வெள்ளி, 6 நவம்பர், 2009

மகளின் குளிரை விரட்ட ரூ.7 கோடி டாலர் நோட்டை எரித்த மாபியா தலைவன்

லண்டன்: கொலம்பியாவை நடுங்கச் செய்த மாபியா கும்பல் தலைவன், போலீசிடம் தப்ப காட்டில் தங்கியபோது மகளின் குளிரைப் போக்க ரூ.7 கோடி மதிப்புள்ள டாலர் கரன்சியை எரித்தது தெரிய வந்துள்ளது. கொலம்பியாவைச் சேர்ந்த போதைக் கடத்தல் மன்னன் பப்லோ எஸ்கோபர். 1980களில் தொடங்கிய அவனது அட்டகாசம் 1993 வரை நீடித்தது. போதை மருந்து வியாபாரம், கூலிக்கு கொலை, கொள்ளை என உலகின் பல பகுதிகளில் தனது விஷக் கரங்களை பரப்பியவன். தனக்கென ஆயிரக்கணக்கான கிரிமினல்கள், கூலியாட்களை படை போல நடத்தியவன். ஆயிரக்கணக்கானோரை கொன்றவன். கொள்ளை, போதை மருந்து வியாபாரம், கடத்தல் மூலம் கிடைத்த பணத்தில் அடுக்குமாடி விடுதிகள், விமானங்கள், தனியார் வனவிலங்கு பூங்கா நடத்தி பணம் சம்பாதித்தான் எஸ்கோபர்.
அப்படி அவன் சேர்த்த பணத்தின் மதிப்பு ரூ.1.17 லட்சம் கோடி. இதற்காக, போர்ப்ஸ் பத்திரிகையால் 1989ம் ஆண்டு 7வது மிகப் பெரிய உலக பணக்காரர் என்று அறிவிக்கப்பட்டான். அவனது தொல்லைகள் எல்லை மீறவே அமெரிக்க தொழில்நுட்ப உதவியுடன் கொலம்பிய பாதுகாப்பு படைகள் அதிரடி நடவடிக்கையில் இறங்கின. 1993ல் மெடலின் நகரில் ஒரு வீட்டில் அவரை சுற்றி வளைத்த வீரர்கள், தப்ப முயன்றபோது சுட்டுப் பொசுக்கினர். பாதுகாப்பு படைகளின் தேடுதல் வேட்டையின்போது சில நாட்கள் காடுகளில் பதுங்கியபோது மகளின் குளிரைப் போக்க ரூ.7 கோடி மதிப்புள்ள டாலர் நோட்டுகளை கத்தை கத்தையாக இரவு முழுவதும் எஸ்கோபர் எரித்தது இப்போது தெரிய வந்துள்ளது. லண்டனைச் சேர்ந்த டெய்லி மிரர் நாளேடுக்கு அளித்த ரகசிய பேட்டியில் எஸ்கோபரின் மகன் இதைத் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: