வெள்ளி, 6 நவம்பர், 2009

1975 - இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனம்


ஒரு பிரதமரின் தேர்தல் செல்லாது என்று கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது, அதற்கு முன் நடந்திராத நிகழ்ச்சி. எனவே இந்தியாவே அதிர்ச்சியில் உறைந்து போயிற்று. அடுத்து என்ன நடக்குமோ என்று மக்கள் கவலை அடைந்தனர். கோர்ட்டு தீர்ப்பைத் தொடர்ந்து, பதவியை ராஜினாமா செய்து விடுவது என்று இந்திரா காந்தி முதலில் முடிவு செய்தார். அதைத் தடுத்து நிறுத்தியவர் அப்போது மேற்கு வங்காள முதல்_மந்திரியாக இருந்த சித்தார்த்த சங்கர் ரே.
"நீங்கள் ராஜினாமா செய்தால் இந்தியா முழுவதும் குழப்பங்கள் ஏற்படும். இந்திய ஒருமைப்பாட்டுக்கே ஆபத்து ஏற்படும். எனவே பொறுமையுடன் இருங்கள். நான் இந்திய அரசியல் சட்டத்தை ஆராய்ந்து அடுத்து என்ன செய்யலாம் என்று கூறுகிறேன்" என்று கூறினார் ரே. அவர் அரசியல் சட்டத்தில் நிபுணர். மீண்டும் அரசியல் சட்டத்தை நுட்பமாக ஆராய்ந்தார். பின்னர் இந்திரா காந்தியை சந்தித்து, "நீங்கள் பதவியில் நீடிக்கலாம் என்று கோர்ட்டு அறிவித்து இருக்கிறது. எனவே ராஜினாமா செய்ய அவசியம் இல்லை" என்று தெரிவித்தார். அப்போது, உளவுத்துறையிடம் இருந்து தனக்கு வந்துள்ள தகவல்களை அவரிடம் இந்திரா கொடுத்தார்.
இந்திரா காந்திக்கு எதிராக ராணுவத்தினரும், போலீசாரும் புரட்சி நடத்தவேண்டும் என்று ஜெயப்பிரகாஷ் நாராயண் பேசியுள்ளார் என்றும், இந்திரா காந்தியை வீட்டை விட்டு வெளியேற விடாதபடி "முற்றுகை போராட்டம்" நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. "நீங்கள் பதவி விலகினாலும் உங்கள் ஆதரவாளர்கள் கிளர்ச்சி செய்வார்கள். சும்மா இருந்தாலும் எதிர்க்கட்சிகள் கலவரம் செய்வார்கள். உள்நாட்டுக் கலவரம் ஏற்படாமல் தடுக்க இந்தியா முழுவதும் நெருக்கடி நிலை பிரகடனம் செய்வதுதான் ஒரே வழி" என்றார் ரே. நீண்ட நேரம் இந்திரா காந்தி ஆலோசனை நடத்தினார். பிறகு ஜனாதிபதி மாளிகைக்கு சென்று ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமதுவை சந்தித்தார். உளவுத்துறையிடம் இருந்து வந்துள்ள தகவல்களை ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.
"உள்நாட்டுக் கலவரம் வெடிக்கக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே நெருக்கடி நிலை பிரகடனம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது" என்று கூறினார். ஜனாதிபதி சில விளக்கங்கள் கேட்டார். பிறகு, "நெருக்கடி நிலை பிரகடனத்தைத் தயாரித்து அனுப்புங்கள். கையெழுத்திடுகிறேன்" என்று தெரிவித்தார். இந்தக் கால கட்டத்தில் இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தி அரசியலில் பங்கு கொண்டிருந்தார். தாயாருக்கு அவர் ஆலோசனைகள் கூறுவது வழக்கம். நெருக்கடி நிலைமை பிரகடனம் ஆகப்போகிறது என்று தெரிந்து கொண்டதும் அவர் தாயாரை சந்தித்தார். "நெருக்கடி நிலை கொண்டு வந்தால் மட்டும் போதாது. எதிர்க்கட்சி தலைவர்கள் வெளியே இருந்தால் முன்பைவிட அதிக தீவிரமாக கலவரத்தில் ஈடுபடுவார்கள். எனவே இரவோடு இரவாக அவர்களையெல்லாம் கைது செய்து சிறையில் அடைத்துவிடவேண்டும். நெருக்கடி நிலை'யில் எதிர்க்கட்சி தலைவர்களைக் காரணம் காட்டாமல் கைது செய்யலாம். அத்துடன் பத்திரிகைகளுக்கு தணிக்கை ("சென்சார்") முறையை கொண்டுவரவேண்டும்" என்றார்.
இந்திரா காந்தி இதற்குத் தயங்கினார். நீண்ட ஆலோசனைக்கு பிறகு தலைவர்களை கைது செய்யவும், பத்திரிகைத் தணிக்கைக்கும் சம்மதித்தார். 1975 ஜுலை 25_ந்தேதி நள்ளிரவுக்குப்பின் (26_ந்தேதி அதிகாலை) "நெருக்கடி நிலை" பிரகடனம் செய்யப்பட்டது. முதுபெரும் தலைவர் ஜெயப்பிரகாசரை, நள்ளிரவில் போலீசார் தட்டி எழுப்பி கைது செய்தனர். "விநாசகாலே விபரீத புத்தி" ("கெட்ட காலம் வந்துவிட்டால் விபரீத புத்திதான் வரும்") என்று கூறியபடி அவர் போலீசாருடன் சென்றார். மொரார்ஜி தேசாய், வாஜ்பாய், ஜார்ஜ் பெர்னாண்டஸ் உள்பட இந்தியா முழுவதும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டபோதே, பத்திரிகைத் தணிக்கையும் அமுலுக்கு வந்துவிட்டதால், தலைவர்கள் கைது பற்றிய விவரங்கள் பத்திரிகைகளில் இடம் பெறவில்லை. அதாவது பத்திரிகையில் அந்தச் செய்தியைப் பிரசுரிக்க தணிக்கை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
டெல்லியில் இருந்து வெளியாகும் பத்திரிகைகளில் நெருக்கடி நிலை பிரகடனம் பற்றியோ, தலைவர்கள் கைது பற்றியோ செய்தி இடம் பெறக்கூடாது என்று சஞ்சய் காந்தி நினைத்தார். அதற்காக அவர் ஒரு குறுக்கு வழியைக் கையாண்டார். பத்திரிகைகள் அச்சாகத் தொடங்குவதற்கு முன், பத்திரிகை ஆபீசுகளுக்கு மின்சார சப்ளை துண்டிக்கப்பட்டது. அதனால் டெல்லியில் அன்று காலை நாளிதழ்கள் வெளிவரவில்லை. ஜெனரேட்டர் வசதியுள்ள ஒரு சில பத்திரிகைகள் மட்டும் வெளிவந்தன. நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டது மந்திரிகளுக்கு கூட தெரியாது! காலை 6 மணிக்கு மந்திரி சபை கூட்டம் இருப்பதாக காலை 5 மணிக்கு மந்திரிகளின் வீடுகளுக்கு போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி 6 மணிக்கு மந்திரிகள் கூடினார்கள். நெருக்கடி நிலை பிரகடனம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது பற்றி இந்திரா விளக்கினார்.
"நெருக்கடி நிலையை காலதாமதமின்றி உடனடியாக பிரகடனம் செய்யவேண்டியிருந்ததால், மந்திரிசபை கூட்டத்தை முன்னதாகக் கூட்டி ஒப்புதல் பெற முடியவில்லை" என்று கூறிய இந்திரா, நள்ளிரவில் தலைவர்கள் கைது செய்யப்பட்ட விவரத்தையும் தெரிவித்தார். சில மந்திரிகளுக்கு இது அதிர்ச்சி அளித்தது என்றாலும் தங்கள் கருத்தை வெளியிட தைரியம் இன்றி மவுனமாக இருந்தனர். பின்னர், நெருக்கடி நிலை பிரகடனத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துவிட்டதாக அறிவிப்பு வெளியானது.
நெருக்கடி நிலைப் பிரகடனம் செய்யப்பட்டது குறித்து, ரேடியோவில் இந்திரா காந்தி பேசினார். அவர் கூறியதாவது:-
"மக்கள் நலனுக்காக நான் சில முற்போக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியது முதலே, அதற்கெதிராக சதி உருவாகி வந்தது. ஜனநாயகம் செயல்படுவதைச் சீர்குலைக்க முயற்சி செய்யப்படுகிறது. கலகம் செய்யும்படி நமது ராணுவத்தையும், போலீசாரையும் தூண்டிவிடும் அளவுக்கு சில நபர்கள் சென்றுள்ளனர். நெருக்கடி நிலைப் பிரகடனம் சட்டத்தை மதிக்கும் பிரஜைகளின் உரிமைகளை எந்தவிதத்திலும் பாதிக்காது என்று உறுதியளிக்கிறேன். கூடிய விரைவில் நெருக்கடி நிலையை ரத்து செய்யும் அளவுக்கு உள்நாட்டு நிலைமையில் அபிவிருத்தி ஏற்படும் என்று நம்புகிறேன்." இவ்வாறு இந்திரா காந்தி கூறினார்.

1 கருத்து:

ரோஸ்விக் சொன்னது…

பகிர்விற்கு நன்றி