வெள்ளி, 30 ஜூலை, 2010

மனித மூளையை ஸ்கேன் செய்து எதிர்கால திட்டத்தை தீர்மானிக்கலாம்




மனித மூளையை ஸ்கேன் செய்து எதிர்கால திட்டத்தை தீர்மானிக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எதிர்காலம் குறித்து திட்ட மிட முடியாமல் பலர் குழம்புகின்றனர். இனி அந்த கவலை தேவை இல்லை.

மூளையை ஸ்கேனிங் செய்து அதன் மூலம் எதிர்கால திட்டங்கள் மற்றும் லட்சியங்களை கணிக்க முடியும். இதற்கான ஆய்வை கலிபோர்னியா பல்கலைக்கழக நரம்பியல் விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். இவர்கள் மனிதனின் மூளையில் புதிதாக “மேப்பிங்” முறையை பயன்படுத்தினர். அதன் மூலம் அவர்களின் மனதில் எதிர்காலத்தில் அவர்களின் லட்சியம் என்ன? எந்தவிதமான பாடப்பிரிவை எடுத்து படித்து நிபுணராக முடியும் என்று கணித்துள்ளனர். 

இதற்கு “மனோதத்துவ கணக்கீடு” என்று பெயரிட்டுள்ளனர். இது குறித்து மனநல பேராசிரியர் ரிச்சர்டு ஹயர் ஒரு ஆய்வு நடத்தினார். ஒருவருக்கு உள்ள திறமை மற்றும் தனித்தன்மை என்ன என்று மூளைக்கு தான் தெரியும். 

எனவே, மூளையை “ஸ்கேன்” செய்வதன் மூலம் இதை கண்டறிய முடியும் என்று தெரிவித்துள்ளார். இதற்காக அவர் 6 ஆயிரம் பேரின் மூளைகளை ஸ்கேன் செய்து ஆய்வு மேற் கொண்டு அதன் முடிவில் " மனித மூளையை ஸ்கேன் செய்து எதிர்காலத் திட்டங்களை " தீர்மானிக்கலாம் என கண்டறிந்துள்ளார்.

வியாழன், 29 ஜூலை, 2010

சுஜாதா : ஒரு சிறப்புப் பார்வை -பகுதி-2


சுஜாதா : ஒரு சிறப்புப்பார்வை தொடர்ச்சி..........

 
சுஜாதா ஒரு புத்தகப் பிரியர். புதிதாக வருகின்ற  இலக்கிய புத்தகமானாலும் சரி, அறிவியல் சம்பந்தமான புத்தகமாக இருந்தாலும் சரி அதை முதலில் படித்து முடித்துவிட்டுதான் பிற வேளைகளில் கவனம் செலுத்துவார்.    

உலகின் முக்கியமான எழுத்தாளர்களின் ஒரு புத்தகத்தையாவது படித்துவிட வேண்டும் என்ற தாகம் அவரிடம் இருந்தது.அதை கடைப் பிடிக்க அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அதிகம்.

ஹாலில் ஒரு புத்தகம்,பெட்ரூமில் வேறு  ஒரு புத்தகம், பாத்ரூமில் இன்னொரு புத்தகம் என மாறி,மாறிப் படிக்கிற பழக்கமுடையவர் சுஜாதா.சுஜாதாவின் நாடங்கள் பலவற்றை பூர்ணம்விஸ்வநாதன் மேடையேற்றினார்.அவர் எழுதிய நாடங்களில் " கடவுள் வந்திருந்தார் " என்ற நாடகம் புகழ் பெற்ற ஒன்றாகும்.

டெல்லியில் பதினான்கு வருடங்கள் கழித்து, 1970ல் பெங்களூரில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் [BEL] நிறுவனத்தில் டெபுடி மானேஜராக வேலைக்குச் சேர்ந்தார். அதன் பின் முப்பது வருடங்கள் பெங்களூர் வாசம் தான். பிறகு சிறிது வருடங்களில் ரிசர்ச் அண்டு டெவலப்மெண்டு பிரிவில் ஜிஎம் பதவிக்கு உயர்ந்த போது, கடுமையான வேலைகள் காத்துக் கொண்டிருந்தன.



இங்குதான் மீண்டும் தன் நண்பர் கலாமுடன் சேரும் வாய்ப்புக் கிடைத்தது. இருவரும் ஏவுகணை ப்ரோக்கிராமிங் செய்தார்கள். கலாமைப் பற்றி தனது நினைவுகளை பேசியும் எழுதியும் வந்திருக்கிறார் சுஜாதா. அவர்களிருவரும் சேர்ந்து ராக்கெட் இயலை பற்றி திப்பு சுல்தான்லிருந்து தொடங்கி எழுத நினைத்திருந்தனர். இன்னும் எழுத வாய்ப்புக் கிடைக்கவில்லை.

செவ்வாய், 27 ஜூலை, 2010

எல்லைக் கோடும் ! வறுமைக் கோடும் ?

 
  
தேசத்தை பிரித்துக்காட்டுவது 
எல்லைக் கோடு

தேசத்தின் மக்களைப் பிரித்துபோடுவது 
வறுமைக் கோடு

எல்லைக் கோடு தேசத்தின் அடையாளம் 

வறுமைக் கோடு தேசத்தின் அவமானம் 

வறுமைக் கோட்டிற்கு மேல் -  வளமாம் 
வறுமைக் கோட்டிற்கு கீழ் -  பஞ்சமாம் 

செழிப்பின் நிறம் -      பச்சையாம்
வறுமையின் நிறம் -  சிவப்பாம் 
பிரித்தது யார்.
அதிகார வர்க்கமா, ஆளும் அரசா ?

கோடிகளில் புரளுகிறது  அங்கே ஒரு கூட்டம் 
தெருக் கோடி  குப்பைகளை புரட்டுகிறது இங்கே ஒரு கூட்டம்

வறுமை தேசங்கள் என்றால் நாம் கை காட்டுவது
ஆப்ரிக்க தேசங்களை 
வறுமைக் கோட்டிற்கு கீழ் இத்தனைக் கோடிபேர் இந்தியாவில் 
யுனெஸ்கோ நம்மை சுட்டிக்  காட்டுகிறது.

ஏன் இந்த சமமின்மை ? ஏன் இந்த பொருளாதார வேறு பாடு ?

வல்லரசு இந்தியா ! பெருமைதான் எமக்கு 
வறுமைக் கோட்டிற்கு கீழ் கோடி மக்கள்
எங்கே போய் முட்டிக் கொள்வது ?


தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த 
ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாடிய 

மீசை முறுக்கிய முண்டாசு கவிஞனே 

கோடிப் பேருக்கு உணவில்லையே இந்த பாரதத்தில் 
கோபம் கொண்டு யார் கோவணத்தை பறிப்பது ?


வளமையைக்  கொண்டு வறுமையை வெல்வோம் 
தோள் கொடு தோழா!
.







திங்கள், 26 ஜூலை, 2010

தாயின் உயிரைக் காப்பாற்றிய 4 மாதக் கரு !

 
 
நான்கு மாதக் கருவாக இருந்தபோதே தாயின் உயிரைக் காப்பாற்றி ஒரு குழந்தை சாதனை படைத்துள்ளது.  

இங்கிலாந்தின் கென்ட் கவுன்டியைச் சேர்ந்த சிட்கப் நகரைச் சேர்ந்தவர் கிளாரி (26). அழகுகலை நிபுணரான அவர் கருவுற்று 4 மாதங்களானபோது ரத்தப்போக்கு ஏற்பட்டது. தாய்மையின் பூரிப்பில் இருந்த அவர், கரு கலைந்து விட்டதாகக் கருதி சோகத்தில் மூழ்கினார். 

இதற்காக லண்டனில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றபோது, அதிர்ச்சியும், ஆச்சரியமும் கலந்த தகவல்கள் வெளிவந்தன.   அவருக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டதின் காரணம், வயிற்றில் வளர்ந்த புற்றுக் கட்டி என்பது தெரியவந்தது. 

அவரது கரு கலையவில்லை என்பதும், வயிற்றில் வளரும் 4 மாதக் குழந்தை எட்டி, எட்டி உதைத்ததில் புற்றுக் கட்டி உடைந்துள்ளது என்பதையும் டாக்டர்கள் கண்டறிந்தனர்.  கருவைக் கலைத்து புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு கிளாரியிடம் டாக்டர்கள் அறிவுறுத்தினர். ஆனால், கிளாரி அதனை ஏற்க மறுத்து விட்டார்.  

4 மாதக் குழந்தை எட்டி உதைக்கவில்லை என்றால் வயிற்றில் புற்றுக்கட்டி வளருவதை கண்டுபிடித்திருக்க முடியாது. எனது உயிரைக் காப்பாற்றிய என் குழந்தையை அழிக்க மாட்டேன் என்று பிடிவாதமாக மறுத்து விட்டார்.  புற்றுக் கட்டியை வளரவிட்டால், குழந்தை பிறக்கும்போது அவர் உயிர் பிழைப்பதற்கு 40 சதவீத வாய்ப்புகளே உள்ளது என்று டாக்டர்கள் கூறியும் கருவைக் கலைக்க கிளாரி சம்மதிக்கவில்லை.

நன்றி:
தினமணி 

ஞாயிறு, 25 ஜூலை, 2010

சுஜாதா : ஒரு சிறப்புப் பார்வை ! பகுதி -1

பிரபல எழுத்தாளரும்,திரைப்பட வசனகர்த்தாவும்,கணினி தமிழ் கண்டவரும், அறிவியல் தமிழ் தந்தவரும், ஆகிய பண்முகம் கொண்ட " திரு:சுஜாதா" அவர்களைப் பற்றிய ஒரு சிறப்புப் பார்வை.

திருச்சி ஸ்ரீரங்கத்தை பூர்விகமாக கொண்ட ரங்கராஜன் (சுஜாதா) பிறந்தது சென்னையில். இவர் 1935 ம் ஆண்டு மே மாதம் 3  தேதி  பிறந்தார்.

தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் அவர் பல வாசகர்களை கவர்ந்துள்ளார். 

சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர் சுஜாதா.

இவருடைய, "இடது ஓரத்தில்" என்ற சிறுகதை 1962 ஆம் ஆண்டு குமுதம்இதழில் ரங்கராஜன் என்ற பெயரில் வெளிவந்தது. குமுதம் ரா. கி. ரங்கராஜனின் பெயரும் இவர் பெயரும் குழப்பிக் கொள்ளப்பட்டதால் தன் மனைவி பெயரான, 'சுஜாதா'வைத், தன் புனைபெயராக வைத்துக் கொண்டார். கணையாழி இதழில் கடைசிப் பக்கங்கள் எனும் கட்டுரைத் தொடரை ஸ்ரீரங்கம் எஸ். ஆர் எனும் பெயரிலும் எழுதி வந்தார்.
 
திருக்குறள்,புறநானுறு,சிலப்பதிகாரம்,இவற்றிற்கு ஆழ்வார் பாசுரங்களோடு உரை எழுதினார் சுஜாதா. மக்களின் பெருத்த வரவேற்பைப் பெற்றன இந்த உரைகள்.

ஸ்ரீரங்கம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த சுஜாதா, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பிஎஸ்.சி இயற்பியல்  படிப்பை முடித்தார். முன்னாள் குடியசுத் தலைவர் டாக்டர்.அப்துல் கலாம் அவர்களும்,  சுஜாதாவும் திருச்சி ஜோசப் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள்.

அதன் பின் சென்னை எம்.ஐ.டி பொறியியல் கல்லூரியில் சேர்ந்து  பொறியியல் பட்டதாரி ஆனார். இங்கும் டாக்டர் அப்துல் கலாமும் இவரும் சேர்ந்தே படித்தார்கள். இருவரும் பல சிகரங்கள் தொட்டபிறகும் அந்த நட்பு கடைசி வரை உறுதியாக இருந்தது. 

மத்திய அரசுப் பணியில் சேர்ந்து , டெல்லியில் முதலில் பணியாற்றினார். 
14 ஆண்டு அரசுப் பணியில் இருந்த சுஜாதா பின்னர் பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். அங்கு ரேடார்கள் குறித்த ஆய்வுப் பிரிவிலும் மேலும் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். பின்னர் பொது மேலாளராக உயர்ந்தார். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் சென்னைக்குத் திரும்பினார்.

வியாழன், 22 ஜூலை, 2010

முத்தையா முரளிதரன் உலக சாதனை !



உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் உலகக் கிரிக்கெட் டெஸ்ட் வரலாற்றிலே முதன்முறையாக 800 விக்கெட்டுகளை வீழ்த்தி மாபெறும் உலக சாதனை படைத்தார். 

மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டை வீழ்த்திய பெருமையைப் பெற்றார் முரளிதரன். காலேவில் நடைபெற்ற கிரிக்கெட்டில் முரளிதரன் வீழ்த்திய 800 வது விக்கெட் இந்திய வீரர் பிரக்யான் ஓஜாவுடையது. 

தற்போது காலேவில் நடைபெறும் ஆட்டத்தில் விளையாடும் முரளிதரன் மாலையில் ஒய்வு பெறுகிறார். ஓய்வு பெறும் முரளிக்கு விடை கொடுக்க காலேவில்  சிறப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் பெண் சாதனையாளர்கள் !



ஆண்களுக்கு எந்த விகிதத்திலும் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்துக்காட்டிய இந்திய பெண் சாதனையாளர்கள் இவர்கள்.
   இவர்களைப்பற்றிய ஒரு சிறு குறிப்பே இந்த இடுகை.
    

   
  •    இந்திரா காந்தி அம்மையார்.  
          இந்தியாவின்  முதல் பெண் பிரதமர்.
  •    கவிக்குயில் சரோஜினி நாயுடு.
          இந்தியாவின்  முதல் கவர்னர் 
  •    சுதேசா  கிருபளானி.
          இந்தியாவின்  முதல் பெண் முதலமைச்சர்.
  •    டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி.
          இந்தியாவின்  முதல் பெண் டாக்டர்.
          இந்தியாவின்  முதல் பெண்  சட்ட மன்ற உறுப்பினர்.
          இந்தியாவின்  முதல் பெண் துணை சபாநாயகர்.
  •    கிளப்  வாலா ஜாதவ்.
          இந்தியாவின்  முதல் பெண் " ஷெரிப்"
  •   அஞ்சனி  தயானந்த்.
         இந்தியாவின்  முதல் பெண் தலைமைச் செயலாளர்.
  •   அபலோ போன்குன்னா.
         இந்தியாவின்  முதல் பெண் விஞ்ஞானி.
         இவர்  விஞ்ஞானி சந்திரபோஸின் மனைவி.
  •   உஷா  கன்னா.
        இந்தியாவின்  முதல் பெண் இசை அமைப்பாளர்.
  •  அரதிசாஷா.
        இங்கிலாந்துக்கும் -பிரான்சுக்கும் இடையே உள்ள 
        ஆங்கில கால்வாயை கடந்த முதல் இந்திய பெண்.
  •  கடம்பினி கங்குலி.
       முதல் காங்கிரசின் முதல் பெண் பேச்சாளர். 

   

செவ்வாய், 20 ஜூலை, 2010

இன்சுலின் கண்டுபிடித்தது எப்படி?!



தற்போது உலகையே பயமுறுத்திக் கொண்டிருக்கும் நோய்களில் முக்கியமானது நீரிழிவு. இன்சுலின் கண்டுபிடிப்புக்கு முன்பு, எந்த மருத்துவ ஆய்வும் நீரிழிவுக்கு தீர்வு சொல்ல முடியாத நிலையில், பிரெட்ரிக் கிராண்ட் பேண்டிங் மற்றும் ஜான் ஜேம்ஸ் ரிச்சர்ட் மேக்லியோட் ஆகிய இருவரும், தங்களது தீவிர முயற்சியால் இன்சுலினைக் கண்டுபிடித்தனர்.

இதில் ஒருவரான பேண்டிங்ஐ சின்ன வயதிலேயே நீரிழிவு நோய் தாக்கியது. 1916ம் ஆண்டில் இந்த நோய்க்கு எந்த தீர்வும் கண்டுபிடிக்காத நிலையில் பேண்டிங் திணறினார். உடலுக்குள் செலுத்தப்படும் புது கணைய நீரானது நோயாளியின் உடலிலேயே சுரந்து கொண்டிருக்கும் பழைய கணைய நீரோடு இணைந்து செயல் பட்டால் பிரச்சினை இல்லை என்ற தேடுதலோடு பல மருத்துவ ஏடுகளை புரட்டினார்.

பல விஞ்ஞானிகளோடு ஆலோசித்தார். அப்போது பேண்டிங்குக்கு வரப்பிரசாதமாய் ஒரு கட்டுரை கிடைத்தது. அதில் சில புதிய விஷயங்கள் கிடைத்தன. மேலும் நீரிழிவு நோய் குறித்த ஆழ்ந்த ஆய்வுகளையும், கட்டுரை விளக்கங்களையும் அளித்து வந்த மேக்லியோட்டின் அறிமுகம் கிட்டியது.

ஞாயிறு, 18 ஜூலை, 2010

சச்சின் டெண்டுல்கர் : ஒரு சகாப்தம் ! பகுதி-2 !

சச்சின் ஒரு சகாப்தம்  தொடர்ச்சி.........................
 
  • பெர்புயும்,சன் கிளாஸ்,மியூசிக் சிஸ்டம்,பிரண்ட் சர்ட்,ஸ்போர்ட்ஸ் கார் இவைதான் சச்சின் அதிகம் விரும்பி வாங்குபவை! பட்டோடிக்கு அடுத்தபடியாக மிக இளம் வயதில் இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டன் ஆனவர் சச்சின். 
  • சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா,தென் ஆப்ரிக்க அணிகளுக்கு எதிரான தொடர்களில் வெற்றி தேடித்தந்தவர் கேப்டன் சச்சின். இருப்பினும் வெளிநாடுகளில் இவர் தலைமையிலான அணி பல தோல்விகளை கண்டதால் தானாகவே கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார்!  
  • இதுவரை மொத்தம் ஐந்து உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி இருக்கிறார் சச்சின்.இதில் இந்தியாவிலும்,தென் ஆப்ரிக்காவிலும்  நடைபெற்ற  உலகக் கோப்பைப்  போட்டிகளில் அதிக ரன்களை குவித்து "மேன் ஆப் த சீரீஸ" விருது பெற்றிருக்கிறார்! 
  • 2001 -2002 ம் ஆண்டின்போது டென்னிஸ் எல்போ பிரச்சனையால் மிகவும் அவதிப்பட்டார். ஆபரேஷன் காரணமாக விளையாட முடியாமல் இருந்தவருக்கு உறுதுணையாக இருந்தது மனைவி அஞ்சலி." என் மனைவி மட்டும் எனக்கு துணையாக இல்லை என்றால் மீண்டும் கிரிக்கெட் பேட்டை தொட்டிருக்கவேமுடியாது" என நெகிழ்ந்து சொன்னவர் சச்சின்.

வெள்ளி, 16 ஜூலை, 2010

இடஞ்சுட்டி பொருள் விளங்கு !


 
மோதிப்பார் முயற்சியுடன் 
மலைகளும் மண் துகள்களாகும்  !
படித்துப் பார் கவனத்துடன்
பாடங்களும் பக்குவப்படும் !!

சிரித்துப் பார் மனம்விட்டு
சிலிர்த்துக்கொள்ளும்  இதயம்  ! 
சிந்தித்துப்பார் நிதானமாக
சிந்தைத் தெளிவு பெரும் !!



பேசிப் பார் பண்புடன்
பலரும்  பாராட்டுவர் !
பழகிப்பார் நட்புடன்
பகைவனும் பாசம்கொள்வான் !!

மறந்து விடு தீயதை
மனம் மகிழ்ச்சியுறும் 
வாழ்ந்துப்பார் ! நம்பிக்கையுடன் 
வாழ்க்கை வசந்தமாகும் !!!


நட்புடன்

வியாழன், 15 ஜூலை, 2010

இந்திய பணத்திற்கு புதிய குறியீடு ; இனி ஆர்.எஸ்., கிடையாது !



                                       

உலக அளவில் உள்ள நாட்டு பணத்தை குறிக்கும் வகையில் பல்வேறு குறியீடுகள் இருப்பது போல் இந்திய கரன்சிக்கும் புதிய குறியீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இனிமேல் இந்திய பணத்திற்கு இந்த குறியீடுதான் பயன்படுத்தப்படும். இந்த ரூபாய் அடையாள குறியீட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த தகவலை மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் அம்பிகாசோனி டில்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார்.


சர்வதேச கரன்சிகளான அமெரிக்க டாலருக்கு $ , யூரோவுக்கு €, பவுண்டுக்கு (ப) , ஜப்பான் யென் ஆகிய அடையாள குறியீடு இருப்பது போல இந்திய ரூபாய்க்கும் அடையாள குறியீடு வழங்கப்பட மத்திய அரசு முடிவு எடுத்தது. இதன்படி அடையாள குறியீடு போட்டி ஒன்றும் நாடு முழுவதும் நடந்தது. இதில் போட்டியாளர்கள் தங்களுடைய கற்பனை திறத்தை வெளிக்காட்டி வாய்ப்பு வழங்கப்பட்டன. 5 மாதிரிகள் தேர்வு செய்யப்பட்டு உதயகுமார் என்பவரது படைப்பு ஏற்று கொள்ளப்பட்டன.

சச்சின் டெண்டுல்கர் : ஒரு சகாப்தம் ! பகுதி-1 .



உலகின் முதல் டபுள் டன் ஹீரோ சச்சின் ! அவருக்கு "பாரத ரத்னா" வழங்கியாக வேண்டும் என்கிறார் கபில்தேவ். ஆம்....சச்சின் கிரிக்கெட் ரசிகர்களின் கடவுள். இவர் படைக்காத சாதனைகளே இல்லை,தனது சாதனைகளையே உடைத்து,புதிய,புதிய சாதனைகளைப் படைக்கிற ஆட்டக்காரர்.

சச்சின் ஆடுகிற ஒவ்வொரு போட்டியிலும்,அடிக்கிற ஒவ்வொரு ரன்னுக்கும் உலக கிரிக்கெட் வரலாற்றை அப்டேட் செய்ய வேண்டி இருக்கிறது.

  • சச்சின் ரமேஸ் டெண்டுல்கர் என்பதுதான் முழுப்பெயர்.சச்சினின் அப்பா பிரபல மராத்தி எழுத்தாளர்.அவர் சச்சின் தேவ் பர்மன் என்னும் இசை அமைப்பாளரின் தீவிர ரசிகர் என்பதால் மகனுக்கு "சச்சின்" என்று பெயர் வைத்தார்.

  • 1988 -ம் ஆண்டு மும்பை வித்யா மந்திர் பள்ளியில் படித்தபோது வினோத் காம்ளியுடன் இணைந்து குவித்த 664 ரன்கள்தான் சச்சினை கிரிக்கெட் உலகுக்குக் கொண்டுவர உதவியது.மும்பை அணிக்காக ஆடிய ரஞ்சிக் கோப்பையிலும் முதல் போட்டியிலேயே சதம் அடித்து சட்டென எல்லோர் மனதிலும் பதிந்தார் சச்சின்.

  • சச்சினை கிரிக்கெட் விளையாட ஆர்வப்படுத்தியவர் அவரது அண்ணன் அஜித்.மும்பை பாந்த்ராவில் இருந்த சச்சினின் வீட்டில் இருந்து, கிரிக்கெட் கோச்சிங் போய் வர முடியாது என்பதால் சிவாஜி நகரில் உள்ள மாமா வீட்டில் சச்சினைத் தங்கவைத்து கூடவே இருந்தார் அண்ணன் அஜித்.

புதன், 14 ஜூலை, 2010

22 வயதில் ஐ.ஐ.டி., பேராசிரியர் பீகாரை சேர்ந்தவர் சாதனை

 

 பீகாரை சேர்ந்த ததாகத் துளசி (22) என்ற இளம்மேதை, பாம்பே இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐ.ஐ.டி.,) உதவி பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார். மிகக் குறைந்த வயதில் ஒருவர் ஐ.ஐ.டி.,யில் பேராசிரியராக நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை.


பீகாரை சேர்ந்தவர் ததாகத் துளசி. இவர் தன் 9 வயதில் பள்ளி இறுதிப் படிப்பை முடித்தார். 10 வயதில் பி.எஸ்சி., பட்டம் பெற்றார். 12 வயதில் எம்.எஸ்சி., பட்டம் பெற்றார். பின் தன் 21 வயதில், "க்வான்டம் கம்ப்யூட்டிங்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து, இந்திய அறிவியல் கழகத்திடமிருந்து முனைவர் பட்டம் பெற்றார்.கனடாவிலுள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகம் அபரிமிதமான சம்பளத்தில், இவரை தன் நிறுவனத்தில் பேராசிரியராக நியமிக்க விரும்பியது. ஆனால், ததாகத் மறுத்து விட்டார்.

2003ல் உலகப் புகழ் பெற்ற "டைம்' நாளிதழ், சாதனை புரிந்த இளைய வயதினர் ஏழு பேரில் இவரை ஒருவராகக் குறிப்பிட்டு பெருமை அளித்தது. போபாலிலுள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி (ஐ.ஐ.எஸ்.ஆர்.,) நிறுவனம் ஒரு நல்ல வேலைவாய்ப்பை இவருக்கு அளிக்க முன்வந்தது.தற்போது,

பாம்பே ஐ.ஐ.டி.,யின் இயக்குனர் பேராசிரியர் தேவங் வி ககார், ததாகத் ஐ.ஐ.டி.,யில்  உதவி பேராசிரியராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக, அவருக்கு நியமன கடிதம் அனுப்பியுள்ளார். ஐ.ஐ.டி.,யில் இயற்பியல் துறையில் அடுத்த வாரம் உதவி பேராசிரியர் பணியில் இணையவுள்ளார்.

நன்றி:-
தினமலர்.

வெள்ளி, 9 ஜூலை, 2010

புறப்படு தோழா! புது யுகம் படைத்திட !

 
 
நம்பிக்கை என்ற ஒளியை கொண்டு 
தன்னம்பிக்கையைத் தட்டிக் கொடு 

உளிகொண்டு மலையை சிலையாக்கிய 
உனக்கு இது எம்மாத்திரம்.
மூளையோடு மட்டும் கைகுலுக்கு 
முரன்பட்டோரை முடமாக்கு.

அறிவியல் கொண்டு அறியாமையை 
வென்று அதிகாரத்தை கைப்பற்று!

தலையெழுத்தை தண்ணீர்கொண்டு 
மறைக்க முடியாது 
உன் உழைப்பால், வெற்றியால் 
மாற்றமுடியும்...

எல்லா திசைகளும் உனக்கு கிழக்காகிப் போகும்.
புறப்படு தோழா புது யுகம்  படைத்திட !
 

செவ்வாய், 6 ஜூலை, 2010

இப்படியும் விபத்துகள் நடக்குமா? புகைப் படங்கள்


உலகத்தில் தினந்தோறும் நடக்கும் விபத்துகளால் ஆயிரக்கணக்கான மக்கள் மரணம் அடைகின்றனர்.சில விபத்துகளை நேரிலோ,அல்லது படங்கள் மூலமாகவோ  பார்க்கும் பொழுது  விபத்துக்கள் இப்படியும் நடக்குமா என்று சிந்திக்கத்தோன்றும்.
அப்படி கற்பனைக்கு எட்டாத, நடந்த விபத்துகளை படங்களாக இங்கே நீங்கள் பார்கிறீர்கள்.



ஞாயிறு, 4 ஜூலை, 2010

பாரத ரத்னா விருது : ஒரு சிறப்பு பார்வை


 

       பாரத ரத்னா இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதாகும். கலை, அறிவியல், இலக்கியம் மற்றும் பொதுச்சேவை ஆகிய துறைகளில் மிகச்சிறந்த தேசிய சேவை ஆற்றியவர்களை பாராட்டி பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. 

இவ்விருது பெற்றவர்களுக்கு சிறப்பு பட்டப்பெயர்கள் எதுவும் வழங்கப்படுவது இல்லையெனினும் இந்தியாவின் மரியாதைக்குரியோர் பட்டியலில் அவர்களுக்கு இடம் உண்டு. பாரத ரத்னா என்பது இந்தியாவின் ரத்தினம் எனப் பொருள் தரும்.

       இவ்விருதுக்கான முதல் வரையறையில் 35 மி.மீ விட்டமுடைய வட்ட வடிவான தங்கப்பதக்கத்தில் சூரியச் சின்னமும் பாரத ரத்னா என்று இந்தியில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களும் அதன் கீழ் மலர் வளைய அலங்காரமும் இருக்க வேண்டும் என்றும் பதக்கத்தின் பின் பக்கத்தில் அரசு முத்திரையும் தேசிய வாசகமும் (motto) இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்படுள்ளது.

       இப்பதக்கத்தை வெள்ளை ரிப்பனில் இணைத்து கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இப்படி ஒரு வடிவமைப்பில் பதக்கம் எதுவும் தயாரிக்கப்பட்டதாக தெரியவில்லை. அதற்கடுத்த ஆண்டு பதக்கத்தின் வடிவமைப்பு மாற்றப்பட்டது. தற்போது பாரத ரத்னா பதக்கத்தில் அரச மர இலையில் சூரியனின் உருவமும் "பாரத ரத்னா" என்ற சொல் தேவநாகரி எழுத்துக்களிலும் பொறிக்கப்பட்டுள்ளது.