திங்கள், 9 நவம்பர், 2009

மாணவர்களை சீரழிக்கும் ஹைடெக் போதை கும்பல்


சென்னையில் அடையாறு, அண்ணாநகரில் படிக்கும் "பெரிய இடத்து' மாணவர்களிடம், ஒரு கும்பல் நண்பர்களாக பழகி, அவர்களுக்கு இலவசமாக போதை வஸ்துகளை சப்ளை செய்கிறது. "சிலிப்பரி ஸ்லோப்' என்ற ரகசிய பெயரில் செயல்படும், அக்கும்பலின் பின்னணியில் நக்சலைட்களுக்கு தொடர்பிருப்பதாக, "பகீர்' தகவல் வெளியாகியுள்ளது.சென்னையில், "கஞ்சா, அபின், பிரவுன் சுகர், ஓபியம், குட்கா, கேட்டமைன்' என பல்வேறு வகையான போதை வஸ்துகளை விற்பனை செய்யும் கும்பல், திரைமறைவில் செயல்பட்டு வருகிறது. இதில், கஞ்சா கும்பலின் நடமாட்டத்தை ரயில்வே சுரங்க பாலங்கள், கூவம் ஆற்று கரையோரங்களில் அதிகம் காணலாம்.கீழ்ப்பாக்கம் டி.பி.சத்திரத்தில், இரண்டு கும்பல்கள் கஞ்சா வியாபாரத்தில் பல ஆண்டுகளாக கொடிகட்டி பறக்கிறது. இக்கும்பலிடம் வேலை பார்க்கும் அடியாட்கள், தொழில் போட்டியில் பழிக்கு பழியாக எதிர் கும்பலை வெட்டி கொலை செய்வது சகஜமாகி விட்டது.ஆந்திராவிலிருந்து ரயிலில் கஞ்சாவை இறக்குமதி செய்யும் கும்பல், அவற்றை பிரித்து அடியாட்களிடம் கொடுத்தனுப்பும். அடியாட்களுக்கு குவாட்டர், பிரியாணியுடன் தினமும் 200 ரூபாய் சம்பளம் கொடுக்கின்றனர்.இவர்கள், கஞ்சாவை சாக்லெட், ஐஸ்கிரீமில் கலந்து விற்பனை செய்கின்றனர். அண்ணாநகர், திருமங்கலம் பகுதியில் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கும் பள்ளிகள் அருகே இக்கும்பலின் நடமாட்டம் இருந்து வருகிறது. கீழ்மட்டத்தில் உள்ள கூலித் தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவர்களை இலக்காக வைத்து கஞ்சா கும்பல் செயல்பட்டு வருகிறது. இதற்கு அடுத்ததாக, பணக்கார இடத்து மாணவர்களை, "சிலிப்பரி ஸ்லோப்' என்ற ரகசிய பெயரில் செயல்படும் கும்பல் லாவகமாக வளைத்து வருகிறது. அடையாறு, அண்ணாநகர் பகுதிகளில் உள்ள பணக்கார வீட்டு மாணவர்கள் படிக்கும் பள்ளிகளே கும்பலின், "டார்கெட்'டாக இருக்கிறது.வெளிநாட்டில் உள்ள பயங்கரவாதிகள், ஆயுதங்களை வாங்கிக் குவிக்க அதிகளவில் பணம் தேவைப்படுகிறது. அதனால், பயங்கரவாதிகள் போதை வஸ்துகளை டன் கணக்கில் வாங்கி இருப்பு வைக்கின்றனர். காடு, மலைக் குன்றில் பதுங்கி வாழும் பயங்கரவாதிகளுக்கு, மக்களோடு நெருங்கிய தொடர்பு கிடையாது. ஆனால், வட மாநிலங்களில் உள்ள நக்சலைட்களுக்கு மக்களோடு நெருங்கிய தொடர்பு இருக்கிறது.இதை அறிந்த பயங்கரவாதிகள், போதை வஸ்துகளை நக்சலைட்கள் மூலமாக உள்ளூர் சந்தைக்கு கொண்டு வருகின்றனர். சென்னையில் உள்ள, "ஹைடெக்' போதை கும்பல், வடமாநில நக்சலைட்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதாக கூறப்படுகிறது.போதை வஸ்துக்களை, ஒரு கிராம் அளவிற்கு பணக்கார வீட்டு மாணவர்களுக்கு வழங்குகின்றனர். ஏதாவது ஒரு மாணவரிடம் நட்பு ரீதியில் பழகும் கும்பல், "நண்பர் ஒருவர் இலவசமாக கொடுத்தார். நீங்கள் பயன்படுத்திப் பாருங்கள்' என கொடுக்கிறது. பல மணி நேரம் உச்சகட்ட போதையில் ஆழ்த்துவதால், அதை பயன்படுத்தும் மாணவர், அவரது நண்பர்களுக்கும் போதை கும்பலின் நண்பரை அறிமுகப்படுத்துகிறார்.இந்த, "நெட் வொர்க்கில்' அடையாறு ராஜாஅண்ணாமலைபுரம், அண்ணாநகரில் உள்ள பணக்கார வாலிபர்கள் பலர் சிக்கியுள்ளனர். மாணவர்களை போதைக்கு அடிமையாக்கியதும், அதன்பின் இலவசமாக தருவதை நிறுத்தி விடுகின்றனர்.போதை வஸ்து பழக்கத்தை விட முடியாத மாணவர்கள், அக்கும்பலை அணுகி போதை வஸ்துக்களை வாங்குகின்றனர். போதை வஸ்து அடிமையால், மாணவர்கள் தவறான பாதைகளில் செல்ல நேரிடுகிறது.மாணவிகளுக்கு போதை வஸ்துகளை இலவசமாக கொடுத்து, பல மணி நேர ஆழ்ந்த மயக்கத்தில் ஆழ்த்துகின்றனர். சுய நினைவில்லாமல் இருக்கும் மாணவிகளை, "புளூ பிலிம்' எடுத்து வெளிநாடுகளுக்கு அனுப்பி காசு பார்க்கும் அதிர்ச்சி தகவலும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.இப்பிரச்னை குறித்து, தொண்டு நிறுவனம் நடத்தி வரும் ஒருவர் கூறியதாவது: போதை கும்பலிடம் சிக்கி, வாழ்க்கையின் எல்லைக்கோடு வரை சென்றவர்கள், மருத்துவமனையில் ரகசியமாக சிகிச்சை பெற்று பொது வாழ்வுக்கு திரும்புகின்றனர். இவர்கள் பற்றிய விவரம் போலீசுக்கு தெரிந்தால் தான், போதை கும்பல் பற்றிய தகவலை சேகரிக்க முடியும். போதைக்கு அடிமையாகிறவர்கள், போலீசில் புகார் கொடுப்பதில்லை.போதை கும்பலின் "ஆணி வேர்' யார் என்பது, கடைசி வரை போலீசுக்கு தெரியாமல் போய் விடுகிறது. தமிழகத்தில் போலீசார் கைது செய்வதெல்லாம், போதை கும்பலின், "ஏஜென்டு'கள் தான். முக்கிய நபர்கள் யாருமே போலீசில் சிக்குவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.போதை வஸ்துக்கள் விற்கும் நபர்களை பிடிப்பதோடு மட்டுமில்லாமல், அதன் பின்னணியில் உள்ளவர்கள் மீதும் போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை: