சிறப்பு கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறப்பு கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 21 நவம்பர், 2009

சிறப்பு கட்டுரை:இந்திரா காந்தியின் இறுதி உரை


இந்திரா காந்தி கொலை செய்யப்படுவதற்கு முந்தின நாள் (30.10.1984) ஒரிசா மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்தார். 1967 தேர்தலின்போது, ஒரிசாவில் பிரசாரம் செய்த நேரத்தில்தான் அவருக்கு எதிராக பெரும் வன்முறை மூண்டு, கல்வீச்சில் படுகாயம் அடைந்தார். அவர் மூக்கில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இம்முறை, அதே மாநிலத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அன்றிரவு ஒரிசா தலைநகர் புவனேசுவரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் இந்திரா பேசினார். அவர் பேச்சு உணர்ச்சி மயமானதாக இருந்தது. சொற்பொழிவுப்பிரிவு செயலாளர் சாரதா பிரசாத் தயாரித்துக் கொடுத்திருந்த குறிப்புகளின் அடிப்படையில் பேசினார்.
இந்தியாவின் பெருமை மிக்க வரலாறு சுதந்திரத்துக்காக நடைபெற்ற போராட்டம். இந்தியாவை எதிர் நோக்கியுள்ள பிரச்சினைகள் முத லியவற்றைக் குறிப் பிட்டுவிட்டு, தயாரிக்கப்பட்ட பேச்சிலிருந்து விலகி புதிதாகப் பேசத் தொடங்கினார். உணர்ச்சி மிகுதியில் குரல் தழுதழுக்க அவர் கூறினார்: "இன்று நான் இங்கிருக்கிறேன். நாளை இருப்பேனா என்று தெரியாது... என்னை சுட்டுக் கொல்ல எத்தனை முயற்சிகள் நடைபெற்றன என்பதை யாரும் அறியமாட்டார்கள். வாழ்வு, சாவு பற்றி நான் கவலைப்படவில்லை. எனக்கு இரண்டும் ஒன்றுதான். நான் கணிசமான காலம் வாழ்ந்து விட்டேன். அந்தக் காலத்தை, நாட்டுக்காகவும், நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவும் செலவிட்டதில் பெருமைப்படுகிறேன். இது ஒன்றுதான் எனக்குப் பெருமையே தவிர, வேறு எதற்காகவும் நான் பெருமைப்படவில்லை. என் கடைசி மூச்சு உள்ளவரை நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் சேவை செய்வேன்.
நான் சிந்தும் ஒவ்வொரு துளி ரத்தமும் இந்த நாட்டை வளப்படுத்தும்; பலப்படுத்தும்." _இவ்வாறு இந்திரா காந்தி கூறினார். இந்திராவின் பேச்சை மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்த மக்கள், "இந்திரா வாழ்க" என்று குரல் எழுப்பினர். அடுத்த நாள் நடக்கப்போகும் விபரீதத்தை அவர்கள் அறியவில்லை. கூட்டம் முடிந்ததும் இந்திரா காந்தி, கவர்னர் பி.என்.பாண்டேயின் இல்லத்துக்குச் சென்று தங்கினார்.
அப்போது கவர்னர், "வன்முறையால் உங்களுக்கு மரணம் சம்பவிக்கும் என்ற பொருள்பட பொதுக்கூட்டத்தில் பேசினீர்களே. ஏன்? அதைக்கேட்டு நான் ரொம்பவும் கவலையும், அதிர்ச்சியும் அடைந்தேன்" என்று இந்திராவிடம் கூறினார். "நான் என் மனதில் பட்டதைச் சொன்னேன். என் தாத்தாவும், அம்மாவும் அணு அணுவாக இறப்பதைக் கண்ணால் கண்டு, மனம் நொந்தவள் நான். நோய்வாய்ப்பட்டு, துயரப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக சாவது மிகவும் கொடுமை. ஆரோக்கியமாக இருக்கும்போது, திடீரென்று மரணத்தைத் தழுவுவதையே நான் விரும்புகிறேன்" என்று இந்திரா பதிலளித்தார்.
இந்தச் சமயத்தில், டெல்லியில் இருந்து இந்திராவுக்கு டெலிபோன் வந்தது. பிரியங்காவும், ராகுலும் வீட்டிலிருந்து பள்ளிக்குப் போகும் போது கார் விபத்தில் சிக்கினார்கள் என்று, போனில் சோனியா தெரிவித்தார். பொற்கோவில் போரைத் தொடர்ந்து, தன் பேரக்குழந்தைகளுக்கு ஏதாவது ஆபத்து ஏற்படலாம், அல்லது கடத்தப்படலாம் என்று இந்திரா எதிர்பார்த்தார். எனவே, விபத்தில் சிக்கினார்கள் என்ற செய்தி கேட்டு, அவர் பதற்றம் அடைந்தார். "இது சிறிய விபத்துதான். யாருக்கும் காயம் இல்லை. நன்றாக இருக்கிறார்கள். உங்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே சொன்னேன். கவலைப்படாதீர்கள். திட்டமிட்டபடி சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பினால் போதும்" என்று சோனியா எவ்வளவோ கூறியும், இந்திராவுக்கு நிம்மதி ஏற்படவில்லை. சுற்றுப் பயணத்தை ரத்து செய்துவிட்டு, உடனே டெல்லிக்குத் திரும்பத் தீர்மானித்தார். அதன்படி, அவருடைய சுற்றுப்பயணம்ரத்து செய்யப்பட்டது.

இரவோடு இரவாக, விமானத்தில் டெல்லிக்குப் புறப்பட்டார். நள்ளிரவுக்குப்பின் டெல்லியை அடைந்தார். நேராக காரில் வீட்டுக்குப் போய்ச்சேர்ந்தபோது, பேரக்குழந்தைகள் இருவரும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார். "அவர்களுக்கு காயம் எதுவுமில்லை. கவலைப்படாதீர்கள்" என்று இந்திராவிடம் கூறினார், சோனியா. இந்திரா, தன் செயலாளர் பி.சி.அலெக்சாண்டரை அழைத்துப் பேசினார். இந்திரா மிகவும் களைப்புடன் இருப்பதைக் கண்ட அலெக்சாண்டர், பேச்சை சுருக்கமாக முடித்துக்கொள்ள விரும்பினார்.
ஆனாலும், காஷ்மீர் பற்றியும், பஞ்சாப் பற்றியும் விரிவாக விவாதித்த பிறகே, அலெக்சாண்டரை அனுப்பினார். பிறகு செயலாளர் ஆர்.கே.தவானை அழைத்தார். மறுநாள் என்னென்ன நிகழ்ச்சிகள் தனக்கு இருக்கின்றன என்று கேட்டறிந்தார். முக்கியமானவற்றைத் தவிர, மற்ற நிகழ்ச்சிகளை ரத்து செய்து விடும்படி கூறினார். நள்ளிரவு இரண்டு மணிக்குத்தான் படுக்கச்சென்றார். விடியற்காலை 4 மணிக்கு சோனியா எழுந்து பார்த்தபோது, இந்திரா ஏற்கனவே எழுந்துவிட்டதையும், குளிக்கத் தயாராகிக்கொண்டிருப்பதையும் கண்டார். அன்றைய தினம் காலையில் 9.00 மணிக் அளவில் சுட்டு கொல்லப்பட்டார் (31.10.1984)

வெள்ளி, 20 நவம்பர், 2009

வைகோவின் சாட்டையடி


இலங்கைக்கு கிடைத்த பன்னாட்டு ஆயுத உதவியால் விடுதலைப் புலிகளுக்குப் பின்னடைவும் தோல்வியும் ஏற்பட்டபோது முதல்வர் கருணாநிதி மௌனமாகக் குதூகலித்தார் என மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் தமிழர்களின் வரலாற்றில், வேறு எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இலங்கையின் படைபலத்தைப் பெருக்க, ஆயுதங்கள், ரேடார்களைக் கொடுத்து, விமானங்களில் இருந்து குண்டுகளை வீசுவதற்காக பலாலி விமானதளத்தைப் புதுப்பித்துக் கொடுத்தது இந்திய அரசு. இராணுவத் திட்டங்களை வகுப்பதற்கு இந்தியத் தளபதிகளை அனுப்பி உதவியது. இந்திய இலங்கைக் கடற்படைத்தகவல் பரிமாற்ற ஒப்பந்தங்களைச் செய்து, துப்புக் கொடுத்து, விடுதலைப்புலிகளுக்காக வந்த கப்பல்களைக் கடலில் மூழ்கடித்தது இந்தியா.ஆயுதங்களை இலங்கைக்கு வழங்கியதுடன் சீனா, பாகிஸ்தான், இஸ்ரேல்,ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகளிடம் ஆயுதங்களை வாங்குதவற்கு, ஆயிரம் கோடி வட்டி இல்லாக் கடனை இந்தியா அளித்தது. இவ்வளவும், 2004 ஆம் ஆண்டுக்குப் பின்னர், கடந்த ஐந்து ஆண்டுகளாகவே நடைபெற்று வந்தன. இத்தனை உதவிகளோடும், ஈழத்தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்துள்ளது. இன்றைக்கு மூன்று லட்சம் தமிழர்கள், முள்வேலி முகாம்களில் அடைபட்டிருப்பதற்குக் காரணம் இந்திய அரசுதான். ஐந்து ஆண்டுகளாக இந்த நடவடிக்கைகளுக்கெல்லாம் உடந்தையாக இருந்தவர் முதல்வர் கருணாநிதி. அவர் பிரபாகரனைக் கொச்சைப்படுத்தி அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். உலகின் எந்தப் புரட்சி இயக்கங்களிலும் துரோகத்துக்கு வழங்கப்படுகின்ற தண்டனைதான் மாத்தையாவுக்கு வழங்கப்பட்டது. ஆனால், மாவீரன் மாத்தையாவுக்கு மரண தண்டனை கொடுத்து விட்டார்கள் என்று கருணாநிதி வருந்துகிறார். மாத்தையா, கருணா போன்ற துரோகிகளுக்கெல்லாம் பாராட்டுப் பத்திரம் வாசித்து, ‘பிரபாகரன் செய்த தவறுகளால்தான் தமிழர்களுக்குக் கேடு நேர்ந்தது’ என்கிறார். இந்திய அரசு இத்தனைத் துரோகங்களைச் செய்ததே, எந்தவொரு கட்டத்திலாவது, இலங்கைக்கு ஆயுதம் கொடுக்காதீர்கள் என்று கருணாநிதி ஒப்புக்கு ஒரு கடிதம் எழுதியது உண்டா? தமிழர்கள் உள்ளத்தில் எழுந்து உள்ள உணர்வுகளை நீர்த்துப் போகச் செய்வதற்காக, இன்று இவர் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். பிரச்சினையைத் திசைதிருப்புவதற்காக, திடீரென்று இலங்கை அகதிகள் மீது கரிசனம் காட்டுகிறார். பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்புகிறார். தமிழ் மண்ணில் முத்துக்குமார் எழுப்பிய உணர்ச்சியை அழிக்க வேண்டும் என்பதுதான் இவரது நோக்கம். 16 பேர் தீக்குளித்தார்களே, அவர்களுக்காக ஒரு வரி இரங்கல் எழுதியது உண்டா? ஆனால், இன்றைக்கு ஒன்றரைப் பக்கத்துக்குக் குற்றச்சாட்டுகளை வாசிக்கிறார். கலைஞர் கருணாநிதியின் குடும்பத்தாரிடம்தான் தொலைக்காட்சிகள் இருக்கின்றன. செய்தித்தாள்கள் அவர் சொல்வதையெல்லாம் எட்டுக் காலம் போட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், தான் நினைத்ததையெல்லாம் எழுதி அறிக்கைகளாக வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்.ரனில் விக்கிரமசிங்கேவுக்கு ஆதரவு கொடுக்காததால்தான், இந்த அழிவு நேர்ந்தது என்கிறார். ரனில் என்ன தமிழர்களுக்கு விடியல் ஏற்படுத்தப் பாடுபடுகிறவரா? பேச்சுவார்த்தைக்கு வராமல் புலிகள் காலத்தை இழுத்தடித்தார்கள்; தாங்களாகவே விலகிக் கொண்டார்கள் என்று ரனில் சொன்னதை இவர் எழுதுகிறார்.‘தேர்தலில் ரனில் விக்கிரமசிங்கேவுக்கு, பிரபாகரன் ஆதரவு கொடுக்கவில்லை’ அதனால்தான் இன்றைய அழிவும் ஏற்பட்டது என்கிறார் கருணாநிதி. பிரபாகரன் தேர்தலைப் பகிஷ்கரிக்கச் சொல்லவும் இல்லை; ஓட்டுப் போடுங்கள் என்று கூறவும் இல்லை.2009 ஈழப்போரில் பன்னாட்டு ஆயுத உதவியால், தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு பின்னடைவும், தோல்வியும் ஏற்பட்டதில் உள்மனதில் மௌனமாக குதூகலித்தவர்தான் கருணாநிதி. இந்த மௌனத்தின் குதூகலம் யார் அறிவார்?இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசின் விபரீத யோசனை

கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டும் எம்பிபிஎஸ் (ரூரல்) என்ற மருத்துவப் படிப்பு அடுத்த கல்வியாண்டு முதல் தொடங்கப்படும் என்று இந்திய மருத்துவக் குழுமத்தின் தலைவர் டாக்டர் கேதன் தேசாய் கூறியுள்ளார். இது பாராட்டத்தக்க முடிவு போலவும், கிராமப்புற மக்களுக்கு மருத்துவம் கிடைக்கவில்லை என்ற அவலத்தைப் போக்கிவிட வந்த மாற்று ஏற்பாடு என்பதைப் போலவும் தோற்றம் தந்தாலும், இதனால் கிராம மக்களுக்கு எந்தவிதமான நன்மையும் கிடைக்க வாய்ப்பே இல்லை. கிராமப்புறத்துக்குச் சேவை செய்ய கிராமப்புற மாணவன் மட்டுமே எம்பிபிஎஸ் (ரூரல்) என்ற படிப்பைப் படிக்க வேண்டும் என்றால், மலைவாழ் மக்களுக்கு மருத்துவம் பார்க்க அந்த மக்களில் ஒருவருக்கு எம்பிபிஎஸ் (டிரைபல்) என்று ஒரு மருத்துவக் கல்வியைத் தொடங்குவார்களா என்ன? கிராமப்புற மாணவனின் அறிவை கிராமத்திலேயே இருத்தி வைப்பதற்கும், நகர்ப்புற மாணவனின் அறிவை நகரத்திலேயே வளரச் செய்வதற்கும் மட்டுமே இந்தப் புதிய முறை உதவியாக அமையுமே தவிர எதிர்பார்க்கும் பயன்களை அளிக்காது. கிராமத்தில் உள்ள தொடக்கக் கல்வி ஆசிரியருக்கும், சென்னை மாநகராட்சி தொடக்கக் கல்வி ஆசிரியருக்கும் ஒரே விதமான தகுதியை நிர்ணயிக்கும்போது, ஊரகப் பகுதியில் உள்ள கல்லூரிப் பேராசிரியருக்கும் சென்னையில் உள்ள கல்லூரிப் பேராசிரியருக்கும் ஒரு விதமான தகுதி, சம்பளத்தை நிர்ணயிக்கும்போது, மருத்துவத்தில் மட்டும் இரு வேறு தகுதிகளை- நகரம், கிராமம்- புகுத்துவதன் மூலம் அலோபதி மருத்துவத் துறையில் தேவையற்ற ஒரு பிளவை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும். மேலும், பொதுமக்கள் மத்தியில் இத்தகைய கிராம டாக்டர் என்பவர், நகர டாக்டரைவிட அனுபவம் மற்றும் அறிவில் குறைந்தவர் என்ற எண்ணத்தை அரசே உருவாக்கி, கிராம மக்களை நகரத்துக்கு வரச் செய்வதாக அமைந்துவிடும் அபாயமும் உள்ளது. கிராம மக்களே தங்கள் கிராம டாக்டர்களைப் புறக்கணிக்கவைப்பதாக அமைந்துவிடும். அத்தோடு, எம்பிபிஎஸ் (ரூரல்) படிப்பவர் மற்ற எம்பிபிஎஸ் (நகரம்) ஆக மாறவே விரும்புவார். இதற்கான சங்கம் உருவெடுக்கும்; போராட்டமும் நடக்கும். அரசு செவி மடுக்கும்போது, இவர்கள் அனைவரும் ஒரிஜினல் எம்பிபிஎஸ் ஆகிவிடுவார்கள். கேதன் தேசாய் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளதைப் போல, இந்தியாவில் மொத்தம் 299 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே உள்ளன. ஆண்டுதோறும் இந்தியா முழுவதிலும் 34,000 பேர் மட்டுமே மருத்துவக் கல்வி பயில முடிகிறது. இதில் முதுகலை மருத்துவம் படிக்க 14,000 பேருக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது. இதிலும் சிறப்பு மருத்துவம் பயில 709 இடங்களே உள்ளன. நடப்பாண்டு அக்டோபர் மாத நிலவரப்படி அவரே தெரிவித்துள்ள புள்ளிவிவரம் இது. மருத்துவப் படிப்பில் தற்போதுள்ள இடங்களை ஆண்டுக்கு 34,000 என்பதை இரட்டிப்பாக்கினால் எம்பிபிஎஸ் டாக்டர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதைப் புதிய கல்லூரிகள் திறப்பதைக் காட்டிலும், தற்போதுள்ள அரசு மருத்துவமனைக் கல்லூரிகளில் 100 இடங்களுக்கு பதிலாக 200 மாணவர்களைச் சேர்த்துக் கொள்ள அனுமதிப்பதும், வகுப்புகளை காலை மாலை என்று பிரித்துக் கொண்டு பயிற்றுவிப்பதும், இந்தியாவில் டாக்டர்கள் எண்ணிக்கையைப் பாகுபாடு இல்லாமல் பரவலாக்க முடியும். கிராமப் புறங்களில் 3 ஆண்டுகள் பணியாற்றியுள்ள டாக்டர்களுக்கு முதுகலை மருத்துவப் படிப்பில் சேர 50 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும் என்ற கருத்தையும் தெரிவித்துள்ளார். அதேபோன்று சிறப்பு மருத்துவப் படிப்பில் 10 சதவீதம் கிராமங்களில் பணியாற்றிய டாக்டர்களுக்கு என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த நடைமுறை முறைகேடு இல்லாமல், நியாயமான முறையில் கடைப்பிடிக்கப்படும் என்றால், நிச்சயமாகக் கிராமங்களில் டாக்டர்கள் சேவை கிடைப்பது எளிதாகிவிடும். இந்தியாவில் எம்பிபிஎஸ் படித்த மாணவர் ஒவ்வொருவரும் கிராமங்களில் பணியாற்ற வேண்டும் என்ற கட்டாயத்தை உருவாக்க வேண்டும். மருத்துவமனைகளில் சுமார் ஓராண்டுக்கும் மேலாகப் பயிற்சி மருத்துவராகப் பணியாற்றும் காலத்தில், இவர்களைச் சுழற்சி முறையில் கிராமங்களில் பணியாற்றச் செய்வதன் மூலமும், கிராம மருத்துவமனைகளில் எப்போதும் மருத்துவச் சேவை கிடைப்பதை உறுதி செய்ய முடியும். டாக்டர்களை கிராமங்களுக்கு அனுப்பும் சக்தி அரசுக்கு இல்லை என்பதற்காக, கிராமத்து மாணவர்களை எம்பிபிஎஸ் (ரூரல்) ஆக்குவது எந்த வகையிலும் சரியானதாக அமையாது.