சனி, 28 ஜூலை, 2012

இவரன்றி வேறு யாரால் இது முடியும் ?







கோட்டையில் எவர் வேண்டுமானாலும் ஆட்சி செய்யலாம். கொள்கையால் தமிழக மக்களின் மனங்களை ஆண்டுகொண்டிருப்பவர் தலைவர் கலைஞர்தான். கோபால புரத்திலும் அறிவாலயத் திலும் தொண்டர்களையும் பொதுமக்களையும் தினந்தோறும் சந்திக்கிறார். போயஸ்கார்டன் கதவுகளைப்போல அனுமதி மறுப்பதில்லை அறிவாலயத் தின் கதவுகள். அல்லது கொடநாடு போன்ற இடங்களைத்தேடி நம் தலைவர் ஓய்வெடுப் பதுமில்லை.


ஓய்வறியா உழைப்பாளியான அவர் நாள்தோறும் அறிவாலாயத்திற்கு வந்து பணிகளைக் கவனிப்பதைப்பார்க்கும்போதே என்னைப்போன்ற தொண்டர்களுக்குப்புத்துணர்வு பிறக்கும். ஜூலை 18ந் தேதி காலையிலும் அப்படித்தான், தலைவர் கலைஞரைக்காண அறிவாலயத்தில் கழகத்தினர் நிறைந் திருக்கிறார்கள். கிருஷ்ணகிரி மாவட்ட கழகச் செயலாளர் அண்ணன் செங்குட்டுவன் வந்திருந்தார். அவர் அருகில் மூன்று மாணவர் கள் நின்று கொண்டிருந்தார்கள்.


“கல்லூரிக்குச் செல்லவேண்டிய நேரத்தில் இங்கே வந்திருக்கிறார்களே!” என்று ஆச்சரியத்துடன் கேட்ட போது, “நாங்கள் கல்லூரியில் கால் வைப்பதற்கு காரணமாக இருந்த வரை நேரில் பார்த்து நன்றி தெரிவிப்பதற்காக வந்திருக்கோம்” என்றார்கள். ஆம்.. அந்த மூவரும் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள். 2 பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று, மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்திருக்கிறார்கள். அவர்களுக்கு இப்படியொரு மகத்தான வாய்ப்பு கிடைத்ததற்குக்காரணம், தலைவர் கலைஞர் அவர்களின் ஆட்சியில் வழங்கப்பட்ட அருந்த தியருக்கான உள்ஒதுக்கீடுதான்.


மாவட்ட கழகச்செயலாளர் அண்ணன் செங்குட்டுவன் தான் அவர்களை அழைத்து வந்திருந்தார். “இந்த மூன்று பேரும் ஒரே கூட்டுக்குடும்பத்தைச்சேர்ந்த அருந்ததியர் சமுதாயத்து மாணவர்கள். எங்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் மிட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள். மூவருமே தலைவர் அளித்த உள்ஒதுக்கீட்டின் மூலம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்திருக்கிறார்கள்” என்றார் பெருமை பொங்க. அந்த மாணவர்களின் முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி! அவர்களின் நெஞ்சில் எத்தனை நன்றியுணர்ச்சி.

சென்னை மருத்துவக்கல்லூரியில் என்.திவாகர் என்ற மாணவரும், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மணிபாரதி என்ற மாணவியும், கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரியில் மணிரத்தினம் என்ற மாணவரும் சேர்ந்து, நாளைய மருத்துவர்களாக உயரும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். “எங்க சமுதாயத்திலே பலரும் வியாதி வந்தால்கூட டாக்டரைப் பார்க்கிற வசதியில்லாம கைவைத்தியம் பண்ணிக்குவாங்க. அப்படி இருந்த எங்க நிலைமையை மாற்றி, இன்னைக்கு நாங்களே டாக்டராகிற நிலைமையை உருவாக் கியிருக்கிறவர் கலைஞரய்யாதான். 


அந்த மவராசனை நேரில் பார்த்து நன்றி சொல்வதற்காக வந்தோம்’’ என்றனர். மாபெரும் தலைவர் வழிநடத்தும் இயக்கத்தில் தொண்டனாக இருக்கிறோம் என்ற இயல்பான பெருமை எனக்குள் ஏற்பட்டது. அந்த மாணவர்களுக்கு தலைவரிடமிருந்து அழைப்பு வந்தது. மாவட்டக் கழகச்செயலாளருடன் சென்று தங்கள் நன்றியைத் தெரிவித்தனர்.
பிறப்பால் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை களுக்காக உருவான திராவிட இயக்கத்தின் நீட்சிதான் தலைவர் கலைஞர் அவர்கள். வாழும் வரலாறாய் இயக்கத்தின் சாதனை களைத்தொடர்ந்து கொண்டிருப்பவர். 


அரசியலுக்காக அவரை விமர்சிப்பவர் களும்கூட, இந்த உண்மையை உணர்ந்தே இருக்கிறார்கள். வாழ்வில் உயர்ந்துவிட்டதாலேயே வாழ்ந்து-வளர்ந்த இடத்தை மறந்துவிட்டு வசை பாடுவது வழக்கம்தான். திராவிட இயக்கத்தையும் அதன் அரசியல் பேரியக்கமான தி.மு.கழகத்தையும் அதனை வழிநடத்தும் தலைவர் கலைஞரையும் வசைபாடு பவர்கள் வர்ணாசிரமத்தின் பாதுகாவலர்கள் மட்டுமல்ல, வகுப்புவாரி உரிமை என்கிற, திராவிட இயக்கம் பெற்றுத்தந்த கொடையால் வாழ்வு பெற்றவர்களும்தான். நூறாண்டுகளுக்கு முன் தன் பாட்டன், முப்பாட்டன் வாழ்ந்தது எப்படி என்கிற வரலாற்றை அறியாமல், 
அல்லது அறிந்தும் அது பற்றிய சிந்தனையின்றி தி.மு.கழகம் மீது வசைபாடுவதை புதிய நாகரீக மாகக்கடைப்பிடிக்கிறார்கள்.


வாழ்க வசவாளர்கள்!’’ என்ற பேரறிஞர் அண்ணாவின் வழியில் செல்லும் கலைஞரோ, தன்னை வசைபாடுவோர் பற்றிக் கவலைப்படாமல் இந்த இனத்தின் எதிர்காலத்தைக் கவனத்தில் கொண்டு, தனது ஒவ்வொரு ஆட்சிக் காலத்திலும் சமூக நீதியை நிலை நாட்டும் சட்டங்களைத்துணிந்து நடைமுறைப்படுத்தியவர் கலைஞர். பிற்படுத்தப் பட்டவர்களுக்கென தனி அமைச்சகத்தை உருவாக்கிய பெருமை அவரையே சாரும். பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை தந்தவரும் அவர்தான். 


மிகபிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடும், பழங்குடி மக்களுக்கு 1 சதவீத ஒதுக்கீடும் தந்தவர் அவரே. இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு 3.5 சதவீத தனி ஒதுக்கீடு அளித்தவர். தாழ்த்தப்பட்ட சமுதாயமான அருந்ததிய மக்களுக்கு 3 சதவீத உள்ஒதுக்கீட்டை தனது ஆட்சிக்காலத்தில் அளித்து, அந்த இனம் உயர வழியமைத்தவர்.


ஆட்சியில் தலைவர் கலைஞர் இல்லாத இந்த நிலையிலும் அருந்ததிய சமுதாயம் அவர் அளித்த உள்ஒதுக்கீட்டின் பயனை நேரடியாக அனுபவித்துக்கொண்டிருக்கிறது என்பதைத்தான் அந்த மூன்று மாணவர்களுக்கும் மருத்துவக்கல்லூரியில் கிடைத்த அனுமதி எடுத்துக்காட்டுகிறது. இந்த மாணவச் செல்வங்களைப்போல அருந்ததிய சமுதாயத்து மாணவர்கள் மற்ற மாவட்டங்களிலிருந்தும் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் வாய்ப்பை கலைஞர் அரசு அளித்த உள்ஒதுக்கீடு வழங்கியுள்ளது. 


பொறியியல் கல்லூரி, வேளாண் கல்லூரி, சட்டக்கல்லூரி என உயர் படிப்புகளை அந்த ஒடுக்கப்பட்ட சமுதாயம் கற்பதற்கு வழியமைத்துத் தந்துள்ளார் கலைஞர்.
கல்வி என்பது தனி ஒருவருக்கு மட்டும் பலன் தருவ தன்று. அவரது குடும்பத்திற்கு மட்டும் பலன் தருவதும் அன்று. அவர்களின் தலைமுறைக்கே பயன் தந்து, சமுதாயத்திற்கும் பலனளிப்பது. எதிர்காலத் தலைமுறை பற்றிச் சிந்திக்கும் கலைஞர் என்ற மகத்தான தலைவரால்தான் இத்தகைய பயன்களைத் தொலை நோக்குடன் சிந்தித்து அதற்கான சட்டதிட்டங்களை நிறைவேற்ற முடியும்.


கழக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அருந்திய சமுதாயத்தைச் சேர்ந்த ராதா என்பவர் நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் பணிக்காக விண்ணப்பித்திருந்தார். கலைஞர் அரசு வழங்கிய உள்ஒதுக்கீட்டின்படி அவருக்கு அந்தப் பணி கிடைக்க ஆவன அனைத்தையும் முன்னின்று செய்தவர், துணை முதல்வராக இருந்த நம் தளபதி. தலைவரின் எண்ணங்களைச்செயல்படுத்துவதில் அன்றும் இன்றும் அவர் ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கிறார்.


இளைஞரணி பாசறைக்கூட்டங்களில் இந்தத் தலைமுறைக்கு திராவிட இயக்க முன்னோடிகளின் வரலாறு கற்பிக்கப்படுகிறது. திராவிட இயக்கம் கண்ட களங்களும், பெற்ற தழும்புகளும் எடுத்துக்காட்டப்படுகின்றன. வகுப்புவாரி உரிமை தொடங்கி இன்றைய இடஒதுக்கீடு வரையிலான சமூக நீதி பற்றிய பாடம் சொல்லித்தரப்படுகிறது. கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் திராவிட இனத்தின் நிலை என்ன என்பதையும், நீதிக்கட்சியில் தொடங்கி தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் உள்ளிட்ட தலைவர்களின் போராட்டங்களால் இந்த இனம் நிமிர்ந்து நிற்பதையும் பாசறைக் கூட்டங்கள் பயிற்று விக்கின்றன.



சூத்திரர்களாக, பஞ்சமர்களாக ஒடுக்கப்பட்ட சமுதாயமாக ஒதுக்கிவைக்கப்பட்டவர்கள்- வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் இன்று பட்டதாரிகளாக, பொறியாளர்களாக, வழக்கறிஞர் களாக, மருத்துவர்களாக, இன்னும் பற்பலத்துறைகளில் வல்லுநர்களாக சிறந்து விளங்குவதற்கு திராவிட இயக்கமே காரணம் என்பதை இளைஞர்களின் நெஞ்சில் பதிய வைக்கிறார் தளபதி. ஏற்றம் பெற்றோரின் இதயத்தில் அவர்களின் உயிர்த்துடிப்பாகத் திகழ்கிறார் சமூக நீதியின் காவல ரான தலைவர் கலைஞர்.
 


ஆக்கம் : திரு.ஹசன் முஹம்மது ஜின்னாஹ்.
                திமுக இளைஞர் அணி மாநில துணைத் தலைவர்.