உலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 14 ஜூன், 2010

விருந்தின் விலை ரூ.12 கோடி.! அம்மாடியோ ?

 உலகின் மூன்றாவது  பணக்காரரான " வாரன் பப்பட்" உடன் சாப்பிடுவதற்காக நடைபெற்ற ஏலத்தில் ஒருவர் ரூ.12  கோடி தருவதாக ஒப்புக்கொண்டு ஏலத்தில் வெற்றி பெற்றுள்ளார். 

அமெரிக்காவின் சான்பிரான்ஸ்சிஸ்கோ நகரில்  இயங்கி வரும் " கிளைடு பவுண்டேசன் " என்ற தொண்டு நிறுவனத்திற்கு நிதி  திரட்டுவதற்காக இந்த ஏலம் நடைபெற்றது.

இதற்கு உலகின் மூன்றவது பணக்காரரும்,பெர்க்சையர் ஹாத்வே " என்ற இன்சூரன்ஸ் முதலீட்டு நிறுவன அதிபருமான வாரன் பப்பெட் கடந்த 10  ஆண்டுகளாக நிதி திரட்டி வருகிறார். 

வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

2009-ம் ஆண்டு உலக பொருளாதாரம் ஒரு பார்வை !



* உலக பணக்காரர்கள் பட்டியலில் உருக்கு ஆலை அதிபர் லட்சுமி மிட்டலை பின்னுக் குத் தள்ளி முன்னேறியுள்ளார் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி. இந்திய பணக் காரர்கள் பட்டியலில் தற்போது முதலிடத்தில் முகேஷ் அம்பானி உள்ளார். வெளிநாடு வாழ் இந்தியரும் உருக்கு அதிபருமான லட்சுமி மிட்டல் அடுத்த இடத்துக்குத் தள்ளப் பட்டார். அமெரிக்காவிலிருந்து வெளி யாகும் ஃபோர்ப்ஸ் பட்டியலில் இது தெரிய வந்துள்ளது.

* இந்தியாவில் தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. எ வேல்யூ செர்வ் என்ற ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் படி, இந்தியா தனியார் பங்கு முதலீடுகளை ஈர்ப்பதில் முன்னிலையில் உள்ள ஏழு நாடுகளில் ஒன்றாக உள்ளது.

* கெல்லி சர்வீசஸ் நிறுவனம் உலகம் முழுவதும் ஊழியர்கள் எந்த அளவிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பது பற்றி ஓர் சர்வே நடத்தியது. அதில் பல சுவாரஸ்ய மான தகவல்கள் வெளியாகி உள்ளன. மொத்தம் 28 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. மேலும் இந்தியாவில் மிக மகிழ்ச்சியான ஊழியர்கள் ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் தமிழ்நாட்டில் தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்தியா-துபை இடையிலான வர்த்தகம் கடந்த 6 ஆண்டுகளில் ரூ.45,000 கோடியாக உயர்ந்துள்ளது. 2002-ம் ஆண்டில் இந்தியா- துபை இடையிலான வர்த்தகம் ரூ.12,000 கோடியாக இருந்தது. இது 6 ஆண்டுகளில் 340 சதவிகிதம் உயர்ந்து ரூ.45,000 கோடியாக அதிகரித்துள்ளது.

சனி, 19 டிசம்பர், 2009

தோல்வியை நோக்கி கோபென் கேஹன் மாநாடு


வளர்ந்த நாடுகள் நச்சுப் புகையை குறைப்பது, வளரும் நாடுகளுக்கு நிதியுதவி கொடுப்பது தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை கண்டித்து, கோபன்ஹேகன் பருவநிலை மாற்ற மாநாட்டில் இருந்து பிரதமர் மன்மோகன் சிங்கும், சீன பிரதமர் வென் ஜியாபோவும் தங்கள் குழுவுடன் வெளிநடப்பு செய்தனர். இதனால், மாநாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 

தொழிற்சாலைகள், வாகனங்கள் வெளியிடும் புகையால் புவி வெப்பமடைந்து பருவ நிலையில் மாற்றம் ஏற்படுகிறது. அதை தடுப்பது பற்றி முக்கிய முடிவுகள் எடுப்பதற்காக டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் ஐ.நா. சார்பில் 15 வது பருவநிலை மாநாடு நடந்தது.  7ம் தேதி தொடங்கிய இந்த மாநாட்டில் 192 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 
 

பருவநிலை மாற்றம் விவகாரத்தில் வளரும் நாடுகள், வளர்ந்த நாடுகள் இடையே கருத்து வேறுபாடு நிலவியது. கியாட்டோ மாநாட்டு தீர்மானத்தின்படி, நச்சுப் புகையை கட்டுப்படுத்த வளரும் நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் நிதி உதவி செய்ய வேண்டும் என்று வளரும் நாடுகள் கோரிக்கை வைத்தன. இதை வளர்ந்த நாடுகள் ஏற்க மறுத்துவிட்டன. இந்த 10 நாள் விவாதத்தில் இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகள் ஒரே நிலையை எடுத்து ஓரணியாக நின்றன.
 

தலைவர்கள் பங்கேற்கும் கடைசி நாள் மாநாடு நேற்று நடந்தது. பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்க அதிபர் ஒபாமா, சீன பிரதமர் வென் ஜியாபோ, பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி, இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன், ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் பான்&கி&மூன் உட்பட தலைவர்கள் பங்கேற்றனர்.
 

சீன பிரதமர் வென் ஜியாபோ பேசுகையில், “வளரும் நாடுகளுக்கும் வளர்ந்த நாடுகளுக்கும் வித்தியாசமான பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும். நச்சுப்புகை வெளியிடுவது தொடர்பாக வளர்ந்த நாடுகள் தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். பருவநிலை மாற்றம் பற்றிய பிரச்னையை சீனா மிக கடுமையாக எடுத்துக் கொண்டுள்ளது. நச்சுப் புகை வெளியேற்றத்தில் நாங்கள் நிர்ணயித்த இலக்கை தாண்டிக் காட்டுவோம்’’ என்றார்.
 

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பேசுகையில், “பருவநிலை மாற்றம் பற்றி உலக அளவில் உடன்பாட்டுக்கு வருவது நமது அனைவரின் கடமை. இதில் காலதாமதம் செய்ய நேரம் இல்லை. நாம் உடனடியாக செயல்பட்டாக வேண்டும். நச்சுப்புகை வெளியேற்றத்தை குறைப்பதை கண்காணிக்க உலகளவிலான அமைப்பை ஏற்படுத்த வேண்டும் அதே நேரம், அது மற்ற நாடுகளின் இறையாண்மையில் தலையிடுவதாக இருக்கக் கூடாது. 

நச்சுப் புகையை குறைப்பதற்காக வளரும் நாடுகளுக்கு ஆண்டுதோறும் ரூ.5 லட்சம் கோடி நிதி தர தயார். அதற்கு நச்சுப் புகை குறைப்பில் ஒளிவு மறைவு இல்லாமை தொடர்பாக விரிவான ஒப்பந்தம் போட வேண்டும்’’ என்றார்
 

பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், ‘‘கியாட்டோ மாநாட்டு தீர்மானங்களை ஏற்றுக் கொண்ட நாடுகள் நச்சுப் புகை அளவை குறைக்க வேண்டும். பருவநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடு இந்தியா என்பதால் இங்கு நடைபெறும் பேச்சுவார்த்தை வெற்றி பெற வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறோம்.

இந்தியா தானாக முன்வந்து அறிவித்தபடி 2005ம் ஆண்டு இருந்ததை விட 2020ம் ஆண்டு நச்சுப்புகை வெளியேற்றத்தை 20 சதவீதம் அளவுக்கு குறைத்துவிடும். சிக்கலான பணி நம்மை எதிர்நோக்கி காத்து இருக்கிறது. நாம் கருத்து வேறுபாடுகளை மறந்து நடுநிலையான தீர்வு காண ஆக்க பூர்வமாக பணியாற்ற வேண்டும்’’ என்றார்.
கியோட்ட மாநாட்டு தீர்மானத்தை ஏற்கவேண்டும் என்ற வளரும் நாடுகளின் கோரிக்கையை வளர்ந்த நாடுகள் ஏற்கவில்லை. இதனால்,  முடிவு எதுவும் ஏற்படாமல் பேச்சு வார்த்தை இழுபறியானது. 


இதனால், பிரதமர் மன்மோகன் சிங்கும், சீன பிரதமர் வென் ஜியாபோவும் மாநாட்டில் இருந்து தங்கள் நாட்டு பிரதிநிதிகளுடன் வெளிநடப்பு செய்தனர். இதனால், கடந்த 12 நாட்களாக நடந்த மாநாடு எந்த முடிவும் எடுக்காமல் தோல்வியில் முடிவடைந்தது.
முக்கிய இரண்டு நாடுகளின் தலைவர்கள் வெளிநடப்பு செய்ததால் மாநாட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

புதன், 16 டிசம்பர், 2009

140 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கடலில் மிதந்து வரும் ராட்சத பனிக்கட்டி: கப்பல்களுக்கு ஆபத்து



கடலில் மிதந்து வந்த ராட்சத பனிக்கட்டி ஒன்றில் டைட்டானிக் கப்பல் மோதி மூழ்கியது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

இப்போது இதே போல பல மடங்கு பெரிய பனிக்கட்டி ஒன்று ஆஸ்திரேலியா அருகே மிதந்தபடி வருகிறது. ஆஸ்திரேலியா மேற்கு கடற்கரையில் இருந்து 1700 கிலோ மீட்டர் தூரத்தில் மிதந்தபடி வடக்கு நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அன்டார்டிகா பனிப்பாறைகளில் இருந்து பிரிந்து இது வந்துள்ளது.

இதை நாசா மற்றும் ஐரோப்பிய யூனியன் செயற்கை கோள்கள் படம் பிடித்து உள்ளன. இது 140 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ளது. கடலுக்கு மேலே 50 மீட்டர் உயரத்தில் பிரமாண்டமாக இருக்கிறது. அமெரிக்காவில் நியூயார்க் நகரம் அமைந்துள்ள மான் ஹாட்டன் தீவை விட இந்த பனிக்கட்டி 2 மடங்கு பெரியதாக இருக்கிறது.

பனிக்கட்டியில் கப்பல் மோதி விடக்கூடாது என்பதற்காக இந்த பகுதியில் செல்லும் அனைத்து கப்பல்களுக்கும் எச்சரிக்கை அனுப்பி உள்ளனர்.

பனிக்கட்டி மெல்ல, மெல்ல உருகி கரைந்து விடும். இதற்கே 2 வாரத்துக்கு மேல் அல்லது ஒரு மாதம் வரை கூட ஆகலாம் என்று கணித்து உள்ளனர்.

செவ்வாய், 15 டிசம்பர், 2009

கடன் அட்டை(Credit Card) உருவான வரலாறு


அமெரிக்காவில் Hamilton credit coporation என்ற நிதி நிறுவனத்தை பிரான்க் மெக்னமாரா என்பவர் நடத்தி வந்தார். 1949 -இல் அவரது நிறுவனத்திடமிருந்து பெரும் தொகையை கடனாக வாங்கியிருந்த ஒருவரால் அந்த தொகையை திருப்பிச் செலுத்த முடியவில்லை.கடன் வாங்கியிருந்த அந்த மனிதருக்கு கடன் அட்டை வழங்குவது தொழில்.


அதாவது: அவர் வழங்கும் கடன் அட்டையை டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில்
காட்டினால் பணம் தராமல் பொருட்களை வாங்கி கொள்ளலாம். அந்த பில்களுக்கு தானே பணம் கொடுத்து செட்டில் செய்து விட்டு பிறகு சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களிடமிருந்து பில்லுக்கான பணத்தை அசலும்,வட்டியுமாகச் சேர்த்து வசூலித்துக்கொள்வார்.கடன் அட்டை பிசினஸ்காரரின் போதாத காலம்,கடன் அட்டை வாங்கி பொருள்கள் வாங்கி கொண்ட வாடிகையளர்கள், பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.


அந்த நேரத்தில் தன் நெருங்கிய நண்பர் ஒருவரையும் தன்னுடைய வக்கீலையும் அழைத்துக்கொண்டு தன்னிடம் கடன் வாங்கியிருந்த அந்த நபரை பார்க்க செல்லும் வழியில் "நியுயார்க்கின் மேஜெர்ஸ் கேபிள் கிரில்"  என்ற உணவகத்தில் சாப்பிட போனார் மெக்னமாரா.


வராத கடன் பற்றியும் பணத்தை வசூலிக்க வழி என்ன என்றும் சாப்பிட்டபடியே மூன்று பேரும் ஆலோசைனை செய்து கொண்டிருந்தார்கள்.
சாப்பிட்டு முடித்ததும் பில் வந்தது. பணம் கொடுக்க,பர்சை எடுக்க பாக்கெட்டில் கைவிட்டார் மெக்னமாரா.மனிதருக்கு அதிர்ச்சி.பாக்கெட்டில் பர்ஸ் இல்லை?


தன் மனைவிக்கு போன் செய்து பணத்துடன் ஓட்டலுக்கு வரச்சொன்னார்.
மனைவி வந்தவுடன் பில்லுக்குப் பணம் செலுத்திவிட்டு அவமான் உணர்வுடன் ஓட்டலைவிட்டுப் புறப்பட்டார். 


அந்த கணத்தில், இன்னொருவருக்கு இது போன்ற தர்மசங்கடமும் அவமானமும் வரக்கூடாது,அதற்கு என்ன வழி என்று யோசித்தார்.தன்னுடைய அனுபவம்,மற்றும் தன்னிடம் கடன்வான்கியவரின் நிலைமை இரண்டையும் இணைத்து ஒரு தீர்வு கண்டுப்பிடித்தார்.

அப்படி அவர் கண்டுப்பிடித்த தீர்வுதான் கிரடிட் கார்டு.


1950 ல் மெக்னமாரா" டயனர்ஸ்கிளப்"  என்ற நிறுவனத்தை ஆரம்பித்து கிரடிட் கார்டுகளை வழங்க ஆரம்பித்தார். 1958  இல் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டும், விசா கார்டும் அறிமுகம்யின.
.




 

செவ்வாய், 1 டிசம்பர், 2009

உலகப் பொருளாதாரம் எங்கு செல்கிறது?

திரும்பிப் பார்ப்பதற்குள் ஒரு வருடம் முடிந்து விட்டது. உலகை உலுக்கிய பொருளாதார பிரச்னை, உலக நாடுகள் அனைத்திற்கும் பரவ ஆரம்பித்தது. எரிந்த தீ அணைந்து விட்டதா? இன்னும் எரிந்து கொண்டிருக்கிறதா? விடை தெரியத்தான் இந்தக் கட்டுரை.


சரியாக செப்., 2008ல் தான் அமெரிக்காவின் மிகப்பெரிய முதலீட்டு வங்கியான "லேமென் பிரதர்ஸ்' மூழ்கி விட்டது என்ற செய்தி வந்தது. அதைத் தொடர்ந்து உலகின் பல பகுதிகளிலும் இருந்து வந்த செய்திகளும் உலகையே திருப்பிப் போட்டு சென்றது.யானை புகுந்த கரும்புத் தோட்டம் போல் ஆனது உலகம். பங்குச் சந்தைகள் இருந்ததில் பாதியை இழந்தன. வங்கிகள் பல மூழ்கின. அரசாங்கங்கள், என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தன.அடிபட்டவர்கள் பல லட்சக்கணக்கானோர். எழுந்தவர்கள் சில லட்சம் பேர் தான். ஆனால், கற்றுக் கொண்ட பாடங்கள் ஏராளம். ஏனெனில் பலர் இது போன்ற நிகழ்வுகளை வாழ்க்கையில் சந்திக்காதது.அதிகம் பாதிக்கப்படாத நாடுகள் மிகவும் குறைவாக இருந்தன. அதில் இந்தியாவும் ஒன்று என்பதில் நமக்கு மிகவும் பெருமை.


விழுந்த காரணம் என்ன? அளவுக்கு அதிகமான சம்பளம், போனஸ் (அதாவது கோடிக்கணக்கில்) என்று கொடுத்து எடுக்கப்பட்ட எம்.பி.ஏ., இளைஞர்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளைகள், என்ன செய்தாவது கம்பெனியின் வருமானத்தை உயர்த்துங்கள் என்று. ஆதலால் பலருக்கு ஏதாவது செய்தாவது லாபத்தை கூட்ட வேண்டும் என்ற எண்ணங்கள், செயல்பாடுகள்.அதில் ஒன்று தான் நிதி ஆதாரம் அதிகம் இல்லாதவர்களுக்குக் கூட அதிகப்படியான வீட்டுக் கடன்களை வாரி வழங்கியது. வட்டி மிகவும் குறைந்திருந்த போது வாங்கிய அளவுக்கு அதிகமான கடன்கள் பின்னர் வட்டி கூடிய போது வட்டி கூட கட்ட முடியாத ஒரு சூழ்நிலை.வீடுகளின் விலை வேறு குறைய ஆரம்பித்தது. உலகளவில் இந்தக் கம்பெனிகள் முதலீடு செய்திருந்த முதலீடுகளும் பங்குச் சந்தையின் பாதிப்பால் மதிப்பு குறைய ஆரம்பித்தன. நஷ்டங்கள் லட்சக்கணக்கான கோடிகளில்.கடன்கள் திரும்பி வராமல் போனதால் வங்கிகளுக்கும், வீட்டுக் கடன் நிறுவனங்களுக்கும் மிகப்பெரிய நஷ்டம். ஆதலால், கொடுத்த கடன்கள் திரும்ப வராததால் பல வீட்டுக் கடன் நிறுவனங்களும், நூற்றுக்கணக்கான வங்கிகளும் திவாலாகி வந்தன.


எப்படி திரும்ப எழுந்தது?திரும்ப எழ காரணம், அரசாங்கங்களின் ஒத்துழைப்பு தான். பல நிறுவனங்களுக்கும், வங்கிகளுக்கும் பல லட்சம் கோடிகள் பண உதவி செய்து அந்த கஷ்டமான சூழ்நிலையிலிருந்து மீள வழிவகை செய்தது. எல்லோருடைய ஒருங்கிணைந்த முயற்சி தான், விரைவில் மீண்டெழுந்ததற்கான காரணம். அதனால், பல நிறுவனங்கள் தப்பின.இருந்தாலும், நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் காணாமல் போயின. இதில் நூறாண்டுகள் கழிந்த நிறுவனங்களும் அடங்கும்.இது தவிர மக்களும் தங்களது வாயைக் கட்டி, வயிற்றை கட்டி இருந்ததும் ஒரு காரணம். அதாவது, அந்த கஷ்டமான சூழ்நிலையில் பெரிய செலவு ஏதும் செய்யாமல் இருந்தனர். கம்பெனிகளும் தங்கள் செலவுகளை கட்டுப்படுத்தின. ஆதலால், அவர்களின் லாபம் கூடியது. விற்பனைகள் குறைந்த போதும் லாபம் கூடியது.


திரும்பி வந்த பங்குச் சந்தை நஷ்டங்கள்:பங்குச் சந்தையில் ஏற்பட்ட நஷ்டங்களை பலர் ஒரு வருடத்தில் திரும்பப் பெற முடிந்தது மிகவும் ஒரு ஆச்சரியமான விஷயம் தான். இதற்கு முந்தைய பொருளாதார நெருக்கடிகளில், அதாவது, 1987ம் ஆண்டு முதலீட்டாளர்கள், தாங்கள் இழந்தவற்றை திரும்பப்பெற இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. 1973ம் ஆண்டு ஏற்பட்ட நெருக்கடியில் முதலீட்டாளர்கள் மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.ஆனால், 1929ம் ஆண்டு ஏற்பட்ட "கிரேட் டிப்ரஷன்' (பண வாட்டம்) இழந்தவற்றை திரும்பப் பெற 25 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. அப்படி பார்க்கும் போது இந்த முறை உலக நாடுகள் மீண்டெழுந்தது ஒரு வருடத்திற்குள். ஆதலால், இந்த மீண்டெழுச்சியை பீனிக்ஸ் பறவை சாம்பலிலிருந்து உயிர்த்தெழுந்ததற்கு இணையாக ஒப்பிடுகின்றனர்.


இந்தியா ஏன் அதிகம் பாதிக்கப்படவில்லை?கடந்த ஆண்டு பொருளாதார சீர்குலைவோ அல்லது அதற்கு முன் ஏற்பட்ட ஆசிய பொருளாதார வீழ்ச்சியோ இந்தியாவை அதிகம் பாதிக்கவில்லை. காரணம், திறமையான நிர்வாகம். மேலும், உலகத்தின் பல பாகங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதைப் போல, பொருளாதார சீர்திருத்தங்களை பெரிய அளவில் இங்கு கொண்டு வராதது தான்.


உலகமெங்கும் வங்கிகளின் நிலைமை:உலகமெங்கும் வங்கிகள் இன்னும் மூழ்கிக் கொண்டிருக்கின்றன. அமெரிக்காவில் மட்டும் கடந்த ஆண்டு 25 வங்கிகளும், இந்த ஆண்டு 75 வங்கிகளுக்கும் மேல் மூழ்கி விட்டன. இந்திய வங்கிகள் நல்ல நிலையிலேயே இருக்கின்றன.இந்தியாவில் வங்கிகள் சமீபகாலத்தில் மூழ்கியதாக சரித்திரமே இல்லை. அப்படி மூழ்கும் நிலை வந்தாலும் அந்த வங்கியை நல்ல நிலையில் இருக்கும் வங்கியோடு இணைத்து, முதலீட்டாளர்களின் பணத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டு வந்திருக்கிறது. உதாரணம் நியூ பாங்க் ஆப் இந்தியா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைக்கப் பட்டது. தனியார் வங்கியான குளோபல் டிரஸ்ட் வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்சுடன் இணைக்கப்பட்டது. மகாராஷ்டிராவின் சாங்கில் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியுடன் இணைக்கப்பட்டது.இந்திய வங்கிகளில், தனி நபர் ஒருவருக்கு, ஒரு வங்கியில் ஒரு லட்சம் ரூபாய் வரை தான் பணத்திற்கு காப்பீடு இருக்கிறது. ஏனெனில், வங்கிகளுக்கு ஏதாவது ஆகும் பட்சத்தில் அங்கு நீங்கள் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் போட்டிருந்தால் அந்த வங்கியை வேறு வங்கியுடன் இணைக்காத பட்சத்தில் ஒரு லட்சம் ரூபாய் வரை தான் திருப்ப கிடைக்கும். ஆனால், அது போல சந்தர்ப்பங்கள் சமீப காலங்களில் ஏற்படவேயில்லை என்பதால் பயம் ஏதும் தேவையில்லை.


இந்த நிகழ்வுகளில் கற்றுக் கொண்டது என்ன?சேமிப்பின் அவசியத்தைக் கற்றுக் கொண்டோம். சேமிக்காதவர்களுக்கு இது ஒரு பாடமாக இருந்தது. எல்லா சேமிப்பையும் ஒரே முதலீட்டில் போடக் கூடாது என்பதையும் கற்றுக் கொண்டோம்.ஆண்டாண்டு காலமாக தங்கம், வெள்ளியில் சேமித்து வந்திருக்கிறோம், அது எவ்வளவு உன்னதமானது என்று உலகத்திற்கு நாம் எடுத்துக் காட்டினோம். உலகமும் நம்மை பின்பற்றத் தொடங்கியது. ஆதலால், தங்கம், வெள்ளி தொடமுடியாத அளவிற்கு சென்று விட்டது.


துபாயில் என்ன நடந்தது?துபாய் அரசுக்கு சொந்தமான "துபாய் வேர்ல்ட்' என்ற நிறுவனம் தனது கட்டுமானப் பணிகளுக்காக பல நிறுவனங்களிடமிருந்து கடன்கள், வேலைகளை வாங்கியிருந்தது. அதில் 80 பில்லியன் டாலர் (3,70,000 கோடி) அளவு கடன்களை செலுத்த முடியாததால் அதை செலுத்துவதற்கு இன்னும் ஆறு மாத தவணை வேண்டும் என்ற கேட்டது உலகையை உலுக்கியது.ஏனெனில், உலகின் மிகவும் பணக்கார நாடுகளில் ஒன்றாக கருதப்பட்டது அரபு நாடுகள் தான். உலகின் பெரிய நாடுகளே தங்களுக்கு பிரச்னை ஏற்படும் போது அரபு நாடுகளை நாடுவது வழக்கம் (சிட்டி வங்கி தனக்கு பிரச்னை ஏற்பட்ட போது அரபு நாடுகளைத் தான் நாடியது).  அவர்களுக்கே பிரச்னை என்றால் எங்கு செல்வார்கள்? அரசு வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் போனது உலகை ஒரு உலுக்கு உலுக்கியது. அதாவது தனி நபரோ அல்லது கம்பெனியோ கடன் வாங்கி கொடுக்க முடியாமல் போயிருந்தால் அது வேறு விஷயம். ஆனால், கடன் வாங்கியதோ துபாய் அரசு. அவர்களே கொடுக்க முடியாமல் போனால்?


துபாய் திரும்ப எழுமா?துபாய், உலகத்தின் வர்த்தக மையமாகவும் திகழ்கிறது. ஆதலால், துபாயின் பிரச்னையின் அளவு 80 பில்லியன் டாலர் என்றால், அதை தீர்ப்பது அவர்களுக்கு அவ்வளவு கடினமான காரியம் இல்லை. ஆனால், பிரச்னை இதை விட பெரிது என்றால், அது இந்தியாவை சிறிது பாதிக்கும் என்பதில் ஐயமில்லை.ஏனெனில், தற்போதே அங்கு கட்டட விலை மிகவும் குறைந்து விட்டது. இது தவிர வங்கிகள் இனி வீடுகள் வாங்கக் கடன் கொடுக்குமா என்பது யோசிக்க வேண்டும். ஆதலால், கட்டுமானப் பணிகள் குறையும் பட்சத்தில் அங்கு வேலை செய்யும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.துபாயும் மற்ற நாடுகளைப் போல செலவுகளை குறைக்க முயற்சிக்கும். தற்போது துபாய் போன்ற நாடுகளில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களை தலைமைப் பதவிக்கு அமர்த்தி அழகு பார்ப்பதும் அவர்களுக்கு அளவுக்கு அதிகமாக சம்பளம் கொடுப்பதும் வாடிக்கை தான். இனிமேல் அது போன்ற பதவிகள் இந்தியர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.

நன்றி :
சேதுராமன் சாத்தப்பன்

ஞாயிறு, 15 நவம்பர், 2009

டாலரின் மதிப்பு டல்லடிக்கிறது ?இனி அடுத்தது என்ன


அமெரிக்க டாலருக்கு வரலாறு காணாத நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இனி உலகிலேயே முன்னணி கரன்சி என்ற அதீத கவுரவம் இனி தொடருமா என்று அலசப்படும் அளவிற்கு, நிலைமை கீழிறங்கி வருகிறது.உலகப் பொருளாதாரத்திற்கு தரப்படும் ஊக்குவிப்புகளால், அடுத் தடுத்து ஓரளவு நிலைமை சீராகும் என்ற கருத்து பேசப்பட்டாலும், அது அமெரிக்க கரன்சியான டாலரின் ஸ்திரத்தன்மைக்கு வலு சேர்க்கவில்லை.



பல்வேறு நாடுகளின் கரன்சிகளுடன் ஒப்பிடும் போது, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, கடந்த பதினைந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு ஏற்பட்டிருக்கிறது. உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் கையிருப்பு கரன்சியாக 64 சதவீதம் அமெரிக்க டாலர் இருக்கிறது. அப்படியிருக்கும் போது யூரோ கரன்சி, அல்லது அந்தந்த நாட்டின் கரன்சி எப்படி முன்னுக்கு வரும் என்ற கேள்வி எழும்.



சீனாவுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா விஜயம் மேற்கொள்ளும் போது, அந்த நாட்டிற்கும் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள பரிவர்த்தனையில் அமெரிக்க டாலர் வீழ்ச்சி அடையாமல், ஏற்பாடுகள் செய்வார் என்ற பேச்சு இருக்கிறது.நெருடல் உறவு :அதிக அளவு அமெரிக்க டாலரை கையிருப்பாக வைத்திருக்கும் நாடுகளில் சீனாவுக்கு முதலிடம் உண்டு.



அமெரிக்காவின் பொருளாதார வெற்றி சீனாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அப்படி எதிர்பார்த்த வெற்றி ஏற்படவில்லை என்றால், அது அமெரிக்க - சீன பொருளாதார உறவை பாதிக்கும். வேண்டுமென்றே தன் கரன்சியான யுவானை சற்று மதிப்புக் குறைவாக சீனா வைத்திருப்பதின் மூலம், அமெரிக்காவுக்கு தன் பொருட்களை அதிக ஏற்றுமதி செய்யப் பார்க்கிறது என்ற பேச்சும் இருக்கிறது. இந்த நெருடல்களை எப்படி அமெரிக்காவும், சீனாவும் பேசித் தீர்க்கப் போகின்றன என்பது இனி தான் முடிவாகும்.



கடந்த சில வாரங்களில் ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் கரன்சிகள் அன்னியச் செலாவணி வர்த்தகத்தில் மதிப்பு கூடி நிற்கின்றன. இதில், மற்றொரு கரன்சியான யூரோ அதிக நம்பிக்கை தரும் கரன்சியாக பிரிட்டன் ஸ்டெர்லிங் பவுண்டை விட முந்தி நிற்கிறது. அமெரிக்க டாலர் மதிப்பில் மட்டும் உள்ள பொருட்கள் மவுசு குறைந்து வருகிறது.



இவை எல்லாம் பார்க்கும் போது, என்னதான் வளர்ந்த நாடுகள் பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் அதிகப் பணத்தை ஊக்குவிப்புகள் என்ற பெயரில் கொட்டினாலும், மேலும் ஏதாவது அபாயம் வந்து விடுமோ என்ற அச்சம் வந்து விட்டது. அதன் எதிரொலியாக, அதிக அளவு நிதி வைத்திருப்பவர்கள் வழக்கத்திற்கு மாறாக தங்கத்தை வாங்கிக் குவிக்கின்றனர்.



ஐரோப்பாவில் எந்த ரசீதும் இல்லாமல் தங்கக் கட்டிகளை வாங்கி சேமிப்பாக வைக்கின்றனர். இதுவரை இல்லாத வகையில், வெள்ளிக்கும் கிராக்கி ஏற்பட்டிருக்கிறது. நூறு கிராம் எடையுள்ள தங்கக்கட்டி உள்ளங்கையில் அடங்கிவிடும், அதன்விலை 3,500 டாலர், அதாவது அதன் மதிப்பு 1.60 லட்சம் ரூபாய். உலக கோல்டு கவுன்சில் தகவலின்படி, இந்த ஆண்டில் இதுவரை 20 சதவீதம் தங்கம் விற்பனை அதிகரித்திருக்கிறது.



இந்தியாவில் ரிசர்வ் வங்கியும், கையிருப்பில் உள்ள டாலரைக் கொண்டு 200 டன் தங்கத்தை சர்வதேச நிதி நிறுவனமான ஐ.எம்.எப்.,மிடம் இருந்து வாங்கியிருக்கிறது. மத்திய நிதியமைச்சர் பிரணாபோ, "பணம் இருந்ததால் தங்கம் வாங்கினோம்: இன்னமும் அன்னியச் செலாவணிக்கு போதிய கையிருப்பு இருக்கிறது' என்றிருக்கிறார்.ஆஸ்திரேலிய நாடு, தொழில்துறைக்கு தேவையான கச்சாப் பொருட்களை அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடு. இங்கே, அந்த நாட்டு டாலர் மதிப்பு கூடியிருக்கிறது. அடுத்தாற்போல் தங்கள் நாட்டு டாலர் மதிப்பு சரியவிடாமல் இருக்க யுக்தியை வகுக்கத் திட்டமிட்டிருக்கின்றனர்.



முக்கியமாக எண்ணெய் உற்பத்தி நாடுகள் மத்தியில் டாலர் மதிப்பு வீழ்ச்சி கவலை தருகிறது. அமெரிக்காவின் நெருக்கமான நாடான சவுதி எண்ணெய் வர்த்தகம் டாலர் கரன்சியில் தொடர்ந்து இருக்க விரும்புகிறது. ஆனால், கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகள் ( ஒபெக்) கூட்டத்தில் வெனிசூயலா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும், கடந்த இரு ஆண்டுகளாகவே கேள்வி எழுப்புகின்றன.



கச்சா எண்ணெயை விற்று டாலராகப் பெற்று, அதை வைத்து நமக்குத் தேவையான பொருட்கள் வாங்கும் போது டாலர் வீழ்ச்சியால் அப்பொருட்கள் கூடுதல் விலை மதிப்பு பெறுகின்றன. இதைத் தடுக்க யூரோ, யென் போன்ற கரன்சிகளுக்கும் வர்த்தகம் செய்தால் என்ன என்பது இவர்கள் கேள்வி. இதற்கு இன்னமும் விடை காணவில்லை.



ஆனால் ரஷ்யாவும், சீனாவும் தங்களுக்குள் நடக்கும் வர்த்தகத்தில் டாலர் தேவையின்றி, பரஸ்பரம் இருநாட்டு கரன்சிகளை பயன்படுத்திக் கொள்வது என்ற முடிவுக்கு ஏற்கனவே வந்து ஒப்பந்தமும் ஆகியிருக்கிறது. இப்பாணியில் பிரேசில், இந்தியா பேச்சு நடைபெறுகிறது.



இவைகளை எல்லாம் பார்க்கும் போது, அடுத்த சில மாதங்களில் டாலர் வலுப்பெறும் தன்மை அதிகரிக்காத பட்சத்தில், உலக நாடுகள் பலவும் தங்களது கரன்சியை சரிய விடாமல் காக்க, புதிய அணுகுமுறைகளை அமல் படுத்த நேரிடும் நிலைக்கு தள்ளப்படும் புதிய சூழ்நிலை உருவாகி வருகிறது.

வெள்ளி, 23 அக்டோபர், 2009

ஒரு வேளை சோற்றுக்கு திண்டாடுவோர் எண்ணிக்கை 100 கோடி


ரோம் : ஒரு வேளை சோற்றுக்குக் கூட திண்டாடுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு முதன் முறையாக இவர்களின் எண்ணிக்கை 100 கோடியை எட்டியுள்ளது. வரும் 2015ம் ஆண்டுக்குள் வறுமையை ஒழிக்க பல திட்டங்களை சர்வதேச அளவில் ஐ.நா., அமைப்புகள் , பல நாடுகளும் நிறைவேற்றாவிட்டால், இந்த எண்ணிக்கை இன்னும் அபாயகர நிலையை எட்டி விடும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.



சர்வதேச உணவு தினமாக கடந்த 16ம் தேதி கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, சர்வதேச வறுமை நிலை குறித்தும், அதை ஒழிக்க போடப்பட்ட திட்டங்கள் குறித்தும் ஐ.நா., மற்றும் அதை சார்ந்த அமைப்புகள், ஆராய்ச்சி நிபுணர்கள் குழுக்கள் ஆலோசனை நடத்தின. இத்தாலி தலைநகர் ரோமில் செயல்பட்டுவரும் ஐ.நா.,வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவன நிபுணர்கள் வெளியிட்ட அறிக்கையில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.



அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகில் பசியால் வாடுவோர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து வருகிறது. கடந்த 1980 மற்றும் 90ம் ஆண்டு களில் நடவடிக்கை எடுக்கப் பட்டாலும், பின்னர் வறுமை நிலை கூடிக் கொண்டே போக பல காரணங்கள் உள்ளன. சமீப ஆண்டுகளில், உலக பொருளாதார நெருக்கடியால் பல விளைவுகள் ஏற்பட்டன. வேலையில்லா திண்டாட்டம், உணவுப்பொருட்கள் விலை உயர்வு போன்ற காரணங்களால், ஏழை நாடுகளில் வறுமையால் வாடுவோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து விட்டது. ஒரு வேளை உணவுக்காக சொத்துக்களை இழக்கும் குடும்பங்கள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது; பல பொருட்களை விற்பது மட்டுமின்றி, கல்வி உட்பட பல செலவுகளை குறைத்துக்கொள்ளும் நிலையும் நடுத்தர குடும்பங்களுக்கு பழகி வருகிறது. இது ஆபத்தான திருப்பம். இதனால், ஊட்டச்சத்து குறைபாட்டுடன் வாழுவோர் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும்.



இந்த ஆண்டில், ஒரு வேளை உணவு கூட இல்லாமல் திண்டாடுவோர் எண்ணிக்கை உலக அளவில் கடந்த 40 ஆண்டுகளில் முதன் முறையாக 100 கோடியை எட்டி விட்டது. 2015 க்குள் பட்டினியை போக்க போடப்பட்ட திட்டங்களை நிறைவேற்றாவிட்டால், இன்னும் நிலைமை மோசமாகி விடும். பட்டினியை கட்டுப்படுத்தவேண்டும் என்றால், உணவு உற்பத்தியை அதிகப்படுத்தவேண்டும். இதற்காக நாம் விவசாயத்திற்கு முக்கியம் கொடுத்து செயல்படும் போது விளைவுகள் எதிர் மறையாக இருக்கின்றன.



கடந்த 1980ம் ஆண்டில் ஏழை நாடுகளுக்கு விவசாயத்திற்கு, பல நாடுகளிலிருந்து கிடைத்த பொருளாதார உதவிகள் 17 சதவீதமாக இருந்தது. ஆனால், 2006ம் வருடத்தில் இது 3.8 சதவீதமாக குறைந்து விட்டது. இதனால், விவசாய உற்பத்தியில் போதிய முன்னேற்றம் ஏற்படவில்லை. கடந்த மூன்று வருடங்களாக இந்த உதவிகள் சற்று அதிகரித்து வருகிறது. ஆப்ரிக்காவில் உள்ள 20 நாடுகள் உட்பட உலகில் 30 நாடுகளுக்கு பட்டினியை போக்க உடனடி உணவு தேவை உள்ளது. ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் தான் அதிகமானோர் பசியால் வாடுகின்றனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திங்கள், 19 அக்டோபர், 2009

கப்பலில் உலகை சுற்றும் சிறுமி


சிட்னி, அக். 18: ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஜெஸிகா வாட்சன் (படம்), சிறிய கப்பலில் உலகை சுற்றுவதற்கான தனது பயணத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினார். சிட்னி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட ஜெஸிகாவுக்கு அந்நாட்டுத் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். ஜெஸிகாவின் நண்பர்களும், உறவினர்களும் நேரில் வந்து வாழ்த்துகளை தெரிவித்து அவரை வழியனுப்பி வைத்தனர். கடல்வழியாக 8-மாதத்தில் உலகை சுற்றப் புறப்பட்டுள்ள ஜெஸிகாவின் கப்பலைத் தொடர்ந்து அவருக்கு பாதுகாப்பாக சிறிய படகுகளில் சிலர் செல்கின்றனர். 11-வயது முதலே உலகை சுற்ற வேண்டும் என்ற லட்சியக் கனவுகளை சுமந்துள்ள ஜெஸிகா, வெற்றிகரமாகத் தனது பயணத்தை முடித்துவிட்டால் அவரது கனவு நனவாகிவிடும். உலகை கடல் வழியாகச் சுற்றி வந்த முதல் சிறுமி என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்துவிடும். அவரது கனவு நனவாகவும், லட்சியம் நிறைவேறவும் நாமும் வாழ்த்துவோமாக!.

ஞாயிறு, 18 அக்டோபர், 2009

2050- 2100 உலகம் இப்படி இருக்கப் போகிறது



இன்றைய நவீன உலகில் உள்ள ஒவ்வொரு வசதியும், ஒரே நாள் இரவில் உருவானது அல்ல. பல நாள், பல ஆண்டு முயற்சியின் விளைவாகவே கிடைத்தவை."ஒரு சிறிய விளக்கு செய்யும் உதவியை, ஒரு பெரிய சூரியனால் செய்ய முடியாது. இரவில் ஒளிதர அந்த விளக்கால் மட்டுமே முடியும்' என்றார் பெர்னாட்ஷா. இன்று நாம் பயன்படுத்தும் விமானம், ரயில், மொபைல் உள்ளிட்டவை பல்வேறு கண்டு பிடிப்புகளால் மேம்படுத்தப் பட்டவை. அவை உருவாக்கப்படும் போது இருந்த நிலைக்கும் தற்போது உள்ள நிலை முற்றிலும் மாறிவிட்டன. அதுபோல் எதிர்கால தேவைகளுக்காக இன்று ஏராள மான விஞ்ஞானிகள் உலகம் முழுவதும் உழைத்துக் கொண்டிருக் கிறார்கள். 2100ம் ஆண்டுக்குள் இந்த உலகம் எப்படி இருக்கப் போகிறது என்பது உங்கள் கண்முன் இங்கே...



வயதான உலகம் : *கடல் மட்டம் உயர்வதால் மும்பையில் "கேட் வே ஆப் இந்தியா' தண்ணீருக்குள் இருக்கும்.
*
குற்றவாளிகளை துல்லியமாக அடையாளம் காணும் தொழில்நுட்பம் காவல்துறையினர் வசம் இருக்கும்.
*
பொதுக்கூட்டங்களில் புழுதிவாரி இறைக்கும் நபர்களின் பேச்சுகளை பதிவு செய்யும் பொது ஒழுங்கு ஆணையம் உருவாக்கப்படும். தவறாக பேசுவோர் மீது இந்த ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்யும்.
*
கடற்கரையோரங்களில் மணல் இருக்கிறதோ இல்லையோ கடல்நீர் சுத்திகரிப்பு ஆலைகள் இருக்கும்.
*
மரபணு மாற்றம் செய்யப்பட்ட அழுகாத தக்காளி, கண்ணீர் வரவழைக்காத வெங்காயம் கெட்டுப்போகாதகாய்கறிகள் மார்க்கெட்டில் கிடைக்கும்
*
உலகம் முழுவதிலும் வயதானோர்அதிகம் இருப்பார்கள்.
*
மனித மரபணுக்கள் மூலம்உருவாக்கப்பட்ட சூப்பர் மனித இனம் உருவாக்கப்படும். இன்றைய நிலையில் இதற்கு ஈடு இணையான தலைமுறை இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்.
*
உலக மக்கள் தொகை இன்னும் 70 ஆண்டுகளில் உச்சத்துக்கு சென்று, அங்கிருந்து கீழே சரியத் தொடங்கும். 2070ல் 900 கோடி மக்கள் இருப்பார்கள். ஆனால் 2100ல் 840 கோடி மக்களே இருப்பார்கள்.
*
பருவநிலை மாற்றம் கடுமையாக இருக்கும் என்பதால் 2100ம் ஆண்டு வாக்கில் பஞ்சம் நிலவும். உலகின் பாதிப்பேர் பட்டினியாக இருப்பார்கள்.
*10
மாதம் சுமந்து பிள்ளை பெற்றுக் கொள்வதை விட டெஸ்ட் டியூப் பேபியாக பெற்றுக் கொள்ளலாம் என்று வெளிநாட்டு பெண்கள் நினைப்பார்கள்.
*
வேலை பார்க்கும் இடமும், தங்கியிருக்கும் இடமும் ஒவ்வொருவருக்கும் நிர்ணயிக்கப்படும். அங்கு மட்டுமே அவர்கள் இருக்க வேண்டும்.
*
பொதுவாக ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு "விர்ச்சுவல் ரியாலிட்டி'வழியாக செல்லலாம் என்பதால், போக்குவரத்தை பயன்படுத்தப்பட வேண்டிய அவசியம் குறையும்.



பூமிக்கு அருகில் சுற்றுலா கோள் : விண்வெளிக்கு செல்ல ஆசைப்படுவோர், நிலவுக்கோ அல்லது வேறு கிரகத்துக்கு சென்று வருவது கடினம் என்பதால், பூமியின் வளிமண்டலத்துக்கு சற்று வெளியே, விண்வெளியில் செயற்கையாக ஒரு கோள் உருவாக்கப்படும். அங்கு சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான தங்கும் இடம், உணவு உள்ளிட்ட வசதிகள் இருக்கும். அங்கிருந்து பூமியின் அழகை சுற்றுலாப் பயணிகள் ரசிப்பார்கள். இதுபோன்று சுற்றுலா கோள்களை உருவாக்க நாடுகளிடையே போட்டி இருக்கும்.



எல்லா நாடுகளிலும் செல்லுபடியாகும் நாணயம் : ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு செல்ல வேண்டுமானால், நாம் அந்த நாட்டு நாணயத்தை மாற்றி செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது. எதிர்காலத்தில் எந்த நாட்டு கரன்சியையும் எங்கும் செலவழித்துக் கொள்ளும் வகையில் வழிமுறைகள் உருவாக்கப்படும். தனிநபர்கள், நிறுவனங்கள் சொந்தமாக கரன்சிகளை வெளியிடும் முறை உருவாகும்.



கம்ப்யூட்டர் வைரஸ்களால் போர் : கம்ப்யூட்டர் வைரஸ்களால் இரு நிறுவனங்களுக்கு இடையில் பெரிய பிரச்னை அல்லது இரு நாடுகளுக்கு இடையில் பெரிய சண்டைகூட வரலாம். கம்ப்யூட்டர்களால் மட்டுமே முழுமையாக இயங்கும் நிறுவனங்கள் உருவாகும்.இது தொடர்பாக வழக்குகளே நீதிமன்றங்களில் குவியும். ஏறத்தாழ பாதி மனிதனுக்கு சமமாக இயங்கும் கம்ப்யூட்டர் சாப்ட்வேர்களால் போராட்டங்கள் உருவாகும்.



இயற்கையிலிருந்து மின்சாரம் : எதிர்காலத்தில் மின்சாரம் வழங்கப் போவது, நிலக்கரியோ அல்லது சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய பிற உலைகளோ இல்லை. சூரிய ஒளி மூலம் எல்லா இடங்களிலும் பரவலாக மின்சாரம் எடுக்கப்படும். ஒவ்வொரு வீடும், ஒவ்வொரு அலுவலகமும் தங்களுக்குத் தேவையான சூரிய ஒளி மின்சாரத்தை தாங்களே தயாரித்துக் கொள்ளும் நிலை இருக்கும். இதனால் மின்தடை என்பது இருக்காது.



தண்ணீரால் இயங்கும் வாகனங்கள் : வானத்தில் பறக்கும் கார்எதிர்காலத்தில் இயங்கும் கார்களுக்கு டீசல் தேவையிருக்காது. அதற்குப் பதில் தண்ணீர் இருந்தால் போதுமானது. ஹைட்ரோபவர் டெக்னாலஜி மூலம் இயங்கும் இந்த கார், தண்ணீரில் உள்ள ஹைட்ரஜனிலிருந்து சக்தி பெற்று இயங்கும். சாலையில் இப்போது ஊர்ந்து செல்லும் கார்கள் இனி வானில் ஒன்றன் பின் ஒன்றாக பறந்து செல்லும் ராக்கெட் கார்களாகும்.



"ஆர்டிபிஷியல் டெலிபதி' : நம்முடைய ஐந்து புலனறிவுக்கு (பார்த்தல், கேட்டல், சுவைத்தல், நுகர்தல் மற்றும்தொடுதல்) அப்பாற்பட்டு நம் எண்ணத்தை இன்னொருவருக்கு புரிந்து கொள்ளச் செய்தல் டெலிபதி என்று அழைக்கப்படுகிறது. தற்போது டெலிபதியை சிலர் செய்து வந்தாலும், எலக்ட்ரானிக் உபகரணங்கள் மூலம் எல்லோரும் டெலிபதியை பயன்படுத்தும் காலம் வரும். நீங்கள் காணும் கனவுகளை பகுத்தறிந்து அவற்றை பலிக்க வைக்கும் கருவிகள் உருவாக்கப்படும்.



களத்தில் ரோபோ வீரர்கள் : முக்கிய உலககோப்பை போட்டிகளில் ஒரு சுற்றில், மனித வீரர்கள் ரோபோவை வென்ற பின்னர்தான் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற விதிகள் இருக்கும். மனித வீரர்களை கொண்ட கால்பந்து, கிரிக்கெட், ரக்பி அணிகள் ரோபோ வீரர்களுடன் மோத வேண்டியிருக்கும். ரோபோவுடன் வீரர்கள் சண்டை போட வேண்டிய நிலை ஏற்படலாம்.



உரிமையாளரை அடையாளம் கண்டு கொள்ளும் பொருட்கள்... : வீட்டில் உள்ள "டிவி', கையில் உள்ள மொபைல் போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள்உங்களைப் பார்த்தவுடன் நீங்கள்தான் அந்தகருவியின் உரிமையாளர் என்பதை புரிந்து கொள்ளும். இது பொருட்கள் திருடுபோவதை தடுக்கவும், தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் உதவும். இதற்கான ஆராய்ச்சிகள் தற்போது நடக்கின்றன.



செயற்கை உடல் உறுப்புகள் : உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தற்போது துவங்கிவிட்டது. ஆனால், உறுப்புகள் மனிதர்களிடமிருந்துதான் பெறும் நிலை இப்போது உள்ளது. இதை மாற்றி, மனித உடல் உறுப்பை தனியாக ஆய்வுக்கூடத்தில் வளர்த்து அதை அப்படியே தேவைப்படுவோருக்கு பொருத்தும் நிலை வரலாம். அப்போது உடல் உறுப்பு பாதிக்கப்பட்டு இறப்போர் எண்ணிக்கை பலமடங்கு குறையும்.



பசுமை நகரம் : பசுமை நகரங்களுக்கு எதிர்காலத்தில் மிகுந்தவரவேற்பு இருக்கும். வாகனங்கள் இருக்காது. பிளாஸ்டிக் இருக்காது.கழிவுப் பொருட்கள்வெளியில் இருக்காது. சுகந்த மணமும், சுத்தமான தண்ணீரும், இயற்கையுடன் சேர்ந்த வாழிடங்களுக்கு வரவேற்பு அதிகமாக இருக்கும். இந்தஇடங்களில் வாழ்வதற்காக மக்களிடையேபோட்டி இருக்கும்.

திங்கள், 12 அக்டோபர், 2009

முஸ்லிம்களின் ஜனத்தொகை அதிகரிப்பு

வாஷிங்டன்:உலகத்தில் நான்கு பேரில் ஒருவர் முஸ்லிம் என்ற அளவுக்கு அந்த சமூகத்தவரின் ஜனத்தொகை அதிகரித்துள்ளது.சமீபத்தில் மத அமைப்பு ஒன்று ஆய்வு மேற்கொண்டது. இந்த அமைப்பின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:



உலகம் முழுவதும் 232 நாடுகளில் முஸ்லிம் மக்கள் வசிக்கின்றனர்.157 கோடி முதல் 180 கோடி வரை முஸ்லிம் சமூகத்தவரின் எண்ணிக்கை உள்ளது. லெபனான் முஸ்லிம் நாடு. இருப்பினும் இந்த நாட்டை விட ஜெர்மனியில் அதிக முஸ்லிம்கள் உள்ளனர். இதே போல சிரியா முஸ்லிம் நாடு. ஆனால் இந்தநாட்டை விட சீனாவில் முஸ் லிம்கள் அதிகம் உள்ளனர். ஜோர்டான் மற்றும் லிபியாவை விட, ரஷ்யாவில் முஸ்லிம்கள் அதிகம் பேர் வசிக்கின்றனர்.



ஆப்கானிஸ்தானிலும், எதியோப்பியாவிலும் சரிவிகிதத்தில் முஸ்லிம்கள் வசிக்கின்றனர். உலகம் முழுவதும் 220 கோடி கிறிஸ்துவர்கள் உள்ளனர். இவர்களுக்கு அடுத்த படியாக முஸ்லிம் சமூகத்தினர் தான் அதிக அளவில் உள்ளனர்.



அதாவது மக்கள் தொகையில் நான்கு பேரில் ஒருவர் முஸ்லிம் என்ற அளவுக்கு முஸ்லிம் சமூதாயத்தினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.அரபு நாட்டவர்கள் தான் முஸ்லிம்கள் என்ற நிலை தற்போது மாறி விட்டதாக பிரின்ஸ்டோன் பல்கலைக் கழக பேராசிரியர் அமானே ஜமால் தெரிவித்துள்ளார்.



முஸ்லிம்களில் ஷியா, சன்னி பிரிவு வேறுபாடு ஒரு சில நாடுகளில் மட்டுமே அதிகமாக காணப்படுகிறது. ஈரான், ஈராக்,பாகிஸ்தான்,இந்தியா ஆகிய நாடுகளில் அதிக அளவில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.இவ்வாறு ஆய்வறிக்கை கூறப்பட்டுள்ளது.