வியாழன், 31 டிசம்பர், 2009

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

                " அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்."

முக்கனிகளின் இரண்டாம் கனி :" பலா"


முக்கனிகளில் ஒன்றான பலா சில குறிப்பிட்ட காலங்களில் மட்டுமேக் காய்க்கக் கூடியது. ஆனால் பலாப் பழத்தை விரும்பாதவர்களே இருக்க மாட்டார்கள். அவ்வளவு சுவையான பலாப் பழத்தில் எத்தனையோ மருத்துவ குணங்கள் உள்ளன.

கண் பார்வைக்கு உதவும் விட்டமின் ஏ பலாப்பழத்தில் அதிக அளவில் உள்ளது.

இது மூளைக்கும், உடலுக்கும் அதிக பலத்தைத் தரும். நரம்புகளை உறுதியாக்கும், ரத்தத்தை விருத்தி செய்யும்.

அடிக்கடி நோய் தாக்கி அவதிக்குள்ளாகுபவர்கள் பலா பழம் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் ஆரோக்கியம் பெறும்.

பலாப் பழம் சாப்பிடுவதற்கு சுவையானது மட்டுமல்ல, உடலுக்கும் நல்லது.

சில இடங்களில் சின்ன சின்ன பலாக்காய்களை விற்பனைக்கு வைப்பார்கள். அது எதற்கு என்று பலருக்கும் தெரியாது.
அந்த பலாக்காயை வாங்கி வந்து கூட்டு செய்து சாப்பிடலாம். உடலுக்கு மிகவும் நல்லது.

பாலாக்காய் பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு சமைத்துக் கொடுத்தால் நன்றாக பால் சுரக்கும்.

பலாக்காய் உடல் சூட்டை தணிக்கும் ஆற்றல் பெற்றது.
பலாக் காயை சமைத்து சாப்பிட்டால் பித்த மயக்கம், அதனால் ஏற்படும் கிறுகிறுப்பு, பித்த வாந்தி போன்றவற்றைக் குணப்படுத்தும்.

எனவே அடுத்த முறை பலாக்காயை எங்கு பார்த்தாலும் வாங்கிச் சென்று சமைத்து சாப்பிடுங்கள்.

 


புதன், 30 டிசம்பர், 2009

வரலாறு : பூலான் தேவி ( பாகம் - 4)


கொள்ளைக்காரியாக இருந்து மனம் திருந்தி சரண் அடைந்த பூலான்தேவி, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு, 2 முறை "எம்.பி" ஆனார். 1991 ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அந்த சமயத்தில் பூலான்தேவி சிறையில் இருந்தார்.
 
என்றாலும் சிறையில் இருந்தபடியே டெல்லி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டார். நடிகர் ராஜேஷ் கன்னாவை (காங்.) எதிர்த்து நின்றார். ஆனால் பூலான் தேவிக்கு வெற்றிக்கனி கிட்டவில்லை. தோல்வி அடைந்தார்.
 
இருப்பினும் அரசியல் மீது அவருக்கு ஒரு கண் இருந்தது. 1994 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிறையில் இருந்து விடுதலை ஆனார். 1994 ம் ஆண்டு ஜுலை மாதம் 5_ந்தேதி உமத்சிங் என்பவரை பூலான்தேவி திருமணம் செய்து இல்லற வாழ்வில் நுழைந்தார். சமூக சேவையில் அவருக்கு அதிக ஆர்வம் உண்டாகியது.
 
இதனால் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக ஒரு சேவை அமைப்பை தொடங்கினார்.
 
பின்னர் முலாயம்சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்தார். 1996 ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் உள்ள மிர்சா பூர் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தார்.
 
பழைய வழக்குகள் பூலான் தேவிக்கு தொல்லை கொடுத்துக் கொண்டே இருந்தன. கோர்ட்டு படிக்கட்டுகளில் ஏறி இறங்க வேண்டியது இருந்தது. இதற்காக பாராளுமன்றம் முன்பு தர்ணா நடத்தினார்.
 
பிறகு 1999 ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் அதே மிர்சாபூர் தொகுதியில் 2 வது முறையாக நின்று அபார வெற்றி பெற்றார். பூலான்தேவி 2,90,849 ஓட்டுகளும், அவரை எதிர்த்த பா.ஜனதா வேட்பாளருக்கு 84,476 ஓட்டுகளும் கிடைத்தன. அதாவது, பூலான்தேவி சுமார் 2 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயித்தார்.
 
"நான் பூலான்தேவி" என்ற தலைப்பில் தனது வாழ்க்கை வரலாறு பற்றிய சுய சரிதையை பூலான்தேவி எழுதினார்.
"பாண்டிட் குயின்" சினிமா படம் வெளிவந்தபிறகு சர்வதேச அளவில் பேசப்பட்டார்.
 
2001 ம் ஆண்டு மார்ச் மாதம் 8 ந்தேதி பூலான்தேவி தனது "மலரும் நினைவுகள்" குறித்து சிறப்பு பேட்டி அளித்தார். அதில் சில பகுதிகள்:-
 
கேள்வி:_ நீங்கள் "பாண்டிட் குயின்" ("கொள்ளையர் அரசி") என்ற பட்டம் பெற்றது எப்படி?
 
பதில்: நான் பூலான்தேவியாகத் தான் இருந்தேன். பத்திரிகைகள் தான் அந்த அடைமொழியை தந்தன.
 
கேள்வி:"பாண்டிட் குயின்' சினிமா படம் உங்கள் வாழ்க்கையை கண்ணியமாக சித்தரித்ததா?
 
பதில்: கண்ணியமான படம். இருந்தாலும் அதில் என்னை நிர்வாணமாக சித்தரித்ததை விரும்பவில்லை.
 
கேள்வி: உங்கள் இளம் வயது திருமணம் பற்றி...?
 
பதில்: எனக்கு 11 வயது இருக்கும். அந்த அறியாப் பருவத்தில் 40 வயதுக்காரருக்கு எனது பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்தார்கள். அவர் ஏற்கனவே 2 திருமணம் செய்தவர். எனக்குப் பிறகும் இன்னொரு பெண்ணை மணந்து கொண்டார். அந்த இளம் வயதில் எனது திருமணம் நடைபெறாமல் இருந்தால் எனது வாழ்க்கைப் பாதை வேறு வழியில் பயணித்து இருக்கும்.
 
கேள்வி:  அரசியல்வாதிகள் பெண்களுக்கு எதிராக குற்றம் செய்பவர்கள் என்று கருதுகிறீர்களா?
 
பதில்:  அப்படி நினைக்கவில்லை. அரசியல்வாதிகள் பெண்கள் உயர்வுக்காகவே பாடுபடுகிறார்கள். சில பெண்கள் தங்களது சுய நலத்துக்காக அரசியல் வாதிகளை சீரழித்து விடுகிறார்கள்.
 
கேள்வி:  உங்களை 40 பேர் கும்பல் கற்பழித்ததா?
 
பதில்:  கிராமப்புற வாழ்க்கையில் இது எல்லாம் ஒரு பெண்ணுக்கு சாதாரணமானது.
 
கேள்வி: சம்பல் பள்ளத்தாக்கில் இன்னும் கொள்ளை நடைபெறுகிறது உண்மையா?
 
பதில்: ஆமாம். அது உண்மை. வறுமையால் இந்த சம்பவங்கள் நடைபெறுகின்றன. அவர்களின் முன்னேற்றத்துக்கு அரசு பாடு படவேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே இந்த குற்றங்கள் குறையும்.
 
இவ்வாறு பூலான்தேவி கூறியிருந்தார்.
 
"எம்.பி"யாக இருந்ததால் பூலான்தேவி டெல்லியில் தனக்கு ஒதுக்கப்பட்ட வீட்டில் குடியிருந்து வந்தார்.
 

சூரிய சக்தியில் பறக்கும் விமானம்


சூரிய ஆற்ற​லில் இயங்​கக் கூடிய விமா​னத்தை ஸ்விட்​சர்​லாந்து விஞ்​ஞா​னி​கள் உரு​வாக்கி வெற்​றி​க​ர​மாக பறக்​கச் செய்​துள்​ள​னர்.​ ​

சோதனை அடிப்​ப​டை​யில் உரு​வாக்​கப்​பட்ட இந்த சிறிய ரக விமா​னம் முற்​றி​லும் சூரிய ஆற்ற​லில் செயல்​ப​டக்​கூ​டி​ய​தா​கும்.​ பக​லில் சூரிய ஆற்​ற​லைப் பெற்று அதன் மூலம் இர​வி​லும் செயல்​ப​டக்​கூ​டிய விமா​னத்தை வெற்​றி​க​ர​மாக பறக்​கச் செய்​துள்​ள​னர்.

​தற்​போது தொடர்ந்து 36 மணி நேரம் பறந்து உல​கைச் சுற்றி வரக்​கூ​டிய விமா​னத்தை உரு​வாக்​கும் முயற்​சி​யில் விஞ்​ஞா​னி​கள் ஈடு​பட்​டுள்​ள​னர்.​ இந்த விமா​னம் அடுத்த ஆண்டு இள​வே​னில் காலத்​தில் உலகை வலம் வரும் என்று விமா​னத்தை வடி​வ​மைக்​கும் "பெட்​ட​ராண்ட் பிக்​கார்ட்' விஞ்​ஞா​னி​கள் குழு தெரி​வித்​துள்​ளது.​

சோ​தனை முயற்சி வெற்றி பெற்​றால் அடுத்த மூன்று,​​ நான்கு ஆண்​டு​க​ளில் சூரிய ஆற்ற​லில் செயல்​ப​டும் பய​ணி​கள் விமா​ன​மும் சாத்​தி​ய​மா​கி​வி​டும் என்​றும் இக்​கு​ழு​வி​னர் தெரி​வித்​துள்​ள​னர்.​இந்த விமா​னத்தை வடி​வ​மைக்​கும் பணி​யில் தங்​களை ஈடு​ப​டுத்​திக் கொள்ள வேண்​டும் என்​ப​தில் இந்​திய மாண​வர்​கள் மற்​றும் விஞ்​ஞா​னி​க​ளும் ஆர்​வம் காட்டி வரு​கின்​ற​னர்.​ 

இதை வடி​வ​மைக்​கும் குழு​வில் 70 பேர் உள்​ள​னர்.​ இந்​தக் குழு​வின் தலை​வ​ராக பில் முன்ட்​வெல்​லர் உள்​ளார்.​சூரிய ஆற்​றலை பயன்​ப​டுத்​தும் நுட்​பம் குறித்து பயி​லும் இந்​திய மாண​வர்​கள் மற்​றும் விஞ்​ஞா​னி​கள் தொடர்ந்து கடி​தம் எழு​தி​வ​ரு​வ​தாக முன்ட்​வெல்​லர் குறிப்​பிட்​டார்.​ ​புதி​தாக வடி​வ​மைக்​கப்​பட்ட இந்த விமா​னத்​தின் எடை 1,600 ​கிலோ​வா​கும்.​ 

இதன் இறக்கை நீளம் 63 மீட்​டர்,​​ உய​ரம் 6.4 மீட்​டர்.​ ஒரு சிறிய ரகக் காரின் எடையே இதன் எடை​யா​கும்.​ இதன் என்​ஜின் சக்தி ஒரு ஸ்கூட்​ட​ரின் சக்​திக்கு இணை​யா​னது.​ ஏர்​பஸ் ஏ-​340-க்கு இணை​யாக இது இருக்​கும்.​அடுத்த ஆண்டு தொடர்ந்து 36 மணி நேரம் பறக்​கும் வகை​யில் இது வடி​வ​மைக்​கப்​ப​டு​கி​றது.​ 

ஐந்து கண்​டங்​க​ளில் சிறிது நேரம் நின்று இது புறப்​ப​டும் வகை​யில் பயண திட்​டம் வகுக்​கப்​பட்​டுள்​ளது.​சூரிய உத​யத்​திற்கு ஒரு மணி நேரம் முன்​பா​கப் புறப்​பட்டு அதி​க​பட்ச உய​ரத்தை எட்ட வேண்​டி​யது.​ அதா​வது அதி​க​பட்​சம் 8,000 மீட்​டர் எட்டி அதன்​மூ​லம் சூரிய ஆற்​ற​லைப் பெற்று தொடர்ந்து பறப்​பது,​​ பின்​னர் சூரி​யன் மறைந்​த​தும் 1,000 மீட்​டர் உய​ரத்​திற்கு கீழி​றங்கி சக்​தியை அதி​கம் செல​வி​டா​மல் தொடர்ந்து பறப்​பது என முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

​மிகக் குறு​கிய தூரத்​தி​லேயே மேலெ​ழும்பி பறக்​கும் வகை​யில் இது வடி​வ​மைக்​கப்​பட்​டுள்​ளது.​ அடுத்​த​கட்​ட​மாக பிர​மாண்ட விமா​னம் 2013-ம் ஆண்​டில் உரு​வாக்​கத் திட்​ட​மிட்​டுள்​ள​தா​க​வும் குழு​வி​னர் குறிப்​பிட்​ட​னர்.

செவ்வாய், 29 டிசம்பர், 2009

வேலியே பயிரை மேய்ந்த உண்மை சம்பவம்


ஹரியாணா மாநிலத்தில் 14 வயது பள்ளி மாணவியும், டென்னிஸ் வீராங்கனையுமான ருசிகாவை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக முன்னாள் டி.ஜி.பி. ரத்தோருக்கு சம்பவம் நடந்து 19 ஆண்டுகளுக்குப் பிறகு 6 மாதக் கடுங்காவல் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சமீபத்தில் பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் வெளியான இந்தச் செய்தி, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம் வேலியே பயிரை மேய்ந்ததுதான்.ஒரு மூத்த போலீஸ் அதிகாரி, அதுவும் மக்களின் காவலனாக இருக்க வேண்டியவர், ஏதும் அறியாத மாணவியை தனது வக்கிர எண்ணங்களுக்குப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நடந்தது 1990 ம் ஆண்டு. அப்போது ரத்தோர், இன்ஸ்பெக்டர் ஜெனரல் என்ற உயர்ந்த பதவியில் இருந்துள்ளார். விஷயம் வெளியில் தெரிந்தவுடன் அதை மூடிமறைக்க ரத்தோர் கையாண்ட வழி என்ன தெரியுமா? ருசிகாவின் குடும்பத்தினருக்குக் கொலை மிரட்டல் விடுத்ததுதான். ருசிகாவின் சகோதரர் அஷுவின் கைகளைக் கட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீஸôர் துன்புறுத்தியுள்ளனர். வழக்கை வாபஸ் வாங்காவிட்டால் கொலை செய்துவிடுவதாகவும், குடும்பத்தையே அழித்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.

"மழை விட்டும் தூவானம் விடவில்லை' என்பதைப்போல குடும்பத்தாரை மிரட்டி, துன்புறுத்தியது கண்டு மனம் வெறுத்த ருசிகா, சம்பவம் நடந்து 3 ஆண்டுகளுக்குப் பின் 1993 ம் ஆண்டு டிச. 28 ம் தேதி விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான போலீஸ் உயர் அதிகாரியை மாநில அரசு என்ன செய்திருக்க வேண்டும்? வழக்கு முடியும் வரை அவரை சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும்.

குற்றச்சாட்டு உண்மை என்பது தெரியவந்தால் அவரைப் பதவி நீக்கம் செய்திருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக ரத்தோருக்கு கூடுதல் டி.ஜி.பி., மாநில டி.ஜி.பி. என பதவி உயர்வு கொடுத்துக் கௌரவித்துள்ளது.பள்ளி நிர்வாகம் வெளியேற்றிவிட்ட நிலையில் சமுதாயத்தில் இனி நிம்மதியாக வாழ முடியாது என்ற சூழலில், அந்தச் சிறுமி தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

மகள் இறந்துவிட்டாலும், அதற்குக் காரணமான குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என நினைத்த ருசிகாவின் பெற்றோர், பல்வேறு இடையூறுகளுக்கு இடையே வழக்கைத் துணிச்சலுடன் நடத்தி வந்துள்ளனர்.நீதிமன்றத் தலையீட்டின் பேரிலேயே ரத்தோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுவும் சம்பவம் நடந்து 9 ஆண்டுகளுக்குப் பின்.

இந்த வழக்கில் இப்போது, அதாவது 19 ஆண்டுகள் கழித்துத் தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு 6 மாதம் கடுங்காவல்; ஆயிரம் ரூபாய் அபராதம். சட்டத்தின் பாதுகாவலன் செய்த படுபாதகச் செயலுக்கு வழங்கப்பட்ட இந்தத் தண்டனை வெறும் கண்துடைப்புதான்.ஏற்கெனவே பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு ஓய்வுபெற்றும் ராஜவாழ்க்கை வாழ்ந்து வரும் ரத்தோருக்கு இந்தத் தண்டனை ஒன்றும் பெரிதல்ல. 

இது கீழ் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்புத்தானே! உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் இருக்கவே இருக்கிறது. ஜாமீன் பெற்றுவிட்டால் சிறைவாசத்தைக் கழிக்காமலே காலத்தை கழித்துவிடலாம் என்ற மனப்பாங்கில்தான் அவர் இருப்பார்.இப்போது நம்முள் எழும் கேள்வி இதுதான். பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுக்கு ஆளான ஓர் அதிகாரி, பதவி உயர்வு பெற்றதுடன் எந்தப் பிரச்னையுமின்றி ஓய்வுபெற்றது எப்படி என்பதுதான்.

கிரிமினல் குற்றவாளிகளுக்கும் போலீஸôருக்கும் தொடர்பு இருப்பதுபோலவே, கிரிமினல் எண்ணம் கொண்ட போலீஸôருக்கும் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருப்பதுதான் இதுபோன்ற செயல்களுக்குக் காரணமாக இருக்குமோ என்று தோன்றுகிறது. மற்றொருபுறம் சட்டத்தில் உள்ள ஓட்டைகளே இதற்குக் காரணமாக இருக்கலாம்.

சட்டத்தின் காவலனே குற்றவாளிக் கூண்டில் நின்றால் தண்டனை கடுமையாகத்தானே இருக்க வேண்டும். ஆனால், அதிகார வர்க்கத்தினருக்கு அரசியல்வாதிகளே கேடயமாக இருந்து காப்பாற்றி வருகின்றனர் என்பதுதான் ஜீரணிக்க முடியாத உண்மையாகும்.குற்றச்சாட்டுக்கு ஆளான ரத்தோர் மீது துறை ரீதியில் விசாரணை நடத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்ததாகவும், ஆனால், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் ஓய்வுபெற்ற மற்றொரு போலீஸ் உயர் அதிகாரியான ஆர்.ஆர்.சிங் கூறியுள்ளார். 

அவரைக் காப்பாற்ற எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்று கூறிவரும் அரசியல் தலைவர்கள் ஒருவர் மீது ஒருவர் பழிசுமத்தி வருகின்றனர். இதனால் எந்தப் பயனுமில்லை.ருசிகா வழக்கில் நீதிமன்றம் மூலம் நியாயம் கிடைக்க 19 ஆண்டுகள் காலதாமதம் ஆகியுள்ளதைக் காணும்போது அவருக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

போலீஸ் அதிகாரி ரத்தோர், ருசிகாவிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கு மட்டும் ஆளாகவில்லை. அவர் தற்கொலை செய்துகொள்ளவும் தூண்டியிருக்கிறார்.எனவே இந்த வழக்கைப் புதிதாகக் கையிலெடுத்து விசாரித்து அவருக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வழங்கவேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருந்தால் எந்தவிதமான குற்றச்செயல்களில் ஈடுபட்டாலும், அரசியல் செல்வாக்கு இருந்தால் தண்டனையின்றித் தப்பிவிடலாம் என்ற நிலை இருக்குமானால், குற்றங்கள் அதிகரிக்குமே தவிர குறைந்துவிடாது.

இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடக்காமல் இருக்க வேண்டுமானால், சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது என்ற நிலை உருவாக வேண்டும். இதற்கு சட்டங்களையும் நீதிமன்ற நடைமுறையிலும் தேவையான மாற்றங்களைக்  கொண்டுவருவதுதான் ஒரே வழி.

முக்கனிகளின் முதல் கனி : மாம்பழம்
      எல்லோருக்கும் பிடித்தமான பழம் மாம்பழம். மாம்பழம் சூடானது, அதிகமாக சாப்பிட்டால் உஷ்ணம் உடம்பில் ஏறி தொல்லை தரும் என்பார்கள். இதனை மருத்துவ விஞ்ஞானம் ஏற்கவில்லை.
100கிராம் மாம்பழத்தில் 12.2 முதல் 42.2 மில்லி கிராம் வரை வைட்டமின் ஏ யும், 13.2 முதல் 80.3 மில்லி கிராம் வரை வைட்டமின் சி-யும் உள்ளது. 

    தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் இந்த இரண்டு வைட்டமின்களும் எளிதாக நமது உடலை வந்தடையும். பல பேர்கள் மாம்பழத்தை முழுதுமாக சாப்பிடாமல் தோல் பகுதியை தூர எறிந்துவிடுவார்கள்.

      மாம்பழத்தின் மேல் தோல் பகுதியில்தான் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. மனிதர்களின் உடலுக்கு அதிக முக்கிய தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகியவைகள் நாம் சுவையாக சாப்பிடுகின்ற மாம்பழத்தில் அதிகமாக இடம் பெற்றுள்ளது. வெண்ணெயில் அளவுக்கு அதிகமான வைட்டமின் ஏ இருப்பதை நாம் அறிவோம். 

    இதே போன்றே மாம்பழத்திலும் அளவுக்கு அதிகமான வைட்டமின ஏ இருப்பதால் விலை கூடுதலான வெண்ணெயை உண்பதைவிட விலை மலிவான மாம்பழத்தை உண்ணலாமே. நாம் சாப்பிடாமல் தூக்கி எறியும் மாங்கொட்டையிலும் கால்சிய சத்தும், கொழுப்பு சத்தும் இருக்கின்றது.

மாம்பழத்தின் பூர்வீகம் இந்தியாதான். இப்போதும் அதிகமாக இங்குதான் மாம்பழம் உற்பத்தி ஆகிறது. உத்திரப்பிரதேசத்தில்- சப்போட்டா, துஷேரி போன்ற வகையான மாம்பழங்களும், தென்னிந்தியாவில் அல்போன்சா, பகனப்பள்ளி, ராஸ்புரி, நீலம், ஒட்டு, மல் கோவா, கிளிமூக்கு என்று பல்வேறு வகையான மாம் பழங்கள் கிடைக்கின்றது. 

     அதிகமாக சாறும், நாறும் உள்ள பழங்களில் இருந்து பழச்சாறு, ஒருவகை சட்னி, பழ ஊறுகாய், ஜாம் ஆகியவை தயாரிக்கப்படுகிறது. 

திங்கள், 28 டிசம்பர், 2009

வரலாறு : பூலான் தேவி ( பாகம் -3 )

 

 
 
பல கொலை, கொள்ளைகளில் ஈடுபட்ட பூலான்தேவி, 1983 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12 ந்தேதி மத்தியபிரதேசத்தில் அப்போதைய முதல் மந்திரி அர்ஜூன்சிங் முன்னிலையில் சரண் அடைந்தாள். முதலில் குவாலியர் ஜெயிலில் பூலான்தேவி அடைக்கப்பட்டாள். பின்னர் புற்று நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக டெல்லி திகார் ஜெயிலுக்கு மாற்றப்பட்டாள்.
 
11 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயில் தண்டனை அனுபவித்ததும் வழக்கு விசாரணையில் தாமதம் ஏற்பட்டு வந்ததால் தன்னை விடுதலை செய்யவேண்டும் என்று பூலான்தேவி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்து இருந்தாள்.
 
இதற்கிடையில் உத்தரபிரதேசத்தில் பதவி ஏற்ற முலாயம்சிங் யாதவ் தலைமையிலான கூட்டணி அரசு, பூலான்தேவிக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெற்றது. மத்தியபிரதேச மாநிலத்திலும் அவள் சம்பந்தப்பட்ட வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை.
 
இந்த சூழ்நிலையில் பூலான் தேவியை பரோலில் விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 18.2.1994 அன்று உத்தரவிட்டனர். விடுதலையாகும் பூலான் தேவிக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டு இருந்தனர்.
 
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி 19.2.1994 காலை 10:50 மணிக்கு பூலான்தேவி டெல்லி தலைமை மெட்ரோ பாலிட்டன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டாள். மாஜிஸ்திரேட்டு ஓ.பி.காக்னே ரூ.50 ஆயிரத்துக்கு சொந்த ஜாமீனில் பூலான்தேவியை விடுதலை செய்தார். 20 நிமிடத்தில் கோர்ட்டு நடவடிக்கைகள் முடிந்து 11:10 மணிக்கு பூலான்தேவி மலர்ந்த முகத்துடன் கோர்ட்டை விட்டு வெளியே வந்தாள்.
 
11 ஆண்டு கால சிறை வாசத்துக்குப்பின் "சுதந்திர பறவை"யாக வெளியே வந்த பூலான்தேவியை பார்த்ததும் கோர்ட்டுக்கு வெளியே திரண்டு இருந்த நூற்றுக்கணக்கான பேர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். சிலர் அவளை வாழ்த்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
 
வழக்கமாக கொள்ளைக்காரிகள் அணியும் உடைகளுக்கு மாறாக, சேலை அணிந்து புதிய தோற்றத்துடன் காணப்பட்ட பூலான்தேவி கூட்டத்தினரை நோக்கி திரும்பி, விடுதலை அடைந்ததில் மகிழ்ச்சி அடைவதாக உரத்த குரலில் கூறினாள்.
 
பின்னர் அங்கிருந்து வடக்கு டெல்லியில் பழைய குப்தா காலனியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பூலான்தேவி அழைத்து செல்லப்பட்டாள்.
 
பூலான்தேவி சரண் அடைந்தபோது, 8 ஆண்டுகளில் விடுதலை செய்து விடுவதாக அரசு உறுதி அளித்து இருந்தது. ஆனால், 3 ஆண்டுகள் தாமதம் ஏற்பட்டு, 11 ஆண்டு சிறை வாசத்திற்குப்பின் விடுதலை செய்யப்பட்டாள். அப்போது அவளுகக்கு வயது 37.
 
கான்பூர் அருகே தாகூர் இனத்தைச் சேர்ந்த 22 பேர் படுகொலை செய்யப்பட்டதற்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பூலான்தேவி மறுத்தாள். இந்த பயங்கர படுகொலை நடந்தபோது தான் பெட்வா நதிக்கரையில் இருந்ததாகவும் அவள் கூறினாள்.
 
பூலான்தேவி கோர்ட்டுக்கு வந்தபோது விதிமுறைகளுக்கு மாறாக வெளிநாட்டு நிருபர்களும் வந்திருந்து கோர்ட்டு நடவடிக்கைள் பற்றி குறிப்பெடுத்துக்கொண்டு இருந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக, கோர்ட்டு கதவுகளை போலீசார் மூடி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
 
கோர்ட்டில் இருந்து வெளியே வந்த பூலான்தேவி "எனக்கு தற்போது உடல் நிலை சரியில்லை. சதை வளர்ச்சியால் ஏற்பட்ட கட்டிக்கு சிகிச்சை பெறப்போகிறேன்" என்று கூறினாள்.
 
ஆனால் அவளது உறவினர் ஹர்பூர்சிங் என்பவர் கூறும்போது, "பூலான்தேவி விடுதலைக்கு காரணமான முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாடி ஜனதா கட்சியில் அவரை சேர்ப்பதற்கு முயற்சி எடுப்பேன்" என்று தெரிவித்தார். பூலான்தேவி அரசியலில் குதிக்கப் போவதாக பரவலாக பேசப்பட்டு வந்தது.
 
இதுகுறித்து பூலான்தேவியை நிருபர்கள் பேட்டி கண்டனர். "அரசியலில் ஈடுபடமாட்டேன்" என்று அவள் மறுத்தாள். "நான் பெண்களின் முன்னேற்றத்துக்காக பணியாற்றப் போகிறேன். இதற்காக அரசியலில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை" என்று பூலான்தேவி கூறினாள்.
 
37 வயதான பூலான்தேவியை திருமணம் செய்து கொள்ள அவளது இனத்தைச் சேர்ந்த பலர் முன்வந்தனர். இதுபற்றி பூலான்தேவியிடம் கேட்டபோது, திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்றாள்.
 
"13 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் எல்லாம் எங்கு போனார்கள்" என்று அவள் திருப்பிக் கேட்டாள். "சினிமாவில் நடிப்பீர்களா?" என்று கேட்டதற்கு "அப்படி எதுவும் திட்டம் இல்லை" என்று கூறிய பூலான்தேவி "நான் அமிதாப்பச்சனின் ரசிகை" என்று மட்டும் கூறினாள்.
 
"என்னை பரோலில் விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட அன்று இரவு எனக்கு மகிழ்ச்சியால் தூக்கமே வரவில்லை" என்றும் பூலான்தேவி குறிப்பிட்டாள். டெல்லி ஜெயில் போலீஸ் "ஐ.ஜி"யாக இருந்த கிரன்பெடியை பூலான்தேவி மிகவும் பாராட்டினாள். "ஜெயில் கைதிகளை கிரன்பெடி மிகவும் நன்றாக கவனித்தார்.
 
அவர் ஜெயில் "ஐ.ஜி." ஆன பிறகு கைதிகளின் வாழ்க்கை நிலை உயர்ந்தது. திகார் ஜெயிலில் கைதிகளுக்கு நல்ல உணவு வழங்கப்பட்டது என்றும் கூறினாள்.

ஞாயிறு, 27 டிசம்பர், 2009

முருங்கை " கீரையின் " முக்கியத்துவம்


       

  
       பச்சைக் கீரைகளில் எவ்வளவோ எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. நாம்தான் அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை. கீரை வகைகளை உணவோடு சேர்க்கச் சொல்லி சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதையர்கள்.
       கீரை வகைகளில் இரும்புச் சத்து கணிசமாக உள்ளது.அந்த வகையில் முருங்கைக் கீரையின் பயன்களைப் பார்ப்போம்.முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.

       சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. அதுபற்றி சற்று விரிவாக காண்போம்.

       இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். எனவேதான், இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற பெயரும் இருக்கிறது. கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம்.
 

    முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங் களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம். முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். 

அதே வேளையில் சிறுநீரைப் பெருக்கும்.
 

 முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர் களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப் படும். தோல் வியாதிகள் நீங்கும்.
 

 முருங்கைப் பட்டை, உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்த விஷத்துக்கும் நரம்புக் கோளாறுக்கும் இது நல்ல மருந்து.
கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் கை கண்ட மருந்து.

       முருங்கைக் காயை வேக வைத்து கொஞ்சம் உப்பு சேர்த்துச் சாப்பிடலாம். முருங்கைக் காய் சாம்பார் எல்லோருக்கும் பிடித்த மானதே. இந்த சாம்பார் சுவையானதாக மட்டும் இருந்து விடாமல் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.
 

    வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கை காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும் சிறுநீரும் சுத்தி அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.
 


   முருங்கை விதையைக் கூட்டு செய்து சாப்பிடலாம். இது மூளைக்கு நல்ல பலத்தை தரும். தாது விருத்தியை உண்டு பண்ணும். ஆனால் மலபந்தத்தைச் செய்வதில் முருங்கை விதைக்கு முதலிடம் தரலாம்.

       முருங்கை மரத்திலிருந்து கிடைக்கும் பிசின் நல்ல டானிக்குகள் செய்ய பயன்படுகிறது. பச்சைப் பிசினை காதில் ஒரு சொட்டு விட்டால் போதும், காது வலி உடனே நின்று விடும்.

       இந்த மரத்தின் வேர் மற்றும் பிசின் சம்பந்தப்பட்ட டானிக்குகளை அல்லது லேகியங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரை சீக்கிரம் வராமல் தள்ளிப்போகும்.

       மேலும் இந்தப் பூவுக்கு தாது விருத்தி செய்யும் குணம் உண்டு. முருங்கைப் பூ உஷ்ணத்தை உண்டு பண்ணக் கூடியதுதான் என்றாலும் அதனால் கெடுதல்கள் எதுவும் இல்லை. முருங்கைப் பிசினில் அரை லிட்டர் நீர் விட்டு புதுப் பாண்டத்தில் வைத்திருந்து காலையில் இரண்டு அவுன்ஸ் நீருடன் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் தாது கெட்டிப்படும்.
முருங்கை இலை சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு தந்தால்,இரத்த சுத்தியும்,எலும்புகளையும் வலுப்படுத்தும். இதில் கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம்,அயம்,வைட்டமின் உள்ளது.

      கர்ப்பையின் மந்தத் தன்மையை பேக்கி,பிரசவத்தை துரிதப்பட்த்தும்.இதன் இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்தம்,தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும் ஆஸ்துமா,மார்சளி,சயம் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை சுப் நல்லது. முருக்கைப் பூவைக் கொண்டு தயாரிக்கப்படும் சூப் செக்ஸ் பலவீனத்தைப் போக்கும்.ஆண்,பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கும்,விந்து விருத்திக்கும் சிறந்தது.

      முருங்கை இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும். முருக்கைகாய் இருதயத்தை வலுப்படுத்துவதுடன்,இருதய நோய்களை போக்கி இரத்தவிருத்தி தாதுவிரித்திசெய்யும். முருங்கை இலை சாறுடன் தேனும், ஒரு கோப்பை இளநீரும் கலந்து பருக மஞ்சகாமாலை,குடலில்ஏற்படும் திருகுவலு,வயிற்றுப்போக்கு கட்டுபடும். விதையில் இருந்து என்னை தயாரித்து வாயுப்பிடிப்பு,மூட்டுவலி களில் பயன் படுத்தலாம் முருக்கைவேரில் இருந்து சாறெடுத்து பாலுடன் செர்த்துப பருகிவர காசநோய்,கீழ்வாயு,முதுகுவலி குணப்படும்.

வைட்டமின்கள் : முருங்கை இலை 100கிராமில் 92 கலோரி உள்ளது.

ஈரபதம்-75.9%
புரதம்-6.7%
கொழுப்பு-1.7%
தாதுக்கள்-2.3%
இழைப்பண்டம்-0.9%
கார்போஹைட்ரேட்கள்-12.5%
தாதுக்கள்,வைட்டமின்கள்,
கால்சியம்-440 மி,கி
பாஸ்பரஸ்- 70மி.கி
அயன்- 7 மி.கி
வைட்டமின் சி 220 மி.கி
வைட்மின் பி காம்ப்ளக்ஸ் சிறிய அளவில்

வரலாறு:பூலான் தேவி ( பாகம் - 2 )


பூலான்தேவியின் இனத்தைச் சேர்ந்த கிராம மக்கள் அவளுக்கு மறைமுக ஆதரவு கொடுத்து வந்தனர். உயர் சமூகத்தினர் தொந்தரவில் இருந்து தங்களை காப்பாற்றும் கேடயம் பூலான்தேவி என்று கருதினார்கள்.
 
இதற்கிடையில் போலீஸ் வேட்டை தீவிரம் அடைந்ததால், பூலான்தேவி சரண் அடைய முடிவு செய்தாள். சில நிபந்தனைகளை விதித்து இருந்தாள். அவளது தங்கை மற்றும் குடும்பத்தினரை போலீசார் பிடித்து காவலில் வைத்தனர்.
 
இதனால் பூலான்தேவி சரண் அடைவதில் ஆர்வமாக இருந்தாள். சில மாத காலம் சமரச தூது நடைபெற்றது. இறுதியில் மத்திய பிரதேசத்தில் சரண் அடைய விரும்புவதாகவும், அங்கு தனது பெற்றோரை அழைத்து வந்து பாதுகாப்பு தரவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தாள். அதனை போலீசார் ஏற்றுக்கொண்டு ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர்.
 
இதனை அடுத்து பூலான்தேவி தனது கொள்ளை கோஷ்டியுடன் மத்தியபிரதேசம் சென்றாள். 11.2.1983 அன்று மத்தியபிரதேச மாநிலம் ஜக்மோரி கிராமத்தின் அருகே உள்ள காட்டில் இருந்து அவள் வெளியே வந்தாள்.
 
நேராக நயாகாவோன் போலீஸ் நிலையத்துக்குச் சென்று ஆஜரானாள். அவளுடன் கொள்ளைக்கூட்டத்தைச் சேர்ந்த மேலும் 4 பேர் சென்றார்கள். அவர்கள், பிந்து நகரத்துக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டார்கள். அங்கு காவலில் வைக்கப்பட்டார்கள்.
 
பிந்து நகரம் குவாலியரில் இருந்து 50 மைல் தூரத்தில் உள்ளது. இந்த தகவல்களை, சம்பல் பள்ளத்தாக்கு போலீஸ் டி.ஐ.ஜி. என்.டி.சர்மா அறிவித்தார். மகுவா கிராமத்தில் நடக்கும் யாகத்தைப் பார்க்க வேண்டும் என்று பூலான்தேவி விருப்பம் தெரிவித்தாள்.அதை நிறைவேற்றுவதற்காக அவளை யாகம் நடக்கும் இடத்துக்கு கொண்டு சென்றார்கள்.
 
என்றபோதிலும் பூலான்தேவி சரண் அடைவது சம்பிரதாயமாக பொதுமக்கள் முன்னிலையில் பிந்து நகரத்தில் 12.2.1983 அன்று காலை 9 மணிக்கு நடைபெறும் என்றும், மத்தியபிரதேச முதல் மந்திரி அர்ஜூன்சிங் முன்னிலையில் ஆயுதங்களை ஒப்படைத்து சரண் அடைவாள் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
 
மத்தியபிரதேசத்தில், இதற்கு முன்பு ஏராளமான கொள்ளைக்காரர்கள் ஜெயப்பிரகாசர் வேண்டுகோளை ஏற்று சரண் அடைந்து இருக்கிறார்கள். பெண் கொள்ளைக்காரிகள் யாரும் சரண் அடையவில்லை. பெண் கொள்ளைக்காரியான அசீனா, புட்லிபாய் இருவரும் முன்பு போலீசாருடன் நடத்திய துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டார்கள்.
 
1982 ம் ஆண்டு ஜுன் மாதம் 17 ந்தேதி, பிரபல கொள்ளைக்காரன் மல்கான்சிங், பிந்து நகரில்தான் முதல் மந்திரி அர்ஜூன்சிங் முன்னிலையில் புதுவாழ்வு தொடங்கினான். அதே இடத்தில்தான் பூலான்தேவியும் சரண் அடைய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
அறிவிக்கப்பட்டபடியே பிந்து நகரில் உள்ள சிவாஜிராவ் சிந்தியா கல்லூரி மைதானத்தில் விசேஷ மேடை அமைத்து இருந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதல் மந்திரி அர்ஜூன்சிங் தனது சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிட்டு பிந்து நகரத்துக்கு வந்தார். சரியாக 9 மணிக்கு பூலான்தேவி மேடைக்கு வந்தாள்.
 
அவள் காக்கி நிற யூனிபாரம் அணிந்து இருந்தாள். நெற்றியை சுற்றி வழக்கம்போல சிவப்பு நிற ரிப்பன் கட்டி இருந்தாள். தோளில் துப்பாக்கியும், மார்பை சுற்றி துப்பாக்கி குண்டு `பெல்ட்'டும் காட்சி தந்தன. 3 மலர் மாலைகள் தயாராக இருந்தன. அதில் ஒன்றை மேடையில் வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி படத்துக்கும், மற்றொன்றை துர்க்காதேவி படத்துக்கும் அணிவித்தாள். 3 வது மாலை முதல்  மந்திரி அர்ஜூன்சிங்குக்கு அணிவிக்கப்பட்டது.
 
பிறகு சரியாக 9.45 மணிக்கு பூலான் தேவி முதல் மந்திரி அர்ஜூன்சிங் முன்பு சென்று மண்டியிட்டு காலை தொட்டு கும்பிட்டாள். தான் எடுத்து வந்த துப்பாக்கி மற்றும் துப்பாக்கி குண்டுகளை முறைப்படி ஒப்படைத்து சரண் அடைந்தாள்.
 
இந்த நிகழ்ச்சியை பார்க்க மைதானத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து இருந்தார்கள். அவர்கள் கை தட்டி ஆரவாரம் செய்தார்கள். அவர்களைப் பார்த்து பூலான்தேவி கைகளை அசைத்தாள். பிறகு இரு கைகளையும் கூப்பி கும்பிட்டாள். அப்போது கூடியிருந்த மக்களும் அவளை நோக்கி உற்சாகமாக கைகளை அசைத்தார்கள்.
 
பின்னர் பூலான்தேவியின் கொள்ளை கூட்டத்தைச் சேர்ந்த 7 பேர் தங்கள் துப்பாக்கிகளையும், வெடிமருந்துகளையும் ஒப்படைத்துவிட்டு முதல் மந்திரியிடம் சரண் அடைந்தார்கள். சரண் அடைந்தவர்களில் பூலான்தேவியின் காதலன் மான்சிங்கும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதே நிகழ்ச்சியில் வேறு சில கொள்ளை கோஷ்டிகளைச் சேர்ந்த 24 கொள்ளைக்காரர்களும் சரண் அடைந்தார்கள்.
 
கொள்ளைக்காரர்கள் சரண் அடைந்த பிறகு முதல் மந்திரி அர்ஜூன்சிங் பேசினார். அவர் கூறுகையில், "எந்தவித நிபந்தனையும் இன்றி பூலான்தேவி சரண் அடைந்து இருக்கிறார். இது போலீசாரின் அயராத முயற்சிக்கு கிடைத்த வெற்றி" என்று குறிப்பிட்டார். பூலான்தேவி சரண் அடைந்த நிகழ்ச்சி சுமார் ஒரு மணி நேரம் நடந்தது.
 
பூலான்தேவியை ஒலிபெருக்கியில் பேசும்படி போலீஸ் அதிகாரி கேட்டுக்கொண்டார். அவள் பேச மறுத்து ஒரு காகிதத்தை நீட்டினாள். அதில் 27 கோரிக்கைகள் எழுதப்பட்டு இருந்தன. அதில் முக்கியமானவை வருமாறு:-

எங்களை தூக்கில் போடக்கூடாது.
கை விலங்கு மாட்டக்கூடாது.
போலீஸ் காவலில் வைக்கக்கூடாது.
தனி கோர்ட்டில் விசாரிக்க வேண்டும்.
 
ஜலான் மாவட்டத்தில் படித்து வரும் என் 14 வயது தம்பிக்கு வேலை கொடுக்கவேண்டும். உத்தரபிரதேசத்துக்கு திருப்பி அனுப்பக்கூடாது. சிறையில் விசேஷ வகுப்பில் வைக்கவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் பூலான்தேவி எழுதி இருந்தாள்.
 
"கொள்ளைக்காரியாக வாழ்ந்ததில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி" என்று ஒரு கேள்விக்கு பதில் அளித்தாள். சரண் அடைவதற்கு முன் பூலான்தேவிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவள் மிகவும் பதற்றத்துடன் காணப்பட்டாள். முன்தினநாள் முழுவதும் அவள் எதுவும் சாப்பிடவில்லை. சரண் அடைந்த பிறகு, பூலான்தேவி குவாலியர் நகர சிறையில் அடைக்கப்பட்டாள்.
 
சரண் அடைந்தபோது பூலான்தேவிக்கு 26 வயதுதான். 
 
தொடரும்..................

சனி, 26 டிசம்பர், 2009

குழந்தைக்கு சுதந்திரம் கொடுங்கள்


குழந்தைகளுக்கு உதவுகிறோம் பேர்வழி என்று சில பெற்றோரும், ஆசிரியர்களும் அவர்கள் விஷயங்களில் சதா தலையிட்டு கொண்டே இருப்பார்கள். அது தவறு. தேவையற்ற விஷயங்களில் அப்படிச் செய்வது குழந்தைகளின் மனங்களுக்குள் மறைந்திருக்கும் சக்தியை வெளிப்படுத்த தடையாக அமையும். அதுமட்டுல்ல அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி, மனதில் ஆழமான பாதிப்பையும் உண்டாக்கும். 

அது அந்தக் குழந்தையின் எதிர்காலத்தையும், வாழ்க்கையையும் பாதிக்கும். நம் குழந்தையின் வாழ்க்கைக்கு நாமே எதிரியாக இருக்கலாமா-? நம் குழந்தை தன்னம்பிக்கையுடன் வளர வேண்டும் என்று விரும்புகிறீர்களா?

உண்மையில் நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தையிடம் அன்பு காட்டுங்கள். அதற்கு உணவூட்டுங்கள். ஆனால் அது விரும்பியதைச் செய்யட்டும் என்று விட்டு விடுங்கள். அது போக விரும்புகிற  இடத்துக்குப் போகட்டும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் குழந்தையின் பாதையை அபாயமற்றதாகப் பத்திரத்தன்மை உள்ளதாகச் செய்விப்பதுதான்.

வாழ்க்கை ஒவ்வொரு சுற்றுக்கும் ஏழு ஆண்டுகள் என்கிற உண்மையான கபடமற்ற பருவம். அந்தக் கால கட்டத்தில் மாசு படிய விட்டால் அது வாழ்க்கை முழுவதையுமே குழப்பமாக்கி விடும். நீங்கள் உண்மையிலேயே உங்கள் குழந்தையை நேசிப்பவராயின் அதனுடைய முதல் ஏழாண்டு கால வாழ்க்கையில் எந்த கட்டுத்திட்டமும் செய்யாது விடுங்கள்.

குழந்தையை உருவாக்க விரும்புகிற யாரும் அதனிடம் பரிவாக நடந்து கொள்வதில்லை. மாறாகத் துன்புறுத்தவே செய்கிறார்கள். உலகின் அதிசயங்களை எண்ணி வியக்கிறது குழந்தை. பலவற்றையும் தெரிந்து கொள்ளும் ஆசையில் கேள்விகளை எழுப்புகிறது. ஆனால் பெற்றோருக்கோ அந்தக் கேள்விகள் எரிச்சலூட்டுவதாய் இருக்கிறது. தங்கள் கைவசம் உள்ள பதில்களைச் சொல்லி வைக்கிறார்கள். குழந்தை அந்த பதிலில் திருப்தி அடைகிறதா என்பதில் அவர்களுக்கு அக்கறை இல்லை. எனவே உண்மையான பதிலை குழந்தை புரிந்து கொள்ளும்படி விளக்கிச் சொல்லுங்கள்.

ஏழு வயது வரை ஒரு குழந்தை கபடமற்றதாய் வளர்க்கப் படுமாயின் அடுத்தவரின் எண்ணங்களால் அசுத்தப்படாமல் இருக்குமாயின் அதன் உள்ளார்ந்த வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. ஆனால் குழந்தையைத் தங்களுடைய ஆளுகைக்கு உட்படுத்தி விடுகிறார்கள்.

உங்கள் குழந்தையை நீங்கள் காப்பற்ற வேண்டியது வேறு யாரிடமிருந்தோ அல்ல. உங்களிடமிருந்துதான். பிள்ளைகள் மீது எந்த சக்திக்கும் அதிகாரம் இருக்கக்கூடாது. குறிப்பாக அவர்களின் முதல் ஏழாண்டு கால வாழ்க்கையில், அந்தக் கால கட்டத்தில் எவ்விதத் தலையீடும் இல்லாமல் இருந்தால் அவர்கள் நன்கு காலூன்றி விடுவார்கள். இப்படி வளர்க்கப்படும் பட்சத்தில் உங்கள் குழந்தைக்கு உங்கள் அச்சமோ கோழைத்தனமோ தொற்றிக் கொள்ள வாய்ப்புகள் குறைவு.

முதல் ஏழு ஆண்டுகளும் நேர்மையான வளர்ச்சி பெற்ற குழந்தையின் வலிமை அசாதாரணமானது. அந்த வலிமை வயது வந்தவர்களிடம் கூட காண முடியாது.

உங்கள் பெற்றோர் வாழ்க்கை முழுவதும் உங்களுக்கு உதவிக் கொண்டே இருந்திருக்கலாம். அதனால் நீங்கள் வளர்ந்த விதத்திலேயே உங்கள் பிள்ளைகளையும் வளர்க்க நினைக்காதீர்கள்.

உங்கள் குழந்தை பின்னாளில் என்னவாக வரும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. அதனுள் மறைந்திருக்கும் சக்தி இன்னதென்று உங்களால் ஆரம்பத்தில் அத்தனை தீர்க்கமாக அடையாளம் காண முடியாது. அதை அடையாளம் தெரிந்து கொள்ள உங்கள் குழந்தைகளின் அடிப்படை சுதந்திரங்களில் தலையீடாதீர்கள்.

குழந்தைக்கு உங்கள் பயத்தையோ, விருப்பு  வெறுப்புகளையோ, கற்றுக் கொடுக்காதீர்கள். அவை கூட ஒரு விதத்தில் தலையீகள் தான்.

இப்படிப்பட்ட எந்த குறுக்கீடும் தலையீடும் இல்லாத குழந்தைகளால் தான் எதிர்காலத்தில் சாதனை சிகரத்தை தொட முடியும் என்பதையும் நன்கு நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள்.

 


வரலாறு : பூலான் தேவி (பாகம் -1)


குலை நடுங்க வைக்கும் கொள்ளைக்காரியாக இருந்து மனம் திருந்தி 11 ஆண்டுகள் சிறைவாசம் கண்டு, பிறகு அரசியலில் புகுந்து பாராளுமன்ற உறுப்பினராகி சாதனை புரிந்தவள் பூலான்தேவி.
 
உத்தரபிரதேச மாநிலத்தில் சாம்பல் பள்ளத்தாக்கு பகுதி கொள்ளையர்களின் கூடாரமாக விளங்கியது. பலரது தலைமையில் கொள்ளை கோஷ்டிகள் இயங்கி வந்தன. இவற்றில் சில கொள்ளைக்கும்பல்கள் பெண்ணை தலைவியாக கொண்டு செயல்பட்டன.
 
இதுபோன்று சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு அதிபயங்கர கொள்ளைக்காரியாக விளங்கியவள்தான் பூலான்தேவி. அவளது வாழ்க்கை வரலாறு பாண்டிட் குயின் என்ற பெயரில் சினிமாப்படமாக வெளிவந்தது. அந்த திரைக்காவியம் பெரும் சர்ச்சையை கிளப்பினாலும் பூலான்தேவியைப் பற்றிய விவரங்கள் ஓரளவு வெளி உலகுக்கு தெரியவந்தது. பிறவியிலேயே பூலான்தேவி கொள்ளைக்காரி அல்ல. கொள்ளைக்காரியாக ஆக்கப்பட்டாள்.
 
பூலான்தேவி உத்தரபிரதேச மாநிலத்தில் ஜலான் மாவட்டத்தில் இருக்கும் ஜோர்கி கபர்வா என்ற கிராமத்தில் பிறந்தாள். மல்லாஸ் எனப்படும் மிகவும் தாழ்த்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவள். தந்தை பெயர் தேவிதீன்; தாயார் பெயர் மூலா. இவர்கள் மிகவும் ஏழைகள். படகோட்டி பிழைத்து வந்தார்கள்.
 
4 சகோதரிகள். ஒரு தம்பி உண்டு. பாலிய விவாகம் (சிறு வயதில் திருமணம்) என்பது அங்கு சர்வசாதா ரணமான விஷயம். வயதுக்கு வரும் முன்பே (அதாவது 11 வயதில்) பூலான் தேவிக்கு திருமணம் நடந்தது. கணவன் பெயர் புட்டிலால். பூலான்தேவியை விட 20 வயதுக்கு மூத்தவன். ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்தவன்.
 
திருமணம் ஆன பெண், வயது வரும் வரை பெற்றோர் கண்காணிப்பில் இருப்பது வழக்கம். அதன்படியே முதலில் பூலான்தேவி தாய் வீட்டில் இருந்தாள். ஆனால் கணவனோ அவளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுவிட்டான்.
 
அவளை பலாத்காரம் செய்தான். இப்படி பல முறை தொல்லைகளுக்கு ஆளானாள். முடிவில் பெற்றோர் வீட்டில் குடிபுகுந்தாள். இதனால் பூலான்தேவியை கைவிட்டு புட்டிலால் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டான்.
 
சிறிது காலம் பெற்றோர் வீட்டில் மகிழ்ச்சியாக இருந்த பூலான்தேவிக்கு அங்கும் நிம்மதி பறிபோனது. பூலான்தேவியின் உறவினரான (மாமா) மையாதீன் என்பவன் பல வழிகளிலும் தொல்லை கொடுத்து வந்தான். ஒருநாள் அந்த கிராமத்தின் பணக்கார வகுப்பினர் பூலான் தேவியின் கற்பை அவளது பெற்றோர்கள் எதிரிலேயே சூறையாடினார்கள்.
 
வாழ்க்கையில் வெறுப்படைந்த பூலான் தேவி தனது சகோதரிகளுடன் ஊரைவிட்டே ஓடினாள். அவளுடைய பெற்றோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனாலும் மாமன், பழி தீர்க்கும் படலத்தை கைவிடவில்லை. கொள்ளைக்காரர்களுடன் பூலான்தேவிக்கு தொடர்பு இருப்பதாக கிராம மக்களை தூண்டிவிட்டு புகார் செய்தான். இதனால் போலீஸ் பிடியில் பூலான்தேவி சிக்கினாள்.
 
சட்டம், நீதியை பாதுகாக்க வேண்டிய போலீசார் அங்கும் பூலான்தேவியிடம் நெறிமுறை தவறி நடந்தனர். கற்புக்கு மீண்டும் களங்கம் விளைவித்தனர். இப்படி பூலான்தேவியின் இளம் வயதில் வறுமை, பசி, பட்டினி, பலாத்காரம், போலீஸ் அடக்கு முறை போன்றவை மீண்டும் மீண்டும் தலைதூக்கின. எனவே இவற்றையெல்லாம் எதிர்த்து போராடவேண்டும் என்ற துணிச்சலை உள்ளத்தில் சவாலாக ஏற்றாள்.
 
பூலான்தேவி மீதான வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. 15 வயதில் கொடூர தாக்குதல்களுக்கு அவள் ஆளாகி இருப்பதை உணர்ந்த நீதிபதி கருணை காட்டி அவளை விடுவிக்க உத்தரவிட்டார். ஓராண்டு உருண்டோடியது. திடீரென்று ஒருநாள் பாபு குஜார்சிங் என்ற கொள்ளைக்காரன் பூலான்தேவியை கடத்திச்சென்றான். அந்த கொள்ளைக் கும்பலில் இருந்தபோதுதான் பூலான்தேவி குதிரை ஏற்றம் மற்றும் துப்பாக்கியால் குறி தவறாமல் சுடும் பயிற்சியை பெற்றாள்.
 
அந்த கொள்ளை கும்பலில் இருந்த விக்ரம்மல்லா என்பவன் அவளுக்கு மிகவும் பாதுகாப்பாக இருந்தான். அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. கொள்ளை கும்பல் தலைவன் பாபு குஜர்சிங் கொல்லப்பட்டான். விக்ரம் கொள்ளைக்கூட்டத்துக்கு தலைவனாகி பூலான்தேவியை திருமணம் செய்தான்.
 
இந்த சந்தர்ப்பத்தில் பூலான்தேவி தன்னுடைய முதல் கணவன் புட்டிலாலை சந்தித்து பிரம்பால் அவனை அடித்து தனது ஆத்திரத்தை தீர்த்துக்கொண்டாள். இதன் பிறகே பூலான்தேவி முழு அளவில் கொள்ளைக்காரியாக மாறினாள். விக்ரம்மல்லா உதவியோடு தனக்கு தீங்கு செய்தவர்களை ஒருவர் பின் ஒருவராக தீர்த்து கட்டினாள். ஆனாலும் அவளுடைய ஆத்திரம் தணியவில்லை.
 
இந்த நிலையில் 1980 ம் ஆண்டு ஆகஸ்டு 13 ந்தேதி கொள்ளை கோஷ்டிகளுக்குள் மோதல் ஏற்பட்டது. இதில் விக்ரம் மல்லா கொல்லப்பட்டான். இதனால் பூலான்தேவி மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டாள். தாகூர் வகுப்பைச் சேர்ந்த சிலர் பூலான்தேவியை சிறை பிடித்து சென்றனர். அவளது கற்பை சூறையாடினார்கள். பிறகு கிராமவாசிகள் உதவியுடன் காட்டுக்குள் தப்பித்துச் சென்றாள், பூலான்தேவி.
 
விக்ரம் மல்லாவை கொன்றவர்களை பழிக்குப்பழி வாங்க துடித்த பூலான்தேவி, மான்சிங் என்ற கொள்ளைக்காரனுடன் இணைந்து ஒரு புதிய கொள்ளைக் கூட்டத்தை உருவாக்கினாள். 1981 ம் ஆண்டு பிப்ரவரி 14 தேதி வடக்கு டெல்லி அருகேயுள்ள பிக்மாய் என்ற கிராமத்துக்கு தனது கொள்ளை கோஷ்டியுடன் சென்றாள். விக்ரம் மல்லாவை கொன்றவர்களுக்கு அந்த கிராமவாசிகள் தஞ்சம் அளித்தனர் என்று குற்றம் சாட்டினாள்.
 
அந்த கிராம மக்கள் "எங்களுக்கு எதுவுமே தெரியாது" என்று எவ்வளவோ கெஞ்சியும் பூலான்தேவி அந்த கிராமவாசிகளை வரிசையில் நிற்க வைத்தாள். குருவியை சுடுவதுபோல் சுட்டாள். அதில் 22 பேர் துடிதுடித்து செத்தார்கள். 8 பேர் கை,கால்களை இழந்தார்கள்.
 
இந்த கொலை சம்பவம் இந்தியா முழுவதையும் உலுக்கியது. பூலான்தேவியை பற்றிய செய்தி நாடு முழுவதும் பரவியது. அது மட்டுமல்ல உத்தரபிரதேச அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. உத்தரபிரதேச முதல் மந்திரியாக இருந்த வி.பி.சிங் 1982 ல் பதவியை ராஜினாமா செய்தார்.
 
உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய இரு மாநில போலீஸ் படைகளும் உஷார் படுத்தப்பட்டன. காடுகளில் புகுந்து பூலான்தேவியை வேட்டையாடினார்கள். ஆனாலும் அவள் சிக்கவில்லை.
 
பூலான்தேவியை உயிருடனோ, பிணமாகவோ கொண்டு வந்தால் ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. போலீஸ் கண்ணில் படாமல் திரிந்த பூலான்தேவி அப்போதும் தனது எதிரிகளை தீர்த்துக்கட்டியபடியே இருந்தாள்.
 
நேபாளத்துக்கு அவள் தப்பி ஓடிவிட்டதாக பேசப்பட்டது. ஆனாலும் கொஞ்ச நாளிலேயே அவள் உ.பி.க்குள் திரும்பினாள். 1982 ம் ஆண்டு டிசம்பரில் ஜலான் மாவட்டத்தை சேர்ந்த 3 மிராசுதாரர்களை கடத்திச்சென்றாள். இதுவே அவள் கடைசியாக அரங்கேற்றிய தாக்குதலாகும்.
 
பூலான்தேவி மீது கொலை, கடத்தல், கொள்ளை, சூறையாடல் என்று 48 பெரிய குற்ற வழக்குகள் பதிவாகி இருந்தன. வடமாநிலங்களையே குலைநடுங்க வைத்த பூலான் தேவி குள்ளமான பெண் ஆவாள். அவளது உயரம் 4 அடி 10 அங்குலம் மட்டுமே.
 
ஆனால் அவளது தோற்றம் கம்பீரமாக இருந்து வந்திருக்கிறது. குதிரை மீது ஏறி அவள் வலம் வந்தால் அந்த சுற்று வட்டாரமே நடுங்கும். கிராமவாசிகள் மண்டியிட்டு வணக்கம் செலுத்துவார்கள். காக்கி நிற உடையில் நெற்றியை சுற்றி சிவப்பு நிற ரிப்பனை கட்டியிருப்பது அவளுடைய தனி முத்திரையாகும்.
 
எப்போதும் தோளில் துப்பாக்கி தொங்கிக் கொண்டிருக்கும். துப்பாக்கி தோட்டா (குண்டுகள்) "பெல்ட்" உடம்பை சுற்றி காட்சி தரும். 

 தொடரும் .................

வெள்ளி, 25 டிசம்பர், 2009

இளமை தரும் ஆரஞ்சு பழச்சாறுஎன்றும் இளமையுடன் வாழ எவருக்குத்தான் ஆசை இருக்காது. தற்போது 20 வயது இளைஞன் கூட நாற்பது வயது அடைந்தவன் போல் காட்சி அளிக்கிறார்கள். தலைமுடி நரைக்கிறது. தோலில் சுருக்கம் ஏற்படுகிறது. கண்கள் குழிவிழுந்து காணப்படுகின்றன. நல்ல திடகாத்திரமான இளைஞர்களை இன்று காணமுடியவில்லை. இதற்குக் காரணம் இராசயனம் கலந்த உணவுகள், அரைவேக்காட்டு உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள், சத்தற்ற உணவுகள், உடலுக்குத்தேவையான உடற்பயிற்சி இல்லாமை போன்றவையே.

இன்றைய மாணவ சமுதாயத்திற்கு கல்விச் சாலைகள் சிறைச்சாலைகளாக உள்ளன. பாடத்திட்டம் அனைத்தும் மூளை சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. உடலுக்குத் தேவையான உடற்பயிற்சி, விளையாட்டு என்பதே இல்லை. மேலும் வீட்டிற்கு வரும் குழந்தைகளை கட்டாயப்படுத்தி சிறப்பு வகுப்புக்கு அனுப்புகிறார்கள். இதுபோல் விடுமுறை நாட்கள் பெரும்பாலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே கழிந்துவிடுகின்றன. அடுத்த தெருவிற்கு செல்லவேண்டும் என்றாலும் வாகனத்தில்தான் செல்கிறோம். நடை என்பது பலருக்கு நோயின் தாக்கத்திற்குப் பிறகுதான் தெரியவரும்.

இப்படி சத்தற்ற உணவும், உடற்பயிற்சி யின்மையும் ஒரு மனிதனை முதுமையின் வாசலுக்கு எளிதில் அழைத்துச் செல்லும்.

உடற்பயிற்சி செய்வதுடன் உடலுக்குத் தேவையான சத்துக்களை நேரடியாகக் கொடுக்கும் பழங்களையும், பழச்சாறுகளையும் சாப்பிட்டு வந்தால் உடலை என்றும் இளமையாக வைத்திருக்கலாம்.

எங்கும் எப்போதும் கிடைக்கும் ஆரஞ்சு பழச் சாறின் மருத்துவக் குணங்களையும், அதன் சத்துக்களையும் அறிந்துகொள்வோம்.

சில உணவுகள் சாப்பிட்டதும் அவை உடலில் சில மாற்றங்களை உண்டுபண்ணி பித்த நீரை அதிகம் சுரக்கச் செய்கின்றன. இதனால் உடலில் உள்ள செல்களின் செயல்பாடுகள் முடக்கப்படுகின்றன.

இந்த பித்த நீர் இரத்தத்தில் கலந்து இரத்தத்தில் உள்ள இரும்புச் சத்துக்களை அழித்துவிடுகிறது. இதனால் இரத்தம் அசுத்தமடைகிறது. பித்த நீர் தலைக்கேறி கண் பார்வை நரம்புகளை பாதிப்படையச் செய்கிறது. மேலும் ஞாபக மறதி ஏற்படுகிறது. சருமம் பாதித்து சுருங்கச் செய்கிறது. தலைமுடி நரைக்கச் செய்கிறது. இதுபோல் இனிப்பு மற்றும் கொழுப்பு உணவுகளை 300 கலோரி அளவு சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரம் கழித்து இரத்தத்தை பரிசோதித்துப் பார்த்தால் பித்த நீர் அதிகம் சுரந்து இரத்தத்தில் கலந்திருப்பதை அண்மையில் கண்டறிந்துள்ளனர்.

இந்த பித்த நீர் அதிகம் சுரப்பதைத் தடுக்கவும், உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் தரும் பழச்சாறுகளில் ஆரஞ்சும் ஒன்று.

ஆரஞ்சு பழச்சாறு சாப்பிட்டவர்களின் இரத்தத்தில் பித்த நீரில் அளவு குறைவாக இருக்கிறது.

ஆரஞ்சு சாறில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை புத்துணர்வுடன் இருக்கச் செய்கிறது. இதனால் உடலில் அணுக்கள் நன்கு செயல்பட ஆரம்பிக்கும். உடலும் முதுமை அடையாமல் இளமைத் தோற்றத்துடன் காட்சியளிக்கும்.

ஒரு சிலருக்கு திடீரென்று குடல் புண் தொண்டைப் புண் ஏற்படுகிறது. இதற்குக் காரணம் பிராய்லர் கோழி வறுவல், ஐஸ்கிரீம் மற்றும் கேக் வகைகளை அதிகமாக சாப்பிடுவதே. இதனால் உடல் சூடாகி வாயுக்கள் சீற்றமாகி புண்களை ஏற்படுத்துகிறது. சில சமயங்களில் இது புற்றுநோயாகக் கூட மாறலாம். இருதய நோய்களுக்கும் இந்த உணவு வகைகளே காரணமாகின்றன. இத்தகைய பாதிப்புகளிலிருந்து விடபட இந்த உணவுகளை தவிர்த்து தினமும் 150 மி.லி ஆரஞ்சு சாறை அருந்தி வரவேண்டும். இருமுறை கூட அருந்தலாம். ஆரஞ்சு பழத்தை தினமும் உண-வில் சேர்த்துக்கொள்வது நல்லது. ஆரஞ்சில் உள்ள கால்சியமும், வைட்டமின் சியும் உடல் திசுக்களை புதுப்பிக்கின்றன.

ஆரஞ்சு பழச்சாறு நன்கு பசியைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கும். செரிமானமாகாத உணவுகளை ஜீரணமாக்கும். கழிவுகள் உடனே வெளியேற்றி குடலை சுத்தமாக்கும். ஆரஞ்சுப் பழச்சாறை இரத்தம் உறிஞ்சிக் கொள்வதால் உடனடியாக உடலுக்கு வெப்பமும் சக்தியும் கிடைத்துவிடுகிறது.

நோயாளிகளுக்கும், தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கும் ஆரஞ்சுப் பழச்சாறை கொடுக்கலாம். கைக்குழந்தைகளுக்கு 50 முதல் 125 மிலி வரை கொடுக்கலாம்.

ஆரஞ்சு பழம் பல்சொத்தையை தடுக்கும். பால் அருந்த விரும்பாதவர்கள் ஆரஞ்சுப் பழச்சாறை சாப்பிடலாம். இதனால் பாலில் கிடைக்கும் கால்சியச் சத்துபோல் ஆரஞ்சிலும் கிடைக்கும்.

ஆரஞ்சு பழச்சாறு நோய்க் கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது. ஜலதோஷம் உடனே குணமாகும். ஆரஞ்சுப் பழச்சாற்றில் சிறிது வெந்நீர் கலந்து அருந்தி வந்தால் ஜலதோஷம் குணமாகும்.

மேலும் சளி, ஆஸ்துமா, காசநோய், தொண்டைப்புண் முதலியவை குணமாக 125 மிலி ஆரஞ்சு சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அருந்தி வந்தால் நுரையீரலில் உள்ள கோளாறுகள் நீங்கும்

நெஞ்சுவலி, இருதய நோய்கள், எலும்பு மெலிவு நோய்களையும் இதிலுள்ள சுண்ணாம்புச் சத்து குணப்படுத்தும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆரஞ்சுப்பழம் கொடுத்து வந்தால் வாந்தி குணமாகும்.

ஆரஞ்சு பழச்சாறை இரவு படுக்கைக்கு செல்லும் முன் அருந்தி வந்தால் நல்ல தூக்கம் கிடைக்கும்.

ஆரஞ்சு பழத்தில் ஏ, பி, சி போன்ற வைட்டமின்களும், ஏழுவகையான தாதுக்களும் உள்ளடங்கியுள்ளது.

என்றும் இளமையுடன் வாழ ஆரஞ்சுப் பழச்சாறு மிகவும் அவசியம். 
           அனைவர்களுக்கும் என் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

வியாழன், 24 டிசம்பர், 2009

ஆர்.எஸ்.எஸ்.யின் வெற்றியா?அத்வானியின் தோல்வியா?


ராஷ்ட்ரீய சுயம் சேவக் சங்கம் ​(ஆர்.எஸ்.எஸ்.)​ விரும்பியபடியே மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து எல்.கே.அத்வானி விலகிவிட்டார்.​ ஆனால்,​​ இதன் மூலம் அத்வானியின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகிவிட்டது என்று அர்த்தம் கொள்ள முடியாது.​ 

ஆர்.எஸ்.எஸ்.,​​ பா.ஜ.க.,​​ அத்வானி இணைந்து கட்சியை வலுப்படுத்த புதிய செயல்திட்டத்தை உருவாக்கியுள்ளனர்.​ அதிகாரப் பங்கீட்டு அடிப்படையிலான இத்திட்டம் நல்ல திட்டம்தான்.பாஜகவின் அடுத்த தலைவர் நிதின் கட்கரி என்று ஆர்.எஸ்.எஸ்.​ தலைவர் மோகன் பாகவத் அறிவித்தபோது,​​ அதை அத்வானி உள்ளிட்ட பலரும் ஏற்றுக்கொண்டனர்.​ நிதின் கட்கரியைத் தேர்ந்தெடுத்ததில் தனக்கும் முக்கிய பங்கு உண்டு என்று அத்வானி கூறியிருந்தார்.​ 

அதேபோல்,​​ அத்வானி தன்னை அணுகி,​​ கட்சித் தலைவர் பதவியை ஏற்குமாறு கேட்டுக் கொண்டதாக நிதின் கட்கரியும் ஒப்புக்கொண்டிருந்தார்.​ இதன் மூலம் தனக்கு அத்வானியின் ஆதரவு உள்ளது என்பதை மறைமுகமாக நிதின் சுட்டிக்காட்டியுள்ளார்.நாடாளுமன்றத்தில் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களாக யார் இருக்க வேண்டும் என்று தீர்மானிப்பதிலும் அத்வானிக்கு முக்கிய பங்கு இருந்தது.​

மக்களவையில் அத்வானிக்குப் பதிலாக எதிர்க்கட்சித் தலைவராக சுஷ்மா ஸ்வராஜும்,​​ மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக அருண் ஜேட்லியும் தொடர்ந்து நீடிப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.​ இதை சங்கப்பரிவாரங்களின் தலைவர்களும் ​ ஏற்றுக்கொண்டுவிட்டனர்.பாஜகவின் சட்டவிதிகள் திருத்தியமைக்கப்பட்டு,​​ நாடாளுமன்றக் குழு தலைவர் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டு,​​ அதன் தலைவராக எல்.கே.அத்வானி இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.​ 

இதற்கு அத்வானியின் எதிர்ப்பாளர்களான மூத்த தலைவர்கள் பலர் எதிர்ப்புத் தெரிவித்தும் ஒன்றும் நடக்கவில்லை.​ ஏனெனில் இதற்கு ஆர்.எஸ்.எஸ்.​ எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்பதுதான்.பாஜக நாடாளுமன்றக் குழு தலைவராக எல்.கே.அத்வானி தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும்,​​ ஆர்.எஸ்.எஸ்.​ அமைப்பு இதில் அதீத ஆர்வம் காட்டவில்லை.​ கட்சியில் எந்தச் சலசலப்பும் இல்லாமல் வழிநடத்திச் செல்ல அவரால்தான் முடியும் என்று நினைத்திருக்கலாம்.

அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பராக் ஒபாமா,​​ தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஹிலாரி கிளின்டனுக்கு வெளியுறவு அமைச்சர் பதவி கொடுத்து அவரது ஆதரவை உறுதி செய்தது போலத்தான் இதுவும்.​ இல்லையெனில் அத்வானியின் ஆதரவாளர்களான அடுத்த தலைமுறையினர் நிதின் கட்கரிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும்.

சோனியா காந்தி எம்.பி.யாவதற்கு முன்னதாகவே அதாவது 1998 ல் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் பதவியை அவருக்கு அளிப்பதற்காக காங்கிரஸ் கட்சி சட்டவிதிகளைத் ​ திருத்தி அமைத்தது.​ அதன் பிறகுதான் சோனியா காந்தி,​​ கட்சியில் முக்கியத்துவம் பெற்று அதிக சக்திவாய்ந்தவராக உருவானார்.​ 1999,​ 2004,​ 2009 தேர்தல்களிலும் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் அளவுக்கு வலுப்பெற்றது.

இப்போது பாஜகவும் சட்டவிதிகளைத் திருத்தியமைத்து அத்வானிக்குப் புதிய பதவியைப் பெற்றுத் தந்துள்ளது.​ ஆனால்,​​ சோனியாவுக்கும் அத்வானிக்கும் வித்தியாசம் உள்ளது.​ சோனியா,​​ ஆளும் காங்கிரஸ் அரசின் முக்கிய சக்தியாக இருந்து வருகிறார்.​ அத்வானி,​​ பாஜகவின் நம்பிக்கைக்குரிய ஆலோசகராகப் பார்க்கப்படுகிறார்.புதிய பதவிக்கு வந்துள்ளதன் மூலம் அத்வானி அரசியலிலிருந்து ஓய்வுபெற்றுவிடுவார் என்று யாரும் கருத வேண்டாம்.​ 

அதாவது பாஜக நாடாளுமன்றக் கட்சித் தலைவரானதன் மூலம் மக்களவை,​​ மாநிலங்களவை இரண்டிலும் எதிர்க்கட்சித் தலைவராக யாரை நியமிக்கலாம் என்று முடிவு செய்யும் அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.​ அதேபோல அவர்களை நீக்கவும் அவருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.​ அவசரப்பட்டு அவர் எந்த முடிவும் எடுக்கமாட்டார் என்றாலும்,​​ முக்கிய முடிவுகள் எடுக்கும் விஷயத்தில் அத்வானியை கட்சி மேலிடம் ஒதுக்கிவிட முடியாது என்பதுதான் இதன் சாராம்சம்.

பாஜக நாடாளுமன்றக் கட்சித் தலைவராக அத்வானி இருப்பதால் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான சுஷ்மாவுடன் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி இணைந்து செயல்பட வழிவகுக்கும்.​ இருவருக்கும் காபினெட் அமைச்சருக்கு இணையான அந்தஸ்து,​​ சலுகைகள் கிடைக்கும் என்றாலும்,​​ மரபின் அடிப்படையில் பார்த்தால் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியைவிட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி சற்று உயர்ந்ததுதான் என்று கூற வேண்டும்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் உள்ளவர்களுக்கு அரசு நிர்வாகத்தில் உரிய அங்கீகாரம் கிடைக்கும்.​ வெளிநாட்டிலிருந்து முக்கியப் பிரமுகர்கள் யாராவது வந்தால்,​​ இங்குள்ள எதிர்க்கட்சித் தலைவர்களையும் மரியாதை நிமித்தம் சந்திப்பதுண்டு.​ மேலும்,​​ அரசு ஏதாவது குழு நியமித்தால் அதில் எதிர்க்கட்சித் தலைவருக்கும் முக்கிய இடம் இருக்கும்.​ முக்கிய நியமனங்களில் எதிர்க்கட்சித் தலைவரைக் குழுவில் சேர்க்காமல் எந்த முடிவையும் அரசால் எடுக்க முடியாது.அத்வானியின் ஆதரவு இல்லாமல் சுஷ்மா ஸ்வராஜ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியிருக்க முடியாது.​ 

அதுமட்டுமல்ல;​ அப்பதவியில் அவர் தொடர்ந்து நீடிக்க வேண்டுமானாலும் அதற்கு அத்வானியின் ஆதரவு தேவை.​ எனினும் அத்வானிக்குப் பதிலாக சுஷ்மாவைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் கட்சிக்குள் நிலவிவரும் உட்பூசலுக்கு தீர்வு காண முடியாது.முதலாவதாக,​​ பாஜகவில் அடுத்த தலைவர் யார் என்கிற சர்ச்சை எழுந்தது.​ அதற்கு ஒருவழியாகத் தீர்வுகாணப்பட்டுவிட்டது.​ இரண்டாவதாக,​​ பாஜகவின் அன்றாடச் செயல்பாடுகளில் ஆர்.எஸ்.எஸ்.​ இயக்கத்தின் தலையீடு இருக்கக்கூடாது என்று கட்சியின் முக்கியத் தலைவர்கள் சிலர் கருத்துத் தெரிவித்தனர்.​ 

பாஜகவின் முக்கியப் பதவியில் அத்வானி நீடிப்பது சங்கப்பரிவாரங்கள் தலையீட்டை எதிர்ப்பவர்களின் கரங்களை வலுப்படுத்தும்.ஆர்.எஸ்.எஸ். ​ ஆதரவாளரான நிதின் கட்கரி கட்சித் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.​ கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பதவிக்கு ஆர்.எஸ்.எஸ்.​ பிரசாரகர்களை அவர் நியமிக்கக்கூடும்.அத்வானி உள்ளிட்ட முக்கிய தலைவர்களைப் பதவியிலிருந்து அகற்றும் அல்லது இடைநீக்கம் செய்யும் அதிகாரமும் அவருக்கு உள்ளது.​ 

ஆனாலும்,​​ சங்கப்பரிவாரங்கள் தங்கள் இஷ்டம்போல் செயல்பட முடியாது.மூன்றாவதாக,​​ பாஜகவின் நிலைப்பாடு என்ன?​ நாங்கள் மாறுபட்டவர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்ள பாஜக என்ன செய்யப்போகிறது?​ இளைய தலைமுறையினரின் வாக்குகளைப் பெற அக்கட்சி என்ன செய்யப்போகிறது?​ என்பது முக்கியமான விஷயமாகும்.பாஜகவில் உள்கட்சிப் பூசல்கள் அதிகரித்து,​​ அக்கட்சிக்குக் கெட்டபெயர் ஏற்பட்ட நேரத்தில் புதிய தலைவராக நிதின் கட்கரி பொறுப்பேற்றுள்ளார்.​ 

சமீபத்தில் நடைபெற்ற தேர்தல்களில் அக்கட்சி தோல்வியையே சந்தித்துள்ளது.​ விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் நாட்டில் தலைதூக்கிய போதிலும் ஆளும் காங்கிரஸ் கட்சியை திக்குமுக்காட வைக்கும் அளவுக்கு பாஜகவால் ஏதும் செய்ய முடியவில்லை.சங்கப்பரிவாரங்களைத் திருப்திப்படுத்தி,​​ எதிர்ப்பாளர்களைச் சமாளித்து கட்சியை நடத்திச் செல்லவேண்டிய பொறுப்பு,​​ புதிய தலைவரான நிதின் கட்கரிக்கு உள்ளது.​ மாநில அளவில் தலைவராக அவர் பேசப்பட்டவர்தானே தவிர தேசிய அளவில் அவர் எந்தப் பொறுப்பையும் இதுவரை வகிக்கவில்லை.

நாகபுரியைச் சேர்ந்த நிதின் கட்கரிக்கு ஆர்.எஸ்.எஸ்.​ பின்னணி இருக்கிறது.​ அதன் தலைவர் மோகன் பாகவத்துடன் சேர்ந்து பணியாற்றினாலும்,​​ அவருடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகச் சொல்ல முடியாது.​ எனினும் 52 வயது இளைஞரான நிதின்,​​ பாஜகவுக்கும் சங்கப்பரிவாரங்களுக்கும் பாலமாக இருப்பார் எனத் தெரிகிறது.​ 

காங்கிரசில் ராகுல் காந்தி எப்படி இளைஞர் படையை வழிநடத்திச் செல்கிறாரோ அதேபோல நிதின் கட்கரியும் பாஜகவை வழிநடத்திச் செல்வார் என்ற எதிர்பார்ப்பு பலரிடம் உள்ளது.பாஜகவில் அடல் பிகாரி வாஜ்பாய்,​​ எல்.கே.அத்வானி ஆகிய இருவரும் ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்கு மேலாக கட்சியின் வளர்ச்சிக்குப் பாடுபட்டு வந்துள்ளனர்.​ சில சமயங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டபோதிலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் திறம்படச் செயலாற்றி வந்தனர்.​ 

அவர்களின் காலம் முடிவுக்கு வந்துவிட்டது.புதிய தலைவரான நிதின்,​​ கட்சியில் எந்தக் கோஷ்டியையும் சேராதவர்.​ அது அவருக்குச் சாதகமான அம்சம்.​ அவரது தலைமையில் பாஜக புதிய கட்டத்தில் அடியெடுத்து வைக்கிறது.​ வாஜ்பாய்க்கு அடுத்தபடியாக கட்சியில் சிறந்த பேச்சாளராக இருப்பவர் சுஷ்மா ஸ்வராஜ்,​​ அதேபோல அருண் ஜேட்லியும் புதிய உத்திகளுடன் செயல்படக்கூடிய திறன்பெற்றவர்.​ இவர்களை அரவணைத்து நிதின் கட்கரி கட்சியை எப்படி கொண்டு செல்லப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வடக்கு வாழட்டும் ஆனால் தெற்கு தேய்கிறதே ?


மதராஸ் மாநிலம் என்றைக்கோ தமிழ்நாடாகிவிட்டது,​​ தமிழ்வழிக் கல்விக்கு ஊக்கம் அளிக்கப்பட்டு ​வருகிறது,​​ திரைப்படங்களுக்கு தமிழ்ப் பெயர் சூட்டினால் வரிச்சலுகை தரப்படுகிறது,​​ ஐ.ஏ.எஸ். தேர்வைக்கூட தமிழில் எழுத வழிவகை செய்யப்பட்டுள்ளதாகப் பரப்புரை செய்யப்பட்டு வருகிறது.​ தில்லி அதிகார பீடத்தில் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களுக்கும் சிம்மாசனம் போடப்பட்டுள்ளது -​ இவை அனைத்தும் தமிழனின் உயர்வின் அடையாளம் என்று எண்ணத்தோன்றுவது இயற்கைதான்.

ஆனால் விற்க முடிந்ததையெல்லாம் விற்றுப் பெற்ற கல்வியை வைத்து,​​ மத்திய அரசில் வேலைக்கு விண்ணப்பிக்கவே முடியாத சூழ்நிலையில் இருக்கின்ற தமிழ் இளைஞர்களின் எதிர்காலம் பற்றி ஆட்சியாளர்கள் யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

இந்தி தெரியாதவர்கள் மத்திய அரசின் பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பிக்கவே தகுதியற்றவர்கள் என்ற நிலை கடந்த கால் நூற்றாண்டாக நிலவி வருகிறது.​ மத்திய அரசின் இந்த மாற்றாந்தாய் மனப்பான்மை நிலைப்பாட்டினால் இந்தியாவிலேயே பாதிக்கப்படுகிற ஒரே இனம் இந்தி படிக்காத தமிழினம் என்பதைக் கேட்கும்போது நெஞ்சு பதைக்கிறது.

திராவிட இயக்கங்கள் மக்களின் மகத்தான ஆதரவுடன் இந்தித் திணிப்பை எதிர்த்துக் கிளர்ந்தெழுந்து,​​ இருமொழிக் கொள்கையை இறுகப் பற்றிக்கொண்டு தமிழனின் உரிமைகளை மீட்டெடுக்கின்ற பயணத்தைத் தொடங்கி 42 ஆண்டுகள் ஆகின்றன.

தமிழ்மொழியை இந்தி ஆதிக்கத்தின் ஆக்டோபஸ் கரங்களிலிருந்து காத்து,​​ அதை உன்னத நிலைக்கு எடுத்துச் செல்லவேண்டும் என்ற உணர்வுபூர்வமான சிந்தனை உச்சி முகர்ந்து மெச்சத்தக்கதே.​ தாய்மொழியைக் கண்பாவைபோல் கட்டிக்காக்காத பல இனங்களின் மொழிகள் வழக்கொழிந்துபோயின என்பது வரலாற்றின் ஏடுகளில் காணக்கிடக்கிறது.​ 

​இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் குறைந்தபட்ச மொழி உரிமைகளே மறுக்கப்பட்டுவருகின்ற சூழ்நிலையில்,​​ நாட்டின் முதல் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு கொடுத்த இந்தி பேசாத மக்கள்மீது அவர்களாக விரும்பிக் கேட்கும்வரை இந்தி திணிக்கப்படாது என்ற உறுதிமொழியை அவருக்குப்பின் வந்த மத்திய ஆட்சியாளர்களும் பின்பற்றுவர் என்று எண்ணி,​​ தமிழக ஆட்சியாளர்கள் வாளாதிருந்ததால்,​​ அதுவே இப்போது தமிழர்களின் தலைக்குமேல் வாளாகத் தொங்குகிறது.​ ஒருபுறம் இந்திய மொழிகளின் மேம்பாட்டுக்குத் தாராள நிதி அளிப்பதாக தம்பட்டம் அடித்துக்கொள்ளும் மத்திய அரசு,​​ மறுபுறம் மத்திய அரசுப் பணிகளுக்கு இந்தியைக் கட்டாயமாக்கும் ஏகாதிபத்திய ஏவல்களை ஓசைப்படாமல் செய்துவருகிறது.

1965-ம் ஆண்டு முதல் மத்திய அரசால் நடத்தப்பட்டு வருகின்ற கேந்திரிய வித்யாலயா என்று அழைக்கப்படும் மத்திய அரசுப் பள்ளிகள் நாடுமுழுவதிலும் 981 இருக்கின்றன.​ இவற்றில் 49 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் பிற ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர்.​ 1986-ம் ஆண்டுவரை இந்தப் பள்ளிகளில் ஆசிரியப்பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் இந்தி படித்திருக்கவேண்டும் என்று கேட்கப்பட்டதில்லை.​ 1986-ம் ஆண்டுக்குப்பிறகு இப்பள்ளிகளில் ஆசிரியப்பணிக்கு இந்தி படித்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது.​ 

​அதேபோல் 1986-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தேசிய கல்விக்கொள்கையின் அடிப்படையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியால் தொடங்கப்பட்ட நவோதயா பள்ளிகள் எனப்படும் மாதிரிப் பள்ளிகள் இந்தியா முழுவதும் 567 இருக்கின்றன.​ மத்திய ஆட்சியாளர்கள் இப்பள்ளிகள் மூலம் மும்மொழிக் கொள்கையை முன்மொழிந்ததால் இவை இதுவரை தமிழ்நாட்டில் வழிமொழியப்படவில்லை.​ இப்பள்ளிகளில் ஆசிரியப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கும் இந்தி அறிவு கட்டாயத் தேவையாக உள்ளது.​ 1986-ம் ஆண்டு வரை,​​ அதாவது 21 ஆண்டுகள் இந்தி படிக்காத தகுதியான தமிழர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் இப்பள்ளிகளில் திறம்படப் பணியாற்றி நல்லாசிரியர் விருதுகள்கூடப் பெறமுடிந்தது.​ இதைப் பொறுத்துக்கொள்ளமுடியாத மத்திய அரசு இந்தியைக் கட்டாயமாக்கி,​​ மெத்தப்படித்த தமிழ் இளைஞர்கள்கூட விண்ணப்பிக்க முடியாத சூழ்நிலையை உருவாக்கிவிட்டது.

நடப்பு ஆண்டில் மட்டும் மத்திய அரசின் இந்தப் பள்ளிகளில் 6037 ஆசிரியப் பணியிடங்கள் காலியாக உள்ளதாக சமீபத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் டி.புரந்தேஸ்வரி தெரிவித்திருக்கிறார்.​ ஆனால் படித்த தமிழ் இளைஞர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இயலாத திக்கற்றவர்களாக இருக்கின்றனர்.​ கூட்டாட்சித் தத்துவத்துக்கே வேட்டு வைக்கிற மத்திய அரசின் இந்த முடிவால் கடந்த 23 ஆண்டுகளில் பல ஆயிரம் தமிழர்கள் வேலைவாய்ப்பை இழந்து நிற்கிறார்கள் என்பது உண்மை.​ ​

​மத்திய கல்வித்துறையின் ஒரு பிரிவிலேயே தமிழர்கள் இந்த அளவுக்கு வஞ்சிக்கப்படுகிறார்கள் என்றால்,​​ மத்திய அரசின்கீழ்வரும் மற்ற எந்தெந்தத் துறைகளில் தமிழர்கள் இப்படிப் புறந்தள்ளப்பட்டிருப்பார்கள் என்பதை எண்ணிப் பார்க்கவே ​ மலைப்பு மேலிடுகிறது.​ இந்தி படிக்காதவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை என்று சொல்லுகிற கயமைக்குச் சொந்தக்காரர்களைவிட,​​ இந்தி படித்தே ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்திய மொழிவெறியர்களே மேலானவர்கள் அல்லவா?​ இப்படித் ​ தொடர்ந்து ஏமாற்றப்பட்டுவரும் தமிழ் இளைஞர்களுக்கு அவர்களின் உரிமையை மீட்டெடுத்துக் கொடுக்க கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் தமிழக ஆட்சியாளர்கள் யாரும் முதலடிகூட எடுத்துவைக்கவில்லையென்பதுதான் வேதனையின் உச்சம்.​ 

திராவிட அரசுகள் தொடர்ந்து கடைபிடித்துவரும் இருமொழிக் கொள்கையின் காரணத்தால் இந்தி படிக்காமல் இருந்துவிட்ட இளைஞர்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறபோது,​​ கன்றின் குரல் கேட்ட தாய்போல் ஓடோடிச் சென்று அவர்களின் உரிமையை மீட்டுக்கொடுப்பது மாநில அரசின் கடமையல்லவா?​ இந்தி படிக்கவில்லையென்றால் மத்திய அரசில் வேலையில்லை என்று சொல்வதைவிட,​​ மத்திய அரசின் வேலைவாய்ப்பு விளம்பரங்களில் தமிழர்கள் விண்ணப்பிக்கத் தேவையில்லை என்று ஒருவரி சேர்த்துவிடலாமே!​ ​

கடந்த 2005-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவானது இந்திய சட்டக் குழுவிடம் ஒரு பரிந்துரையை அளித்தது.​ அதில் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 348-ஐ திருத்தி,​​ உச்ச நீதிமன்றத்திலும்,​​ உயர் நீதிமன்றங்களிலும் இந்தியில் அலுவல் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.​ சட்டக்குழுவின் ​ தற்போதைய தலைவரான நீதியரசர் ஏஆர்.​ லட்சுமணன் அந்தப் பரிந்துரையை கடந்த ஆண்டு அடியோடு நிராகரித்தார்.​ இவ்வாறு செப்படி வித்தைகள் செய்து இந்தியைத் தூக்கிப்பிடிக்க வடபுலத்தவர் மேற்கொள்ளும் முயற்சிகளின் முனை முறிந்துபோகச் செய்வதற்கான ஒற்றுமை தமிழக அரசியல் கட்சிகளிடம் இல்லாதது வேதனைக்குரியது.​ ​

தமிழ்வழிக் கல்விக்கொள்கையால் தம் வாழ்வுரிமையான வேலைவாய்ப்பை இழந்துநிற்கும் ​ தமிழ் இளைஞர்களுக்கு,​​ மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியின் சமீபத்திய அறிவிப்பு சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளது.​ ரயில்வே தேர்வுகளை இனி அவரவர் தாய்மொழியிலேயே எழுதலாம் என்று கடந்த அக்டோபர் 5-ம் தேதி அவர் தெரிவித்து,​​ அதை இந்த ஆண்டு இறுதிக்குள்ளேயே தொடங்க உத்தரவிட்டிருக்கிறார்.​ கடந்த பல ஆண்டுகளாக மத்திய அமைச்சரவையில் பங்கேற்று இருந்த,​​ இருக்கிற தமிழ்நாட்டைச் சார்ந்த எந்த அமைச்சரும் தாய்மொழியில் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையைக்கூட எங்கும் வைத்ததாகத் தெரியவில்லை.​ 

மம்தா பானர்ஜிக்கு மாத்திரம் இது எப்படி சாத்தியப்பட்டது?​ மம்தா பானர்ஜி என்ன வங்காளிகளின் வழிபடு தெய்வமான துர்க்கையைப் போன்று பத்துக் கைகளும் பராசக்தி அவதாரமுமாகவா இருக்கிறார்?​ எல்லா வங்காளிகளையும் போலவே தாய்மொழிப்பற்று அவருடைய உதிரத்தில் தோய்ந்து கிடக்கிறது.​ தமிழர்களிடத்தில் தாய்மொழிப்பற்று தேய்ந்து கிடக்கிறது !​ ​

புதன், 23 டிசம்பர், 2009

வரலாறு : ராணி எலிசபெத் முடி சூட்டு விழா


கடந்த நூற்றாண்டில் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற மிக முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று, ராணி எலிசபெத் முடிசூட்டு விழா. ராணி எலிசபெத்தின் பெரியப்பாவான "எட்டாம் எட்வர்ட்", காதலுக்காக 1936 டிசம்பர் 10 ந்தேதி முடிதுறந்தார். அதைத்தொடர்ந்து எலிசபெத்தின் தந்தை ஆறாம் ஜார்ஜ் இங்கிலாந்து மன்னரானார். 1937 மே 12.ல் முடிசூட்டு விழா நடந்தது.
 
ஆறாம் ஜார்ஜ் மன்னர் காலத்தில்தான் இந்தியா சுதந்திரம் அடைந்தது. ஆறாம் ஜார்ஜ், புற்று நோயினால் பீடிக்கப்பட்டார். இதன் காரணமாக 1951 செப்டம்பரில் அவருக்கு ஆபரேஷன் நடந்தது. அவருடைய ஒரு நுரையீரல் அகற்றப்பட்டது. 1952 பிப்ரவரி 6ந்தேதி தனது 57-வது வயதில் மரணம் அடைந்தார்.
 
ஆறாம் ஜார்ஜ க்குப்பிறகு இங் கிலாந்து அரசியாக அவர் மகள் எலிசபெத் அறிவிக்கப்பட்டார். எலிசபெத்தின் இயற்பெயர் அலெக்சாண்ட்ரா மேரி. 1926 ஏப்ரல் 21.ந்தேதி லண்டனில் பிறந்தார். 1947 ல் அவருடைய திருமணம் நடைபெற்றது. மணமகன் பிலிப், திருமணத்துக்குப்பின்னர் "எடின்பரோ கோமகன்" என்று அழைக்கப்படுகிறார்.
 
பட்டத்துக்கு வரும்போது எலிசபெத்துக்கு வயது 26. முடிசூட்டு விழா 1953 ஜுன் 2 ந்தேதி லண்டனில் உள்ள மாதா கோவிலில் மிக கோலாகலமாக நடந்தது. முடிசூட்டு விழாவுக்கு எலிசபெத் ராணி தங்கமயமான கோச்சு வண்டியில் கணவர் எடின்பரோ கோமகனுடன் ஊர்வலமாக சென்றார். ஊர்வலத்துக்கு முன்பாக குதிரைப்படை, காலாட் படை, பாண்டு வாத்தியக்குழு ஆகியவை அணிவகுத்து சென்றன. ரோட்டின் இருபுறமும் ராணுவ வீரர்கள் அணிவகுத்து நின்றனர்.
 
ஊர்வலம் காலை 9.27 மணிக்கு புறப்பட்டது. கடும் குளிர் வாட்டியது. இடைஇடையே மழை தூறல் போட்டது. இவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் உடலில் போர்வையை போர்த்திக் கொண்டும், பத்திரிகை காகிதங்களை தலைக்கு மேல் பிடித்துக் கொண்டும் லட்சக்கணக்கான ஆண்களும், பெண்களும் திரண்டிருந்தார்கள். ஊர்வலத்தை காண வழி நெடுகிலும் 50 லட்சம் மக்கள் கூடினார்கள்.
 
சில இடங்களில் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலை மோதியது. பெண்களும், குழந்தைகளும் நெரிசலில் சிக்கி மயக்கம் அடைந்தனர். அவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். இந்த முடிசூட்டு விழாவில் `காமன் வெல்த்' அமைப்பில் பங்கு வகிக்கும் இந்தியா உள்பட 8 நாட்டு பிரதமர்கள் கலந்து கொண்டார்கள். ஊர்வலத்தில் அவர்களும் பவனியாக சென்றார்கள்.
 
பிரதமர் நேருவும், அவருடைய மகள் இந்திரா காந்தியும் இரண்டு குதிரைகள் பூட்டிய கோச்சில் (சாரட்டு வண்டி) சென்றார்கள். 11:32 மணிக்கு ஊர்வலம் மாதா கோவிலை சென்றடைந்தது. இங்கிலாந்தின் தலைமை கிறிஸ்தவ பாதிரியார் (ஆர்ச் பிஷப்) முடிசூட்டு வைபவத்தை நடத்தி வைத்தார். சடங்குகள் எல்லாம் முடிந்ததும் வைரக் கற்கள் பதித்த தங்க மகுடம் எலிசபெத்தின் தலையில் சூட்டப்பட்டது.
 
பிறகு அவர் மேடையில் வைக்கப்பட்டிருந்த தங்க சிம்மாசனத்தில் அமர்த்தப்பட்டார். கையில் செங்கோல் பிடித்திருந்தார். மகுடாபிஷேகம் முடிந்ததும் சடங்குகளை நடத்தி வைத்த ஆர்ச் பிஷப் மண்டியிட்டு ராணிக்கு மரியாதை செலுத்தினார். மற்ற பாதிரியார்களும் முழங்காலிட்டு நின்று மரியாதை செலுத்தினர்.
 
பிறகு ராணியின் கணவரான எடின்பரோ கோமகன் தனது மனைவிக்கு (எலிசபெத் ராணி) முன்பாக வந்து நின்று முழங்காலிட்டு விசுவாசப் பிரமாணம் செய்தார். "எடின்பரோ கோமகனான நான், உங்களுக்கு அடிபணிகிறேன். உங்களுக்காகவே வாழ்ந்து, உங்களுக்காகவே உயிர் துறக்க இதன் மூலம் உறுதி அளிக்கிறேன்" என்று அவர் விசுவாச பிரமாண உறுதிமொழி எடுத்தார்.
 
இந்த முடிசூட்டு வைபவத்தை மாதா கோவிலின் மாடிப்பகுதியில் அமர்ந்து இளவரசர் சார்லஸ் (அப்போது அவருக்கு வயது 4) பார்த்துக்கொண்டிருந்தார். அம்மாவுக்கு முன்பாக அப்பா மண்டியிட்டு பிரமாணம் செய்து கொடுத்ததை கண்டு ஆச்சரியப்பட்டு கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்.
 
எடின்பரோ கோமகனுக்கு அடுத்து ராணியின் உறவினர்களும், பிரபுக்களும் ஒருவர்பின் ஒருவராக சென்று விசுவாசப்பிரமாணம் செய்து கொடுத்தார்கள். மாதா கோவிலில் கூடியிருந்த பிரபுக்களும், மந்திரிகளும், முக்கிய பிரமுகர்களும் ஒன்றுபட்ட குரலில், "கடவுளே! எலிசபெத் ராணியை காப்பாற்றுவாயாக!", "ராணி எலிசபெத் நீடூழி வாழ்க", "ராணி எலிசபெத் சிரஞ்சீவியாக வாழ்க" என்று வாழ்த்து கோஷங்களை முழங்கினார்கள்.
 
பிறகு விஷேச ஆராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ராணி அரண்மனைக்கு பவனியாக சென்றார். அவருக்கு பின்னால் ராஜ குடும்பத்தினர், காமன்வெல்த் தலைவர்கள், பிரபுக்கள், மந்திரிகளும் பவனி சென்றனர்.
 
மறுநாள் ராணி எலிசபெத் தனது அரண்மனையில் விருந்து அளித்தார். இந்த விருந்தில் பிரதமர் நேரு, மகள் இந்திரா காந்தியுடன் கலந்து கொண்டார். வெளிநாட்டு தூதர்களும் இதில் கலந்து கொண்டார்கள். அதற்கு முன்னதாக இங்கிலாந்து பிரதமர் சர்ச்சில் காலை விருந்து கொடுத்தார். அதிலும் நேரு உள்பட 8 காமன்வெல்த் நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர்.
 
முடிசூட்டு விழாவின்போது ராணி எலிசபெத்துக்கு சார்லஸ் (வயது 4), ஆனி (வயது 2) ஆகிய இரண்டு குழந்தைகள். பிறகு 1960-ல் ஆண்ட்ரூவும், 1964-ல் எட்வர்டும் பிறந்தனர். பட்டத்து இளவரசரான சார்லஸ், அழகி டயானாவை மணந்து பிறகு விவாக ரத்து செய்ததும், டயானா கார் விபத்தில் பலியானதும் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள்.
 
உலகின் மிகப்பெரும் கோடீசுவரியாக எலிசபெத் மதிக்கப்படுகிறார். அவருடைய சொத்துக்களின் மதிப்பு ரூ.35,000 கோடி. 1993 ஏப்ரல் மாதம் முதல் எலிசபெத் தானே முன்வந்து வருமான வரி செலுத்தி வருகிறார். அவர் கட்டும் வருமான வரி ஆண்டுக்கு சுமார் 315 கோடி ரூபாய்.

செவ்வாய், 22 டிசம்பர், 2009

"பேரீச்சை" பழத்தின் மகத்துவம்


உலகின் பழமையான நாகரிகமான “மெசபடோமியா”வில்தான் முதன் முதலாகப் பேரீச்சம்பழத்தின் பயன் பற்றி கூறப்பட்டுள்ளது. எகிப்திய பிரமிடுகளிலும், கிரேக்க, ரோமானிய, பாலஸ்தீனிய வரலாற்றுக் குறிப்புகளிலும் இடம் பெற்றுள்ள பேரீச்சம்பழம் கடந்த 300 ஆண்டுகளாக உலகெங்கிலும் “சத்துணவுப்பழமாக” உலக மக்களால் உண்ணப்பட்டு வருகின்றது.

ரத்த விருத்திக்கான இயற்கை மருந்து பேரீச்சை. பேரீச்சையில் இரும்புச்சத்து மட்டுமல்ல, வட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்தும் நிறைந்துள்ளது. தசை வளர்ச்சியை அதிகரித்து, உடல் வலிமையைப் பெருக்கும் இந்தப் பழம், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய அருமையான பழம்.

தினமும் ஒரு பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் இதயம் வலுப்பெறும்.

தினமும் இரண்டு பேரீச்சம்பழத்துடன் ஒரு டம்ளர் பால் சாப்பிட்டு வந்தால் ரத்தம் விருத்தியடையும்.

இனிப்பு உணவுகளைத் தவிர்த்துத் தவிக்கும் சர்க்கரை நோயாளிகள் கூட தாராளமாக பேரீச்சம் பழம் சாப்பிடலாம். பேரீச்சம் பழத்தில் உள்ள இனிப்பால் அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

ஒரு டம்ளர் பேரீச்சம் பழத்தை அரைத்துக் கலந்து சாப்பிட்டு வர எலும்பு வலுப்பெறுவதுடன், உடல் வலிமையும் கூடும்.

எங்கேனும் அடிபட்டதால் அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டவர்கள் தினமும் பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால், இரத்த இழப்பை விரைவில் ஈடுகட்டலாம்.

வெண்குஷ்டம் இருப்பவர்கள் பேரீச்சம்பழ சாறு குடிக்கலாம். இது இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்து, நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்.

தினசரி இரவில் 3 பேரீச்சம்பழம் சாப்பிட்டு சுடுதண்ணீர் அருந்தினால் மலச்சிக்கலைத் தரும் மந்தமான மலக்குடல் சுறுசுறுப்பாகி மலம் சுலபமாக வெளியேறும்.

பேரீச்சம் பழத்தை பிற பழங்களுடன் கலந்து சாலட் ஆக செய்து சாப்பிட வாதம், பித்தம், முட்டி வீக்கம் குணமாகும்.

பேரீச்சம் கொட்டையை வறுத்து பொடி செய்து, “காபி” போல் பால் சர்க்கரை கலந்து பருகலாம். உடலுக்கு உரமளிக்கும் இதனை வாரம் ஓரிரு நாள் பருகுவது நல்லது.

பல் முளைக்கும் குழந்தைகள் வயிற்றுக் கடுப்பால் அவதியுறும்போது பேரீச்சம்பழத்தைச் சுடுநீரில் கலந்து குழைய வேக வைத்து வேளை ஒன்றுக்கு 1 கரண்டி வீதம் 3 வேளை பருக பேதி நிற்கும்.

தினசரி 4 பேரிச்சம்பழம் சாப்பிட்டு வருபவர்கட்கு வயிற்றுக்கடுப்பு, அஜீரணபேதி, மலச்சிக்கல், அ மிபியாசிஸ் போன்ற வயிற்றுக் கோளாறுகள் வருவதில்லை. குறிப்பாக குடலுக்குப் பாதுகாப்பு கவசமாக பேரீச்சம்பழம் விளங்குகிறது.