செவ்வாய், 17 நவம்பர், 2009

தலை தூக்கும் மொழி வெறி:


பல்வேறு மொழிகள், பல தரப்பட்ட மதங்கள் மற்றும் இனங்கள், வெவ்வேறு கலாசார பின்னணியை கொண்டது தான் இந்தியா. இருந்தாலும், "இந்தியா' என்ற மந்திரச் சொல்லுக்கு, இங்கு வசிக்கும் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் கட்டுப்பட்டு நடப்பது தான், இந்தியாவின் சிறப்பு.



பாகிஸ்தான், சீனாவுடனான சண்டைகளில் துவங்கி, நாட்டுக்கு பல்வேறு சோதனைகள் வந்தபோதெல்லாம், அனைத்து மக்களும் வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைந்து நின்ற சிறப்பான வரலாறு நமக்கு உண்டு. "வேற்றுமையில் ஒற்றுமை' என்ற இந்த தத்துவத்தைப் பார்த்து உலக நாடுகளே வியக்கின்றன. ஆனால், சமீபகாலமாக இந்த ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் வகையிலான சம்பவங்கள் நாடு முழுவதும் பரவலாக அரங்கேறிக் கொண்டிருக்கிறது. மொழிகளை முன்னிறுத்தி, வேகமாக தலைதூக்கி வரும் பிராந்திய உணர்வுகள் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு பெரும் சவாலாக விளங்குகின்றன. துவக்கத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வளர்ந்த இந்த விஷ விருட்சம், தற் போது பரவலாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பரவி, வன்முறை கலாசாரமாக துளிர் விடத் துவங்கியுள்ளது.



மண்ணின் மைந்தர்களுக்கே மகாராஷ்டிரா: இந்த பிராந்திய உணர்வுகள் பெரும் அளவில் பரவியதற்கு முக்கிய காரணம், மகாராஷ்டிரா தான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன், சிவசேனா தலைவர் பால் தாக்கரே, "மண்ணின் மைந்தர்களுக்கு மட்டுமே மகாராஷ்டிரா' என்ற கோஷத்தை முன்வைத்து, போராட்டங்களை துவங்கினார். இந்த பிரச்னைக்கு பிள்ளையார் சுழி போட்டது இவர் தான். ஆனால், இவரது போராட்டங்களால் பெரிய அளவில் வன்முறை நிகழ்ந்து, அது நாடு முழுவதும் பேசப்படும் அளவுக்கு உருவெடுக்கவில்லை. சிவசேனாவில் இருந்து பிரிந்து, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா என்ற கட்சியை துவக்கிய ராஜ் தாக்கரே தான், பிராந்திய உணர்வை தூண்டி விட்டு, வன்முறை சார்ந்த கலாசாரம் உருவெடுப்பதற்கு முக்கிய பங்காற்றினார்.



மகாராஷ்டிராவுக்கு ரயில்வே தேர்வு எழுத வந்த பீகார், உ.பி., மாநிலத்தவரை விரட்டி அடித்தது, மும்பை, தானே, புனே உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் வட மாநிலத்தவர் மீது தாக்குதல் நடத்தியது, மும்பையில் வாடகை கார் ஓட்டும் வட மாநிலத்தவரை குறி வைத்து தாக்கியது என, ராஜ் தாக்கரே கட்சியினர் வன்முறை கோர தாண்டவம் ஆடினர். இதற்காக, மகாராஷ்டிரா நவநிர்மாண் கட்சியினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காததன் எதிரொலி தான், தற்போது பூதாகரமாக உருவெடுத்துள்ளது. சமீபத்தில் மகாராஷ்டிரா சட்டசபையில் மராட்டி மொழியில் பதவியேற்காத சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த அபு ஆஸ்மி என்ற எம்.எல்.ஏ.,வை சட்டசபை வளாகத்திற்குள்ளேயே, ராஜ் தாக்கரே கட்சியினர் சரமாரியாக அடித்து, உதைத்தனர். சட்டசபைக்குள்ளேயே அரங்கேறிய இந்த அராஜகங்களை "டிவி'யில் பார்த்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். ராஜ் தாக்கரே கட்சியினரின் அடுத்த அராஜகம், எந்த உருவத்தில், எப்போது அரங்கேறுமோ என, வட மாநிலத்தவர்கள் கலக்கமடைந் துள்ளனர்.



பீகாரிகளுக்கு ம.பி.,யில் இடம் இல்லை: பா.ஜ.,வைச் சேர்ந்தவரும், ம.பி., முதல்வருமான சிவராஜ் சிங் சவுகான், சமீபத்தில் பேசிய பேச்சு, பீகார் மாநிலத்தவரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஒரு மாநிலத்தின் முதல்வர் என்பதை மறந்து அவர் பேசிய பேச்சால், நிதிஷ் குமார், லாலு பிரசாத் போன்றவர்கள் எல்லாம் கொதித்துப் போய் கண்டனம் தெரிவித்தனர். சிவராஜ் சிங் சவுகானும், ராஜ் தாக்கரே பாணியில் பேசியது தான் இதற்கு காரணம். அவர் பேசுகையில்,"மத்திய பிரதேசத்துக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், போகலாம். பிற மாநிலத்தவர் இங்கு வந்து வேலை பார்க்கலாம். ஆனால், பீகார் மாநிலத்தவரை மட்டுமே வைத்து இயங்கும் தொழிற்சாலைகளுக்கு அனுமதிக்க மாட்டேன். பீகாரிகளை தவிர்த்து விட்டு, உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பளிக்க வேண்டும்'என்றார். அவர் பேசியதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, பா.ஜ., மேலிடமே இதில் தலையிட்டு, பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைத்தது.



மலையாளம் தெரிந்தால் தான் வேலை: கேரள முதல்வர் அச்சுதானந்தன், ஒரு மூத்த அரசியல் தலைவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என்ற தேசிய கட்சியை சேர்ந்தவர். இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்புகளை சுமந்து நிற்கும் அச்சுதானந்தன், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசியது, தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் பேசியதன் சுருக்கம் வருமாறு: "கேரளாவில் மலையாளம் அதிகாரப்பூர்வ மொழியாக இருந்தாலும், தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்களில், 45 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே மலையாளத்தில் பேசவும், எழுதவும் தெரிகிறது. எனவே, மலையாளத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்தவர்களுக்கு மட்டுமே, இனி மாநில அரசு வேலை வாய்ப்புகளில் இடம் அளிக்கப்படும். இதற்கு தகுந்தபடி சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும்' இவ்வாறு அச்சுதானந்தன் பேசினார். கேரளாவைச் சேர்ந்தவர்களில் ஏராளமானோர் வெளிநாடுகளிலும், வேறு மாநிலங்களிலும் பணி புரிந்து வருகின்றனர். அங்கும் இதுபோல் சட்டம் கொண்டு வரப்பட்டால், அங்கு பணிபுரியும் கேரள மாநிலத்தவரின் கதி என்ன ஆகும் என்பதைபற்றி சிறிதும் சிந்திக்காமல், அச்சுதானந்தன் பேசியிருப்பது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மண்ணின் மைந்தர்களுக்கு முக்கியத்துவம் என்ற போர் வையில், இதுபோல் மொழி உணர்வுகளை முன்னிறுத்துவது, கண்டிப்பாக இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தை ஏற் படுத்தும் என்பதை மறுக்க முடியாது.



தெலுங்கானாவில் இருந்து வெளியேறுங்கள்: பிராந்திய உணர்வுகளில் மற்றவர்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விட்டார், தெலுங் கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ். ஆந்திராவை இரண்டாக பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் ஏற்படுத்த வேண்டும் என்பது இவரது நீண்ட நாள் கோரிக்கை. இதற்காகத் தான், அரசியல் கட்சியை துவங்கினார். சமீபகாலமாக, இவரது தெலுங்கானா கோஷத்துக்கு மக்கள் முக்கியத்துவம் தரவில்லை. தேர்தல் களில் இவரது கட்சிக்கு தொடர் தோல்விகள் ஏற்பட்டன. இதனால், மீண்டும் தெலுங்கானா கோஷத்தை தூசி தட்ட துவங்கியுள்ள சந்திர சேகர ராவ், ராஜ் தாக்கரே பாணியை பின்பற்ற துவங்கியுள்ளார்.



அவர் கூறியுள்ளதாவது: தெலுங்கானா பகுதியில் வசிக்கும், பிற பகுதிகளைச் சேர்ந்தவர்களை அங்கிருந்து வெளியேற்றப் போகிறோம். தெலுங்கானாவின் இயற்கை வளங்களை, மற்றவர்கள் சுரண்டுவதையும், ஆக்கிரமிப்பதையும் அனுமதிக்க மாட் டோம். ஆக்கிரமிப்பாளர்களை அங்கிருந்து வெளியேற்றுவோம். அதற்கான நேரம் வந்து விட்டது. தனி தெலுங்கானா என்ற எங்களின் கோரிக்கைக் கான இறுதிக் கட்ட போராட் டம் நடத்தப் போகிறோம். இவ்வாறு சந்திர சேகர ராவ் கூறியதும், இவரது கட்சியினர் மேடக் மாவட்டத்தில் மிகப் பெரிய போராட்டத்தை நடத்தினர். இத்தனைக்கும் ஆக்கிரமிப்பாளர்கள் என, இவர் கூறுவது, ஆந்திராவைச் சேர்ந்தவர் களைத் தான்.



கர்நாடகாவில் தமிழர்கள் மீது தாக்குதல்: அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் அவ்வப் போது அங்கு வசிக்கும் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. காவிரி பிரச்னையில் தமிழகத்தின் சார்பில் உரிமை கோரப் படும்போதெல்லாம், பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் தமிழர்கள் தான், மொழி வெறியர்களுக்கு இலக் காகின்றனர். தாக்குதலுடன் நிற்காமல், தமிழர்களின் உடைமைகளும் சூறையாடப் படுவதோடு, தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு செல்லும் வாகனங்களும் தீ வைக்கப்படுகின்றன.



தலை தூக்கும் பிராந்திய உணர்வு: ஒருமைப்பாட்டை மறந்து, பிராந்திய உணர்வுகளை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும், இதுபோன்ற வன்முறைகளும், போராட்டங்களும் மிகவும் கவலைக்குரியவை. பிராந் திய கட்சிகள் மட்டுமல்லாமல், தேசிய கட்சிகள் சிலவும் இந்த தவறான பாதையை பின்பற்ற துவங்கியுள்ளது தான், அதிர்ச்சியை அதிகரிக்கச் செய் துள்ளது. ஆரம்பத்திலேயே, இந்த பிரச்னைகளுக்கு உறுதியான தீர்வு காணாவிட்டால், நாட் டின் அனைத்து பகுதிகளிலும் இந்த தவறான கலாசாரம் பரவி விடும். இது இந்திய ஒருமைப் பாட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதுடன், எதிர்கால தலைமுறையையும் தவறான பாதைக்கு திருப்பி விடும் பேராபத்துக்கு வழியை ஏற்படுத்திக் கொடுத்து விடும்.

1 கருத்து:

Ganesh சொன்னது…

தங்கள் கருத்துக்கள் ஒரு தலைபட்சமாக உள்ளது... நீங்கள் தற்போது புருனையில் இருகிறீர்கள்! எந்த மொழியில் பணியாற்றுகிறீர்கள்? தமிழிலா? ராஜ் தாக்கரே யும், அச்சுதானந்தனும் கூறியதில் என்ன தவறு? பிஹாரிலிருந்தும் உ.பி இலிருந்தும வாய்ப்பு தேடி வருகின்றவர்கள் அந்தஅந்த ஊரின் மொழி, கலாச்சாரத்தோடு ஒன்றி போக வேண்டுமே தவிர, தேசிய மொழி என்ற போர்வையில் இந்தியை திணிக்க முற்பட்டால் இப்படி தான் நடக்கும்... எனக்கு பணி செய்ய அல்லது வாய்ப்பு தேடி என் ஊருக்கு வருபவன் என் மொழியை பேச வேண்டுமே தவிர, அவன் மொழியை நான் பேசவேண்டும் என்று அவன் எதிர்பார்ப்பது அறிவீனம்...