும் அரசு கொண்டு வர வேண்டும்.
* விளைபொருட்களுக்கு லாபகரமான விலையை, அரசு நிர்ணயம் செய்ய வேண்டும்.
* அன்னிய செலாவணியை ஈட்டித் தரும் காட்டாமணக்கு விதை உற்பத்தி, மூலிகை செடிகள், வாசனை பூச்செடிகள் வளர்ப்பில், விவசாயிகள் ஈடுபட ஊக்குவித்து, அவற்றை சந்தைப்படுத்த, அரசே உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
* கிராமப்புறங்களில், விவசாய உபதொழில்கள், குடிசைத் தொழில்கள் துவங்க, அரசு நிதியுதவி செய்ய வேண்டும். இதற்கு அனைத்து கிராமப்புறங்களிலும் தேசிய மயமாக்கப்பட வங்கிக் கிளைகளை திறக்க வேண்டும்.
* கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க, சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளை அரசு நிறுவ வேண்டும்.
* ஊரக வளர்ச்சிக்குத் தேவையான உள்கட்டமைப்புகளை கிராமப்புறங்களில் அரசு உருவாக்க வேண்டும்.இவற்றையெல்லாம் நிறைவேற்றினால் மட்டுமே அரசு, தன்னை உண்மையான மக்கள் நல அரசு என்று கூறி, பெருமைப்பட்டுக் கொள்ள முடியும்.

நன்றி

ஜி.கிருஷ்ணசாமி


கருத்துகள் இல்லை: