வெள்ளி, 13 நவம்பர், 2009

வரலாற்று சம்பவம் : ராஜீவ் காந்தி பிரதமர் ஆனார்


கல்கத்தாவில் இருந்து டெல்லிக்குப் புறப்பட்ட ராஜீவ் காந்தி, பெரும்பாலும் விமானிகள் அறையிலேயே இருந்தார். டெல்லியில் இருந்து, வயர்லெஸ் மூலம் அவருக்கு தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்திரா காந்தி இறந்து விட்டதாக பிற்பகல் 2.30 மணிக்கு தகவல் வந்தது. தன் உணர்ச்சிகளை சிரமப்பட்டு அடக்கிக்கொண்டார், ராஜீவ்காந்தி. அவர் டெல்லி போய்ச்சேர்ந்தபோது, விமானநிலையத்தில் மந்திரிகளும், காங்கிரஸ் தலைவர்களும் கூடியிருந்தனர். அடுத்த பிரதமராக ராஜீவ் காந்தியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்திருந்தனர்.
நேரு மறைந்தபோதும் லால்பகதூர் சாஸ்திரி இறந்தபோதும், மூத்த மந்திரியான நந்தா, இடைக்கால பிரதமராகப் பதவி ஏற்றார். பிறகு பிரதமர் தேர்தல் நடைபெற்றது. அதே மாதிரி தன்னை இடைக்காலப் பிரதமராக ஆக்குவார்கள் என்று பிரணாப் முகர்ஜி எதிர்பார்த்தார். ராஜீவ் காந்தியைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் என்பதை அறிந்ததும் அவர் ஏமாற்றம் அடைந்தார். எனினும், அதை வெளியே காட்டிக்கொள்ளவில்லை. காங்கிரஸ் கட்சியின் ஆட்சி மன்றக் குழு (பார்லிமெண்டரி போர்டு) கூடி, புதிய பிரதமராக ராஜீவ் காந்தியை தேர்ந்தெடுக்க முடிவு செய்தது. ஆட்சி மன்றக் குழுவில் மொத்தம் ஐந்து பேர் இடம் பெற்று இருந்தனர். அவர்களில் பிரதமர் இறந்துவிட்டார். 2 பேர் அப்போது டெல்லியில் இல்லை.
நரசிம்மராவ் (உள்துறை மந்திரி), பிரணாப் முகர்ஜி (நிதி மந்திரி) ஆகிய இருவர் மட்டுமே இருந்தனர். அவர்கள் இருவரும், ராஜீவ் பெயரை அறிவித்தனர். யேமன் நாட்டுக்கு சென்றிருந்த ஜனாதிபதி ஜெயில்சிங், இந்திரா மரணச் செய்தியை அறிந்ததும் சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிட்டு உடனடியாக டெல்லிக்குப் புறப்பட்டார். அன்று மாலை டெல்லி வந்து சேர்ந்தார். அடுத்த பிரதமராக ராஜீவ் காந்தியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற முடிவுடன்தான் அவர் வந்தார். காங்கிரஸ் தலைவர்களும் அதே முடிவில் இருக்கிறார்கள் என்பதை அறிந்ததும், ராஜீவ் காந்தி பதவி ஏற்பதற்கான ஏற்பாடுகளை உடனே செய்யுமாறு உத்தரவிட்டார். அன்று மாலை 6.30 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில், இந்தியாவின் புதிய பிரதமராக ராஜீவ் காந்தி பதவி ஏற்றார். அவருக்கு ஜனாதிபதி ஜெயில்சிங் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
"இந்திரா காந்தி மந்திரி சபையில் இடம் பெற்றிருந்த மந்திரிகள் அனைவரும் தொடர்ந்து நீடிப்பார்கள். புதிய மந்திரிகள் நியமனம் இல்லை. மந்திரிகளின் இலாகாக்களும் மாற்றப்படமாட்டாது" என்று ராஜீவ் அறிவித்தார். அன்றிரவு ராஜீவ் காந்தி ரேடியோவில் பேசினார். அவர் கூறியதாவது:-
"இந்திரா காந்தி, படுகொலை செய்யப்பட்டுவிட்டார். அவர் எனக்கு மட்டுமல்ல, இந்த நாட்டுக்கே தாயாக விளங்கினார். தன்னுடைய கடைசி சொட்டு ரத்தம் உள்ளவரை, இந்திய மக்களுக்காக அவர் பாடுபட்டார். நாம் அனைவரும் துயரத்தில் முழ்கியுள்ள நேரம் இது. இந்த துயரத்தை _ சோதனையை நாம் தைரியத்துடனும், மனோ வலிமையுடனும் எதிர்கொள்ள வேண்டும். இந்திரா காந்தி மறைந்துவிட்டார். ஆயினும் அவருடைய ஆன்மா நம்முடன் வாழ்கிறது. அவருடைய ஆன்மாவுக்கு மரணம் இல்லை. நம்முடைய இந்திய நாடு, வரலாற்றுச் சிறப்பு மிக்கது. நாம் ஒற்றுமையுடன் இருந்து, இந்தியாவின் ஸ்திரத்தன்மையைக் காப்போம்." இவ்வாறு ராஜீவ் கூறினார்.
பின்னர், ராஜீவ் தலைமையில் மந்திரிசபை கூட்டம் நடந்தது. இந்திரா காந்தியின் இறுதி ஊர்வலத்தை எவ்வாறு நடத்துவது என்று ஆலோசிக்கப்பட்டது. இந்திரா உடலை அன்றிரவு அவர் வீட்டில் வைத்திருந்து விட்டு, பிறகு இரண்டு நாட்கள் "தீன் மூர்த்தி" இல்லத்தில் (நேரு வசித்த வீடு) பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்கு வைத்திருப்பது என்றும், 3_ந்தேதி இறுதி ஊர்வலம் நடத்துவது என்றும், யமுனை நதிக்கரையில் நேரு சமாதி அருகே தகனம் செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இந்திரா மரணச்செய்தி டெல்லியில் காட்டுத்தீ போல பரவியது. பல்லாயிரக்கணக்கான மக்கள் சாரி சாரியாக வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர். பெண்கள் கதறி அழுதார்கள். பலர் மயக்கம் அடைந்தார்கள். இந்திரா காந்தியுடன் சண்டை போட்டுக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய அவர் மருமகள் மேனகா, இந்திரா மரணச் செய்தி அறிந்ததும் ஓடோடி வந்தார். மாமியார் உடலைக் கண்டு அலறித்துடித்தார். நாள் முழுவதும் கண்ணீர் விட்டபடி சோகத்துடன் அமர்ந்திருந்தார். அன்று இந்திரா வீட்டில் இருந்த எவரும் தூங்கவில்லை.
உறவினர்கள் இந்திரா உடல் அருகே கண்ணீர் விட்டபடி அமர்ந்திருந்தனர். இந்திரா வீட்டைச் சுற்றிலும், தோட்டத்திலும், ரோடுகளிலும் ஏராளமானவர்கள் சோகத்துடன் கூடியிருந்தனர். மறுநாள் காலை இந்திரா காந்தியின் உடல் "தீன் மூர்த்தி" இல்லத்துக்குக் கொண்டு போகப்பட்டது. அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் நீண்ட "கிï" வரிசையில் நின்று, இறுதி மரியாதை செலுத்தினர். இதற்கிடையே, இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதற்குப் பழிக்குப்பழி வாங்க வேண்டும் என்று ஆத்திரம் அடைந்தவர்கள், சீக்கியர்களின் கடைகளையும், வீடுகளையும் தாக்கினார்கள்.
ஏராளமான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பயந்துபோன சீக்கியர்கள், வீடு_வாசலை விட்டுவிட்டு பஞ்சாப் மாநிலத்துக்கு தப்பி ஓடினர். இந்த கலவரங்களில் இறந்த சீக்கியர்களின் எண்ணிக்கை சுமார் 3 ஆயிரம் இருக்கும் என்றும், டெல்லியில் மட்டும் சுமார் 2 ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் பின்னர் வந்த தகவல்கள் கூறின. சுமார் 50 ஆயிரம் பேர், வீடு_ வாசலை இழந்து அகதிகளானார்கள். 2_ந்தேதி இரவு, ராஜீவ் காந்தி டெலிவிஷனில் பேசினார். "இப்போது நடைபெற்று வரும் கலவரங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இந்தக் கலவரங்கள், இந்திரா காந்தி எந்த லட்சியங்களுக்காக வாழ்ந்தாரோ, அந்த லட்சியங்களுக்கு எதிரானவை.
கலவரம் அடங்காவிட்டால், அதை அடக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் குறிப்பிட்டார். வன்முறைக் கும்பலில் காலிகளும் ஊடுருவியிருந்தனர். அதனால் கலவரம் நீடித்தது. வன்முறையை ஒடுக்குமாறு ராணுவத்துக்கு ராஜீவ் காந்தி உத்தரவிட்டார். அதன்படி, ராணுவத்தினர் கலவரத்தை அடக்கினர். டெல்லியில் ராணுவத்தினர் டாங்கிகளில் ரோந்து வந்தனர். 3_ந்தேதி காலை, இந்திரா காந்தியின் இறுதி ஊர்வலம் நடந்தது. அவர் உடல் பீரங்கி வண்டியில் வைக்கப்பட்டு, ராணுவத்தினர் அணிவகுத்து செல்ல ஊர்வலம் புறப்பட்டது.
மகாத்மா காந்தி, நேரு ஆகியோரின் இறுதி ஊர்வலம் சென்ற அதே பாதையில், இந்திராவின் இறுதி ஊர்வலமும் சென்றது. கலவர சூழ்நிலை காரணமாக, ஊர்வலத்தை காண ரோட்டின் இருபுறமும் கூடியிருந்தவர்கள் எண்ணிக்கை முன் அளவுக்கு இல்லாமல் குறைவாகவே இருந்தது. யமுனை நதிக்கரையில், காந்தி, நேரு ஆகியோரின் சமாதிகள் உள்ள இடத்திற்கு அருகே, சாந்தி வனம் என்ற இடம் இந்திரா காந்தியின் உடல் தகனத்துக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தது.
ஊர்வலம் அந்த இடத்தை அடைந்ததும், இந்திராவின் உடல் பீரங்கி வண்டியில் இருந்து இறக்கப் பட்டு, சந்தனக் கட்டைகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்த "சிதை"யில் வைக்கப்பட்டது. இங்கிலாந்து பிரதமர் மார்க்கரெட் தாட்சர், ஜப்பான் பிரதமர் நாக சோனே, பாகிஸ்தான் அதிபர் ஜியா, வங்காள தேச அதிபர் எர் ஷாத், இலங்கை அதிபர் ஜெயவர்த்தனா, பாலஸ்தீன தலைவர் அராபத் மற்றும் ஜாம்பியா, உகாண்டா, பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர்கள், வெளிநாட்டு தூதுவர்கள், மாநில முதல்வர்கள், கவர்னர்கள், அன்னை தெரசா, திரை உலகப் பிரமுகர்கள் வந்திருந்து இந்திராவுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்கள். (இந்த சமயத்தில், தமிழக முதல்_அமைச்சர் எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப்பட்டு, சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரை அமெரிக்காவுக்குக் கொண்டு சென்று, மாற்று சிறுநீரகம் பொருத்த ஏற்பாடு நடந்து வந்தது. இந்த நிலையில், இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட தகவலை அறிந்தால், அவர் உடல் நிலை மேலும் மோசமடையும் என்பதால், அந்தத் தகவல் அவருக்குத் தெரிவிக்கப்படவில்லை.)

தலைவர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர், ராணுவத்தினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, மரியாதை செலுத்தினர். பின்னர், "சிதை"க்கு ராஜீவ்காந்தி தீ மூட்டினார். "சிதை" எரிந்த போது, கூடியிருந்தவர்கள் "இந்திரா அமரர் ஆனார்", "இந்திராவின் புகழ் வாழ்க" என்று குரல் எழுப்பினர். மறுநாள் இந்திராவின் அஸ்தி (சாம்பல்) பல கலசங்களில் சேகரிக்கப்பட்டது. அஸ்தியின் ஒரு பகுதி திரிவேணி சங்கமத்தில் கரைக்கப்பட்டது. "நான் இறந்தபின், என் அஸ்தி இமயமலை மீது தூவப்பட வேண்டும்" என்று தன் விருப்பத்தை இந்திரா காந்தி ஏற்கனவே ராஜீவ் காந்தியிடம் தெரிவித்திருந்தார். அதன்படி, தாயாரின் அஸ்தியின் ஒரு பகுதியை, இந்திய விமானப்படை விமானத்தில் ராஜீவ் காந்தி எடுத்துச்சென்று, இமயமலைச் சாரலில் தூவினார்.

கருத்துகள் இல்லை: