காஷ்மீர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காஷ்மீர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 2 செப்டம்பர், 2010

என்ன நடக்கிறது காஷ்மீரில் ? பகுதி-2

என்ன நடக்கிறது காஷ்மீரில் ? முதல் பகுதியை படிக்க இந்த சுட்டியை
அழுத்தவும். 

தொடர்ச்சி.......

இந்தியா,பாகிஸ்தான்,இரு நாடுகளுக்கிடையே நடக்கும் பேச்சு வார்த்தையில் காஷ்மீரிகளைப்  பிரதிநிகளாக கூட அழைப்பது இல்லை.ஆனால் இரு தேசங்களுக்கும் இடையிலான போரில் இதுவரை
75  ஆயிரம் காஷ்மீரிகள் கொல்லப்பட்டு இருக்கின்றனர். காஷ்மீரின் பல பகுதிகளில் இரவு 9  மணிக்கு மேல் விளக்கு ஏற்றக்கூடாது.அங்கு பயன்படுத்தப்படும் செல் போன்களில் இருந்து எஸ்.எம்.எஸ் அனுப்ப முடியாது.

எந்த நேரத்திலும், யார் வீட்டிலும் நுழைந்து சோதனையிடும் அதிகாரம் ராணுவத்திற்கு உண்டு.சித்தரவதையால் கொல்லப்பட்ட உடல்கள் வீதிகளில் திடீர்,திடீர் என வீசப்படும்.எல்லைக்கோட்டிற்கு அந்தப் பக்கம் இருக்கும் உறவினர்களைப் பார்க்க வேண்டுமானால் பாஸ்போர்ட்டும்,விசாவும் வாங்கவேண்டும்.அங்கு துப்பாக்கி சத்தம் கேட்காத நாள் என ஒரு நாள் கூட இல்லை.

தற்போதைய பிரச்சினையின் தொடக்கம் எது ? காஷ்மீருக்கு நேரடியாகச் சென்றுவந்தவரும்,அதைப்ப் பற்றி தொடர்ச்சியாக எழுதிவருபவருமான பேராசிரியர் அ.மார்க்ஸ் சொல்வதைக் கேளுங்கள்." கடந்த ஏப்ரல் மாதம் "மச்சில்" என்ற ஊரைச் சேர்ந்த மூன்று இளைஞர்களை தினம் 500  ரூபாய் ஊதியத்தில் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி இந்திய ராணுவத்தினர் அழைத்துச் சென்றனர்.இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர்கள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் வைத்துக் கொல்லப்பட்டனர்.

"அவர்கள் தீவிரவாதிகள் " என வழக்கம் போல ராணுவம் அறிவித்தது.ஆனால்,அது அப்பட்டனமான கொலை என்பதும்,தங்களின் பதவி உயர்வுக்காக இராணுவத்தினர் அப்பாவிகளைச் சுட்டு கொன்றதும் மிக விரைவில் ஆதாரத்துடன் அம்பலமானது. காஷ்மீர் முழுவதும் இது மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது.இளைஞர்கள் முன்னணியில்  இருந்து ஆக்ரோசத்துடன் போராடினார்கள். ஆனால் ஆயுதப் போராட்டமாகவோ,
ஆர்பாட்டம்,உண்ணாவிரதம்,என்பதாகவோ,இல்லை.
போராட்டம் தன்னெழுச்சியான தெரு சண்டையாக இருந்தது.

இளைஞர்கள் திரண்டு நின்று ஆயுதம் தாங்கிய படைவீரர்கள் மீது கற்களை வீசித் தாக்கினார்கள்.அவர்கள் மீது துணை ராணுவப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்,கடந்த  60  நாட்களில் மட்டும்  52  பேர் கொல்லப்பட்டு இருக்கின்றனர்.அதில் சிறுவர்களும் அடக்கம்.இளைஞர்கள் மட்டுமின்றி பெண்களும் தலைகளில் குடங்களுடனும்,கைகளில் கற்களுடனும் சாலைகளில் திரள்கின்றனர்.காயம்பட்டு மருத்துவமனைகளில் இருப்போருக்கு ரத்த  தானம் அளிக்க மக்களே முகாம்கள் அமைத்துள்ளனர்.போராடுபவர்களின் உணவுக்கு பெரிய அளவில் சமூக உணவுக் கூடங்களையும் அமைத்துள்ளனர்.

காஷ்மீர் வரலாற்றில் இப்படி ஒரு போராட்டம் இதுவரை நடந்தது இல்லை.

விவரம் அறிந்த வயதில் இருந்து ராணுவக் கெடுபிடி,கடும் அடக்குமுறை
மனித   உரிமை மீறல்களுக்கு மத்தியில் வளர்ந்தவர்கள் அவர்கள்.வாழ்வின் பாதி நாட்களை ஊரடங்கு வாழ்வில் கழித்தவர்கள். தற்போதைய ஆக்ரோசமான எதிர்ப்புக்கு இதுதான் பின்னணி.ஆனால், அரசு இதை இந்தக் கோணத்தில் அணுகத் தயாராக இல்லை. " வெளி நாட்டில் இருந்து பணம் வருகிறது,லஷ்கர்-இ-தொய்பா பின்னணியில் உள்ளது" என்று சொல்லிக்கொண்டு இருப்பது பிரச்சினையை தீர்க்காது.அங்கு நடப்பது அரசியல் போராட்டம்.முதலில் இதை புரிந்துகொள்ள வேண்டும்.

தற்போதைய காஷ்மீரத்துப் போராட்டங்கள் எந்த திசையில் செல்லும் என யாராலும் கணிக்க முடியவில்லை. யார் சொல்லியும் அதை நிறுத்தமுடியாது.ஏனெனில்,அது யார் சொல்லியும் தொடங்கியது அல்ல,இந்திய அரசு இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.மக்களே மக்களுக்காக  மக்களைக் கொண்டு நடத்தும் போராட்டத்தை எப்படி அடக்குவது ? ஒரே வழி,அவர்களின் அரசியல் கோரிக்கையைத் தீர்பதுதான்! என்கிறார் மார்க்ஸ்.

அந்த அழகிய பள்ளத்தாக்கின் அமைதி எப்படியேனும் மீட்கப்பட வேண்டும் என்பது நம் அனைவரின் ஆசை!.
டிஸ்கி: ஆனந்த விகடனில் வெளிவந்த இந்த கட்டுரையை வலைப்பூ வாசகர்களுக்காக அப்படியே பதிவு செய்துள்ளேன்.
நன்றி: ஆனந்த விகடன்  

நட்புடன்

திங்கள், 30 ஆகஸ்ட், 2010

என்ன நடக்கிறது காஷ்மீரில் ?

 
பாரமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்த 14  வயது " வாமிக்  பாரூக்குக்கு " டாம் அண்ட் ஜெர்ரி கார்டூன்கள் என்றால் அவ்வளவு பிரியம். அறிவியல் பாடங்களில் அவன்தான் பள்ளியில் முதல் மாணவன்.பள்ளியிலிருந்து வீடு திரும்பியதும் நீல நிற யுனிபார்மைக் கழற்றி வைத்துவிட்டு பக்கத்துவீட்டு நண்பர்களுடன்,விளையாடப் போனான். தெருவோர வியாபாரியான அவனின் அப்பா வீட்டில் இல்லை.

பாரூக்கின் அம்மா மைசூன் வீட்டில் இரவு உணவு தயாரித்துக்கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்கு வெளியே ஒரு பெரும் சப்தம் கேட்டது.மைசூனுக்கு சர்வ நிச்சயமாய் தெரிந்தது அது துப்பாக்கி சூடு என்று. பதத்தற்றதுடன் வெளியே ஓடி வந்தார். அங்கே பாரூக்,தலையில் பாய்ந்த குண்டுடன் ரத்தம் வழிய இறந்துகிடந்தான்.

ஒரே மகன் பாரூக் அவர்களை விட்டுப் போய்விட்டான். இப்போது அவனின் பெற்றோர்கள் இந்திய ராணுவத்தை எதிர்த்து போராடி காயம்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்டு இருக்கும் ரத்ததான முகாமில் இருக்கிறார்கள்.


" காஷ்மீர் மக்கள் எதற்காக சுதந்திரம் கேட்கிறார்கள் என்பது எனக்கு எப்போதும் புரிந்தது இல்லை. என் செல்ல மகன் பாரூக் இறந்த பிறகு எனக்கு எல்லாம் தெளிவாக புரிகிறது.எங்களுக்கு தேவை துப்பாக்கிகள் அல்ல; சுதந்திரம்! என்கிறார் மைசூன்.இவர் மட்டும் அல்ல; எந்தவித இயக்கப் பின்னணியும் இல்லாத சாதாரண காஷ்மீர் பெண்கள் இன்று போராட்டக்களத்தில் நிற்கிறார்கள்.

ராணுவத்தின் துப்பாகிகளை எதிர்த்து 15 வயது சிறுவன் கல் எறிகிறான்.ஒரு முஸ்லிம் பெண் கையில், கற்களைப் பொருக்கி இளைஞர்களுக்குத் தருகிறார்.காஷ்மிரின் போராட்ட வரலாற்றில் இத்தகைய காட்சிகள் புத்தம் புதியவை .பற்றி எரியும் காஸ்மீரில் இந்திய ராணுவத்தின் துப்பாக்கி சூட்டில்   கடந்த 60 நாட்களில் 53 பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.

ஆனாலும் காஷ்மீரில் இன்னும் போராட்டம் தொடர்கிறது." இத்தனை நாட்கள் இயக்கங்கள் துப்பாக்கியால் " சுட்டபோது அவற்றை பாகிஸ்தான் தருகிறது என்றார்கள்.இப்போது அந்த மக்கள் கற்களைக் கொண்டு போராடுகின்றனர். "கற்களையுமா பாகிஸ்தான் "  தருகிறது என்று காட்டமாகக் கேட்கிறார் காஷ்மீர் பிரச்சனையில் தொடர்ந்து அக்கறை காட்டிவரும் பேராசிரியர் கிலானி.


ஐந்து லட்சம் ராணுவத்துருப்புகள்,பல்லாயிரகணக்கான துணை ராணுவப் படைகள்,உள்ளூர் போலீஸ்,என காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் ராணுவத்தால் நிரப்பப்பட்டு இருக்கிறது. ஏன் ? என்ன  நடக்கிறது காஷ்மீரில்?. அதற்கு காஷ்மிரின் வரலாறு கொஞ்சமாவது தெரிந்து கொள்ளவேண்டும்.  

காஷ்மீரில்  நடப்பது வெறுமனே இந்து-முஸ்லிம் பிரச்சினையோ,
இந்தியா -பாகிஸ்தான் நாடுகளுக்கிடையான இடமபிடிக்கும்  போட்டியோ அல்ல; அதன் ஆணி வேர் இந்திய பிரிவினையில் இருந்து தொடங்குகிறது. 
காஷ்மீரில் பெரும்பான்மையாக முஸ்லிம் மக்கள் இருந்தபோதிலும்,
சுதந்திரத்தின் போது" ஹரிசிங்"  என்ற இந்து மன்னர்தான் காஷ்மீரை ஆண்டு வந்தார். அவர் இந்தியாவுடனோ,அல்லது பாகிஸ்தானுடனோ காஷ்மீரை இணைக்க மறுத்துவிட்டார்.