"உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் இந்தியர் தானா' என, மத்திய மனிதவள அமைச்சகம் கேள்வி எழுப்பிய விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், தனக்கு ஐதராபாத் பல்கலை வழங்கவிருந்த கவுர டாக்டர் பட்டத்தை ஆனந்த் ஏற்க மறுத்துள்ளார்.
பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளதால், ஆடிப் போன மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல், செஸ் சாம்பியன் ஆனந்திடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
தமிழகத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன் ஆனந்த். இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமை இவருக்கு உண்டு. உலக செஸ் சாம்பியனும் கூட. இந்தியாவைச் சேர்ந்த இளைய தலைமுறையினர், செஸ் விளையாட்டில் சாதிப்பதற்கு முன்னோடியாக விளங்கியவர்.இவரது சாதனைகளை பாராட்டும் வகையில், இந்திய அரசு இவருக்கு பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது.
சர்வதேச அளவில் நடக்கும் செஸ் போட்டிகளில் பங்கேற்பதற்கு வசதியாக இவர், ஸ்பெயினில் தங்கியுள்ளார்.இந்நிலையில், ஐதராபாத் பல்கலைக் கழகம், ஆனந்துக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்தது. இதற்கான கோப்புகளை கடந்தாண்டு மத்திய மனித வள அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தது. ஆனால், இது தொடர்பாக முடிவு எடுப்பதில் மனிதவள அமைச்சகம் தாமதித்தது.
ஆனந்த், ஸ்பெயின் குடியுரிமை பெற்றவர் என்ற தகவல், மனிதவள அமைச்சகத்துக்கு கிடைத்தது தான் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.எனவே, ஆனந்த் இந்திய குடியுரிமை உடையவர் தான் என்பதை நிரூபிக்கும்படியும், அதற்கான சான்றுகளை அளிக்கும்படியும் மனிதவள அமைச்சகம் சார்பில், ஐதராபாத் பல்கலைக்கு வலியுறுத்தப்பட்டதாக தெரிகிறது.
இதற்கிடையே, ஐதராபாத்தில் தற்போது நடந்து வரும் சர்வதேச கணிதவியலாளர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆனந்த் நேற்று வந்தார். அந்த தேதியிலேயே அவருக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்க, ஐதராபாத் பல்கலை திட்டமிட்டது. ஆனால், மத்திய மனிதவள அமைச்சகத்திடம் இருந்து இதுகுறித்து எந்த பதிலும் வரவில்லை.
இதனால், பட்டமளிப்பு விழாவை தள்ளி வைப்பதாக அறிவித்தது. இந்த தகவலால், ஆனந்த் வருத்தம் அடைந்தார். இதற்கு பதிலடியாக,"எனது குடியுரிமை குறித்து கேள்வி எழுப்பி, சர்ச்சையை கிளப்பிய இந்த டாக்டர் பட்டத்தை ஏற்கப்போவது இல்லை என, ஆனந்த் அதிரடியாக அறிவித்தார்.

