திங்கள், 23 நவம்பர், 2009

ஆக்ஸ்போர்ட் : தமிழருக்கு பெருமை


ஐரோப்பாவின் ஆக்ஸ்போர்டில் உள்ள தமிழ் மற்றும் நுண்கலைகளுக்கான மையம், தமிழகத்தின் புதுக்கோட்டையில் ஞானாயலா நூலகத்தை நிறுவி, நடத்தி வரும் பா.கிருஷ்ணமூர்த்திக்கு மிக உயரிய விருதான ஆன்றவிந்த சான்றோர் விருதினை அளித்து கவுரவித்துள்ளது. மையத்தின் நிறுவனரும், மூத்த தமிழாசிரியையும், ஊடகவியலாளருமான ரீட்டா பற்றிமாகரனின் தலைமையில் இவ்விழா நடைபெற்றது.

முதுகலைப்பட்டதாரியும், மேல்நிலைப்பள்ளியின் தலையாசிரியருமான பா.கிருஷ்ணமூர்த்தியும், அவரது மனைவியும் தாவரவியல் பேராசிரியையுமான ‌டோரதி கிருஷ்ணமூர்த்தியும் கடந்த 50 ஆண்டுகளாக நூலகப்பணியில் தம்மை அர்ப்பணித்து, அரிய தமிழ் நூல்கள் பலவற்றைத் தம் சொந்த பணத்தில் வாங்கி, பாதுகாத்து, ஞானலயா என்னும் நூலகத்தை உலகில் தமிழ் வளர்வதற்காக நடத்தி வருகின்றனர். இந்த தமிழ்ப்பணிக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த ஆன்றவிந்த சான்றோர் விருது வழங்கப்பட்டது. இவ்விருதினை ஐரோப்பாவில் புகழ்பெற்ற ஆய்வாளரும், பத்திரிகையாளரும், ஆசிரியருமான சூ.யோ.பற்றிமாகரன் அறிவிக்க, ஆக்ஸ்போர்டில் வாழும் மேல்நிலைப்பள்ளி தலையாசிரியரான ராமலிங்க தேவர் வழங்கியதுடன் பொன்னாடை‌ போர்த்தியும் கிருஷ்ணமூர்த்தியை கவுரவித்தார். இந்தியாவில் பல விருதுகளையும், மலேசியாவில் நூலக நுண்ணறிவாளர் விருதையும் பெற்ற பா.கிருஷணமூர்த்திக்கு, ஐரோப்பிய விருதாக ஆக்ஸ்போர்டில் வழங்கப்பட்ட ஆன்றவிந்த சான்றோர் விருது அமைந்தது. வாரியார் மீது பெருமதிப்புள்ள கிருஷ்ணமூர்த்தி, வாரியாரின் பெருமைகள் குறித்து விரிவுரை ஒன்றையும் நிகழ்த்தினார். ஆக்ஸ்போர்டு வாழ் தமிழ் விஞ்ஞானிகள், டாக்டர்கள், பெரியோர்கள், வர்த்தகர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

2 கருத்துகள்:

love சொன்னது…

எனது அன்பிற்கினிய ஐயா ஞானாலயா ப. கிருஷ்ணமூர்த்தி மற்றும் அம்மா டோரதி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் ஞானாலயா நூலகச் சேவையைப் பாராட்டி ஐரோப்பிய விருதாக ஆக்ஸ்போர்டில் வழங்கப்பட்ட ஆன்றவிந்த சான்றோர் விருதுக்கு, ஒரு தமிழனாக, தமிழ் இன உணர்வாளனாக, தமிழ்நாட்டின் சார்பாக எனது மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். அதே வேளையில் இப்படி சிறப்புமிக்க நம் தமிழர்களின் சொத்தாகிய நமது ஞானாலயா நூலகத்தினை இன்றைய அறிவியல் கால மாற்றத்திர்கேற்ப நவீனப்படுத்த உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு முயற்சி எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நமது பாரம்பரியமிக்க தொன்மையான நூலகங்களின் இன்றைய நிலமை என்ன என்பதை சற்று எண்ணிப்பார்த்து செயலாற்றி நம் தமிழை காக்க ஒன்றினைய வேண்டுகிறேன்.

தங்கள் அன்பன்
கணேசன்.முருகராஜ்,
புதுக்கோட்டை, தமிழ்நாடு, அலைபேசி: +91 9944172079

கண்ணா.. சொன்னது…

ஐயா ஞானாலயா ப. கிருஷ்ணமூர்த்தி மற்றும் அம்மா டோரதி கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.


அபுல்பசர்,

இது போன்ற நல்ல செய்திகளை எல்லாம் தொகுத்து தருவதற்கு என் நன்றிகள். ஆச்சர்யமாக கூட இருக்கிறது..

தொடரட்டும் உங்கள் சேவை