வெள்ளி, 27 நவம்பர், 2009

துபாய் ரியல் எஸ்டேட் சந்தையில் வீசியது புயல்.., இந்திய பங்குச் சந்தையில் பாதிப்பு


துபாய் ரியல் எஸ்டேட் சந்தையில் ஏற்பட்ட நிதி பாதிப்பு உலக அளவில் பெரும் பாதிப்பை சந்தையில் ஏற்படுத்தியது. இந்திய பங்குச் சந்தையில் அதன் எதிரொலியாக 600 புள்ளிகள் இன்று மதியம் சரிந்தன. "துபாய் வேர்ல்ட்' என்ற அமைப்பு ஐக்கிய அரபு அரசு ஆதரவு பெற்றது. பெரிய நிதிச்சந்தை நிறுவனம். துபாய் ஷேக் முகமது பின் அல் மக்தூம் சொத்தை நிர்வகிக்கும் நிறுவனம் .மாபெரும் இந்த நிறுவனத்தின் துணை நிறுவனம் "நக்ஹீல்' என்பதாகும். பிரமாண்ட அடுக்குமாடிக் கட்டடங்கள், மற்றும் பல்வேறு வர்த்தக நிறுவனங்களில் தொடர்புடைய இந்த நிறுவனம் பொருளாதார சிரமத்தில் சிக்கியது. அதை அறிந்த ஷேக் உடனடியாக அந்த நிறுவனத்தை சிக்கனப்படுத்த நிர்வாகத்தை மாற்றினர். அதற்குள் 5900 கோடி டாலர் ( 2.70 லட்சம் கோடி ரூபாய்) நஷ்டத்தை சமாளிக்க முடியாமல் திணறுகிறது என்ற தகவல் கசிந்தது. உரிய அளவு வர்த்தகத்திற்கு பணம் இல்லை.

துபாய் அரசிடம் பணத்திற்கு பஞ்சம் இல்லை, சமாளித்து விடலாம் என்று அறிவித்த போதும் உலக அளவில் ரியல் எஸ்டேட் , மற்றும் வங்கிகள் சந்தையை வெகுவாகப் பாதித்தது. அது பாரீசில் எதிரொலித்தது, ஓரளவு ஜப்பான் சந்தை தப்பியது. ஐரோப்பிய சந்தைகள் அடி வாங்கின. அமெரிக்க வங்கிகள் பாதிப்படைந்திருக்கிறதா என்பது தெரியவில்லை. என்றுமே "துபாய் வேர்ல்டு' அமைப்பில் சூரியன் அஸ்தமிக்காது என்ற கோஷம் இப்போது அர்த்தமற்றதாக மாறிவிட்டது. இந்த நிலையை உணர்ந்து சவுதி வங்கிகள் தங்கள் வங்கிப் பணப் பரிவர்த்தனையை இவர்களுடன் நிறுத்திக் கொண்டன, இந்தோனேஷியாவில் இருந்து இங்கே வந்த "இஸ்லாமிய நிதி' கதி என்ன ஆகும் என்று தெரியவில்லை. இதன் பாதிப்பால் அபாரமாக ஏறிய தங்கத்தின் விலையும் சற்று சரிந்தது.

பங்குச் சந்தை : மும்பையில் பங்குச் சந்தை துபாய் புயலில் சிக்கி அதிக அளவு இழப்பைச் சந்தித்தது. திடீரென வர்த்தகத்தில் 590 புள்ளிகள் சரிந்தன. அப்போது, குறியீட்டெண் 16,264.86 ஆக இருந்தது. "நிப்டி'யும் 176 புள்ளிகள் இழந்தது. துபாய் கட்டுமானத்துடன் தொடர்பு கொண்ட எல் அண்ட் டி பங்குகள் 4.89 சதவீதம் சரிந்தது. ஐ.சி.ஐ.சி.ஐ., பங்கு மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் சரிந்தன.

இன்னும் நான்கு அல்லது ஐந்து நாளில் ஐக்கிய அரபு எமிரேட் அரசு எடுக்கும் நடவடிக்கைகளைப் பொறுத்து இதன் பாதிப்பு குறித்த மற்ற தகவல்கள் வெளிவரும்.

பாதிப்பு நமக்கு வருமா? "துபாய் ரியல் எஸ்டேட்டில் ஏற்பட்ட பாதிப்பு அங்கு வாழும் வெளிநாட்டு இந்தியர் தங்கள் பணத்தை இங்கு அனுப்பும் அளவு குறையாது, ஏனெனில், பெரிய பாதிப்பு ஏற்பட்டிருந்த போது அங்கிருந்து வரும் பண அளவு குறையவில்லை' என்று நிதித்துறைச் செயலர் அசோக் சாவ்லா தெரிவித்தார். அதே சமயம் எந்த அளவு இந்த பாதிப்பு அங்கே ஏற்பட்டிருக்கிறது என்பதை நிதித்துறை முழுவதும் ஆராயும் என்று கூறினார். ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரெட்டி கூறுகையில் , "மத்திய கிழக்கில் இப்போது ஏற்பட்டிருக்கும் பிரச்னையால் நமக்கு பாதிப்பு பெரிய அளவில் வராது ' என்றார்.

கருத்துகள் இல்லை: