வியாழன், 12 நவம்பர், 2009

மழையின் கோர தாண்டவம்


ஊட்டி : நீலகிரியில் இறந்த ஒவ்வொரு குடும்பத்துக்கும், ஒவ்வொரு தனிமனிதருக்கும், மரணத்துக்கு முன் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் கடைசி நேர சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. நீலகிரி மாவட்டத்தில், கடந்த மூன்று நாட்களுக்கு பின், நேற்று தான், காலநிலையில் ஓரளவு மாற்றம் ஏற்பட்டது. மூன்று நாட்களாக, மழையின் பிடியில் சிக்கி, திக்குமுக்காடிய மக்கள், சற்று மழையில்லாத "காற்றை' நேற்று சுவாசிக்கத் துவங்கினர். எனினும், வடகிழக்கு பருவமழை தொடரும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு, அனைத்து தரப்பு மக்களிடையேயும் பெருத்த அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.கடந்த மூன்று நாட்களில், ஊட்டி, குன்னூர், கோத்தகிரி ஆகிய சுற்றுப்புற பகுதிகளில் மட்டும், 43 பேர் இறந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மரப்பாலம் உட்பட பிற பகுதிகளில், மேலும் சிலர் இறந்திருக்கலாம் என்ற தகவலும் வந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில், மண் சரிவில் சிக்கியும், வீடுகள் இடிந்தும், குடும்பத்துடன் பலியாகிய பலரும், மரணத்தின் வாயிலை தொடுவதற்கு முன் எதிர்கொண்ட பதட்டமான சூழ்நிலை குறித்த செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. கடந்த 9ம் தேதி, ஊட்டி அருகேவுள்ள மந்தாடா பகுதியில், ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் பலியாயினர். இந்த குடும்பத்தின் தலைவர் ஆனந்த், இறுதி நேரத்தில், மொபைல் போன் மூலம், தனது நண்பர் ஒருவரிடம் பேசியுள்ளார்.அது குறித்து, மந்தாடா பகுதியை சேர்ந்த மக்களில் சிலர் கூறியதாவது: நள்ளிரவு 1.00 மணிக்கு ஆனந்த், நண்பர் ஒருவரை தொடர்பு கொண்டு, வீட்டுக்குள் தண்ணீர் வருவதாகவும், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கட்டில் மேல் உறங்காமல் உள்ளதாகவும் கூறியுள்ளார். அதற்கு அவர் நண்பர், "மழையாக இருந்தாலும் பரவாயில்லை; உடனடியாக குழந்தைகளை தூக்கிக் கொண்டு, எங்கள் வீட்டுக்கு வந்து விடுங்கள்' என, தெரிவித்துள்ளார். ஒரு மணி நேரம் கழிந்து, ஆனந்தை மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்ட போது, தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது. காலையில், ஆனந்த் வீடு இருந்த இடம் வந்து பார்த்தபோது தான், அந்த குடும்பமே பலியானது தெரியவந்தது. வீட்டை விட்டு, முன்பே வெளியே வந்திருந்தால், அனைவரும் பிழைத்திருப்பர். இவ்வாறு மக்கள் தெரிவித்தனர்.அதே போல, ஊட்டி தலையாட்டு மந்து பகுதியில், ஒரே வீட்டில் மூன்று பேர் இறந்துள்ளனர். ஒருவர் மட்டும், ஊட்டியில் ஓட்டல் பணிக்கு சென்றதால் தப்பியுள்ளார். தப்பியவர், இரவு 12.00 மணிக்கு, வீட்டுக்கு வந்த போது, வீடு முழுமையாக இடிந்து, அனைவரும் மண்ணுக்குள் சிக்கி உள்ளதை பார்த்து, உயிருடன் இருந்த தனது தாயை காப்பாற்ற முயன்றுள்ளார். அந்த நேரத்தில், பெரிய கல் ஒன்று, அவரது தாயின் நெஞ்சின் மீது விழுந்தது; அதனால், சம்பவ இடத்திலேயே அவர் இறந்துள்ளார். இந்த சம்பவத்தை பார்த்த அந்த இளைஞர், இன்னும் அந்த சோக சம்பவத்தில் இருந்து வெளியே வரவில்லை.கோத்தகிரி நடுஹட்டி பகுதியில், கமலா என்பவர் வீடு இடிந்து விழுந்ததில் இறந்தார். அவரது மகன் அசோக், இடிபாடுகளுக்குள் சிக்கி, தனது தாய் இறப்பதை கண்முன்னே கண்டும், அவரை காப்பாற்ற முடியாமல், அவரும் சேற்றில் சிக்கித் தவித்துள்ளார். அவரின் கால்கள் இரண்டிலும், கற்கள் சிக்கியதால், அவரால் மீள முடியவில்லை. அவரது காலில் பலத்த அடிபட்டுள்ளது. கோத்தகிரியில் சிகிச்சை பெற்று வரும் அவர்,"எனது தாயை மீட்க முடியாமல், நான் மட்டும் உயிருடன் பிழைத்திருக்க வேண்டாம்' என, கண்ணீர் ததும்ப கூறினார். இவரது தந்தை சுந்தரம், சுகாதாரத் துறையில் அரசு ஊழியராக பணிபுரிந்து, ஏழு ஆண்டுகளுக்கு முன் இறந்துள்ளார். தந்தையின் பணி, ஏழு ஆண்டாக போராடியும் கிடைக்காததால், தாயும், மகனும் மிகவும் அவதிப்பட்டுள்ளனர். இந்நிலையில், அசோக்கின் தாயும் இறந்து, வீடும் சேதமாகி உள்ளது. அரசின் ஆணைப்படி, அவரின் தந்தையின் பணியை வாங்கித்தர, நீலகிரி அமைச்சர் உட்பட, மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, தாயின் கனவையாவது நிறைவேற்ற முடியும் என்பதே, அசோக்கின் கனவு.அச்சனக்கல் பகுதியில், அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் லூயிஸ் என்பவர், தனது குடும்பத்தினர் ஏழு பேருடன் பலியானார். இவர், தற்போது இடிந்த வீட்டை விற்று விட்டு, வேறு பகுதிக்கு செல்ல சில ஆண்டுகளாக முயன்று வந்ததாகவும், நண்பர்கள் பலரிடமும், வீட்டை விற்பனை செய்ய உதவுமாறும் கோரியிருந்தார். இன்று, அந்த வீடும் இல்லை; குடும்பமும் இல்லை என, அருகில் இருந்தவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.இதே போல், நீலகிரியில் இறந்த ஒவ்வொரு குடும்பத்துக்கும், ஒவ்வொரு தனி மனிதருக்கும், மரணத்துக்கு முன் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் கடைசி நேர சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதில், சில சம்பவங்கள் மட்டுமே பொதுமக்களின் மூலம் வெளிந்துள்ளன. மற்றவை மண்ணோடு, மண்ணாக புதைந்து விட்டன.

கருத்துகள் இல்லை: