சனி, 7 நவம்பர், 2009

கர்நாடகாவின் கதி என்னவாகும் ?


கர்நாடகாவில் 52 எம்.எல்..,க்கள் ராஜினாமா :

புதுடில்லி : கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக 52 எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இதனால், அதிருப்தி மந்திரிகளான ரெட்டி சகோதரர்களின் கை ஓங்குகிறது.

கர்நாடகா பா.ஜ.,வில் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. "எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்'என, மாநில அமைச்சர்களான ரெட்டி சகோதரர்கள், போர்க்கொடி தூக்கியுள்ளனர். கடந்த நான்கு நாட்களாக இரு தரப்பினரும் டில்லியில் முகாமிட்டு, கட்சியின் மேலிடத் தலைவர்களுடன் பேச்சு நடத்தி வருகின்றனர். ஆனால், எடியூரப்பாவை நீக்க வேண்டும் என்ற தங்கள் கோரிக்கையில் ரெட்டி சகோதரர்கள் பிடிவாதமாக உள்ளனர். கோவா மற்றும் ஐதராபாத் ஆகிய இடங்களில் உள்ள சொகுசு ஓட்டல்களில் தங்கள் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 60 பேரை, ரெட்டி சகோதரர்கள் தங்க வைத்துள்ளனர். எடியூரப்பாவுக்கான நெருக்கடியை மேலும் அதிகரிக்கும் வகையில், இந்த எம்.எல்.ஏ.,க்களில் 52 பேர், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

இவர்கள், தங்களது ராஜினாமா கடிதங்களை அதிருப்தி கோஷ்டி தலைவரான ஜனார்த்தன் ரெட்டிக்கு, "பேக்ஸ்' மூலம் அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த கடிதங்களை டில்லியில் முகாமிட்டுள்ள தங்கள் ஆதரவாளரும், கர்நாடகா சட்டசபை சபாநாயகருமான ஜெகதீஷ் ஷெட்டாரிடம் ஒப்படைக்கும்படியும் அந்த எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தியுள்ளனர். எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்தால், அதற்கான கடிதங்களை முறைப்படி தங்கள் கட்சித் தலைவரிடம் தான் ஒப்படைக்க வேண்டும். ஆனால், அதிருப்தி கோஷ்டி தலைவருக்கு கடிதங்களை அனுப்பி வைத்துள்ளனர். இதனால், பா.ஜ., வில் உள்ள நெருக்கடி வித்தியாசமாக இருக்கிறது.

இறங்கி வந்தார் எடியூரப்பா:இதற்கிடையே, பா.ஜ., தலைவர்களுடன் நடத்திய தொடர் பேச்சுவார்த்தையை அடுத்து, ரெட்டி சகோதரர்களை சமாதானப் படுத்துவதற்கு முதல்வர் எடியூரப்பா தயாராகியுள்ளார். இதன் முதல் கட்டமாக, ரெட்டி சகோதரர்களின் கோரிக்கையை ஏற்று, தனது முதன்மை செயலராக இருந்த பாலிகாரை, அந்த பதவியில் இருந்து மாற்ற உத்தரவிட்டுள்ளார்.மேலும், ரெட்டி சகோதரர்களுக்கு எதிராக செயல்படும் மாநில அமைச்சர் ஷோபாவையும், அமைச்சர் பதவியில் இருந்த நீக்கவும் அவர் சம்மதித்துள்ளதாக தெரிகிறது. இது தவிர, பெல்லாரி மாவட்டத்தில் இருந்து மாற்றம் செய்யப்பட்ட 18 அதிகாரிகளை மீண்டும் அங்கு மாற்றுவதற்கும் எடியூரப்பா தயாராகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து எடியூரப்பா கூறியதாவது:ரெட்டி சகோதரர்களுக்கு சாதகமாக சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அவர்களின் மேலும் சில கோரிக்கைகளையும் பரிசீலிக்க தயாராக உள்ளேன் என, கட்சி மேலிடத்திடம் தெரிவித்துள்ளேன். கட்சியின் நலன் கருதி இதுபோன்ற நடவடிக்கைளை எடுக்க திட்டமிட்டுள்ளேன். நான், பா.ஜ.,வின் தீவிர விசுவாசி. கட்சி மேலிடம் எடுக்கும் எந்த முடிவுக்கு கட்டுப்படுவேன்.இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

ஐதராபாத் புறப்பட்டார் ரெட்டி: கடந்த சில நாட்களாக டில்லியில் முகாமிட்டிருந்த அதிருப்தி கோஷ்டி தலைவர் ஜனார்த்தன் ரெட்டி, நேற்று ஐதராபாத் புறப்பட்டுச் சென்றார். முன்னதாக, பா.ஜ., மூத்த தலைவர்கள் சுஷ்மா சுவராஜ், வெங்கையா நாயுடு ஆகியோருடன் அவர் ஆலோசனை நடத்தினார். இதில், ரெட்டி சகோதரர்களின் சில கோரிக்கைகளை எடியூரப்பா செயல்படுத்த சம்மதித்திருப்பது குறித்து அவரிடம், கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்தனர். இதில் ஜனார்த்தன் ரெட்டி ஓரளவு சமாதானம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் நேற்று ஐதராபாத் புறப்பட்டுச் சென்றார்.

இதுகுறித்து பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:ரெட்டி சகோதரர்களின் முக்கிய கோரிக்கைகளை எடியூரப்பா ஏற்றுக் கொண்டுள்ளார். இதனால், ரெட்டி சகோதரர்களின் கை ஓங்கியுள்ளது. இதன் முதல் கட்டமாக, தனது முதன்மை செயலரை மாற்றுவதற்கு எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, ஐதராபாத் ஓட்டல்களில் தங்கியுள்ள தனது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை சந்தித்து, அவர்களை சமாதானப் படுத்தும் முயற்சியில் ரெட்டி இறங்கியுள்ளார். இதற்காகவே, அவர் ஐதராபாத் புறப்பட்டுச் சென்றுள்ளார்.இவ்வாறு பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜனார்த்தன் ரெட்டி ஐதராபாத் புறப்பட்டுச் சென்றுள்ளது, பா.ஜ., வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரெட்டி சகோதரர்களின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என, பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை: