ஞாயிறு, 15 நவம்பர், 2009

வரலாற்று சம்பவம்:நடிகர் திலகத்துக்கு எகிப்து நாட்டின் விருது.


ஆசிய ஆப்பிரிக்க பட விழாவில், சிறந்த நடிகருக்கான விருது சிவாஜிகணேசனுக்கு வழங்கப்பட்டது. "வீரபாண்டிய கட்டபொம்மன்" _ இது, தமிழ் ரசிகர்களால் மறக்க முடியாத படம். ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு தூக்கிலிடப்பட்டு வீர மரணம் அடைந்த பாஞ்சாலங்குறிச்சி மன்னன் கட்டபொம்மனைப் பற்றிய திரைக்காவியம்.
இந்த படத்தில் கட்டபொம்மன் வேடம் ஏற்று சிவாஜி கணேசன் நடித்தார். ஆங்கிலேய அதிகாரி ஜாக்சன் துரையை எதிர்த்து பேசும் அனல் தெரிக்கும் வசனங்கள் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. அன்றைய காலகட்டத்தில் "உலக நாட்டியப் பேரொளி" என்று வர்ணிக்கப்பட்ட நடிகை பத்மினி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை பிரபல டைரக்டரான பி.ஆர்.பந்துலு தயாரித்தார்.
1960_ம் ஆண்டு மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் ஆசிய _ ஆப்பிரிக்க நாடுகளின் சினிமாப்பட விழா எகிப்து நாட்டில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்ள "வீரபாண்டிய கட்டபொம்மன்" சினிமா படத்தை மத்திய அரசு அனுப்பி வைத்தது. இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட ஒரே படம் இதுதான்.
இந்த படத்தில் நடித்த சிவாஜி கணேசன், பத்மினி மற்றும் சித்ரா கிருஷ்ணசாமி, படத்தை தயாரித்த பி.ஆர்.பந்துலு ஆகியோரை அனுப்பும்படி எகிப்து அரசாங்கம் கேட்டுக் கொண்டது. இதன்படி சிவாஜி கணேசன், பத்மினி மற்றும் கலைஞர்களை எகிப்து பட விழாவுக்கு மத்திய அரசு அனுப்பி வைத்தது.
விழாவில் கலந்து கொண்ட சினிமாப்படங்களுக்கு பரிசு கொடுக்கப்பட்டது. நடிகர் _ நடிகைகளுக்கும் பரிசு தரப்பட்டது. பரிசுக்கு உரிய படத்தையும், நடிகர்களையும் நீதிபதிகள் தேர்ந்து எடுத்தார்கள். "சிறந்த நடிகர்" என்று சிவாஜி கணேசன் தேர்ந்து எடுக்கப்பட்டார். அவருக்கு கழுகு படம் பொறிக்கப்பட்ட "தங்கக் கேடயம்" பரிசு கொடுக்கப்பட்டது. எகிப்து நாட்டின் கலைத்துறை துணை மந்திரி இந்தப்பரிசை வழங்கினார்.
சிறந்த நடிகையாக "லைலா மஜ்னு" என்ற படத்தில் நடித்த மெந்தா என்ற நடிகை தேர்ந்து எடுக்கப்பட்டார். சிறந்த ஆடல் _ பாடல் நிறைந்த படம் என்று "வீரபாண்டிய கட்டபொம்மன்" தேர்ந்து எடுக்கப்பட்டு, தனிப்பரிசு வழங்கப்பட்டது. "சிறந்த படம்" என்று "சாமர்க்கண்டு நாட்டு இளவரசன்" என்ற ரஷியப்படமும், சிறந்த செய்திப்படம் என்று "தாஜ்மகால்" என்ற படமும் தேர்ந்து எடுக்கப்பட்டன. அவற்றுக்கும் பரிசு தரப்பட்டது.
மத்திய அரசு தயாரித்த படம் "தாஜ்மகால்" என்பது குறிப்பிடத்தக்கது.
பரிசை பெற்றுக்கொண்ட பிறகு சிவாஜிகணேசன் எகிப்தில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு பம்பாய்க்கு வந்தார். அவருடன் பி.ஆர்.பந்துலுவும் வந்தார். அதன் பிறகு அங்கிருந்து தனி விமானத்தில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்கள்.
12_3_1960 அன்று இரவு சிவாஜி கணேசன் சென்னைக்கு வந்து சேர்ந்தார். விமான நிலையத்தில் அவருக்கு கோலாகல வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஏராளமான நடிகர், நடிகைகள் மற்றும் பட அதிபர்கள் வந்திருந்து அவரை வரவேற்றார்கள்.
சிவாஜிகணேசனுக்கு ஏராளமானபேர் மாலைகள் அணிவித்தார்கள். திரை உலகத்தினர் எல்லோரும் பாராட்டினார்கள்.
ஆசிய ஆப்பிரிக்க பட விழா எகிப்தில் நடந்தபோது, அதிபர் நாசர் சிரியா சென்றிருந்ததால், அவர் அந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை. பிறகு நாசர் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தபோது, சென்னை வந்தார். அப்போது நாசருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பில், சிவாஜிகணேசன் வரவேற்பு இதழ் வாசித்தளித்தார். ஆசிய ஆப்பிரிக்க பட விழாவில் பரிசு பெற்றதற்காக, சிவாஜிகணேசனுக்கு நாசர் பாராட்டு தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: