பொருளாதாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொருளாதாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

2009-ம் ஆண்டு உலக பொருளாதாரம் ஒரு பார்வை !



* உலக பணக்காரர்கள் பட்டியலில் உருக்கு ஆலை அதிபர் லட்சுமி மிட்டலை பின்னுக் குத் தள்ளி முன்னேறியுள்ளார் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி. இந்திய பணக் காரர்கள் பட்டியலில் தற்போது முதலிடத்தில் முகேஷ் அம்பானி உள்ளார். வெளிநாடு வாழ் இந்தியரும் உருக்கு அதிபருமான லட்சுமி மிட்டல் அடுத்த இடத்துக்குத் தள்ளப் பட்டார். அமெரிக்காவிலிருந்து வெளி யாகும் ஃபோர்ப்ஸ் பட்டியலில் இது தெரிய வந்துள்ளது.

* இந்தியாவில் தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. எ வேல்யூ செர்வ் என்ற ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் படி, இந்தியா தனியார் பங்கு முதலீடுகளை ஈர்ப்பதில் முன்னிலையில் உள்ள ஏழு நாடுகளில் ஒன்றாக உள்ளது.

* கெல்லி சர்வீசஸ் நிறுவனம் உலகம் முழுவதும் ஊழியர்கள் எந்த அளவிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பது பற்றி ஓர் சர்வே நடத்தியது. அதில் பல சுவாரஸ்ய மான தகவல்கள் வெளியாகி உள்ளன. மொத்தம் 28 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. மேலும் இந்தியாவில் மிக மகிழ்ச்சியான ஊழியர்கள் ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் தமிழ்நாட்டில் தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்தியா-துபை இடையிலான வர்த்தகம் கடந்த 6 ஆண்டுகளில் ரூ.45,000 கோடியாக உயர்ந்துள்ளது. 2002-ம் ஆண்டில் இந்தியா- துபை இடையிலான வர்த்தகம் ரூ.12,000 கோடியாக இருந்தது. இது 6 ஆண்டுகளில் 340 சதவிகிதம் உயர்ந்து ரூ.45,000 கோடியாக அதிகரித்துள்ளது.

செவ்வாய், 1 டிசம்பர், 2009

உலகப் பொருளாதாரம் எங்கு செல்கிறது?

திரும்பிப் பார்ப்பதற்குள் ஒரு வருடம் முடிந்து விட்டது. உலகை உலுக்கிய பொருளாதார பிரச்னை, உலக நாடுகள் அனைத்திற்கும் பரவ ஆரம்பித்தது. எரிந்த தீ அணைந்து விட்டதா? இன்னும் எரிந்து கொண்டிருக்கிறதா? விடை தெரியத்தான் இந்தக் கட்டுரை.


சரியாக செப்., 2008ல் தான் அமெரிக்காவின் மிகப்பெரிய முதலீட்டு வங்கியான "லேமென் பிரதர்ஸ்' மூழ்கி விட்டது என்ற செய்தி வந்தது. அதைத் தொடர்ந்து உலகின் பல பகுதிகளிலும் இருந்து வந்த செய்திகளும் உலகையே திருப்பிப் போட்டு சென்றது.யானை புகுந்த கரும்புத் தோட்டம் போல் ஆனது உலகம். பங்குச் சந்தைகள் இருந்ததில் பாதியை இழந்தன. வங்கிகள் பல மூழ்கின. அரசாங்கங்கள், என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தன.அடிபட்டவர்கள் பல லட்சக்கணக்கானோர். எழுந்தவர்கள் சில லட்சம் பேர் தான். ஆனால், கற்றுக் கொண்ட பாடங்கள் ஏராளம். ஏனெனில் பலர் இது போன்ற நிகழ்வுகளை வாழ்க்கையில் சந்திக்காதது.அதிகம் பாதிக்கப்படாத நாடுகள் மிகவும் குறைவாக இருந்தன. அதில் இந்தியாவும் ஒன்று என்பதில் நமக்கு மிகவும் பெருமை.


விழுந்த காரணம் என்ன? அளவுக்கு அதிகமான சம்பளம், போனஸ் (அதாவது கோடிக்கணக்கில்) என்று கொடுத்து எடுக்கப்பட்ட எம்.பி.ஏ., இளைஞர்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளைகள், என்ன செய்தாவது கம்பெனியின் வருமானத்தை உயர்த்துங்கள் என்று. ஆதலால் பலருக்கு ஏதாவது செய்தாவது லாபத்தை கூட்ட வேண்டும் என்ற எண்ணங்கள், செயல்பாடுகள்.அதில் ஒன்று தான் நிதி ஆதாரம் அதிகம் இல்லாதவர்களுக்குக் கூட அதிகப்படியான வீட்டுக் கடன்களை வாரி வழங்கியது. வட்டி மிகவும் குறைந்திருந்த போது வாங்கிய அளவுக்கு அதிகமான கடன்கள் பின்னர் வட்டி கூடிய போது வட்டி கூட கட்ட முடியாத ஒரு சூழ்நிலை.வீடுகளின் விலை வேறு குறைய ஆரம்பித்தது. உலகளவில் இந்தக் கம்பெனிகள் முதலீடு செய்திருந்த முதலீடுகளும் பங்குச் சந்தையின் பாதிப்பால் மதிப்பு குறைய ஆரம்பித்தன. நஷ்டங்கள் லட்சக்கணக்கான கோடிகளில்.கடன்கள் திரும்பி வராமல் போனதால் வங்கிகளுக்கும், வீட்டுக் கடன் நிறுவனங்களுக்கும் மிகப்பெரிய நஷ்டம். ஆதலால், கொடுத்த கடன்கள் திரும்ப வராததால் பல வீட்டுக் கடன் நிறுவனங்களும், நூற்றுக்கணக்கான வங்கிகளும் திவாலாகி வந்தன.


எப்படி திரும்ப எழுந்தது?திரும்ப எழ காரணம், அரசாங்கங்களின் ஒத்துழைப்பு தான். பல நிறுவனங்களுக்கும், வங்கிகளுக்கும் பல லட்சம் கோடிகள் பண உதவி செய்து அந்த கஷ்டமான சூழ்நிலையிலிருந்து மீள வழிவகை செய்தது. எல்லோருடைய ஒருங்கிணைந்த முயற்சி தான், விரைவில் மீண்டெழுந்ததற்கான காரணம். அதனால், பல நிறுவனங்கள் தப்பின.இருந்தாலும், நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் காணாமல் போயின. இதில் நூறாண்டுகள் கழிந்த நிறுவனங்களும் அடங்கும்.இது தவிர மக்களும் தங்களது வாயைக் கட்டி, வயிற்றை கட்டி இருந்ததும் ஒரு காரணம். அதாவது, அந்த கஷ்டமான சூழ்நிலையில் பெரிய செலவு ஏதும் செய்யாமல் இருந்தனர். கம்பெனிகளும் தங்கள் செலவுகளை கட்டுப்படுத்தின. ஆதலால், அவர்களின் லாபம் கூடியது. விற்பனைகள் குறைந்த போதும் லாபம் கூடியது.


திரும்பி வந்த பங்குச் சந்தை நஷ்டங்கள்:பங்குச் சந்தையில் ஏற்பட்ட நஷ்டங்களை பலர் ஒரு வருடத்தில் திரும்பப் பெற முடிந்தது மிகவும் ஒரு ஆச்சரியமான விஷயம் தான். இதற்கு முந்தைய பொருளாதார நெருக்கடிகளில், அதாவது, 1987ம் ஆண்டு முதலீட்டாளர்கள், தாங்கள் இழந்தவற்றை திரும்பப்பெற இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. 1973ம் ஆண்டு ஏற்பட்ட நெருக்கடியில் முதலீட்டாளர்கள் மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.ஆனால், 1929ம் ஆண்டு ஏற்பட்ட "கிரேட் டிப்ரஷன்' (பண வாட்டம்) இழந்தவற்றை திரும்பப் பெற 25 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. அப்படி பார்க்கும் போது இந்த முறை உலக நாடுகள் மீண்டெழுந்தது ஒரு வருடத்திற்குள். ஆதலால், இந்த மீண்டெழுச்சியை பீனிக்ஸ் பறவை சாம்பலிலிருந்து உயிர்த்தெழுந்ததற்கு இணையாக ஒப்பிடுகின்றனர்.


இந்தியா ஏன் அதிகம் பாதிக்கப்படவில்லை?கடந்த ஆண்டு பொருளாதார சீர்குலைவோ அல்லது அதற்கு முன் ஏற்பட்ட ஆசிய பொருளாதார வீழ்ச்சியோ இந்தியாவை அதிகம் பாதிக்கவில்லை. காரணம், திறமையான நிர்வாகம். மேலும், உலகத்தின் பல பாகங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதைப் போல, பொருளாதார சீர்திருத்தங்களை பெரிய அளவில் இங்கு கொண்டு வராதது தான்.


உலகமெங்கும் வங்கிகளின் நிலைமை:உலகமெங்கும் வங்கிகள் இன்னும் மூழ்கிக் கொண்டிருக்கின்றன. அமெரிக்காவில் மட்டும் கடந்த ஆண்டு 25 வங்கிகளும், இந்த ஆண்டு 75 வங்கிகளுக்கும் மேல் மூழ்கி விட்டன. இந்திய வங்கிகள் நல்ல நிலையிலேயே இருக்கின்றன.இந்தியாவில் வங்கிகள் சமீபகாலத்தில் மூழ்கியதாக சரித்திரமே இல்லை. அப்படி மூழ்கும் நிலை வந்தாலும் அந்த வங்கியை நல்ல நிலையில் இருக்கும் வங்கியோடு இணைத்து, முதலீட்டாளர்களின் பணத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டு வந்திருக்கிறது. உதாரணம் நியூ பாங்க் ஆப் இந்தியா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைக்கப் பட்டது. தனியார் வங்கியான குளோபல் டிரஸ்ட் வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்சுடன் இணைக்கப்பட்டது. மகாராஷ்டிராவின் சாங்கில் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியுடன் இணைக்கப்பட்டது.இந்திய வங்கிகளில், தனி நபர் ஒருவருக்கு, ஒரு வங்கியில் ஒரு லட்சம் ரூபாய் வரை தான் பணத்திற்கு காப்பீடு இருக்கிறது. ஏனெனில், வங்கிகளுக்கு ஏதாவது ஆகும் பட்சத்தில் அங்கு நீங்கள் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் போட்டிருந்தால் அந்த வங்கியை வேறு வங்கியுடன் இணைக்காத பட்சத்தில் ஒரு லட்சம் ரூபாய் வரை தான் திருப்ப கிடைக்கும். ஆனால், அது போல சந்தர்ப்பங்கள் சமீப காலங்களில் ஏற்படவேயில்லை என்பதால் பயம் ஏதும் தேவையில்லை.


இந்த நிகழ்வுகளில் கற்றுக் கொண்டது என்ன?சேமிப்பின் அவசியத்தைக் கற்றுக் கொண்டோம். சேமிக்காதவர்களுக்கு இது ஒரு பாடமாக இருந்தது. எல்லா சேமிப்பையும் ஒரே முதலீட்டில் போடக் கூடாது என்பதையும் கற்றுக் கொண்டோம்.ஆண்டாண்டு காலமாக தங்கம், வெள்ளியில் சேமித்து வந்திருக்கிறோம், அது எவ்வளவு உன்னதமானது என்று உலகத்திற்கு நாம் எடுத்துக் காட்டினோம். உலகமும் நம்மை பின்பற்றத் தொடங்கியது. ஆதலால், தங்கம், வெள்ளி தொடமுடியாத அளவிற்கு சென்று விட்டது.


துபாயில் என்ன நடந்தது?துபாய் அரசுக்கு சொந்தமான "துபாய் வேர்ல்ட்' என்ற நிறுவனம் தனது கட்டுமானப் பணிகளுக்காக பல நிறுவனங்களிடமிருந்து கடன்கள், வேலைகளை வாங்கியிருந்தது. அதில் 80 பில்லியன் டாலர் (3,70,000 கோடி) அளவு கடன்களை செலுத்த முடியாததால் அதை செலுத்துவதற்கு இன்னும் ஆறு மாத தவணை வேண்டும் என்ற கேட்டது உலகையை உலுக்கியது.ஏனெனில், உலகின் மிகவும் பணக்கார நாடுகளில் ஒன்றாக கருதப்பட்டது அரபு நாடுகள் தான். உலகின் பெரிய நாடுகளே தங்களுக்கு பிரச்னை ஏற்படும் போது அரபு நாடுகளை நாடுவது வழக்கம் (சிட்டி வங்கி தனக்கு பிரச்னை ஏற்பட்ட போது அரபு நாடுகளைத் தான் நாடியது).  அவர்களுக்கே பிரச்னை என்றால் எங்கு செல்வார்கள்? அரசு வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் போனது உலகை ஒரு உலுக்கு உலுக்கியது. அதாவது தனி நபரோ அல்லது கம்பெனியோ கடன் வாங்கி கொடுக்க முடியாமல் போயிருந்தால் அது வேறு விஷயம். ஆனால், கடன் வாங்கியதோ துபாய் அரசு. அவர்களே கொடுக்க முடியாமல் போனால்?


துபாய் திரும்ப எழுமா?துபாய், உலகத்தின் வர்த்தக மையமாகவும் திகழ்கிறது. ஆதலால், துபாயின் பிரச்னையின் அளவு 80 பில்லியன் டாலர் என்றால், அதை தீர்ப்பது அவர்களுக்கு அவ்வளவு கடினமான காரியம் இல்லை. ஆனால், பிரச்னை இதை விட பெரிது என்றால், அது இந்தியாவை சிறிது பாதிக்கும் என்பதில் ஐயமில்லை.ஏனெனில், தற்போதே அங்கு கட்டட விலை மிகவும் குறைந்து விட்டது. இது தவிர வங்கிகள் இனி வீடுகள் வாங்கக் கடன் கொடுக்குமா என்பது யோசிக்க வேண்டும். ஆதலால், கட்டுமானப் பணிகள் குறையும் பட்சத்தில் அங்கு வேலை செய்யும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.துபாயும் மற்ற நாடுகளைப் போல செலவுகளை குறைக்க முயற்சிக்கும். தற்போது துபாய் போன்ற நாடுகளில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களை தலைமைப் பதவிக்கு அமர்த்தி அழகு பார்ப்பதும் அவர்களுக்கு அளவுக்கு அதிகமாக சம்பளம் கொடுப்பதும் வாடிக்கை தான். இனிமேல் அது போன்ற பதவிகள் இந்தியர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.

நன்றி :
சேதுராமன் சாத்தப்பன்

ஞாயிறு, 15 நவம்பர், 2009

டாலரின் மதிப்பு டல்லடிக்கிறது ?இனி அடுத்தது என்ன


அமெரிக்க டாலருக்கு வரலாறு காணாத நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இனி உலகிலேயே முன்னணி கரன்சி என்ற அதீத கவுரவம் இனி தொடருமா என்று அலசப்படும் அளவிற்கு, நிலைமை கீழிறங்கி வருகிறது.உலகப் பொருளாதாரத்திற்கு தரப்படும் ஊக்குவிப்புகளால், அடுத் தடுத்து ஓரளவு நிலைமை சீராகும் என்ற கருத்து பேசப்பட்டாலும், அது அமெரிக்க கரன்சியான டாலரின் ஸ்திரத்தன்மைக்கு வலு சேர்க்கவில்லை.



பல்வேறு நாடுகளின் கரன்சிகளுடன் ஒப்பிடும் போது, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, கடந்த பதினைந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு ஏற்பட்டிருக்கிறது. உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் கையிருப்பு கரன்சியாக 64 சதவீதம் அமெரிக்க டாலர் இருக்கிறது. அப்படியிருக்கும் போது யூரோ கரன்சி, அல்லது அந்தந்த நாட்டின் கரன்சி எப்படி முன்னுக்கு வரும் என்ற கேள்வி எழும்.



சீனாவுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா விஜயம் மேற்கொள்ளும் போது, அந்த நாட்டிற்கும் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள பரிவர்த்தனையில் அமெரிக்க டாலர் வீழ்ச்சி அடையாமல், ஏற்பாடுகள் செய்வார் என்ற பேச்சு இருக்கிறது.நெருடல் உறவு :அதிக அளவு அமெரிக்க டாலரை கையிருப்பாக வைத்திருக்கும் நாடுகளில் சீனாவுக்கு முதலிடம் உண்டு.



அமெரிக்காவின் பொருளாதார வெற்றி சீனாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அப்படி எதிர்பார்த்த வெற்றி ஏற்படவில்லை என்றால், அது அமெரிக்க - சீன பொருளாதார உறவை பாதிக்கும். வேண்டுமென்றே தன் கரன்சியான யுவானை சற்று மதிப்புக் குறைவாக சீனா வைத்திருப்பதின் மூலம், அமெரிக்காவுக்கு தன் பொருட்களை அதிக ஏற்றுமதி செய்யப் பார்க்கிறது என்ற பேச்சும் இருக்கிறது. இந்த நெருடல்களை எப்படி அமெரிக்காவும், சீனாவும் பேசித் தீர்க்கப் போகின்றன என்பது இனி தான் முடிவாகும்.



கடந்த சில வாரங்களில் ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் கரன்சிகள் அன்னியச் செலாவணி வர்த்தகத்தில் மதிப்பு கூடி நிற்கின்றன. இதில், மற்றொரு கரன்சியான யூரோ அதிக நம்பிக்கை தரும் கரன்சியாக பிரிட்டன் ஸ்டெர்லிங் பவுண்டை விட முந்தி நிற்கிறது. அமெரிக்க டாலர் மதிப்பில் மட்டும் உள்ள பொருட்கள் மவுசு குறைந்து வருகிறது.



இவை எல்லாம் பார்க்கும் போது, என்னதான் வளர்ந்த நாடுகள் பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் அதிகப் பணத்தை ஊக்குவிப்புகள் என்ற பெயரில் கொட்டினாலும், மேலும் ஏதாவது அபாயம் வந்து விடுமோ என்ற அச்சம் வந்து விட்டது. அதன் எதிரொலியாக, அதிக அளவு நிதி வைத்திருப்பவர்கள் வழக்கத்திற்கு மாறாக தங்கத்தை வாங்கிக் குவிக்கின்றனர்.



ஐரோப்பாவில் எந்த ரசீதும் இல்லாமல் தங்கக் கட்டிகளை வாங்கி சேமிப்பாக வைக்கின்றனர். இதுவரை இல்லாத வகையில், வெள்ளிக்கும் கிராக்கி ஏற்பட்டிருக்கிறது. நூறு கிராம் எடையுள்ள தங்கக்கட்டி உள்ளங்கையில் அடங்கிவிடும், அதன்விலை 3,500 டாலர், அதாவது அதன் மதிப்பு 1.60 லட்சம் ரூபாய். உலக கோல்டு கவுன்சில் தகவலின்படி, இந்த ஆண்டில் இதுவரை 20 சதவீதம் தங்கம் விற்பனை அதிகரித்திருக்கிறது.



இந்தியாவில் ரிசர்வ் வங்கியும், கையிருப்பில் உள்ள டாலரைக் கொண்டு 200 டன் தங்கத்தை சர்வதேச நிதி நிறுவனமான ஐ.எம்.எப்.,மிடம் இருந்து வாங்கியிருக்கிறது. மத்திய நிதியமைச்சர் பிரணாபோ, "பணம் இருந்ததால் தங்கம் வாங்கினோம்: இன்னமும் அன்னியச் செலாவணிக்கு போதிய கையிருப்பு இருக்கிறது' என்றிருக்கிறார்.ஆஸ்திரேலிய நாடு, தொழில்துறைக்கு தேவையான கச்சாப் பொருட்களை அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடு. இங்கே, அந்த நாட்டு டாலர் மதிப்பு கூடியிருக்கிறது. அடுத்தாற்போல் தங்கள் நாட்டு டாலர் மதிப்பு சரியவிடாமல் இருக்க யுக்தியை வகுக்கத் திட்டமிட்டிருக்கின்றனர்.



முக்கியமாக எண்ணெய் உற்பத்தி நாடுகள் மத்தியில் டாலர் மதிப்பு வீழ்ச்சி கவலை தருகிறது. அமெரிக்காவின் நெருக்கமான நாடான சவுதி எண்ணெய் வர்த்தகம் டாலர் கரன்சியில் தொடர்ந்து இருக்க விரும்புகிறது. ஆனால், கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகள் ( ஒபெக்) கூட்டத்தில் வெனிசூயலா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும், கடந்த இரு ஆண்டுகளாகவே கேள்வி எழுப்புகின்றன.



கச்சா எண்ணெயை விற்று டாலராகப் பெற்று, அதை வைத்து நமக்குத் தேவையான பொருட்கள் வாங்கும் போது டாலர் வீழ்ச்சியால் அப்பொருட்கள் கூடுதல் விலை மதிப்பு பெறுகின்றன. இதைத் தடுக்க யூரோ, யென் போன்ற கரன்சிகளுக்கும் வர்த்தகம் செய்தால் என்ன என்பது இவர்கள் கேள்வி. இதற்கு இன்னமும் விடை காணவில்லை.



ஆனால் ரஷ்யாவும், சீனாவும் தங்களுக்குள் நடக்கும் வர்த்தகத்தில் டாலர் தேவையின்றி, பரஸ்பரம் இருநாட்டு கரன்சிகளை பயன்படுத்திக் கொள்வது என்ற முடிவுக்கு ஏற்கனவே வந்து ஒப்பந்தமும் ஆகியிருக்கிறது. இப்பாணியில் பிரேசில், இந்தியா பேச்சு நடைபெறுகிறது.



இவைகளை எல்லாம் பார்க்கும் போது, அடுத்த சில மாதங்களில் டாலர் வலுப்பெறும் தன்மை அதிகரிக்காத பட்சத்தில், உலக நாடுகள் பலவும் தங்களது கரன்சியை சரிய விடாமல் காக்க, புதிய அணுகுமுறைகளை அமல் படுத்த நேரிடும் நிலைக்கு தள்ளப்படும் புதிய சூழ்நிலை உருவாகி வருகிறது.