அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 14 டிசம்பர், 2010

கறைபட்டுப் போன கனவு ?



முகத்திலே முறுவல், நடையில் நம்பிக்கையின் துள்ளல்.மிடுக்காக உடை அணிந்து தலை நிமிர்ந்து நடந்து வருகிற இளைஞனின் முகத்தில் ஏதோ ஒரு வசீகரம் இருக்கத்தான் செய்கிறது.வசிகரமா ? கம்பீரமா ? தன்னம்பிக்கையா 
எனக்கு அதைச் சொல்ல சரியான வார்த்தை அகப்படவில்லை.

வர்ணிக்க முடியாத அந்த வசீகரத்தின் பின் ஒரு வரலாறு இருக்கிறது.
நெடுநாள்களாக நானறிந்த பையன் அவன்.சில ஆண்டுகளுக்கு முன் வரை அவன் பொருளாதாரப் பின்னணி ஒன்றும் பிரமாதமாக இருந்திடவில்லை.ஆனால் அவன் நம்பிக்கை வைத்திருந்த கல்வியும்,அதற்குப்பின் இருந்த உழைப்பும்,உலகை ஜெயிக்க வேண்டும் என்ற துடிப்பும் அவனை மாற்றின.வெற்றியும் இளமையும்  இன்று அவன் விலாசங்களாகிவிட்டன.

கம்பீரமான இளைஞன் என் ஜன்னலைக் கடந்து போனான்.அவன் முதுகுப் புறத்தைப் பார்த்த நான் பதறிப் போனேன்.அவனது ஆடையின் பின் புறம் முழுவதும் -மிடுக்கான ஆடை எனச் சற்று முன் சொன்னேனே அந்த ஆடை-முழுக்க சேறு.குதிங்காலில் இருந்து தோள்பட்டைவரை மழைச் சேறு புள்ளி புள்ளியாய் கோலமிட்டிருந்தது.புள்ளிகள் எல்லாம் பெரும் புள்ளிகள்.

எப்படி சேறு வந்தது என்று உற்றுப்பார்த்தேன்.பாதுகாக்கும் என்று எண்ணி அவன் அணிந்திருந்த ரப்பர் செருப்பு தயக்கமின்றி அவன் முதுகில் சேற்றை வாரித் தெளித்திருந்தது.முதுகெல்லாம் சேறு இருப்பதை அறியாமல் அவன் முன்னேறிச் சென்று கொண்டிருந்தான் 
மிடுக்காக.

அவனது முன்புறத்தையும்  முகத்தையும் பாத்தவர்கள் நட்புப் பாராட்டி முறுவலித்தர்கள்.முதுகைப் பார்த்தவர்கள் ஏளனமாக சிரித்து உதட்டோரம் சிரிப்பை ஒளித்துக் கொண்டார்கள்.

ஓடிப் போய் அந்த இளைஞனிடம் உண்மை  நிலவரத்தைச் சொல்ல வேண்டும் என ஓர் துடிப்பு எழுந்தது. பாதுகாக்கும் என நீ நினைத்த செருப்பு உன்னைப் பாழ்படுத்திக் கொண்டிருக்கிறது நண்பா.உதறி தள்ளு அதை என அவனுக்குச் சொல்லும் ஆசையில் எழுந்தேன். 

என் மடியில் இருந்த செய்தித்தாள்கள் நழுவித் தரையில் விழுந்து விரிந்தன.
விரிந்த இதழ்கள் எல்லாவற்றிலும்  ஊழல் செய்திகள் ஒலித்துக் கொண்டிருந்தன.காற்றையும் காந்த அலைகளையும் காசு பண்ணிய ஊழல்.படைவீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை பதவியில் இருப்பவர்கள் பங்கு போட்டுக் கொண்ட ஊழல்.அண்டை மாநிலத்தில் அரசு நிலத்தை பெண்டு பிள்ளைகளுக்கு ஒதுக்கிய ஊழல்.

உலக அளவில் நடந்த விளையாட்டுப் போட்டியில் உள்ளிருந்தே சுருட்டிய ஊழல்.வரிக்கு வரி,வார்த்தைக்கு வார்த்தை ஊழல்கள் ஒளிர்ந்துக் கொண்டிருந்தன. அந்த நொடியில் நமது அரசமைப்பு சட்டம் இந்த தேசத்தை "சோஷலிச மதச்சார்பற்ற ஜனநாயக இந்திய குடியரசு " என்று வர்ணிக்கின்ற வரி மனதில் ஓடி மறைந்தது.

அத்தனையும் பொய்,அர்ததமற்ற அலங்கார வார்த்தைகள் என உள்ளம் குமுறியது. 

உன்னதமான ஒரு கனவு கறைபட்டுப் போனதை எண்ணிய போது இதயத்தின் ஓரத்தில் ஊமை வலி ஒன்று எழுந்தது.உட்கார்ந்து  விட்டேன்.அந்த இளைஞனைப் போல் அல்லவா இருக்கிறது என் தேசம்! முதுகிலே இருக்கிற சேறு தெரியாமல் முகத்திலே முறுவல் ஏந்தி நடை போடுகிறது.காலனி போல் காப்பாற்றும் என நினைத்த அமைப்பு கண்ணுக்குத் தெரியாமல் சகதியை அல்லவா வாரி இறைத்துக் கொண்டிருக்கிறது.

அலைக்கற்றை ஒதுக்கீடு முறையாக நடந்திருந்தால் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு அரசுக்கு வருமானம் வந்திருக்கும் என்கிறது மத்திய தணிக்கை அறிக்கை.அரசுக்கு இந்த பணம் வந்திருந்தால் இப்போது உள்ளதைவிட பள்ளிகளின் எண்ணிக்கையை மூன்று மடங்கு அதிகரித்திருக்கலாம்.( இந்த ஆண்டு பட்ஜெட்டில் மத்திய அரசு கல்விக்கு ஒதுக்கிய நிதி 49,904 கோடி ரூபாய் ) எத்தனை விவசாயிகளின் கண்ணீரைத் துடைத்திருக்கலாம்! விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களின் அளவு 70 ஆயிரம் கோடி.இது அதைப் போல இரண்டரை மடங்கு அதிகம்.


ஊழலினால் பாதிக்கப்படுவது அமைச்சர்கள் வீட்டு குழந்தைகள் அல்ல.
அதிகாரிகளின் வீட்டு பிள்ளைகளும் அல்ல.பாதிக்கப்படுபவர்கள் ஏழைகளும்,சிறுதொழில் புரிவோர்க்களும்தான்.ஊழல் நிறைந்த அமைப்பைப் பயன்படுத்திக் கொண்டு பெரிய நிறுவனங்கள் ஏகபோக சந்தைகளை உருவாக்கி கொள்கின்றன.அதிக லாபம் அடைகின்றன. அவை இந்த ஊழல்நிறைந்த அமைப்பைப் பாதுகாக்கவே முயற்சிக்கும்.


சமநீதி கொண்ட,சம வாய்ப்புக் கொண்ட ஒரு சமூகத்தில் நம் குழந்தைகள், நம் குழந்தைகளின் குழந்தைகள் வாழ வேண்டும் என நாம் நிஜமாகவே விரும்புவோமானால் ஊளை ஒழிக்கக் களமிறங்க வேண்டும்.அதில் ஈடுபட்டோரையும்,அவர்களைக் காப்போரையும் கடுமையாக விரைந்து தண்டிக்க வகை செய்யும் சட்டங்களும் அமைப்புகளும்  கோரி நாம் குரலெழுப்ப வேண்டும்.


ஏனெனில் ஊழலை விடக் கொடுமையானது அதைக் கண்டு அமைதி காப்பது.


நன்றி : திரு.மாலன் அவர்கள்
              புதிய தலைமுறை

திங்கள், 21 ஜூன், 2010

கட்சி தாவல் : கழகங்கள் போடும் கணக்கு ?

அற்ற நீர்குளத்து அறுநீர் பறவைபோல்' அ.தி.மு.க., என்ற குளத்தில் இருந்து பறக்கும் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அ.தி.மு.க., தலைமை தனது அஸ்திவாரத்தை பலப்படுத்தும் வேலையில் இறங்கியிருப்பது இந்த பறவைகளால் அந்த கட்சிக்கு கிடைத்த நன்மை.


பறந்து வரும் பறவைகளுக்கு அடைக்கலம் தரும் கூடாரமாக தி.மு.க., மாறி வருகிறது. வந்தவர்களை வரவேற்ற நிலை மாறி, "வாருங்கள்... வாருங்கள்...' எனஅழைக்கும்நிலைக்கு தன்னை மாற்றிக் கொண்டுள்ளது தி.மு.க., தலைமை.அ.தி.மு.க.,வை நிலைகுலையச் செய்ய, ஆளுங்கட்சி நடத்தும் இந்த இழுப்பு வேலைகள், அவர்களது கட்சியிலும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விஷயத்தில், ஆளுங்கட்சியும், அதில் இணைபவர்களும், எதிர்காலக் கணக்குகளை போட்டுப் பார்த்த பின்புதான், இணைப்பு வைபவம் நடந்து வருகிறது.


தூத்துக்குடியில் பெரியசாமியின் இடத்தை எதிர்காலத்தில் நிரப்பவும், பெரியசாமிக்கு, "செக்' வைக்கவும் ஒரு ஆள்தேவை என்பது தி.மு.க.,வின் கணக்கு. தூத்துக்குடி தி.மு.க.,வில் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்புவதன் மூலம், இதே சொல்வாக்குடன் அரசியலைத் தொடர முடியும் என்பது அனிதா ராதாகிருஷ்ணனின் எதிர்பார்ப்பு.

வியாழன், 24 டிசம்பர், 2009

ஆர்.எஸ்.எஸ்.யின் வெற்றியா?அத்வானியின் தோல்வியா?


ராஷ்ட்ரீய சுயம் சேவக் சங்கம் ​(ஆர்.எஸ்.எஸ்.)​ விரும்பியபடியே மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து எல்.கே.அத்வானி விலகிவிட்டார்.​ ஆனால்,​​ இதன் மூலம் அத்வானியின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகிவிட்டது என்று அர்த்தம் கொள்ள முடியாது.​ 

ஆர்.எஸ்.எஸ்.,​​ பா.ஜ.க.,​​ அத்வானி இணைந்து கட்சியை வலுப்படுத்த புதிய செயல்திட்டத்தை உருவாக்கியுள்ளனர்.​ அதிகாரப் பங்கீட்டு அடிப்படையிலான இத்திட்டம் நல்ல திட்டம்தான்.பாஜகவின் அடுத்த தலைவர் நிதின் கட்கரி என்று ஆர்.எஸ்.எஸ்.​ தலைவர் மோகன் பாகவத் அறிவித்தபோது,​​ அதை அத்வானி உள்ளிட்ட பலரும் ஏற்றுக்கொண்டனர்.​ நிதின் கட்கரியைத் தேர்ந்தெடுத்ததில் தனக்கும் முக்கிய பங்கு உண்டு என்று அத்வானி கூறியிருந்தார்.​ 

அதேபோல்,​​ அத்வானி தன்னை அணுகி,​​ கட்சித் தலைவர் பதவியை ஏற்குமாறு கேட்டுக் கொண்டதாக நிதின் கட்கரியும் ஒப்புக்கொண்டிருந்தார்.​ இதன் மூலம் தனக்கு அத்வானியின் ஆதரவு உள்ளது என்பதை மறைமுகமாக நிதின் சுட்டிக்காட்டியுள்ளார்.நாடாளுமன்றத்தில் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களாக யார் இருக்க வேண்டும் என்று தீர்மானிப்பதிலும் அத்வானிக்கு முக்கிய பங்கு இருந்தது.​

மக்களவையில் அத்வானிக்குப் பதிலாக எதிர்க்கட்சித் தலைவராக சுஷ்மா ஸ்வராஜும்,​​ மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக அருண் ஜேட்லியும் தொடர்ந்து நீடிப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.​ இதை சங்கப்பரிவாரங்களின் தலைவர்களும் ​ ஏற்றுக்கொண்டுவிட்டனர்.பாஜகவின் சட்டவிதிகள் திருத்தியமைக்கப்பட்டு,​​ நாடாளுமன்றக் குழு தலைவர் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டு,​​ அதன் தலைவராக எல்.கே.அத்வானி இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.​ 

இதற்கு அத்வானியின் எதிர்ப்பாளர்களான மூத்த தலைவர்கள் பலர் எதிர்ப்புத் தெரிவித்தும் ஒன்றும் நடக்கவில்லை.​ ஏனெனில் இதற்கு ஆர்.எஸ்.எஸ்.​ எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்பதுதான்.பாஜக நாடாளுமன்றக் குழு தலைவராக எல்.கே.அத்வானி தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும்,​​ ஆர்.எஸ்.எஸ்.​ அமைப்பு இதில் அதீத ஆர்வம் காட்டவில்லை.​ கட்சியில் எந்தச் சலசலப்பும் இல்லாமல் வழிநடத்திச் செல்ல அவரால்தான் முடியும் என்று நினைத்திருக்கலாம்.

அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பராக் ஒபாமா,​​ தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஹிலாரி கிளின்டனுக்கு வெளியுறவு அமைச்சர் பதவி கொடுத்து அவரது ஆதரவை உறுதி செய்தது போலத்தான் இதுவும்.​ இல்லையெனில் அத்வானியின் ஆதரவாளர்களான அடுத்த தலைமுறையினர் நிதின் கட்கரிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும்.

சோனியா காந்தி எம்.பி.யாவதற்கு முன்னதாகவே அதாவது 1998 ல் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் பதவியை அவருக்கு அளிப்பதற்காக காங்கிரஸ் கட்சி சட்டவிதிகளைத் ​ திருத்தி அமைத்தது.​ அதன் பிறகுதான் சோனியா காந்தி,​​ கட்சியில் முக்கியத்துவம் பெற்று அதிக சக்திவாய்ந்தவராக உருவானார்.​ 1999,​ 2004,​ 2009 தேர்தல்களிலும் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் அளவுக்கு வலுப்பெற்றது.

இப்போது பாஜகவும் சட்டவிதிகளைத் திருத்தியமைத்து அத்வானிக்குப் புதிய பதவியைப் பெற்றுத் தந்துள்ளது.​ ஆனால்,​​ சோனியாவுக்கும் அத்வானிக்கும் வித்தியாசம் உள்ளது.​ சோனியா,​​ ஆளும் காங்கிரஸ் அரசின் முக்கிய சக்தியாக இருந்து வருகிறார்.​ அத்வானி,​​ பாஜகவின் நம்பிக்கைக்குரிய ஆலோசகராகப் பார்க்கப்படுகிறார்.புதிய பதவிக்கு வந்துள்ளதன் மூலம் அத்வானி அரசியலிலிருந்து ஓய்வுபெற்றுவிடுவார் என்று யாரும் கருத வேண்டாம்.​ 

அதாவது பாஜக நாடாளுமன்றக் கட்சித் தலைவரானதன் மூலம் மக்களவை,​​ மாநிலங்களவை இரண்டிலும் எதிர்க்கட்சித் தலைவராக யாரை நியமிக்கலாம் என்று முடிவு செய்யும் அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.​ அதேபோல அவர்களை நீக்கவும் அவருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.​ அவசரப்பட்டு அவர் எந்த முடிவும் எடுக்கமாட்டார் என்றாலும்,​​ முக்கிய முடிவுகள் எடுக்கும் விஷயத்தில் அத்வானியை கட்சி மேலிடம் ஒதுக்கிவிட முடியாது என்பதுதான் இதன் சாராம்சம்.

பாஜக நாடாளுமன்றக் கட்சித் தலைவராக அத்வானி இருப்பதால் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான சுஷ்மாவுடன் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி இணைந்து செயல்பட வழிவகுக்கும்.​ இருவருக்கும் காபினெட் அமைச்சருக்கு இணையான அந்தஸ்து,​​ சலுகைகள் கிடைக்கும் என்றாலும்,​​ மரபின் அடிப்படையில் பார்த்தால் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியைவிட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி சற்று உயர்ந்ததுதான் என்று கூற வேண்டும்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் உள்ளவர்களுக்கு அரசு நிர்வாகத்தில் உரிய அங்கீகாரம் கிடைக்கும்.​ வெளிநாட்டிலிருந்து முக்கியப் பிரமுகர்கள் யாராவது வந்தால்,​​ இங்குள்ள எதிர்க்கட்சித் தலைவர்களையும் மரியாதை நிமித்தம் சந்திப்பதுண்டு.​ மேலும்,​​ அரசு ஏதாவது குழு நியமித்தால் அதில் எதிர்க்கட்சித் தலைவருக்கும் முக்கிய இடம் இருக்கும்.​ முக்கிய நியமனங்களில் எதிர்க்கட்சித் தலைவரைக் குழுவில் சேர்க்காமல் எந்த முடிவையும் அரசால் எடுக்க முடியாது.அத்வானியின் ஆதரவு இல்லாமல் சுஷ்மா ஸ்வராஜ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியிருக்க முடியாது.​ 

அதுமட்டுமல்ல;​ அப்பதவியில் அவர் தொடர்ந்து நீடிக்க வேண்டுமானாலும் அதற்கு அத்வானியின் ஆதரவு தேவை.​ எனினும் அத்வானிக்குப் பதிலாக சுஷ்மாவைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் கட்சிக்குள் நிலவிவரும் உட்பூசலுக்கு தீர்வு காண முடியாது.முதலாவதாக,​​ பாஜகவில் அடுத்த தலைவர் யார் என்கிற சர்ச்சை எழுந்தது.​ அதற்கு ஒருவழியாகத் தீர்வுகாணப்பட்டுவிட்டது.​ இரண்டாவதாக,​​ பாஜகவின் அன்றாடச் செயல்பாடுகளில் ஆர்.எஸ்.எஸ்.​ இயக்கத்தின் தலையீடு இருக்கக்கூடாது என்று கட்சியின் முக்கியத் தலைவர்கள் சிலர் கருத்துத் தெரிவித்தனர்.​ 

பாஜகவின் முக்கியப் பதவியில் அத்வானி நீடிப்பது சங்கப்பரிவாரங்கள் தலையீட்டை எதிர்ப்பவர்களின் கரங்களை வலுப்படுத்தும்.ஆர்.எஸ்.எஸ். ​ ஆதரவாளரான நிதின் கட்கரி கட்சித் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.​ கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பதவிக்கு ஆர்.எஸ்.எஸ்.​ பிரசாரகர்களை அவர் நியமிக்கக்கூடும்.அத்வானி உள்ளிட்ட முக்கிய தலைவர்களைப் பதவியிலிருந்து அகற்றும் அல்லது இடைநீக்கம் செய்யும் அதிகாரமும் அவருக்கு உள்ளது.​ 

ஆனாலும்,​​ சங்கப்பரிவாரங்கள் தங்கள் இஷ்டம்போல் செயல்பட முடியாது.மூன்றாவதாக,​​ பாஜகவின் நிலைப்பாடு என்ன?​ நாங்கள் மாறுபட்டவர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்ள பாஜக என்ன செய்யப்போகிறது?​ இளைய தலைமுறையினரின் வாக்குகளைப் பெற அக்கட்சி என்ன செய்யப்போகிறது?​ என்பது முக்கியமான விஷயமாகும்.பாஜகவில் உள்கட்சிப் பூசல்கள் அதிகரித்து,​​ அக்கட்சிக்குக் கெட்டபெயர் ஏற்பட்ட நேரத்தில் புதிய தலைவராக நிதின் கட்கரி பொறுப்பேற்றுள்ளார்.​ 

சமீபத்தில் நடைபெற்ற தேர்தல்களில் அக்கட்சி தோல்வியையே சந்தித்துள்ளது.​ விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் நாட்டில் தலைதூக்கிய போதிலும் ஆளும் காங்கிரஸ் கட்சியை திக்குமுக்காட வைக்கும் அளவுக்கு பாஜகவால் ஏதும் செய்ய முடியவில்லை.சங்கப்பரிவாரங்களைத் திருப்திப்படுத்தி,​​ எதிர்ப்பாளர்களைச் சமாளித்து கட்சியை நடத்திச் செல்லவேண்டிய பொறுப்பு,​​ புதிய தலைவரான நிதின் கட்கரிக்கு உள்ளது.​ மாநில அளவில் தலைவராக அவர் பேசப்பட்டவர்தானே தவிர தேசிய அளவில் அவர் எந்தப் பொறுப்பையும் இதுவரை வகிக்கவில்லை.

நாகபுரியைச் சேர்ந்த நிதின் கட்கரிக்கு ஆர்.எஸ்.எஸ்.​ பின்னணி இருக்கிறது.​ அதன் தலைவர் மோகன் பாகவத்துடன் சேர்ந்து பணியாற்றினாலும்,​​ அவருடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகச் சொல்ல முடியாது.​ எனினும் 52 வயது இளைஞரான நிதின்,​​ பாஜகவுக்கும் சங்கப்பரிவாரங்களுக்கும் பாலமாக இருப்பார் எனத் தெரிகிறது.​ 

காங்கிரசில் ராகுல் காந்தி எப்படி இளைஞர் படையை வழிநடத்திச் செல்கிறாரோ அதேபோல நிதின் கட்கரியும் பாஜகவை வழிநடத்திச் செல்வார் என்ற எதிர்பார்ப்பு பலரிடம் உள்ளது.பாஜகவில் அடல் பிகாரி வாஜ்பாய்,​​ எல்.கே.அத்வானி ஆகிய இருவரும் ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்கு மேலாக கட்சியின் வளர்ச்சிக்குப் பாடுபட்டு வந்துள்ளனர்.​ சில சமயங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டபோதிலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் திறம்படச் செயலாற்றி வந்தனர்.​ 

அவர்களின் காலம் முடிவுக்கு வந்துவிட்டது.புதிய தலைவரான நிதின்,​​ கட்சியில் எந்தக் கோஷ்டியையும் சேராதவர்.​ அது அவருக்குச் சாதகமான அம்சம்.​ அவரது தலைமையில் பாஜக புதிய கட்டத்தில் அடியெடுத்து வைக்கிறது.​ வாஜ்பாய்க்கு அடுத்தபடியாக கட்சியில் சிறந்த பேச்சாளராக இருப்பவர் சுஷ்மா ஸ்வராஜ்,​​ அதேபோல அருண் ஜேட்லியும் புதிய உத்திகளுடன் செயல்படக்கூடிய திறன்பெற்றவர்.​ இவர்களை அரவணைத்து நிதின் கட்கரி கட்சியை எப்படி கொண்டு செல்லப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

புதன், 9 டிசம்பர், 2009

பா.ஜ..க வின் சவாலை ஏற்குமா இந்திய அரசு ?


"பாபர் மசூதியை இடித்தது பா.ஜ .,மற்றும் சங்கபரிவார் அமைப்புகள்தான். இதை செய்ததற்காக என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளோம்' என்று, சுஷ்மா சுவராஜ் ஆவேசமாகக் கூறினார்.


லிபரான் கமிஷன் அறிக்கை மீதான விவாதம் நேற்று இரண்டாவது நாளாக பார்லி மென்டில் நடைபெற்றது. லோக்சபாவில் நடைபெற்ற இந்த விவாதத்தில், லோக் சபா பா.ஜ .,வின் துணைத் தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசும்போது, மத்திய அரசுக்கு சவால் விடும்வகையில் ஆவேசமாக பேசினார்.


அவர் தனது உரையில் பேசியதாவது:மசூதி இடிக்கப்பட்டது குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்தியது. இதுபற்றி லிபரான் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இடிப்பு சம்பவத்தில் சதி இருந்ததா இல்லையா என்பது குறித்து விசாரணை நடத்திய சி.பி.ஐ, தனது பதிலாக சதி நடந்துள்ளது என்பதை நிரூபிக்க முடியவில்லை என்று தெரிவித்துவிட்டதாக, லிபரான் அறிக்கை கூறுகிறது.அதேபோல, மத்திய மாநில உளவு அமைப்புகளும் விசாரணைக்கு தேவையான ஆவணங்களை தர மறுத்துவிட்டதாகவும், லிபரான் குறிப்பிட்டுள்ளார். லிபரான் விசாரணை கமிஷன் முன்பாக ஆஜரான அரசியல் தலைவர்கள் அளித்த வாக்குமூலங்களை வைத்துக் கொண்டும், சதி நடைபெற்றதா இல்லையா என்பதை நிரூபிக்க முடியவில்லை என்று லிபரான் கூறுகிறார். அத்வானி போன்ற தலைவர்களை குறுக்குவிசாரணை செய்த முஸ்லிம் அமைப்பு தலைவர்கள் அளித்த வாக்குமூலத்தில் இருந்தும் சதி நடைபெற்றதை நிரூபிக்க முடியவில்லை என்று கூறுகிறார். இவ்வாறு நிரூபணம் செய்யவே முடியாத நிலையில், வெறுமனே பா.ஜ., மீது சதிக் குற்றச்சாட்டு கூறுவது நியாயமற்றது. எந்த முகாந்திரமும் இல்லாமல் சதி செய்து மசூதி இடிக்கப்பட்டதாக கூறுவது தவறு.


லிபரான் அறிக்கை என்பது அரசியல் காரணங்களுக்காக பொய்களை கொண்டு ஜோடிக்கப்பட்ட ஒரு ஆவணமே தவிர, இது விசாரணை அறிக்கை அல்ல. இப்போதும் கூறுகிறேன். சவாலாகவே கூறுகிறேன். நாங்கள்தான் மசூதியை இடித்தோம். பா.ஜ., மற்றும் சங்கபரிவார் அமைப்புகள் தான் மசூதியை இடித்தோம். திட்டமிட்டு செய்யவில்லை. மக்களின் எழுச்சியின் விளைவே அது. என்ன தண்டனை தருவீர்கள். எங்களை உங்களால் தண்டிக்க முடியுமானால் தண்டித்துப் பாருங்கள். தண்டனையை ஏற்க தயாராக உள்ளோம். அறிக்கையை தயார் செய்த லிபரான் ஒரு பேட்டியில், வாஜ்பாயை நல்லவர் என்று கூறுகிறார். அதே வாஜ்பாயை மற்றொரு பேட்டியில் நிர்வாக இயக்குனராக உவமைப்படுத்தி அவர்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறுகிறார். இதையெல்லாம் வைத்துப்பார்க்கும்போது இந்த அறிக்கையை தயார் செய்தது உண்மையில் லிபரான்தானா அல்லது காங்கிரஸ் கட்சியா என்ற சந்தேகம் வருகிறது.


இந்த பிரச்னைக்கு அரசியல் ரீதியிலான தீர்வை ஏற்படுத்த வேண்டும். அதற்கு பா.ஜ., என்றுமே துணை நிற்கும். மாறாக இதுபோன்ற அறிக் கையினால் நாட்டில் மதக்கலவரங்கள் நடைபெறவே வாய்ப்பு உருவாகியுள்ளது. லிபரான் தனது அறிக்கையில் ஒரு இடத்தில், இந்துக்களின் நலன்களுக்கு குரல் கொடுக்க ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்கபரிவார் போன்ற அமைப்புகள் இருப்பதுபோல, முஸ்லிம்களுக்கு எந்த அமைப்பும் இல்லை என்று கூறுகிறார். இதெல்லாம் பொறுப்பற்ற வார்த்தைகள். ஒருதலை பட்சமான வரிகள். இந்துக்களுடன் முஸ்லிம் களை மோதவிடுவது போன்று உள்ளது இந்த அறிக்கை. இதெல் லாம் நாட்டுக்கு நல்லதல்ல.இவ்வாறு சுஷ்மா பேசினார்.

வெள்ளி, 20 நவம்பர், 2009

வைகோவின் சாட்டையடி


இலங்கைக்கு கிடைத்த பன்னாட்டு ஆயுத உதவியால் விடுதலைப் புலிகளுக்குப் பின்னடைவும் தோல்வியும் ஏற்பட்டபோது முதல்வர் கருணாநிதி மௌனமாகக் குதூகலித்தார் என மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் தமிழர்களின் வரலாற்றில், வேறு எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இலங்கையின் படைபலத்தைப் பெருக்க, ஆயுதங்கள், ரேடார்களைக் கொடுத்து, விமானங்களில் இருந்து குண்டுகளை வீசுவதற்காக பலாலி விமானதளத்தைப் புதுப்பித்துக் கொடுத்தது இந்திய அரசு. இராணுவத் திட்டங்களை வகுப்பதற்கு இந்தியத் தளபதிகளை அனுப்பி உதவியது. இந்திய இலங்கைக் கடற்படைத்தகவல் பரிமாற்ற ஒப்பந்தங்களைச் செய்து, துப்புக் கொடுத்து, விடுதலைப்புலிகளுக்காக வந்த கப்பல்களைக் கடலில் மூழ்கடித்தது இந்தியா.ஆயுதங்களை இலங்கைக்கு வழங்கியதுடன் சீனா, பாகிஸ்தான், இஸ்ரேல்,ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகளிடம் ஆயுதங்களை வாங்குதவற்கு, ஆயிரம் கோடி வட்டி இல்லாக் கடனை இந்தியா அளித்தது. இவ்வளவும், 2004 ஆம் ஆண்டுக்குப் பின்னர், கடந்த ஐந்து ஆண்டுகளாகவே நடைபெற்று வந்தன. இத்தனை உதவிகளோடும், ஈழத்தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்துள்ளது. இன்றைக்கு மூன்று லட்சம் தமிழர்கள், முள்வேலி முகாம்களில் அடைபட்டிருப்பதற்குக் காரணம் இந்திய அரசுதான். ஐந்து ஆண்டுகளாக இந்த நடவடிக்கைகளுக்கெல்லாம் உடந்தையாக இருந்தவர் முதல்வர் கருணாநிதி. அவர் பிரபாகரனைக் கொச்சைப்படுத்தி அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். உலகின் எந்தப் புரட்சி இயக்கங்களிலும் துரோகத்துக்கு வழங்கப்படுகின்ற தண்டனைதான் மாத்தையாவுக்கு வழங்கப்பட்டது. ஆனால், மாவீரன் மாத்தையாவுக்கு மரண தண்டனை கொடுத்து விட்டார்கள் என்று கருணாநிதி வருந்துகிறார். மாத்தையா, கருணா போன்ற துரோகிகளுக்கெல்லாம் பாராட்டுப் பத்திரம் வாசித்து, ‘பிரபாகரன் செய்த தவறுகளால்தான் தமிழர்களுக்குக் கேடு நேர்ந்தது’ என்கிறார். இந்திய அரசு இத்தனைத் துரோகங்களைச் செய்ததே, எந்தவொரு கட்டத்திலாவது, இலங்கைக்கு ஆயுதம் கொடுக்காதீர்கள் என்று கருணாநிதி ஒப்புக்கு ஒரு கடிதம் எழுதியது உண்டா? தமிழர்கள் உள்ளத்தில் எழுந்து உள்ள உணர்வுகளை நீர்த்துப் போகச் செய்வதற்காக, இன்று இவர் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். பிரச்சினையைத் திசைதிருப்புவதற்காக, திடீரென்று இலங்கை அகதிகள் மீது கரிசனம் காட்டுகிறார். பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்புகிறார். தமிழ் மண்ணில் முத்துக்குமார் எழுப்பிய உணர்ச்சியை அழிக்க வேண்டும் என்பதுதான் இவரது நோக்கம். 16 பேர் தீக்குளித்தார்களே, அவர்களுக்காக ஒரு வரி இரங்கல் எழுதியது உண்டா? ஆனால், இன்றைக்கு ஒன்றரைப் பக்கத்துக்குக் குற்றச்சாட்டுகளை வாசிக்கிறார். கலைஞர் கருணாநிதியின் குடும்பத்தாரிடம்தான் தொலைக்காட்சிகள் இருக்கின்றன. செய்தித்தாள்கள் அவர் சொல்வதையெல்லாம் எட்டுக் காலம் போட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், தான் நினைத்ததையெல்லாம் எழுதி அறிக்கைகளாக வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்.ரனில் விக்கிரமசிங்கேவுக்கு ஆதரவு கொடுக்காததால்தான், இந்த அழிவு நேர்ந்தது என்கிறார். ரனில் என்ன தமிழர்களுக்கு விடியல் ஏற்படுத்தப் பாடுபடுகிறவரா? பேச்சுவார்த்தைக்கு வராமல் புலிகள் காலத்தை இழுத்தடித்தார்கள்; தாங்களாகவே விலகிக் கொண்டார்கள் என்று ரனில் சொன்னதை இவர் எழுதுகிறார்.‘தேர்தலில் ரனில் விக்கிரமசிங்கேவுக்கு, பிரபாகரன் ஆதரவு கொடுக்கவில்லை’ அதனால்தான் இன்றைய அழிவும் ஏற்பட்டது என்கிறார் கருணாநிதி. பிரபாகரன் தேர்தலைப் பகிஷ்கரிக்கச் சொல்லவும் இல்லை; ஓட்டுப் போடுங்கள் என்று கூறவும் இல்லை.2009 ஈழப்போரில் பன்னாட்டு ஆயுத உதவியால், தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு பின்னடைவும், தோல்வியும் ஏற்பட்டதில் உள்மனதில் மௌனமாக குதூகலித்தவர்தான் கருணாநிதி. இந்த மௌனத்தின் குதூகலம் யார் அறிவார்?இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

வியாழன், 19 நவம்பர், 2009

சேது சமுத்திரம் திட்டத்தின் நிலை ?


சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற மாற்றுப்பாதை குறித்த ஆய்வு அறிக்கை என்னவானது என்று சுப்ரீம் கோர்ட் கேட்டபிறகுதான், இது குறித்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு உருப்படியான காரணமும் இன்றி, இத்திட்டம் குறித்து எந்தவொரு நடவடிக்கையும் மேற் கொள்ளாமல் ஆறுமாத காலம் வீணாக கழிக்கப்பட்டுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.



சேது சமுத்திர திட்டத்தை மாற்றுப் பாதையில் நிறைவேற் றிட முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தரும்படி சுப்ரீம் கோர்ட் கேட்டிருந்தது.2008ம் ஆண்டு ஆரம்பத்தில், தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் இது குறித்து வழக்கு விசாரணையின் போது, "ராமர் பாலத்தை தவிர்த்துவிட்டு நான்கு ஏ என்றழைக்கப்படும் மாற்றுப் பாதையில் இத்திட்டத்தை செயல்படுத்த முடியுமா என்று கேட்டது."குறிப்பாக தனுஷ்கோடி அருகில் நிலத்தை வெட்டி அதன் மூலம் செயல்படுத்த முடியுமா என்பது குறித்து, எவ்வளவு விரைவாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அறிக்கையை அளிக்க வேண்டும்' என்றும் உத்தரவிட்டிருந்தது.



இதையடுத்து, நோபல் பரிசு பெற்ற பச்சவுரி என்பவர் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு ஆராய்வதாகக் கூறப்பட் டது. சுப்ரீம் கோர்ட் உத்தரவு போட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ரவீந்திரன் மற்றும் பஞ்சால் ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, ஏற்கனவே கேட்டிருந்த அறிக்கை என்ன ஆனது என்று கேட்கப்பட்டது. இதையடுத்து, இரண்டு நாட்களில் அவசர அவசரமாக இந்த பச்சவுரி குழு கூடியது. அப்போது, நான்கு ஏ வழிப்பாதையில் திட்டத்தை நிறைவேற்ற முடியுமா, இல்லையா என்பது குறித்து கோவாவில் உள்ள நேஷனல் ஓசியோகிராபிக் இன்ஸ்டிடியூட் மூலம் ஆராய முடிவு செய்திருப்பதாக இந்த குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது.



கடந்த வாரம் புதன்கிழமை அன்று டில்லியில் மிகவும் ரகசியமாக கூடிய இக்கூட்டத்தில் இந்த முடிவை பச்சவுரி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.இந்த முடிவு, கடந்த ஜூன் மாதமே எடுக்கப்பட்டு விட்டதாக தெரிகிறது. ஆனால், உருப்படியாக எதுவும் நடக்கவில்லை. இந்த குழுவில் மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் துறைமுக துறை இணை செயலர் ஸ்ரீவத்சவா என்பவரும் உறுப்பினர். கோவா இன்ஸ்டிடியூட் இயக்குனரும் ஒரு உறுப்பினர்.இவர்கள் தரப்பில் எடுக்கப்பட்ட அப்போதைய முடிவு, கப்பல் போக்குவரத்து அமைச்சகத்துக்கு மட்டும் தெரிவிக்கப்பட்டது. அப்போது இருந்து கடந்த ஆறு மாதமாக இந்த முடிவு வெறுமனே அமைச்சகத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ளது.



கடந்த வாரம் கோர்ட் கேட்டபிறகு தான் தெரிவிக்கப்பட்டுள்ளது.தவிர, 2008ம் ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் ஆகிய மூன்று மாதங்களிலுமே பச்சவுரி குழு கூடி ஆலோசனை செய்தது. அந்த மூன்று ஆலோசனை கூட்டங்களிலும் எந்த முடிவும் எடுக்கப்படாமல் காலம் தாழ்த் தப்பட்டுள்ளது.இதில் மிகப்பெரிய வேடிக்கை என்னவென்றால், இந்த பச்சவுரி தலைமையிலான குழுவில் தமிழகத்தில் இருந்தும் இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.ஒருவர் தமிழக அரசின் சுற்றுச்சூழல் பிரிவின் தலைமைச் செயலர். மற்றொருவர் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு கலெக்டர். இவர்கள் மேற்கொண்ட நிலைப் பாடும் வெளியே வரவில்லை.



இத்திட்டத்திற்கு என, 700 கோடி ரூபாய் வரை செலவாகிவிட்டது. திட்டப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த டிரெட்ஜர்கள் எனப்படும் மணல் அள்ளும் இயந்திரங்கள் எல்லாம் திருப்பிச் சென்றுவிட்டன. பணிகள் அனைத்துமே நிறுத்தப்பட்டு உள்ளன.மேலும் இத்திட்டத்திற்கு என நிர்ணயிக்கப்பட்ட செலவான 2,500 கோடி ரூபாய் என்பது, தற்போது 4,500 கோடி ரூபாயாக உயர்ந்தும் விட்டது. இது குறித்தும் எந்தவொரு புதிய முடிவும் எடுக்காமல் அமைச்சரவையின் கவனத்துக் கொண்டு செல்லாமல் மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகமும் அமைதியாகவே உள்ளது.காரணங்களே இல்லாமல் காலதாமதம் ஏற்படுத்திக் கொண்டிருப்பதன் மூலம், சேதுசமுத்திர திட்டம் என்பது கேள்விக் குறியாக மாறிக் கொண்டுள்ளது.

சனி, 7 நவம்பர், 2009

கர்நாடகாவின் கதி என்னவாகும் ?


கர்நாடகாவில் 52 எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா :

புதுடில்லி : கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக 52 எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இதனால், அதிருப்தி மந்திரிகளான ரெட்டி சகோதரர்களின் கை ஓங்குகிறது.

கர்நாடகா பா.ஜ.,வில் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. "எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்'என, மாநில அமைச்சர்களான ரெட்டி சகோதரர்கள், போர்க்கொடி தூக்கியுள்ளனர். கடந்த நான்கு நாட்களாக இரு தரப்பினரும் டில்லியில் முகாமிட்டு, கட்சியின் மேலிடத் தலைவர்களுடன் பேச்சு நடத்தி வருகின்றனர். ஆனால், எடியூரப்பாவை நீக்க வேண்டும் என்ற தங்கள் கோரிக்கையில் ரெட்டி சகோதரர்கள் பிடிவாதமாக உள்ளனர். கோவா மற்றும் ஐதராபாத் ஆகிய இடங்களில் உள்ள சொகுசு ஓட்டல்களில் தங்கள் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 60 பேரை, ரெட்டி சகோதரர்கள் தங்க வைத்துள்ளனர். எடியூரப்பாவுக்கான நெருக்கடியை மேலும் அதிகரிக்கும் வகையில், இந்த எம்.எல்.ஏ.,க்களில் 52 பேர், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

இவர்கள், தங்களது ராஜினாமா கடிதங்களை அதிருப்தி கோஷ்டி தலைவரான ஜனார்த்தன் ரெட்டிக்கு, "பேக்ஸ்' மூலம் அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த கடிதங்களை டில்லியில் முகாமிட்டுள்ள தங்கள் ஆதரவாளரும், கர்நாடகா சட்டசபை சபாநாயகருமான ஜெகதீஷ் ஷெட்டாரிடம் ஒப்படைக்கும்படியும் அந்த எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தியுள்ளனர். எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்தால், அதற்கான கடிதங்களை முறைப்படி தங்கள் கட்சித் தலைவரிடம் தான் ஒப்படைக்க வேண்டும். ஆனால், அதிருப்தி கோஷ்டி தலைவருக்கு கடிதங்களை அனுப்பி வைத்துள்ளனர். இதனால், பா.ஜ., வில் உள்ள நெருக்கடி வித்தியாசமாக இருக்கிறது.

இறங்கி வந்தார் எடியூரப்பா:இதற்கிடையே, பா.ஜ., தலைவர்களுடன் நடத்திய தொடர் பேச்சுவார்த்தையை அடுத்து, ரெட்டி சகோதரர்களை சமாதானப் படுத்துவதற்கு முதல்வர் எடியூரப்பா தயாராகியுள்ளார். இதன் முதல் கட்டமாக, ரெட்டி சகோதரர்களின் கோரிக்கையை ஏற்று, தனது முதன்மை செயலராக இருந்த பாலிகாரை, அந்த பதவியில் இருந்து மாற்ற உத்தரவிட்டுள்ளார்.மேலும், ரெட்டி சகோதரர்களுக்கு எதிராக செயல்படும் மாநில அமைச்சர் ஷோபாவையும், அமைச்சர் பதவியில் இருந்த நீக்கவும் அவர் சம்மதித்துள்ளதாக தெரிகிறது. இது தவிர, பெல்லாரி மாவட்டத்தில் இருந்து மாற்றம் செய்யப்பட்ட 18 அதிகாரிகளை மீண்டும் அங்கு மாற்றுவதற்கும் எடியூரப்பா தயாராகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து எடியூரப்பா கூறியதாவது:ரெட்டி சகோதரர்களுக்கு சாதகமாக சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அவர்களின் மேலும் சில கோரிக்கைகளையும் பரிசீலிக்க தயாராக உள்ளேன் என, கட்சி மேலிடத்திடம் தெரிவித்துள்ளேன். கட்சியின் நலன் கருதி இதுபோன்ற நடவடிக்கைளை எடுக்க திட்டமிட்டுள்ளேன். நான், பா.ஜ.,வின் தீவிர விசுவாசி. கட்சி மேலிடம் எடுக்கும் எந்த முடிவுக்கு கட்டுப்படுவேன்.இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

ஐதராபாத் புறப்பட்டார் ரெட்டி: கடந்த சில நாட்களாக டில்லியில் முகாமிட்டிருந்த அதிருப்தி கோஷ்டி தலைவர் ஜனார்த்தன் ரெட்டி, நேற்று ஐதராபாத் புறப்பட்டுச் சென்றார். முன்னதாக, பா.ஜ., மூத்த தலைவர்கள் சுஷ்மா சுவராஜ், வெங்கையா நாயுடு ஆகியோருடன் அவர் ஆலோசனை நடத்தினார். இதில், ரெட்டி சகோதரர்களின் சில கோரிக்கைகளை எடியூரப்பா செயல்படுத்த சம்மதித்திருப்பது குறித்து அவரிடம், கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்தனர். இதில் ஜனார்த்தன் ரெட்டி ஓரளவு சமாதானம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் நேற்று ஐதராபாத் புறப்பட்டுச் சென்றார்.

இதுகுறித்து பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:ரெட்டி சகோதரர்களின் முக்கிய கோரிக்கைகளை எடியூரப்பா ஏற்றுக் கொண்டுள்ளார். இதனால், ரெட்டி சகோதரர்களின் கை ஓங்கியுள்ளது. இதன் முதல் கட்டமாக, தனது முதன்மை செயலரை மாற்றுவதற்கு எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, ஐதராபாத் ஓட்டல்களில் தங்கியுள்ள தனது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை சந்தித்து, அவர்களை சமாதானப் படுத்தும் முயற்சியில் ரெட்டி இறங்கியுள்ளார். இதற்காகவே, அவர் ஐதராபாத் புறப்பட்டுச் சென்றுள்ளார்.இவ்வாறு பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜனார்த்தன் ரெட்டி ஐதராபாத் புறப்பட்டுச் சென்றுள்ளது, பா.ஜ., வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரெட்டி சகோதரர்களின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என, பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

செவ்வாய், 6 அக்டோபர், 2009

அரசியல் வியாபாரி : ராமதாஸ்








கடந்த 5 நாட்களாக தமிழ் நாட்டு அரசியலில் சூடு பறக்கிறது. காரண கர்த்தாஅரசியல் வியாபாரி ராமதாஸ். அதிமுக கூட்டணில் இருந்து பா.ம.க. பிரிந்து விட்டதாக அறிக்கை விட்டு தன்னுடைய சுய ரூபத்தை காட்டி விட்டார்.கடந்த நாடளுமன்ற தேர்தலில் தி .மு.க. கூட்டணியில் 1 சீட்டு குறைவாக தருகிறார்களே என்று கூடு விட்டு கூடு பாயும் மந்திரத்தை கொண்டு செல்வி ஜெயலலிதாவிடம் அடைக்கலாமாகி 7 சீட்டுகள் பெற்று , போட்டி இட்ட 7 இடங்களிலும் தோல்வியை தழுவி தான் ஒரு அரசியல் வியாபாரி என்பதை நிருபித்து விட்டார்.

பா.ம.க. எந்த அணியுடன் கூட்டணி சேருகிறதோ அந்த அணிதான் வெற்றி பெரும் என்று சொல்லிவந்த அரசியல் வியாபாரி ராமதாசுக்கு தமிழக வாக்காளர்கள் இந்த தேர்தலில் சரியான பாடம் புகட்டி விட்டார்களா. கடந்த நாடளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது துணை முதல்வர் மு.க.ஸ்டான்லின் அவர்கள் ராமதாசை அரசியல் வியாபாரி என்று சொன்னது அவருக்கு 100% பொருந்தும்.

கடந்த முறை நடந்த சட்ட மன்ற தேர்தலில் தி.மு.க உடன் கூட்டணி அமைத்து தி.மு.க தொண்டனின் உழைப்பால் வெற்றி பெற்று , பிறகு அந்த தி.மு.க அரசுக்கு பல வகைகளிலும்
குடைச்சல் கொடுத்து அந்த அரசு கொண்டு வந்த நல்ல திட்டங்கள் பலவற்றை தன்னுடைய சுய நலத்திற்காக தடை போட்டவர் தான் இந்த ராமதாஸ். உதாரணம் : சென்னை துணை நகரம் , விமான நிலைய விரிவாக்கம் போன்ற திட்டங்களை சொல்லலாம்.

இப்பொழுது கூட அதிமுக கூட்டணில் இருந்து வெளியே வந்ததற்கு நிச்சயமாக ஒரு காரணம் இருக்கும். அந்த காரணமும் சுயநலம் சார்ந்ததாக இருக்கும். தன் மகன் அன்புமணிக்கு ராஜிய சபா
சீட்டு கேட்டு அவர் மீண்டும் தி.மு.க கூட்டணிக்கு தூது விடுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களே : பச்சோந்தி ராமதாஸ் மீண்டும் தங்கள் கூட்டணிக்கு
வந்தால் எக்காரணம் கொண்டும் உங்கள் கூட்டணியில் சேர்த்து கொள்ளாதீர்கள். காரணம் உங்கள் கூட்டணியின் மதிப்பும் மரியாதையும் குறைந்து விடும். தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறும் ராமதாஸ் போன்றவர்களுக்கு தமிழக மக்கள் சரியான் பாடம் புகட்டியும் அரசியல் வியாபாரி ராமதாஸ் மாறுவதாக தெரிய வில்லை.

ராமதாஸ் போன்ற அரசியல் வியாபாரிகள் எப்பொழுது திருந்துவார்களோ அன்றைக்குத்தான் தமிழக அரசியல் இந்திய அரசியலில் தலை நிமிர்ந்து நிற்கும்.

கட்டுரை
அபுல் பசர்.