திங்கள், 30 நவம்பர், 2009

மாத்தி யோசி : சாதிக்க வேண்டும் என்ற வேகம் வேண்டும்


சமீபத்தில் நோபல் பரிசு பெற்றிருக்கும் வெளிநாடு வாழ் இந்திய விஞ்ஞானி முனைவர் ராமகிருஷ்ணன் கூறியிருக்கும் சில கருத்துகள் சிந்தனைக்குரியவை மட்டுமல்ல, பாராட்டுக்கும் உரியவை.
லண்டன் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் எம்.ஆர்.சி. பரிசோதனைச் சாலையில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் முனைவர் வெ. ராமகிருஷ்ணன் இன்னும் தனது இந்தியத் தொடர்புகளைத் தக்க வைத்துக் கொண்டிருப்பதுடன் இந்தியாவின் வருங்காலம் பற்றிய சிந்தனைகளையும் சுமந்து கொண்டிருப்பது என்பதே நெகிழ வைக்கும் விஷயங்கள்தான். வெளிநாட்டில் வாழ்வாதாரங்களைத் தேடிக் கொண்டு விட்டாலே, தனது வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் காரணமே இந்தியாவிலிருந்து வெளியேறி விட்டதுதான் என்பது, வாழ்வில் வெற்றி பெற்றுவிட்ட வெளிநாடுவாழ் இந்தியர்கள் பலரும் கூறும் குற்றச்சாட்டு.
இந்தியாவின் அரசியல் மற்றும் நிர்வாக அமைப்புகள் திறமைக்கு முன்னுரிமை அளிப்பதில்லை என்றும், லஞ்சமும், ஊழலும், சிபாரிசும்தான் வளர்ச்சிக்கு அளவுகோலே தவிர திறமைக்கு இந்தியாவில் இடமில்லை என்றும் பல வெளிநாடுவாழ் இந்தியர்கள் கூறுவதைக் கேட்டிருக்கிறோம். ஆனால், அவர்களில் இருந்து மாறுபட்டு விஞ்ஞானி ராமகிருஷ்ணன் இந்தியாவின் வருங்காலம் பற்றி வெளிப்படுத்தி இருக்கும் நம்பிக்கையூட்டும் தகவல்கள் நமக்கே வியப்பாக இருக்கிறது. சுதந்திரத்துக்கு முன்பு உலக அரங்கில் புகழ்பெற்ற கணிதமேதை ராமானுஜம், விஞ்ஞானி சி.வி. ராமன் போன்றவர்களைப்போல தற்போது பல மேதைகள் உருவாகாததன் காரணம் பற்றிக் கேட்டபோது, அதற்கு விஞ்ஞானி ராமகிருஷ்ணன் கூறியிருக்கும் பதில் நம்மைச் சிந்திக்க வைக்கிறது.
""கடின உழைப்பும் லட்சிய வெறியும் இருந்தால் உலகம் போற்றும் மேதைகளாகவும், தலைசிறந்த விஞ்ஞானிகளாகவும் உருவாகக்கூடிய திறமைசாலிகள் முன்எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது இருந்தாலும், அவர்கள் கணினி, பொறியியல், நிதி நிர்வாகம் போன்ற படிப்புகளுடன் பன்னாட்டு நிறுவனங்களில் சில லட்ச ரூபாய் அல்லது டாலர்கள் சம்பாதிப்பதுடன் திருப்தி அடைந்து விடுவதுதான் இந்தியாவின் துரதிர்ஷ்டம்'' என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார் அவர். மேலும் கூறுகையில், முந்தைய நாள்களைப்போல அல்லாமல் உலக ஆராய்ச்சிகள் அனைத்துமே இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளும் வசதிகள் இருப்பதால், வெளிநாடுகளுக்குச் செல்லாமல் இந்தியாவில் இருந்தபடியே ஆராய்ச்சிகளைத் தொடர முடியும் என்றும் அவர் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

தன்னுடைய துறையிலேயேகூட பிரகாசமான எதிர்காலமுள்ள இளம் இந்திய விஞ்ஞானிகள் பலரின் ஆராய்ச்சிக் கட்டுரைகளை இணைய தளங்களிலும், பல ஆய்வரங்கங்களிலும்தான் பார்த்து வியப்பதாகவும் கூறியிருக்கிறார் விஞ்ஞானி ராமகிருஷ்ணன். இந்தியாவின் மிகப்பெரிய குறைபாடு, போதிய ஆராய்ச்சி நிறுவனங்கள் இல்லாமை என்பதை ஒத்துக் கொள்ளும் அவர், எல்லா பல்கலைக்கழகங்களிலும் ஆராய்ச்சி சாலைகளுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி இருக்கிறார். கடந்த முப்பது ஆண்டுகளாக, மருத்துவம், பொறியியல், நிர்வாக இயல், நிதி நிர்வாகம், தகவல் தொழில் நுட்பம் போன்ற படிப்புகளுக்குப் பெற்றோரும், மாணவர்களும் அரசும் முன்னுரிமை கொடுத்து வருவதன் விளைவு, அடிப்படை விஞ்ஞானப் பிரிவுகளான ரசாயனம், பௌதீகம், விலங்கியல், தாவர இயல் போன்றவைகளும், அவற்றின் சிறப்பு இயல்களும் போதிய வரவேற்பு இல்லாமல் இருக்கின்றன. இதன் தொடர்விளைவாக, பெரிய ஆராய்ச்சியாளர்களும், விஞ்ஞானிகளும் இந்தியாவில் உருவாவது கணிசமாகக் குறைந்துவிட்டிருக்கிறது.
அரசும் சரி, விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்காகத் தரப்படும் முக்கியத்துவத்தையும், நிதி ஒதுக்கீடையும் படிப்படியாகக் குறைத்து வருகிறது. மேலைநாடுகளின் ஆராய்ச்சிகளை நாம் பயன்படுத்திக் கொண்டால் போதுமானது என்றும், உயர்மட்ட அடிப்படை விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்காக அரசு நிதியாதாரம் அளிப்பது தேவை இல்லாதது என்றும் ஆட்சியாளர்கள் மத்தியில் ஒரு சிந்தனை ஏற்பட்டிருக்கிறது.
ஒருசில தனியார் நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும்தான் இன்னும் முனைப்பாக அடிப்படை விஞ்ஞான ஆராய்ச்சிக்கான நிதி உதவிகளை வழங்கி வருகின்றன. படிப்பு முடிவதற்குள், கல்லூரி வளாகத்திலேயே நேர்முகத் தேர்வு நடந்து வேலை கிடைத்தால் போதும் என்று மாணவர்களும் நினைக்கிறார்கள். பல லட்சம் ரூபாய் கட்டணம் செலவழித்துப் படிக்க வைக்கும் பெற்றோரும் நினைக்கிறார்கள். தங்கள் குழந்தைகள் வசதியாக வாழ்ந்தால் போதும் என்று நினைக்கும் பெற்றோர்கள் அவர்கள் சாதனையாளர்களாக உலக அரங்கில் புகழ் பெற வேண்டும் என்று விரும்புவதாகத் தெரியவில்லை. இதன் விளைவு, முன் எப்போதையும்விடப் புத்திசாலிகளாகவும், திறமைசாலிகளாகவும் நமது இளைஞர்கள் இருந்தும் நாம் சாதனையாளர்களை உருவாக்காமல் இருக்கும் இந்நிலை ஏற்பட்டிருக்கிறது. அப்துல் கலாம், அமர்த்தியா சென், முனைவர் "வெங்கி' ராமகிருஷ்ணன் போன்ற பல உலக சாதனையாளர்களும் பௌதீகமும், பொருளாதாரமும், ரசாயனமும் படித்தவர்கள்தான் என்பதையும், பணம் சம்பாதிப்பதைவிடக் காலாகாலம் நிலைத்து நிற்கும் சாதனை படைப்பது முக்கியம் என்பதையும் நமது பெற்றோருக்கும், மாணவர்களுக்கும் உணர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்கு அரசு பெரிய அளவில் தொடர்ந்து நிதி உதவி அளித்து ஊக்கமும் ஆக்கமும் தந்தாக வேண்டும். அடிப்படை விஞ்ஞானத்துக்கு முன்னுரிமை அளிக்கும் விதத்தில் கல்விக் கொள்கையை அமைத்து உயர் ஆராய்ச்சிகளுக்கு ஊக்கமளித்தால் மட்டுமே இது சாத்தியம். நோபல் விஞ்ஞானி ராமகிருஷ்ணன் கூறியிருப்பதைப் போல, உலக அரங்கில் தலைசிறந்த விஞ்ஞானிகளை உருவாக்கும் வாய்ப்பும் வசதியும் இந்தியாவுக்கு இருக்கிறது. அதை நாம் தெரிந்தே உதாசீனப்படுத்துகிறோமே, ஏன்?

கருத்துகள் இல்லை: