புதன், 4 நவம்பர், 2009

திருப்பதி வெங்கடாஜலபதிக்கு சொந்தமாக ரூ.50,000 கோடிக்கு நகைகள் :

சித்தூர்: திருப்பதி வெங்கடாஜலபதிக்கு ரூ.50,000 கோடிக்கு நகைகள் உள்ளன. 32,000 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்களும் உள்ளன என்று ஐதராபாத் உயர் நீதிமன்றத்தில் திருப்பதிதிருமலை தேவஸ்தானம் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பொதுநலன் வழக்கு: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தங்க டாலர்கள் காணாமல் போனது தெரிய வந்தது. இதையடுத்து, நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த கோவிந்த ரெட்டி என்பவர், Ôஏழுமலையான் கோயில் நகைகள் பாதுகாப்பற்ற முறையில் பராமரிக்கப்படுவதாகவும், நகைகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளதால் அது குறித்து முழு விவரங்களை தேவஸ்தானம் தெரிவிக்க உத்தரவிடக் கோரி ஐதராபாத் உயர் நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தொடர்ந்தார்.
தனி பெஞ்ச் விசாரணை:
இந்த வழக்கை விசாரிக்க தனி பெஞ்ச் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதில் தேவஸ்தானம் நகைகள் குறித்த விவரங்கள் மற்றும் அசையா சொத்துக்களான காலி நிலங்கள், கட்டிடங்கள், திருமண மண்டபங்கள், சத்திரங்கள், தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இதர கோயில்கள் அவற்றுக்கு சொந்தமான நிலங்கள் குறித்த விவரங்களை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்ற பெஞ்ச் உத்தரவிட்டது. நகைகள் மதிப்பு: ஏழுமலையானுக்கு மன்னர்கள் காலம் முதல் தற்போது வரை பக்தர்கள் வழங்கியுள்ள நகைக்கான விவரப் பட்டியலையும், அவற்றில் காணாமல் போனவை குறித்தும் தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்தது.
இந்த நகைகளின் மதிப்பு மட்டும் சுமார் ரூ.50 ஆயிரம் கோடி ரூபாயாகும். வைரம், வைடூரியம்: இதுதவிர, அரசர் காலத் தைச் சேர்ந்த விலை மதிக்க முடியாத வைரம், வைடூரியங்கள், மாணிக்கம், மரகதம், கோமேதகம் போன்றவை ஏராளமாக உள்ளன. இவற்றை மதிப்பிடுவதில் நிபுணர்களுக்கே சிரமம் உள்ளது. எனவே அவற்றை ஆய்வு செய்த பின்னர் அது தொடர்பான மற்ற விவரங்களை தெரிவிப்பதாகவும், அதற்கு கால அவகாசம் அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. சீலிட்ட கவர்: இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ரகுராம், ரமேஷ் ரங்கநாதன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
திருப்பதி கோயில் தேவஸ்தானம் சார்பில் வக்கீல் எஸ்.ஆர். அசோக், தேவஸ்தான நிர்வாக அதிகாரி கிருஷ்ணா ராவ் ஆகியோர் ஆஜரானார்கள். அப்போது சீல் வைக்கப்பட்ட கவர் ஒன்றை நீதிபதிகளிடம் வழங்கினர். நகைகள் மற்றும் அசையா சொத்துக்களின் விவரங்கள் அதில் உள்ளதாக தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. தேவஸ்தானத்துக்கு சொந்தமான ரூ.32 ஆயிரம் கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்கள் விவரமும் அதில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை: