திங்கள், 16 நவம்பர், 2009

வரலாற்று சம்பவம்: இந்திய நாணய வரலாறு


இந்தியாவில் 1957_ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன்பு `அணா' என்ற நாணயம் புழக்கத்தில் இருந்து வந்தது. அதாவது பதினாறு அணா கொண்டது ஒரு ரூபாய் ஆகும். `2 அணா' `4 அணா', `8 அணா' என்று சில்லரை நாணயங்கள் இருந்தன.
இந்த அணா நாணயத்தை மாற்றி புதிய பைசா நாணய முறையை கொண்டுவர மத்திய அரசு முடிவெடுத்தது. 1_4_1957 முதல் புதிய பைசா நாணயம் அமுலுக்கு வரும் என்று அறிவித்தது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பு நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. "இந்த நாணயம் எப்படி இருக்குமோ? பழைய நாணயத்தை எப்படி மாற்றுவது? இதன் விளைவாக விலைவாசி உயருமா?" என்பது போன்ற அச்சம் நிலவியது. ஆனால் நாளடைவில் அது சரியாகி விட்டது.
16 அணா என்ற கணக்கை மாற்றி, ஒரு ரூபாய்க்கு 100 காசு என்ற புதிய கணக்கு கொண்டு வரப்பட்டது. ஒரு அணா என்பது 6 காசு ஆனது. கணக்கு போடுவதை சுலபமாக்குவதற்காகவே இந்த மாற்றம் (தசாம்ச நாணய முறை) கொண்டு வரப்படுவதாக அரசு தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டது.
முதல் கட்டமாக ஒரு பைசா, 2 பைசா, 5 பைசா, 10 பைசா என்ற 4 புதிய காசுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவை வருமாறு:-
1. பழைய காலணாவை கொஞ்சம் சிறிய உருவத்தில் அச்சிடப்பட்டு இருந்தது ஒரு பைசா நாணயம்.
2. ஒரு அணாவைப் போல வளைவு வளைவாக சிறிய உருவத்தில் வெளி வந்தது 2 பைசா நாணயம்.
3. அரை அணா, 2 அணா நாணயங்களைப்போல சதுர வடிவில் 5 பைசா இருந்தது.
4. அணாவைப் போலவே பெரிய உருவத்தில் 10 பைசா இருந்தது.
(இதற்கு பின்னர் 20 பைசா, 25 பைசா, 50 பைசா நாணயங்கள் வெளியிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.)
இந்த புதிய பைசா நாணய முறை, ஏப்ரல் 1_ந்தேதி முதல் அமுலுக்கு வந்ததால், பாங்கி கணக்குகளை மாற்றவேண்டியது இருந்தது. இதற்காக பாங்கிகளுக்கு 3 நாள் விடுமுறை விடப்பட்டது. அரசு அலுவலகங்களுக்கும் 2 நாள் விடுமுறை கொடுக்கப்பட்டது.
பாங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால், ஏப்ரல் 4_ந்தேதியில் இருந்துதான் பைசா நாணயம் பொது மக்கள் கையில் கிடைத்தது. புதிய நாணயத்தை வாங்கிப் பார்ப்பதில் அனைவரும் மிகுந்த ஆர்வம் காட்டினார்கள்.
பைசா நாணயம் அமுலுக்கு வந்தாலும் பழைய அணா நாணயமும் 3 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்று பிரதமர் நேரு அறிவித்தார். புதிய நாணயம் பற்றி பிரதமர் நேரு வெளியிட்ட அறிக்கை வருமாறு:-
"ஏப்ரல் 1_ந்தேதி ஒரு புரட்சி ஆரம்பமாக இருக்கிறது. அதுதான் புதிய நாணய திட்டம். மக்களின் அன்றாட வாழ்க்கையையும், பழக்கவழக்கங்களையும் பாதிக்கிற இந்த மாறுதல் ஏன்? என்று கேட்கலாம். இப்போதுள்ள நாணய முறை சிக்கல் நிறைந்தது.
கணக்கு போடுவதற்கு அதிக காலதாமதம் ஏற்படுகிறது. ஆகவே சிக்கல் இல்லாத புதிய நாணய முறையை கொண்டு வருகிறோம். இந்த மாறுதல்கள் ஆரம்பத்தில் சில சங்கடங்களை ஏற்படுத்தலாம். இந்த சங்கடங்களை தீர்ப்பதற்கான ஏற்பாடுகளையும் செய் திருக்கிறோம். இன்னும் 3 வருடங்களுக்கு பழைய நாணயங்களும் சட்டப்படி செல்லுபடியாகும்.
புதிய மாறுதலால் யாருக்கும் எந்தவித கஷ்டமோ, நஷ்டமோ ஏற்படாது. நன்மையே ஏற்படும். எனவே இந்த புதிய நாணய முறையை நாட்டு மக்களுக்கு நான் சிபாரிசு செய்கிறேன்." இவ்வாறு பிரதமர் நேரு வாக்குறுதி அளித்தார். இந்த புதிய நாணய முறைக்கு ராஜாஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
ஒரு பைசா, 2 பைசா, 3 பைசா, 5 பைசா, 10 பைசா, 20 பைசா போன்ற சில்லறை நாணயங்கள் தற்போது புழக்கத்தில் இருந்து மறைந்துவிட்டன. 25 பைசா கிடைப்பது கூட அரிதாக இருக்கிறது.
பஸ், ரெயில் கட்டணங்கள் மற்றும் பொருட்களின் விலைகள் 50 காசு அல்லது ரூபாய் கணக்கில் நிர்ணயம் செய்யப்படுவதால் சில்லறை நாணயங்களுக்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.

1 கருத்து:

தமிழினியன் சொன்னது…

ஏன் புதிய நாணய முறைக்கு ராஜாஜி எதிர்ப்பு தெரிவித்தார் என்று தெரிவிக்க இயலுமா?

அப்புறம் இந்த word verificationஐ எடுத்திடுங்க ...

நன்றி