ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

மருத்துவத்தின் தலைவாசல் தமிழகம் (பகுதி-4 )


தொடர்ச்சி...................

மருத்துவமனைகள் தவிர தனிப்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்களும் தமிழகத்தில் வெற்றிகரமாக ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

சென்னையை தலைமையகமாக கொண்டு இயங்கும் லைப்செல் நிறுவனம் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு.பிரசவத்தின் போது அப்புறப்படுத்தப்படும் தொப்புள் கொடி ரத்த திசுக்களை எடுத்து பல ஆண்டுகள் பதப்படுத்தி வைத்து,தீவிர நோய்த் தாக்குதல் ஏற்படும்போது அதனை மருந்தாக பயன்படுத்தும் தொழில் நுட்பத்தை இந்நிறுவனம் கொண்டிருக்கிறது. 

இத்துறையில் நாட்டின் ஒரேயொரு நிறுவனமும் இதுதான். அண்மையில் குறைந்த செலவில் இம்மதிரிகளைப் பாதுகாக்க ஒரு எளிய கட்டண திட்டத்தை இந்நிறுவனம் அறிவித்தது. " பெரும்பாலான மருத்துவமனைகள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன

.நாங்கள் ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக இருப்பதால் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து மருந்து தயாரிப்பு தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபடமுடிகிறது " என்கிறார் ஸ்ரீ ராமச்சந்திர மருத்துவமனையின் சி.இ.ஓ. மகேஷ் வக்கமுடி.

வியாழன், 25 பிப்ரவரி, 2010

மருத்துவத்தின் தலைவாசல் தமிழகம் (பகுதி- 3)தொடர்ச்சி.............................

சிறந்த தொழில் நுட்பத்தைத் தமதாக்கிக் கொள்வதிலும் புதுமையான ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலும் தமிழக மருத்துவமனைகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழக மருத்துவமனைகளில் சாவித் துவாரம் அளவுக்கு மட்டும் உடலில் துளையிட்டு அறுவை சிகிச்சை செய்யும் முறை அறிமுகம் செய்யப்பட்டது.

இப்போது அது அடுத்த கட்டத்தையும் தாண்டிவிட்டது. தற்போது ஊசி முனையளவு துளையிட்டு அதில் நுண்ணிய குழாய்களைச் செலுத்தி ரத்த குழாய் அடைப்பு முதல் வீக்கம் வரை அனைத்தையும் சரி செய்யும் தொழில் நுட்பம் வளர்ந்திருக்கிறது.இதனால் உடலில் தேவை அற்ற வடுக்கள் ஏற்படாது என்பதுடன் ரத்த சேதாரத்திற்கும் வழியின்றி போகிறது.

பெருங்குடியில் இயங்கி வரும் லைப்லைன் மருத்துவமனை உடற்பருமனைக் குறைப்பதற்காக ஒரு சிறப்பு அறுவை சிகிச்சையினை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்தது.இந்த சிகிச்சை செய்யப்பட்டவர்கள் சிறிதளவு உணவை உண்டாலே முழு நிறைவு ஏற்பட்டு உடலில் உள்ள கொழுப்பு கரைய தொடங்கும்.இதில் 100 கிலோ வரை உடல் எடை குறைக்கப்பட்டவர்கள்  கூட இருக்கிறார்கள்.

புதன், 24 பிப்ரவரி, 2010

மருத்துவத்தின் தலைவாசல் தமிழகம் (பகுதி- 2)


தொடர்ச்சி ...................

தமிழக தனியார் மருத்துவ சேவைத்துறையின் வரலாறு என்பது வெளிநாட்டு மிசனரிகள்,உள்ளூர் தொண்டு நிறுவனங்கள்,தனிநபர்களின் பங்களிப்போடு ஆங்கிலேயரியின் ஆட்சியிலேயே துவங்கியது.வேலூரில் உள்ள கிறிஸ்துவ மருத்துவ மனை,திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள சி.எப்.மருத்துவமனை,சேலம் மாவட்டம் டேனிஷ் பேட்டையில் உள்ள டேனிஷ் மிசன் மருத்துவமனை,

திருச்சியில் உள்ள (குழந்தைகளுக்கான ) அமெரிக்கன் ஆஸ்பத்திரி,போன்றவை குறைவான கட்டணத்தில் நெடுங்காலமாக மருத்துவ சேவை ஆற்றி வருகின்றன.அதனையடுத்து தனி நபர்கள், தொண்டு நிறுவனங்கள்,பல்வேறு அறக்கட்டளைகள் ஆங்காங்கே மருத்துவமனைகள் துவக்கி, மருத்துவ சேவைகளை பரவலாக வழங்க ஆரம்பித்தன.

மதுரையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனை போன்றவை அதற்கு ஒரு முக்கிய எடுத்துகாட்டு.இது தவிர இந்திய மருத்துவ முறைகளான சித்த வைத்தியம்,ஆயுர்வேதம், ஹோமியோபதி,யுனானி,போன்றவையும் கிராமப்புற மக்களின் உடல் நலனில் பெரிதும் பங்காற்றி வந்திருக்கின்றன.இன்றும் அது தொடர்கிறது.

இது போன்ற அரசு,தனியார்,தொண்டு நிறுவனங்கள்,பரம்பரை வைத்தியர்கள் ஆகியோரின் கூட்டு சேவை காரணமாக தமிழகத்தில் கொள்ளை நோய்கள்,பேறுகால உயிர் இழப்புகள் போன்றவை பெருமளவு தவிர்க்கப்பட்டு வந்திருக்கின்றன.

இதுவெல்லாம்,ஒருபுறமிருக்க சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு ஓசையின்றி ஒரு மருத்துவப் புரட்சிக் காண வித்து ஊன்றப்பட்டது.நாட்டின் பெருமை மிகு கல்வி நிறுனங்களும்,தமிழகத்தின் சிறந்த மருத்துவக் கல்லூரிகளில் படித்து முடித்து வெளிவந்த பட்டதாரிகளும் சொந்தமாக மருத்துவமனைகளை உருவாக்கி உழைப்பை செலுத்த ஆரம்பித்தார்கள்.

அதற்கடுத்து நடந்ததெல்லாம் அதிசயம்தான். 1983 ல் சென்னையில் டாக்டர் பிரதாப் ரெட்டியால் ஆரம்பிக்கப்பட்ட " அப்பல்லோ " மருத்துவமனை இன்று ஆலமரமாக விழுது விட்டு நாட்டின் மிகப்பெரிய மருத்துவ குழுமமாக உருவாகியிருக்கிறது. 1985 ல் ராமசாமி உடையாரால் துவக்கப்பட்ட ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைகழகத்தின் மருத்துவமனை இன்று நாட்டின் முக்கியமான மருத்துவமனைகளில் ஒன்று. 20 கும் மேற்பட்ட ஆப்ரிக்க நாடுகளில் தொலை மருத்துவம் மூலம் இலவச சேவைகளை இம்மருத்துவமனை வழங்கி வருகிறது. 

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

மருத்துவத்தின் தலைவாசல் தமிழகம் (பகுதி- 1)

 
  
மருத்துவ துறையில் தமிழகம் அடைந்திருக்கும் மகத்தான வளர்ச்சியினை விளக்குவதே இந்த கட்டுரையின் நோக்கம். 

கார்ப்பரேட் மருத்துவமனைகளின் சர்வேதேச தரத்திலான வசதிகளாலும்,மாநில அரசின் பொது சுகாதார கொள்கையினாலும் தமிழகம் இந்தியாவின் மருத்துவ தலைவாசலாகி வருகிறது.இதனால் வெளிநாடுகளிலிருந்தும் வாடிக்கையாளர்கள் மருத்துவ சேவையை நாடி தமிழம் வருகிறார்கள். முதலீடுகளும் வந்து குவிகின்றன.

நீங்கள் எப்போதாவது தமிழகத்தில் வாழ்வது குறித்து சலித்துக்கொண்டதுண்டா? மக்கள் நெருக்கடியும்,வேலையில்லாத் திண்டாட்டமும்,சமுக பிரச்சிசைனகளும், அடிப்படை வசதிகளற்ற கிராமங்களும்,உங்களை அவ்வாறு நினைக்க தூண்டி இருக்கின்றனவா? மேலைநாடுகளோடு ஒப்பிட்டு பெருமூச்செரிந்திருகிரீர்களா? நல்லது. அப்படியே அந்த சித்திரத்தை அழித்துவிடுங்கள்.இன்று நீங்கள் காணும் தமிழகம் தலை தாழ்ந்த தமிழகம் அல்ல,தலை நிமிர்ந்த தமிழகம்.

கல்வி,வாகன உற்பத்தி ஆகியவற்றுக்கு இணையாக மருத்துவத்திலும் மின்னல் வேகத்தில் வளர்ந்துவருகிறது தமிழ் கூறும் நல்லுலகம்.உலகின் வேறெந்த முன்னேறிய நாட்டைக்காட்டிலும் தமிழகத்தில் மருத்துவ துறை காட்டிவரும் வளர்ச்சி வேகம் அபரிமிதமானது.

அதற்கு பல்வேறு கோணங்களும்,பல்வேறு காரணங்களும்  இருக்கின்றன. 1991-92 ல் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையின் அளவு ரூ. 6250. கோடி.அதில் சுகாதாரத் துறைக்கு ஒதுக்கீடு ரூ.411. கோடி.ஆனால்  2009-2010 ல் மாநில அரசின் பட்ஜெட் ரூ. 59,295 கோடி. இதில் சுகாதாரத் துறைக்கான ஒதுக்கீடு ரூ.3,390.69 கோடி. அதாவது மொத்த பட்ஜெட்டில் இது 5.37 சதவீதம்.

நாட்டின் மிக வேகமாக வளர்ந்துவரும் மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தில் பொது சுகாதாரத்திற்கு அளிக்கப்படும் ஒதுக்கீடு அதிகரித்துவருவது மாற்றத்தின் குறியீடு மட்டுமல்ல,முன்னேற்றத்தின் குறியீடும்தான். மருத்துவ துறையைப் பொறுத்தவரை நாட்டின் வேறு எந்த மாநிலத்திற்கும் இல்லாத சிறப்பு தமிழகத்திற்கு எப்போதும் உண்டு.

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

காணக் கண் கோடி வேண்டும்! அழகு ஓவியங்கள்

ஓவியங்கள் எப்படி எல்லாமோ வரையப்படுகின்றன.ஆனால் இந்த ஓவியங்கள் எல்லாம் பறைவைகளின் இறகினில் வரையப்பட்ட ஓவியங்கள். எவ்வளவு அழகாக,அற்புதமாக வரையப்பட்டுள்ளது என்பதை பாருங்கள். 

இந்த ஓவியங்கள் பார்பதற்கு அழகாகவும்,கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் காட்சி தருவதை பாருங்கள். இந்த ஓவியங்களை வரைந்த ஓவியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

சாது மிரண்டால் ? படங்கள்

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள். அது உண்மைதான்  என்பது இந்த படங்களை பார்த்தாலே தெரிகிறது. பிற உயிரினங்களுக்கு நாம் துன்பம் விளைவிக்காதவரை  அவை நம்மை ஒன்றும் செய்வதில்லை. 
ஆனால் நாம் அவைகளை துன்புறுத்த நேர்ந்தால் அவைகளின் பதில் தாக்குதல் இப்படித்தான் இருக்கும் என்பதை இந்த படங்கள் நமக்கு சொல்லாமல் சொல்லும்
ஒரு பாடம். ............

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

முப்பரிமாண (3D தொழில் நுட்ப ) ஓவியங்கள் !

நீங்கள் இங்கே காணும் ஓவியங்கள் அனைத்தும் வண்ண  சாக்பீஸ் (சுண்ணக்கட்டி) கொண்டு  3D தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வரையப்பட்ட ஓவியங்கள்.  பார்பதற்கு அவைகள் வரையப் பட்ட  ஓவியங்கள் போல் தெரியவில்லை.
பார்ப்பதற்கு  நிஜத்தில் இருப்பதுப் போல் தெரிகிறது. நீங்களும் பார்த்து ரசியுங்கள்.

திங்கள், 15 பிப்ரவரி, 2010

இ-மெயில் பிறந்த வரலாறு!

 
தற்காலத்தில் எல்லா நாடுகளிலும் அஞ்சல் சேவைகள் நடைமுறையில் உள்ளன. இச்சேவையில் பல்வேறு பிரிவுகள் உள்ளன என்பதையும் நாம் அறிவோம். ஆயிரமாயிரம் ஊழியர்கள் இந்தச் சேவையில் பணியாற்றி வருகின்றனர்.

அஞ்சல் வாகனங்கள், பேருந்துகள், இரயில் மற்றும் விமானங்களில் கடிதங்கள் அனுப்பப்பட்டு உரியவர்களுக்குச் சேர்ப்பிக்கப்படுகின்றன. ஆனால் இத்துறையில் ஏற்பட்டுள்ள மாபெரும் முன்னேற்றம் மற்றும் மிக விரைந்த சேவை எனில் அது மின் அஞ்சல் (இ மெயில்) சேவையாகும்.

ஒரு கணினியால் இணையத்தின் ( இண்டர்நெட்) வாயிலாக அனுப்பப்படும் தகவல் பரிமாற்றமே மின் அஞ்சல் சேவையாகும். இச்சேவையின் மிகச் சிறந்த அம்சம் என்ன வெனில், அஞ்சல் அலுவலர, தபால்காரர் போன்ற மனிதர்களின் தேவையின்றி ஒருசில நிமிடங்களிலேயே தகவல் பரிமாற்றம் நிகழ்ந்து விடுவதாகும்.

சனி, 13 பிப்ரவரி, 2010

வரலாறு : ஆட்டோ சங்கர் (பகுதி - 7)

செங்கல்பட்டு செசன்சு கோர்ட்டில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ஆட்டோ சங்கர் உள்பட 8 பேரும் சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர். தங்கள் மனுவில் அவர்கள் கூறியிருந்ததாவது:-

"அடையாளம் கண்டுபிடிக்க முடியாத எலும்புக்கூடுகளை வைத்துக்கொண்டு காணாமல் போனவர்களின் எலும்புக்கூடுகள் என்று ஊக அடிப்படையில் கூறி, அவர்களை நாங்கள்தான் கொலை செய்தோம் என்று வேண்டும் என்றே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆகவே, நிரபராதியான எங்களை விடுதலை செய்யவேண்டும்" இவ்வாறு அவர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.

நீதிபதிகள் கே.எம்.நடராஜன், டி.சோமசுந்தரம் ஆகியோர் இந்த அப்பீல் வழக்கை விசாரித்தார்கள். 4 மாதம் 6 நாட்கள் இந்த அப்பீல் மனு மீது வக்கீல் வாதங்கள் நடந்தன. இந்த அப்பீல் வழக்கில் 17.7.1992 அன்று நீதிபதிகள் தீர்ப்பு கூறினார்கள்.

ஆட்டோ சங்கர், எல்டின், சிவாஜி ஆகியோருக்கு செசன்சு கோர்ட்டு விதித்த தூக்குத்தண்டனையை நீதிபதிகள் உறுதி செய்தனர். இதேபோல ஜெயவேலு, ராமன், ரவி ஆகியோருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நீதிபதிகள் உறுதி செய்தனர்.

குற்றம் நிரூபிக்கப்படாததால் பழனி, பரமசிவம் ஆகிய 2 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்கிறோம் என்று தீர்ப்பளித்தனர். தீர்ப்பில் நீதிபதிகள் மேலும் கூறி இருந்ததாவது
"கொலை செய்யப்பட்டவர்களில் 5 பேர் எலும்புக்கூடுகளை வைத்து, இவர்கள்தான் ஆட்டோ சங்கரால் கொலை செய்யப்பட்டவர்கள் என்பதை ஏற்க முடியாது" என்று ஆட்டோ சங்கர் தரப்பில் வாதிடப்பட்டது.  

இதையொட்டி 5 பேரின் மண்டை ஓடுகளும் "சூப்பர் இம்பொசிசன் டெக்னிக்" என்ற நவீன கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டதில், கொலை செய்யப்பட்டவர்களின் புகைப்படங்களும், மண்டை ஓடுகளும் ஒன்றாக பொருந்தி இருப்பதை தடய இயல் நிபுணர் சந்திரசேகர் ஐகோர்ட்டில் நிரூபித்துக் காட்டியதை இக்கோர்ட்டு ஏற்கிறது.

மேலும், செசன்சு கோர்ட்டு நீதிபதி இந்த வழக்கை தீவிரமாக விசாரணை நடத்தி தெளிவான முறையில் தீர்ப்பு கூறியதை இக்கோர்ட்டு பாராட்டுகிறது."
இவ்வாறு தீர்ப்பில் நீதிபதிகள் கூறி இருந்தார்கள்.

வெள்ளி, 12 பிப்ரவரி, 2010

மெர்சிடிஸ் பென்ஸ்: பரிணாம வளர்ச்சி !

பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான " மெர்சிடிஸ் பென்ஸ் " 1886 -- 2010 -ம் ஆண்டு வரை  தயாரித்து வெளியிட்டுள்ள கார் மாடல்கள்.
     உங்கள்  பார்வைக்காக!

புதன், 10 பிப்ரவரி, 2010

சாதனை : அடுத்த பில்கேட்ஸ் தமிழ்நாட்டிலிருந்து!
விருது நகர் மாவட்டம்,வத்திராயிருப்பை சேர்ந்த 12 வயது சிறுவன் டெனித் ஆதித்யா, கின்னஸ் சாதனைக்காக ஐந்து வகை கம்ப்யூட்டர் சாப்ட்வேர், 8 வகையான விளையாட்டுகளை உருவாக்கியுள்ளார்.வத்திராயிருப்பில் உள்ள லயன்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார் டெனித் ஆதித்யா. தந்தை மாவேல்ராஜன் ஆட்டொ மொபைல் கடை வைத்துள்ளார். தாயார் ஆக்னெலின் ஆசிரியையாக பணிபுரிகின்றனர்.


மகனின் கம்ப்யூட்டர் ஆர்வத்தால் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் கம்ப்யூட்டர் கோர்சில் சேர்த்து விட்டனர். இரண்டு ஆண்டுகளில் சி. பிளஸ், விசுவல் பேசிக் என கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தும் "லாங்வேஜ்' வரை அனைத்தையும் கற்றுக்கொண்டார்.  மேலும் ஏதாவது சாதிக்க வேண்டும் என தனது பெற்றோரிடம் தெரிவிக்க, அவர்களும் வேண்டிய லேப்டாப், பிரத்யேக சாப்ட்வேர் என அனைத்தையும் வாங்கி கொடுத்தனர். 

செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

கண்ணதாசன்: மலரும் நினைவுகள்

 
காட்டுக்கு ராஜா சிங்கம்,கவிதைக்கு ராஜா கண்ணதாசன்! பெருந்தலைவர் காமராஜரின் வாக்கு இது. " நான் நிரந்தரமானவன்,அழிவதில்லை.எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை" என்று கண்ணதாசனே அறிவித்தார். கவிரசத்தின் சில துளிகள்.
     
கண்ணதாசன் என்றால் கண்ணனுக்கு தாசன் என்று அர்த்தம் அல்ல," அழகான கண்களைப்பற்றி வர்ணிப்பதிலும்,வர்ணிக்கப்பட்டதைப் படிபதிலும் ஆசை அதிகம். அதனால் இந்தப் பெயரை வைத்துக்கொண்டேன்" என்பது அவரே அளித்த விளக்கம்.பெற்றோர் வைத்த பெயர் முத்தையா.
    
சிறுவயதில் இன்னொரு குடும்பத்துக்கு  7,000 ரூபாயிக்கு  தத்துக் கொடுக்கப்பட்டவர் கண்ணதாசன்.அந்த வீட்டில் அவர் பெயர்:நாராயணன் 
  
"கலங்காதிரு மனமே,உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே " 
என்று "கன்னியின் காதலியில்"எழுதியது கண்ணதாசனின் முதல் பாட்டு.
மூன்றாம் பிறையில் வந்த " கண்ணே கலைமானே " கவிஞரின் கடைசிப் பாட்டு.
     
எப்போதும் மஞ்சள் பட்டுச் சட்டை, வேட்டி அணிந்திருப்பார்.திடீரென்று கழுத்து,கைகளில் நகைகள் மின்னும்.திடீரென்று காணாமல் போய்விடும்.
காரணம் கேட்டால் " பள்ளிக்கூடத்துக்கு போயிருக்கிறது " என்று அவை அடகு வைக்கப்பட்டு இருப்பதை சொல்வார்.
    
மைலாப்பூர் உட்லண்ட்ஸ் ஹோட்டல்,அபிராமபுரம் கவிதா ஹோட்டல்,இரண்டும் கவிஞருக்குப் பிடித்தஇடங்கள.பெரும்பாலான பாடல்கள் பிறந்தது இங்குதான்.வெளியூர் என்றால் பெங்களூர் உட்லண்ட்ஸ்.
    
வேட்டியின் ஓரத்தைப் பிடித்துக்கொண்டு  அறைக்குள் நடந்தபடி பாடல்களின் வரிகளைச் சொல்வார்.நடந்துகொண்டே இருந்தால்தான் சிந்தனை துளிர்க்கும்.கவிதை வரிகள் சொல்லுபோது செருப்பு அணிய மாட்டார்.
    
கொஞ்சம் மது அருந்திவிட்டால்,என் சிந்தனைகள் சுருசுருப்படைவது வழக்கம்.அதைப்போல் இன்ப விளையாட்டில் எனக்கு ஆசை உண்டென்றாலும்,சிந்திக்கிற நேரத்தில் ரதியே வந்தாலும் திரும்பிப் பார்க்க மாட்டேன் என்பது கவிஞரின் வாக்குமூலம்.
  

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

வரலாறு : ஆட்டோ சங்கர் (பகுதி - 6)


  
6 பேர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக, ஆட்டோ சங்கர் உள்பட 10 பேர் மீது சைதாப்பேட்டை 2,வது ஜூடிசியல்  மாஜிஸ் திரேட்டு கோர்ட்டில் 26.1.1988 அன்று குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த குற்றப்பத்திரிகை 1,100 பக்கம் கொண்டதாக இருந்தது. ஆட்டோ சங்கர் உள்பட 10 பேர் மீதும் இ.பி.கோ.  320 பி (சதி செய்தல்), 147 (கூட்டமாக சேர்ந்து கல வரம் செய்தல்), 148 (பயங்கர ஆயுதங்களுடன் கலவரம் செய்தல்), 364 (கொலை செய்வதற்கு ஆட்களை கடத்துதல்), 302 (கொலை), 201 (கொலைகளுக்கான சாட்சியங்களை மறைத்தல்) ஆகிய 6 பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

28.10.1987 அன்று சுடலைவும், 8.1.1988 அன்று லலிதாவையும், 15.3.1988 அன்று ரவியும், 29.5.1988 அன்று சம்பத், மோகன், கோவிந்தராஜ் ஆகியோரும் கொலை செய்யப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
பின்னர் இந்த வழக்கு செங்கல்பட்டு செசன்சு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. 

நீதிபதி மோகன்தாஸ் வழக்கை விசாரித்தார். முதலாவதாக அப்ரூவர் பாபு சாட்சியம் அளித்தார். அதைத்தொடர்ந்து 9 மாஜிஸ்திரேட்டுகள், 5 போலீஸ் இன்ஸ் பெக்டர்கள் உள்பட மொத்தம் 134 பேர் சாட்சியம் அளித்தனர்.
சினிமா நடிகை புவனி மற்றும் விபசார அழகிகள் அனிதா, கவிதா ஆகியோரும் இந்த வழக்கில் சாட்சியம் அளித்தனர். 

அரசு தரப்பில் வக்கீல்கள் கம்பம் சுப்பிரமணியம், எஸ். கோபாலகிருஷ்ணன், பால்ராஜ் ஆகியோர் வாதாடினார்கள். ஆட்டோ சங்கர் தரப்பில் வக்கீல் நடராஜன், அவருக்கு உதவியாக கணேஷ், மனோகர் ஆகியோர் ஆஜர் ஆனார்கள். இந்த வழக்கில் 31.5.1991 அன்று தீர்ப்பு கூறப்பட்டது.

வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

2009-ம் ஆண்டு உலக பொருளாதாரம் ஒரு பார்வை !* உலக பணக்காரர்கள் பட்டியலில் உருக்கு ஆலை அதிபர் லட்சுமி மிட்டலை பின்னுக் குத் தள்ளி முன்னேறியுள்ளார் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி. இந்திய பணக் காரர்கள் பட்டியலில் தற்போது முதலிடத்தில் முகேஷ் அம்பானி உள்ளார். வெளிநாடு வாழ் இந்தியரும் உருக்கு அதிபருமான லட்சுமி மிட்டல் அடுத்த இடத்துக்குத் தள்ளப் பட்டார். அமெரிக்காவிலிருந்து வெளி யாகும் ஃபோர்ப்ஸ் பட்டியலில் இது தெரிய வந்துள்ளது.

* இந்தியாவில் தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. எ வேல்யூ செர்வ் என்ற ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் படி, இந்தியா தனியார் பங்கு முதலீடுகளை ஈர்ப்பதில் முன்னிலையில் உள்ள ஏழு நாடுகளில் ஒன்றாக உள்ளது.

* கெல்லி சர்வீசஸ் நிறுவனம் உலகம் முழுவதும் ஊழியர்கள் எந்த அளவிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பது பற்றி ஓர் சர்வே நடத்தியது. அதில் பல சுவாரஸ்ய மான தகவல்கள் வெளியாகி உள்ளன. மொத்தம் 28 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. மேலும் இந்தியாவில் மிக மகிழ்ச்சியான ஊழியர்கள் ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் தமிழ்நாட்டில் தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்தியா-துபை இடையிலான வர்த்தகம் கடந்த 6 ஆண்டுகளில் ரூ.45,000 கோடியாக உயர்ந்துள்ளது. 2002-ம் ஆண்டில் இந்தியா- துபை இடையிலான வர்த்தகம் ரூ.12,000 கோடியாக இருந்தது. இது 6 ஆண்டுகளில் 340 சதவிகிதம் உயர்ந்து ரூ.45,000 கோடியாக அதிகரித்துள்ளது.

வியாழன், 4 பிப்ரவரி, 2010

ஒரே மாத்திரை... ஓஹோன்னு வாழ்க்கை


 
  

நூறு ஆண்டுகள் வாழ இனி ஒரு மாத்திரை போதும் என்கின்றனர் அமெரிக்க விஞ்ஞானிகள். நோய்களைத் தடுக்கும் 3 ஜீன்களை பயன்படுத்தி அந்த மாத்திரை தயா ரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
 
இதுபற்றி நியூயார்க்கின் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவ கல்லூரியில் வயது தொடர்பான  ஆராய்ச்சி மையம் சார்பில் ஆராய்ச்சி நடந்தது. அந்த குழுவுக்கு விஞ்ஞானி நிர் பர்ஜிலய்  தலைமை வகித்தார். 

அவர்களது கண்டுபிடிப்பின்படி மனிதனின் வாழ்நாளை நீட்டிக்கவும்,  நோய்களைத் தடுக்கவும் 3 ஜீன்கள் உதவுவது தெரிய வந்தது.
அந்த மூன்றில் இரண்டு ஜீன்கள், உடலில் நல்ல கொலஸ்டிராலை உற்பத்தி செய்கின்றன.  இது இதய நோய்கள், பக்கவாதம், மூளை செயல்திறன் மாறுபாடு (அல்சமீர்) ஆகியவற்றைத்  தடுக்கிறது. 

புதன், 3 பிப்ரவரி, 2010

வைகோ : ஒரு சிறப்புப் பார்வை !

 அரசியல் மேடைகளில் வைகோ உமிழும் ஒவ்வொரு வெப்ப வார்த்தையும் களத்தை கொதிகலனாகவே வைத்திருக்கும்.போர்வாள்,புரட்சிப்புயல்,என பளீர் பட்டங்களால் அடையாளம் காணப்படும் பிளாக் டைகர்.பொது வாழ்க்கையில் பம்பரமாகச் சுழன்று கொண்டு  இருப்பவரின் பெர்சனல் பக்கங்களில் இருந்து  இங்கே கொஞ்சம்.....

வை.கோபாலசாமி என பெற்றோர் வைத்த பெயரைத் தொண்டர்கள் சுருக்கி வைகோ என்று அழைக்க அதையே தனது பெயராக வைத்துக்கொண்டார்.அந்த காலத்தில் அவரது தாத்தாவை அனைவரும் " அகோ " என்பார்களாம்.

எட்டு வயதில்,காந்தியின் பேரன் கிருஸ்ணதாஸ் காந்தியின் முன்னால் பூமிதான இயக்கத்தை ஆதரித்து இவர் பேசியதுதான் முதல் மேடை பேச்சு.ஐந்தாம் வகுப்பு மாணவனாக எட்டையபுரம் பாரதி விழாவில் கலந்து கொண்டது முதல் போட்டி.

நெல்லை சவேரியார், சென்னை மாநில கல்லூரி,சட்ட கல்லூரியில் படித்த காலங்களில் அத்தனை பேச்சு போட்டிகளிலும் முதல் பரிசு இவருக்குதான்.இவருக்கு சளைக்காமல் சவால் கொடுத்தவர் " வலம்புரி ஜான் ".

மே 22 இவரது பிறந்த நாள்.ஆனால் சின்ன கொண்டாட்டம் கூட இருக்காது.அன்றைய தினத்தில் எங்கு இருக்கிறார் என்று குடும்பத்தினர் தவிர,யாருக்கும் தெரியாது !

இதுவரை, 28 முறை சிறை சென்றுள்ளதில்,நான்காண்டுகாலம் சிறையில் கழிந்திருக்கிறது.திராவிட இயக்க தலைவர்களில் அதிக நாட்கள் சிறையில் இருந்தவர். சிறையில் எப்போதும் சிறப்பு வகுப்பு வாங்கிக்கொள்ள மாட்டார்.

பொடாவில் வைகோ கைதானதைக் கண்டித்து  1 கோடியே  10 லட்சம் பேர் கையெழுத்துப் போட்டு பிரதமருக்கு கடிதம் அனுப்பியது போன்று இதுவரை வேறு எவரது கைதுக்கும் நடந்ததா என்பது சந்தேகம்தான்!

எந்த மேடைப்  பேச்சுக்கு முன்னரும் இரவு உணவை சாப்பிட மாட்டார். பசி இருந்தால்தான் பேச்சும்,குரலும்,சரியாக வரும் என்பார்.

சிவப்பு சட்டை,கறுப்பு பேன்ட் சீருடையுடன் தி.மு.க. வில் இப்போது வலம்வரும் தொண்டர் படையை அப்போது உருவாக்கியவர் வைகோ. " ஆயுத படையை உருவாக்குகிறார்" என்று அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். வைகோவையும்  300 தொண்டர்களையும் கைது செய்தார். இன்று ம.தி.மு.க-விலும் அப்படி ஒரு பெரும்படை இருக்கிறது.

கலிங்கப்பட்டி ஊராட்சித் தலைவராக வெற்றி பெற்றதற்காக கருப்பு,சிவப்பு, மோதிரம் ஒன்றை இவருக்கு அணிவித்தார்கள். எமெர்ஜென்சி காலத்தில் சிறை சென்ற போது மோதிரத்தை கழற்றச்  சொன்னார்கள். அதன் பிறகு 40 ஆண்டுகளாக வைகோ மோதிரம் அணிவதே இல்லை.

கருப்பையா மூப்பனார், இவர் மீது பாசமாக இருப்பார்.வைகோ வைத்திருக்கும் சூட்கேஸ் மூப்பனார் கொடுத்ததுதான்.வைகோவை காங்கிரசில் சேரச் சொல்லி ராஜீவ் காந்தி தூது அனுப்பியதும் மூப்பனாரைத்தான்.

விமான விபத்தில் சஞ்சய் காந்தி பலியான மறுநாள், நாடாளுமன்றத்தில் ராமகிருஷ்ண ஹெக்டே அவரை அவமானப் படுத்துவது போல பேசினார். உடனே வைகோ " இறந்தவர் குறித்து விமர்சிப்பது தவறு.சஞ்சய் காந்தியின் உடலைகூடப் பார்க்காமல் அவருடன் பலியான விமானி வீட்டுக்கு ஓடிபோய் அஞ்சலி செலுத்தியவர் இந்திரா.

ஆனால் பிரதமர் மொரார்ஜியைக் காப்பாற்றுவதற்காகப் பலியான ஐவர் குடும்பத்துக்கு ஆறுதல் அளிக்க உங்களில் ஒருவர்கூடச் செல்லவில்லை! என்று பதிலளித்தார்.அந்த பேச்சுதான் தலைநகரத்தில் வைகோ மீது பலரது கவனத்தை ஈர்த்தது.

தமிழீழத்துக்கு ரகசியமாகச் சென்று 23 நாட்கள் தங்கி இருந்திருக்கிறார்.அப்போது " உங்களது வாழ்க்கைக் கதையை நான் எழுதுகிறேன் " என்று வைகோ கேட்டுக் கொண்டதற்கு இணங்க, 15 நாட்கள் மனம்விட்டு பேசி இருக்கிறார் பிரபாகரன். அந்த குறிப்பும் கேசட்டும் இன்றும் வைகோவிடம் உள்ளது!

வைகோ திருமணத்தைத் தலைமையேற்று நடத்தி தர ஒப்புகொண்டு இருந்தார் அன்றைய முதல்வர் கருணாநிதி. திருமண நாள் அன்று அவருக்குத் திடீர் கண்வலி.கருணாநிதிக்குப் பதில் நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் வைகோ திருமணம் நடைபெற்றது.

காலை 11  மணிக்கு வேகவைத்த காய்கறி, மதியம் 4 மணிக்கு, பயிறு வகைகள்  சாப்பிடுவது இவரது பழக்கம்.

அலெக்சாண்டர், நெப்போலியன்,உமர் முக்தார், சே குவேரா,கரிபால்டி,ஆகிய ஐவரும் வைகோ மிகவும் ஆராதிக்கும் மா வீரர்கள்.

தினமும் டைரி எழுதும் பழக்கம் உள்ள இவரிடம் கடந்த  35 ஆண்டு கால டைரிகள் பத்திரமாக இருக்கின்றனவாம்.

கார் பயணங்களில் எம்.ஜி.ஆரின் தத்துவப் பாடல்கள்தான் ஒலிக்கும்.அவ்வப்பொழுது தியாகராஜ பகாவதர், பி.யு.சின்னப்பா பாடல்களும் அவரின் விருப்பமாகும்.

அசைவ உணவுகளின் ஏகப் பிரியர்.அம்மா மாரியம்மாள் வைக்கும் கோழிக் குழம்புக்கு ஆயுட்கால அடிமை.

வைகோ தோளில் நிரந்தர இடம் பிடித்துவிட்ட  கருப்பு சால்வையை முதலில் அணிவித்தவர் சங்கரன்கோயில் பிச்சையா.தன் மகள் திருமணத்திற்கு வந்தவருக்கு  1985 -ம் ஆண்டு கருப்பு சால்வை அணிவித்தார் பிச்சையா.ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஒரு புது சால்வை இன்றும் அனுப்ப்பிகொண்டு இருக்கிறார் பிச்சையா.

தமிழ்,ஆங்கிலத்தில் வெளியாகும் அனைத்து முக்கிய திரைப் படங்களையும் தியேட்டரில் பார்த்துவிடுவார். சமீபத்தில் இவர் பார்த்த படம் " அவதார் ".

குறிப்புகள் இல்லாமலேயே மணிக்கணக்கில் மேடையில் பேசும் வழக்கம்கொண்டவர். நா சுளுக்கும் கரடு முரடான சங்க இலக்கிய பாடல்களைக்கூட இரண்டு ,மூன்று,முறை வாசித்ததுமே அட்சரம் பிசகாமல் ஒப்பிப்பார்.

வைகோவின் அக்கா கிறிஸ்துவ மதத்தைப் பின்பற்றுபவர் என்பதால்,இவரது மேடைப் பேச்சில் சில சமயம் பைபிள் மேற்கோள் எட்டிபார்க்கும்.

வைகோவிற்கு வரும் கடிதங்களையும், அவர் அனுப்பும் கடிதங்களையும் பிரித்துப் படிப்பதற்கு சென்னைக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வெளிப்படையான அரசாங்க உத்தரவே போட்டு இருந்தார் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர்.

சமாதான  காலத்தில் ஈழத்துக்கு வர வைகோவிற்கு அழைப்பு வைத்தார்கள்.
" சுதந்திரத் தமிழ் ஈழத்துக்குத்தான்  இனி நான் வருவேன் "  என்று அழைப்பை ஏற்க மறுத்துவிட்டார்.

வாலிபால்,பேஸ்கட்பால்,புட்பால் விளையாட்டுகளைப் பற்றி மணிக்கணக்கில் கூட பேசிக்கொண்டு இருப்பார். டி.வி-யிலும் நேரிலும் இந்தப் போட்டிகளைப் பார்ப்பதில் அலாதியான் ஆர்வம் கொண்டவர். 

நன்றி :
விகடன்.

செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

வரலாறு : ஆட்டோ சங்கர் (பகுதி - 5)


  
6 பேர்களை கொலை செய்த ஆட்டோ சங்கர், சிறையில் இருந்து தப்பி ஓடினான். ஆட்டோ சங்கர் மற்றும் அவனது கூட்டாளிகள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு 21.8.1990 அன்று விசாரணைக்கு வருவதாக இருந்தது. அதற்கு முந்தின நாள் போலீசுக்கு பெரிய அதிர்ச்சி தரும் சம்பவம் நடந்தது.
அதாவது 20.8.1990 அன்று நள்ளிரவு சென்னை மத்திய சிறையில் இருந்து ஆட்டோ சங்கர், அவனது தம்பி மோகன், கூட்டாளி செல்வராஜ் ஆகியோர் தப்பிவிட்டனர். இவர்களுடன் அதே ஜெயில் அறைக்குள் இருந்த மற்றொரு கொலை கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட வக்கீல் ராஜா, சுண்டல் குமார் ஆகியோரும் ஓடிவிட்டனர்.
இந்த 5 பேரும் தப்புவதற்கு ஜெயில் ஊழியர்கள் சிலரும், வக்கீல் ராஜாவின் நண்பனான உதயா (ஜெயிலில் இருந்து பரோலில் வெளியே வந்து தலைமறைவாக திரிந்தவன்) என்பவனும் உதவியாக இருந்தார்கள்.
உதயா, சம்பவத்தன்று நள்ளிரவில் காரில் மத்திய சிறைச்சாலை அருகே சென்று மரத்தில் ஏறி நின்று ஜெயில் காம்பவுண்டுக்குள் கயிற்றைப் போட்டான். அந்த கயிறு வழியாக 5 பேரும் ஏறி வெளியே குதித்து தப்பினார்கள்.
தப்பிய 5 கைதிகளையும் போலீசார் சல்லடை போட்டு தேடினார்கள். ஒரு வாரத்தில் வக்கீல் ராஜா, சுண்டல் குமார் இரு வரும் பெங்களூரில் சிக்கினார்கள். இவர்களிடம் விசாரணை நடத்தியதில் ஆட்டோ சங்கர் தன்னுடைய புதிய காதலி தேவியுடன் ஒரிசா சென்று இருப்பதாக தெரியவந்தது.
அதோடு ஆட்டோ சங்கருக்கு தேவியுடன் ஏற்பட்ட தொடர்பு மற்றும் அவனைப்பற்றிய காதல் விவகாரங்களும் வெளிவந்தன. ஜெயில் பறவையாக இருக்கும் போது ஆட்டோ சங்கரே இவற்றை ஜெயில் நண்பர்களிடம் கூறி இருக்கிறான்.
சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, ஆட்டோ சங்கரின் காதல் வலையில் தேவி சிக்கினாள். தேவி, சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்தவள். அவளுடைய கணவன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அடைந்து மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அவரை பார்க்க தேவி வந்தபோது, ஆட்டோ சங்கரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அடிக்கடி சந்தித்து பேசியதில் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. தேவிக்கு ஆட்டோ சங்கர் அவனுடைய பெயர் பதித்த மோதிரத்தை பரிசாக வழங்கினான். அதேபோல், தேவியும் அவளுடைய பெயர் பதித்த மோதிரம் ஒன்றை பரிசாக கொடுத்தாள். 
இப்படி 6 மாத காலமாக ஆட்டோ சங்கர் தேவிக்கு ஜெயில் காதலனாக இருந்தான். காதலியுடன் உல்லாச வாழ்க்கை வாழவேண்டும் என்ற எண்ணத்தில்தான் ஆட்டோ சங்கர் தப்பினான் என்றும் தெரியவந்தது.
இதன் பேரில் போலீசார் வக்கீல் ராஜா, சுண்டல் குமார் ஆகியோருடன் ஒரிசாவில் உள்ள ரூர்கேலாவுக்கு சென்றனர்.
ரூர்கேலா நகரம் அருகே ஒரு குடிசை வீட்டில் ஆட்டோ சங்கர் அவனுடைய காதலியுடன் தங்கியிருப்பதாக போலீ சுக்கு தகவல் கிடைத்தது. அங்கு தேவி கழுத்தில் தாலி கட்டி குடும்பம் நடத்தி வந்தான்.
அந்த கிராமத்தின் முக்கிய புள்ளிகள் உதவியுடன் போலீசார் மாறுவேடத்தில் சென்று ஆட்டோ சங்கரையும், காதலி தேவியையும் மடக்கி பிடித்தார்கள். ஆட்டோ சங்கர் கைவிலங்கு மாட்டி போலீஸ் வேனில் ஏற்றப்பட்டான்.
போலீசில் சிக்கிக்கொண்டதும் ஆட்டோ சங்கர் அதிர்ச்சியில் உறைந்துபோனான். எதுவும் பேசவில்லை. தேவி தேம்பி தேம்பி அழுதாள். தப்பி ஓடிய 12 நாட்களில் போலீசார் அவனை கண்டுபிடித்து கைது செய்து விட்டனர்.ஆட்டோ சங்கரின் தம்பி மோகன், கூட்டாளி செல்வராஜ் ஆகிய 2 பேரும் பீகார் மாநிலம் பாட்னாவுக்கு தப்பி சென்றதாக தகவல் கிடைத்தது. உடனே போலீசார் பாட்னா விரைந்தனர்.
அங்கு மோகனும், செல்வராஜ-வும் சி.ஐ.டி. போலீசிடம் வசமாக சிக்கினார்கள்.
ஒரிசாவில் இருந்து சென்னைக்கு ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருந்தது. அதனால் சங்கரும், தேவியும் விமானத்தில் சென்னைக்கு கொண்டு வரப்பட்டனர். ஆட்டோ சங்கர் பாண்ட், முழுக்கை சட்டை அணிந்திருந்தான். சட்டையின் இரு கைகளையும் மடக்கி விட்டு ஸ்டைலாக வந்தான்.
போலீஸ் டைரக்டர் ஜெனரல் (டி.ஜி.பி) துரை முன்பு ஆட்டோ சங்கரை ஆஜர்படுத்தினர். அப்போது ஆட்டோ சங்கரை நிருபர்கள் பார்த்தார்கள். சங்கரை போட்டோ படம் எடுத்தனர். மறுநாள் சங்கரும்_தேவியும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். விசாரணைக்காக 2 பேரையும் 7 நாட்கள் காவலில் வைக்க போலீசார் அனுமதி பெற்றார்கள். கோர்ட்டு விசாரணை முடிந்ததும் ஆட்டோ சங்கரும், தேவியும் ஐ.ஜி. அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இன்னும் வரும் ............................

திங்கள், 1 பிப்ரவரி, 2010

ஏ.ஆர்.ரகுமானுக்கு அமெரிக்க கிராமி விருதுகள்

 
உலக அளவில் கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான அமெரிக்க கிராமி அவார்டு தமிழகத்தை சேர்ந்த ஏர்.ஆர்.ரகுமானுக்கு கிடைத்துள்ளது. 

இந்த விருது கிடைத்தது எல்லாம் இறைவன் அருளால்தான் என்றும், தமது இந்திய ரசிகர்களின் அன்பும் , ஆதரவும் எனக்கு தொடர்ந்து அளித்து வரும் அவர்களுக்கு இத் தருணத்தில் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். 

ஏர்.ஆர்.ரகுமான், கடந்தாண்டு இசையமைத்து வெளிவந்த ஸ்லம்டாக் மில்லினர் திரைப்படம் ஆஸ்கருக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. இதில் சிறந்த பாடல் ஜெய் கோ மற்றும் இசைக்காக 2 ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டது. இப்படத்திற்கு இசை உட்பட எட்டு விருதுகள் கிடைத்தன. 

இதன்மூலம் தனிநபராக ஆஸ்கர் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை ஏர்.ஆர்.ரகுமான் பெற்றார். இதனைதொடர்ந்து இவருக்கு ஏராளமான பாராட்டுகள் குவிந்தன.
இந்நிலையில் இவருக்கு மேலும் இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன. ஆண்டுதோறும் அமெரிக்காவில் கிராமி விருதுகள் வழங்கப்படுகிறது. அதில் இந்தாண்டுக்கான சிறந்த சவுண்ட் டிராக் மற்றும சிறந்த பாடல் ( ஜெய் ஹோ ) ஆகியவற்றுக்கு இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன.

ஸ்லம்டாக் மில்லினர் படத்தினன்மூலம் இந்த விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. லாஞ் ஏஞ்சல்ஸ்சில் நடந்த விழாவில் விருதினை பெற்ற ஏர்.ஆர்.ரகுமான் , பேசுகையில் என்ன சொல்வது என்றே தெரியவில்லை, கடவுள் மீண்டும் ஒருமுறை இவ்விருதினை தமக்கு வழங்கியுள்ளார்.


இது எல்லாம் கடவுள் அருளால் தான் நடந்துள்ளது. இறைவனுக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்தியர்களின் பேராதரவும், அன்பும் அவரதும் பிரார்த்தனையும் எனக்கு எப்போதும் உள்ளது. இதன் மூலம் இந்த கிராமி விருதை பெற்றதை இந்தியர்களுடன் பகிர்ந்து மகிழ்ச்சி கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


பன்டிட் ரவிசங்கர், விக்கு வினாயம், ஜாகீர் உசேன் , விஸ்வமோகன்பட் ஆகியோர் இந்த கிராமி விருது பெற்ற இந்தியர்கள் ஆவர். 

நன்றி: 
தினமலர்.