புதன், 18 நவம்பர், 2009

வரலாற்று சம்பவம்: ராஜீவ் காந்தியின் மரணம்


கடந்த 20_ம் நூற்றாண்டில் உலக நாடுகளில் எத்தனையோ அரசியல் படுகொலைகள் நடந்துள்ளன. இந்தியாவில் தேசத்தந்தை காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டார். பிரதமர் இந்திரா காந்தியை அவருடைய மெய்க்காவலர்களே சுட்டுக்கொன்றனர்.
ஆயினும் 47 வயதே நிறைந்தவரும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்தவருமான ராஜீவ் காந்தி தமிழ் மண்ணில் ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடி குண்டாகவந்த ஒரு பெண்ணால் கொல்லப்பட்ட கொடிய சம்பவம் ரத்தத்தை உறையச் செய்வதாக இருந்தது.
பிரதமர் பதவியை 7_3_1991_ல் சந்திரசேகர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. ஜுன் மாதத்தில் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பாராளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டசபை தேர்தலும் நடைபெறுவதாக இருந்தது. மே 21_ந்தேதி தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் செய்ய ராஜீவ் திட்டமிட்டார்.
21_ந்தேதி பகலில் அவர் ஆந்திராவில் பல தேர்தல் கூட்டங்களில் பேசிவிட்டு மாலை 6.30 மணிக்கு தனி விமானத்தில் சென்னைக்குப் புறப்படுவதாக இருந்தார். ஆனால் விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் மறுநாள் காலை சென்னை போகலாம் என்று எண்ணினார். விருந்தினர் மாளிகைக்கு சென்று கொண்டிருந்தபோது "விமானம் சரியாகி விட்டது சென்னைக்குப் புறப்படலாம்" என்று தகவல் வந்தது. எனவே காரை விமான நிலையத்துக்குத் திருப்பச் சொன்னார்.
விமானம் 7 மணிக்குப் புறப்பட்டது. அதில் இரவு 8.26 மணிக்கு ராஜீவ் காந்தி சென்னை வந்து சேர்ந்தார். விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். தேர்தல் பற்றி கேட்டதற்கு "மத்தியில் முழு மெஜாரிட்டியுடன் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்" என்று பதிலளித்தார். பிறகு சென்னையில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்குக் காரில் சென்றார். அங்கு இ.காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரவு 10.10 மணிக்கு அவர் ஸ்ரீபெரும்புதூர் போய்ச்சேர்ந்தார்.
பொதுக்கூட்டம் நடக்கும் இடத்துக்கு அருகே இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார். பிறகு மேடையை நோக்கிச் செல்லும்போது வழியில் கூடியிருந்தவர்கள் அளித்த வரவேற்பை ஏற்றுக்கொண்டார். வரவேற்க நின்று கொண்டிருந்தவர்களில் அரக்கோணத்தை சேர்ந்த லதா கண்ணன் (வயது 35) என்ற காங்கிரஸ் ஊழியரும் ஒருவர். அவருடன் அவர் வளர்ப்பு மகளான கோகிலா என்ற 15 வயதுச்சிறுமியும் வந்திருந்தாள். அவள் ராஜீவ் காந்தியைப் புகழ்ந்து இந்தியில் எழுதி வைத்திருந்த கவிதையைப் படித்தாள்.
அதை ராஜீவ் ரசித்துக் கேட்டார். இவர்களுடன் சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஒரு மர்மப்பெண் நின்று கொண்டிருந்தாள். சுடிதார் உடையில் இருந்த அவள் மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தாள். கையில் ஒரு சந்தன மாலை இருந்தது. கோகிலா கவிதை பாடி முடித்ததும் ராஜீவ் காந்தி அவள் முதுகில் அன்புடன் தட்டிக்கொடுத்தார். அவர் அங்கிருந்து நகரத் தொடங்கும்போது கையில் சந்தன மாலை வைத்திருந்த பெண் அவர் அருகே சென்றாள். மாலையை அவர் கழுத்தில் அணிவித்தாள்.
கண்மூடி திறப்பதற்குள் அவள் கை இடுப்பில் மறைவாக கட்டியிருந்த பெல்ட்டைத் தொட்டது. அவ்வளவுதான். பெல்ட்டுடன் கட்டியிருந்த குண்டுகள் வெடித்தன. ராஜீவ் காந்தியும், அவரைச் சூழ்ந்து நின்று கொண்டிருந்தவர்களும் உடல் சின்னாபின்னமாகச் சிதறி தரையில் வீழ்ந்தார்கள். குண்டு மிக சக்தி வாய்ந்ததாக இருந்தாலும் சத்தம் அதிகம் கேட்கவில்லை.
தவிரவும் மேடை அருகே காங்கிரசார் பட்டாசுகளைக் கொளுத்திக்கொண்டு இருந்தனர். எனவே அருகே இருந்தவர்கள் கூட குண்டு வெடித்ததை உடனடியாக உணர முடியவில்லை. புகை மண்டலமாக இருக்கிறதே என்று ஓடிச்சென்று பார்த்தபோது பலர் உடல் சிதைந்து பிணமாகக் கிடந்த பயங்கரக்காட்சியைக் கண்டு அலறினார்கள்.
இந்தக் கூட்டத்துக்காக வந்திருந்த காங்கிரஸ் தலைவர்கள் கருப்பையா மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி ஆகியோர் ஏதோ விபரீதம் நடந்து விட்டதை அறிந்து ஓடோடி வந்தனர். "ராஜீவ் எங்கே? ராஜீவ் எங்கே?" என்று கதறினார் மூப்பனார். ராஜீவ் காந்தி தலைகுப்புற கிடந்தார். அவர் தலையின் பின்புறம், காலில் அணிந்திருந்த பூட்ஸ் ஆகியவற்றைக் கொண்டு, அவர் ராஜீவ் காந்தி என்று அடையாளம் கண்டு கொண்ட ஜெயந்தி நடராஜன் எம்.பி., தாங்க முடியாத அதிர்ச்சியும், துயரமும் அடைந்து கதறினார். இதற்குள் காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் அந்த இடத்திற்கு ஓடிவந்தனர். ராஜீவ் உடலைப்பார்த்து அலறித்துடித்தனர்.

கருத்துகள் இல்லை: