புதன், 11 நவம்பர், 2009

சேது சமுத்திர திட்டம் அம்போ?


சேது சமுத்திர திட்டத்தின்படி ஏற்கனவே மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி ஆகிய இடங்களில் நடைபெற்று வந்த மணல்வாரும் பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுவிட் டன. மணல் வாரும் பணியில் ஈடுபட்டிருந்த இயந்திரங்கள் அனைத்தும், கடல் பகுதியில் இருந்து வெளியேறிவிட்டன.


சேது சமுத்திர திட்டம் தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த பிரச்னை குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்கும் படி கடந்த ஓராண்டுக்கு முன்பு பச்சவுரி கமிட்டி அமைக்கப்பட்டது. விரைந்து அறிக்கை அளிக்கும்படி மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது. இந்த கமிட்டி ஏற்கனவே இரண்டு முறை மட்டுமே கூடி ஆலோசசனை செய்திருந்த நிலையில், நேற்று டில்லியில் இந்த கமிட்டியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


சேது சமுத்திர திட்டம் தொடர்பான வழக்கை விசாரித்துவரும் சுப்ரீம் கோர்ட், இப்பிரச்னையில் தங்களது நிலைப் பாட்டை மத்திய அரசு அடுத்தமாதம் இரண்டாவது வாரத்திற்குள் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. சேது சமுத்திர திட்டத்திற்கு கோர்ட் தடை விதிக்கப்பட்ட 2008ம் ஆண்டு ஜூலை 16ம் தேதியிலிருந்து, எந்த பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி ஆகிய இரு இடங்களிலும் பணிகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிட்டன. அங்கு டிரெட்ஜிங் எனப்படும் மணல்வாரும் பணியில் இருந்து, இயந்திரங்கள் அனைத்தும் திருப்பி அழைத்துக் கொள்ளப் பட்டுவிட்டன.


சேது திட்டத்திற்காக மணல்வாரும் இயந்திரங்களை மத்திய அரசின் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்துக்கு சொந்தமான டிரெட்ஜிங் கார்ப்பரேஷன்தான் வழங்கி வந்தது. இந்த அனுமதியை கப்பல் போக்குவரத்து அமைச்சம் நிறுத்தி வைத்துவிட்டது. மணல்வாரும் இயந்திரங்களுக்கான வாடகைக் கட்டணமான, 300 கோடி ரூபாயை மத்திய அரசின் டிரெட்ஜிங் கார்ப்பரேஷனுக்கு, சேது சமுத்திர திட்ட கார்பரேஷன் வழங்கவில்லை என்பதே இதற்கு காரணம். 2005ம் ஆண்டிலிருந்து ஏறத்தாழ 700 கோடி ரூபாய்வரை இந்த திட்டத்திற்கு செலவிடப்பட்டுள்ளது. மூலதன டிரெட்ஜிங் மற்றும் மெயின்டனன்ஸ் டிரெட்ஜிங் என இரு வகைகளாக பணிகள் நடைபெற்றன. ஏற்கனவே வாரப்பட்ட இடங்களில், இப்போது மேலும் மணல் படிந்துள்ளதும், இதுபோல் படிந்துள்ள மணல் எவ்வளவு என்பது பற்றிய விவரங்கள் எதுவும் தற்போது கணக்கிட முடியவில்லை. இதையெல்லாம் சேது சமுத்திர திட்ட கார்பரேஷன்தான் செசய்ய வேண்டும்.


இரண்டாயிரத்து 400 கோடி ரூபாயில் துவங்கப்பட்ட இந்த திட்டத்தின் மதிப்பு நான்காயிரத்து 500 கோடி ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இந்த திட்ட மதிப்பீட்டு உயர்வு குறித்து, இனி மத்திய அமைச்சசரவைக்கு அனுப்பி ஒப்புதல் பெறப்பட வேண்டும். இதற்கு முன்பு கூடிய பச்சவுரி கமிட்டி, சேது திட்டம் குறித்து கோவாவில் உள்ள இன்ஸ்டிடியூட் மூலமாக ஆராய்ச்சி செய்ய வேண்டுமென வலியுறுத்தியிருந்தது. அந்த ஆராய்ச்சிக்கு இரண்டு ஆண்டுகள் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்த தகவல் பெற்றுக் கொண்ட கப்பல்போக்குவரத்து அமைச்சகம் அதுபற்றி மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

கருத்துகள் இல்லை: