ஞாயிறு, 25 அக்டோபர், 2009

இலங்கைத் தமிழர் பிரச்னையில் தலைவர்களின் கோஷங்களும், வேஷங்களும்

இலங்கைத் தமிழர் விவகாரம், நீண்ட நெடுங்காலமாக தமிழக அரசியல் தலைவர்கள் கையில் அகப்பட்டு சிக்கித் திணறி வருகிறது. இதனால் எவ்வித முன்னேற்றமும் இன்றி, இலங்கை தமிழர்களின் இன்னல்கள் இன்றுவரை தொடர்கிறது.ஆனாலும், இந்த விவகாரத்தை தங்கள் நிலையை மேம்படுத்திக் கொள்ளும் அஸ்திரமாகவே அரசியல் தலைவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.வைகோவை தவிர்த்து, மற்ற அனைவரும் விடுதலைப் புலிகள் விஷயத்தில், அடிக்கடி மாறுபட்ட கருத்தை தெரிவித்து வந்தவர்களாகவே இருக்கின்றனர்.சில திடீர் தலைவர் களும், புதுத் தலைவர்களும், தாங்கள் அங்கம் வகிக்கும் கூட்டணியோடு ஒத்துப் போகும் வகையில் தங்கள் "புலி' ஆதரவை சமயத்திற்கு தக்கபடி ஓங்கி ஒலிப்பதும், அடக்கி வாசிப்பதும் வழக்கமாக இருக்கிறது.தமிழக அரசியல் தலைவர்களின் உறுதியற்ற நடவடிக்கையால், சொந்த நாட்டிலேயே அகதிகளாகவும், சிறைப்பட்டு கிடக்கும் பறவைகளாகவும் இலங்கை தமிழர்கள் தவித்து வருகின்றனர்.இதில் யாழ்ப்பாணத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், கொழும்பு தமிழர்கள் என யாரும் விதி விலக்கு கிடையாது. இலங்கைத் தமிழர்கள் விவகாரம் குறித்து, ஒரு சிலரைத் தவிர மற்ற தலைவர்கள் ஓங்கி குரல் கொடுக்கின்றனர் என்றால் அதற்கு மூன்று காரணம் மட்டுமே இருக்கும்.ஒன்று ஏதாவது தேர்தல் நேரமாக இருக்கும். இரண்டாவது, சம்பந்தப்பட்ட தலைவர்களை, விடுதலைப்புலிகள் அல்லது அவர்களுக்கு நெருக்கமானவர்கள் யாரேனும் தனிமையில் சந்தித்து விட்டு சென்றிருப்பர்.மூன்றாவதாக ஆளும் கட்சிக்கு ஏதாவது நெருக்கடி ஏற் பட்டிருக்கும் அல்லது நெருக்கடி ஏற்படுத்துவதற்காக இருக்கும். கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக இதே நிலை தமிழகத்தில் நிலவுகிறது.தமிழகத் தலைவர்கள் யார், யாரை "புலி' ஆதரவாளர்கள் அடிக்கடி சந்திக்கின்றனர். யார், யார் புலிகள் இயக்க கட்டுப்பாட்டில் உள்ளனர். எப்போதெல்லாம் சம்பந்தப்பட்ட தலைவர்களிடமிருந்து இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக அறிக்கைகள், பேச்சுகள், முழக்கங்கள் வெளி வரும் என்பதை உளவுத்துறையினர் நன்றாகவே அறிந்து வைத்திருக்கின்றனர்.இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக அவர்கள் குரல் கொடுக்கும் போதெல்லாம், விவரமறிந்த நபர்கள் உள்ளுக்குள் நகைத்துக் கொள்கின்றனர். ஒரு சில தலைவர்கள், ஒரே சமயத்தில் இலங்கை தமிழர்கள் விவகாரத்தை எப்படி அரசுக்கு எதிராகவும், ஆதரவாகவும் கையாள வேண்டும் என்ற வித்தையை நன்கு தெரிந்து வைத்திருக்கின்றனர்.கூட்டணியும் முறியக் கூடாது; தங்கள் பதவியும் போகக்கூடாது; இலங்கைத் தமிழர் பணம் வருவதும் நிற்க கூடாது. அதே நேரத்தில், தொண்டர்களும் தங்களை நம்ப வேண்டும் என்ற நிலையை அவர்கள் திறம்பட கையாள்கின்றனர். இவர்களின் வேஷம் சம்பந்தப்பட்டவர்களிடம் எடுபட்டாலும், பொதுமக்களிடமும், அரசியல் நோக்கர்களிடமும் நகைப்புக்கே இடமாகி வருகிறது.இப்படி தங்களின் சொந்த ஆதாயத்திற்கும், தங்கள்நிலையை மேம்படுத்தி கொள்வதற்கும் கிடைத்த ஒரு வாய்ப்பாக, கருவியாக இலங்கை தமிழர் பிரச்னையை தமிழக அரசியல் தலைவர்கள் கையாளுவது நிற்காத வரையில், இவர்களால் இலங்கைத் தமிழர்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கப் போவதில்லை.மக்களை குழப்பும் எம்.பி.,க்கள்:இலங்கையில்முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள தமிழர் களின் நிலை குறித்து ஆராயச் சென்று, தமிழகம் திரும்பிய எம்.பி.,க்கள், மக்களை குழப்பும் வகையில் தனித்தனியாக பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். இதில், எது உண்மை, எது பொய் என்று தெரியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.அனைத்து எம்.பி.,க்களும் முகாம்களை பார்வையிட ஒன்றாகவே சென்றதாகவும், ஒரு சில எம்.பி.,க்கள் தங்கள் விருப் பத்தின் பேரில் ஒரு சில முகாம்களை தனித்துச் சென்று பார்வையிட்டதாகவும் தகவல்கள் வருகின்றன. முதலில் வாய் திறக்காத எம்.பி.,க்கள், இப்போது தனித்தனியாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இது, பொது மக்களை பெரிதும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: