செவ்வாய், 3 நவம்பர், 2009

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சொத்து விவரம் வெளியீடு

புதுடில்லி : சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் மற்றும் 20 நீதிபதிகளின் சொத்து விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இருப்பினும், நீதிபதி பேடியின் சொத்து விவரங்கள் அதில் இடம் பெறவில்லை. அரசியல்வாதிகளைப் போல, சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளும் தங்களின் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக எழுந்தது."குற்றம் புரிந்தவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் அதிகாரம் படைத்த ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், தாங்கள் நேர்மையானவர்கள் என்பதை நிரூபிக்க சொத்து விவரங்களை வெளியிட வேண்டும். அதற்கு தயக்கம் காட்டக் கூடாது' என, பொதுமக்களும், மற்றவர்களும் தெரிவித்தனர். இருந்தும் சொத்து விவரங்களை வெளியிட, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஆரம்பத்தில் தயக்கம் காட்டினர். அதேநேரத்தில், இந்த கோரிக்கைக்கு ஆதரவாக ஐகோர்ட் நீதிபதிகள் சிலர் குரல் கொடுத்தனர். தங்களின் சொத்து விவரங்களையும் வெப்சைட்டில் வெளியிட்டனர். இதையடுத்து, தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் உட்பட சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அனைவரும், தங்களின் சொத்து விவரங்களை வெளியிட சம்மதம் தெரிவித்தனர். தசரா மற்றும் தீபாவளி பண்டிகைகளின் போது, நீதிபதிகள் தங்களின் சொத்து விவரங்களை இறுதி செய்தனர். சிலர் இதற்காக ஆடிட்டர்களின் உதவியையும் நாடினர். தற்போது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் மற்றும் நீதிபதிகள் 20 பேரின் சொத்து விவரங்கள், சுப்ரீம் கோர்ட்டின் வெப் சைட்டில் வெளியிடப்பட்டுள்ளன.கடந்த மாதம் 15ம் தேதி ஓய்வு பெற்ற நீதிபதி பி.என்.அகர்வாலின் சொத்து விவரமும், அவரின் வேண்டுகோளின் பேரில் வெளியிடப் பட்டுள்ளது. இந்த சொத்து விபரங்களை எல்லாம் நீதிபதிகள் தானாக முன்வந்து வெளியிட்டுள்ளனர் என்றும் சுப்ரீம் கோர்ட் வெப்சைட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், நீதிபதி எச்.எஸ்.பேடியின் சொத்து விவரம் மட்டும் அதில் இடம் பெறவில்லை.தலைமை நீதிபதிக்கு ரூ.25 லட்சம் சொத்து: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு கேரளா மற்றும் பரிதாபாத்தில் தலா ஒரு அடுக்குமாடி குடியிருப்பு, மூன்று வீடுகள், ஒன்பது ஆண்டு பழமையான சான்ட்ரோ கார், 20 சவரன் தங்க நகைகள் என, மொத்தம் 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. நிரந்தர வைப்பு நிதி இல்லை. பங்குகளில் முதலீடு செய்யவும் இல்லை. அடுத்த தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ள நீதிபதி கபாடியாவுக்கு 70 லட்சம் ரூபாய் மதிப்புகள் சொத்துக்கள் இருப்பதாகவும், நீதிபதி அல்தாமஸ் கபீருக்கு 30.75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத் துக்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.நீதிபதி அசோக் குமார் கங்குலி: கோல்கட்டாவில் ரூ. 19 லட்சம் மதிப்புள்ள பிளாட், ரூ.11 லட்சம் மதிப்புள்ள மியூச்சுவல் பண்டு, ரூ. 3லட்சம் மதிப்புள்ள லைப் இன்சூரன்ஸ் பாலிசி மற்றும் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள மாருதி எஸ்டீம் கார் ரூ. 90 ஆயிரம் மதிப்புள்ள மாருதி 800.நீதிபதி தருண் சட்டர்ஜி: கோல்கட்டாவில் வீடு, செவர்லட் மற்றும் ஹோண்டா கார்கள்.நீதிபதி ஆர்.வி. ரவீந்திரன்: பெங்களூரு பசவனகுடி, அர்கெம்பனஹள்ளி ஆகிய இடங்களில் வீடுகள், டிக்கன்சன் ரோட்டில் ஆபீஸ் மற்றும் பனசங்கரி 3வது ஸ்டேஜில் காலி மனை மற்றும் பல கம்பெனிகளில் ஷேர்கள்.நீதிபதி மார்கண்டேய கட்ஜூ: அலகாபாத்தில் வீடு மற்றும் முன்னோர் சொத்து, ரூ. 37 லட்ச ரூபாய் பிக்சட் டெபாசிட். சொந்த வாகனம் இல்லை.நீதிபதி பி. சதாசிவம்: சென்னை கற்பகம் அவென்யூவில் வீடு, 3 ஆயிரம் சதுர அடி மதிப்பிலான காலி மனை, ஈரோடு மாவட்டம் பவானி தாலுகா கடப்பநல்லூரில் 12.49 ஏக்கர் மற்றும் 5.74 ஏக்கர் விவசாய நிலம், யமஹா மோட்டார் சைக்கிள்.நீதிபதி சுதர்சன் ரெட்டி: ஐதராபாத் ஜூப்லி ஹவுசில் 3500 சதுர அடி வீடு, ரூ. 6 லட்சம் மதிப்புள்ள வீடு. ரெங்காரெட்டி மாவட்டத்தில் முன்னோர் நிலம் மற்றும் விவசாய நிலங்கள். புதுடில்லி யூகோ வங்கியில் ரூ. 23 லட்சம் மற்றும் ஐதராபாத் ஆந்திரா வங்கியில் ரூ. 7 லட்சம் வங்கிக்கடன்.நீதிபதி எச். எல். டட்டு: பெங்களூரு ஆர்.டி. நகரில் வீடு, அலால்சன்டிரா நகரில் வீட்டு மனை. ரூ. 18 லட்சம் வங்கி டெபாசிட். ஒரு சுமோ கார் மற்றும் டில்லி பாரத ஸ்டேட் பாங்கில் 8 லட்சம் வீட்டுக்கடன்.நீதிபதி பி.எஸ். சவுகான்: உ.பி., மாநிலம் முசாபர்நகரில்ல் முன்னோர் வீடு, நொய்டாவில் வீடு, முசாபர்நகரிலுள்ள ஜசலா கிராமத்தில் முன்னோர் விவசாய நிலம். ரூ. 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஷேர் மற்றும் இன்வெஸ்ட்மெண்ட், டொயட்டோ கரோலா கார்.

கருத்துகள் இல்லை: