சனி, 28 நவம்பர், 2009

வெளிநாடுகளில் அரசியல் கட்டமைப்பு ஏற்படுத்தி பிரபாகரன் வழிகாட்டலில் தொடர்ந்து போராடுவோம்: விடுதலைப்புலிகள் மாவீரர் தின அறிவிப்பு


உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள் நேற்று மாவீரர் தினத்தை எழுச்சியுடன் கடைபிடித்தனர். இங்கிலாந்தில் நடந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். கனடா, ஆஸ்திரேலியா, டென் மார்க், பிரான்ஸ், அமெரிக் காவிலும் மாவீரர் தின நிகழ்ச்சிகள் எழுச்சியாக நடந்தன.
ஒவ்வொரு ஆண்டும் மாவீரர்தின உரையை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் வன்னிப் பிரதேசத்தில் நிகழ்த்துவர். கடந்த ஆண்டு வான்புலிகளின் ஹெலி காப்டர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்திய பிறகு பிரபாகரன் வீரஉரையாற்றினார். ஆனால் இந்த ஆண்டு விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலகம் சார்பில் மாவீரர் தின உரை நேற்று வெளியிடப்பட்டது.
ஈழத்தமிழ் இனம் வரலாற்று ரீதியாக எவ்வாறு முடக்கப்பட்டது என்பது அந்த உரையில் தெளிவாக கூறப்பட்டிருந்தது. தமிழர்களின் நிலப்பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்ட விதமும் கூறப்பட்டிருந்தது.
சிங்களர்களின் சூழ்ச்சிக்கு உலக நாடுகள் அமைதியாகி விட்ட நிலையில் அடுத்து செய்யப்போகும் நடவடிக்கைகள் குறித்து இந்த உரையில் விடுதலைப்புலிகள் தெளிவுப்படுத்தி உள்ளனர்.

அந்த மாவீரர் தின உரையின் ஒரு பகுதி வருமாறு:-
எமது பாசமிகு தமிழ் மக்களே, வன்னியில் நிகழ்ந்து முடிந்த மனிதப் பேரழிவைத் தொடர்ந்து எமது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் தொடர்ந்து கொண்டிருக்கும் மக்களின் பேரவலத்தை முடிவுக்குக் கொண்டு வரும் முகமாகவும் எமது அரசியல் ராஜதந்திர நகர்வுகளை சர்வதேசத்தில் விரிவாக்கிக் கொண்டிருக்கிறோம். எமது அமைப்பின் அரசியற்கட்டமைப்பை வெளி நாடுகளில் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.
இந்தச் செயற்பாடுகளையும் வழிமுறைகளையும் கூட குழப்புவதற்கும் ஒடுக்குவதற்கும் இலங்கை அரசுதரப்பு மிகக் கடுமையான முயற்சியில் ஈடுபடுகின்றது. மக்கள் ஜனநாயக வழியில் தமது எண்ணங்களை வெளிப்படுத்தவும் செயற்படுத்தவும் முயற்சிப்பதைக் கூடப் பொறுத்துக் கொள்ள முடியாத நிலையிலேயே சிங்களப் பேரினவாதம் இன்றுள்ளது.
இலங்கை சுதந்திரமடைந்ததாகச் சொல்லப்படும் நாளிலிருந்து, மாறி மாறி பதவிக்கு வந்த சிங்கள ஆட்சியாளர்கள் தமிழரின் அடையாளத்தை அழித்து தமிழினத்தை இல்லாது ஒழிக்க வேண்டுமென கங்கணம் கட்டி நிற்கின்றார்கள். எமது தாயக மக்களின் குரல்வளை நசுக்கப்பட்டு அவர்கள் தமது உணர்வுகளைச் சொல்ல முடியாதவாறு சிங்களப் பேரினவாத அரசு தொடர்ந்தும் செயற்பட்டு வருகிறது. எமது மக்களுக்கு நீதியான, நியாயமான, கவுரவ தீர்வைத் தருவதற்கு சிங்கள ஆட்சியாளர்கள் எப்போதுமே தயாராக இருந்ததில்லை.
நீண்டகால அடிப்படையில் எமது தாயக விடுதலைக்கான போரினை பல்வேறு வடிவங்களில் உள்ளக வெளியக சூழல்களை கருத்தில் கொண்டு முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு எமக்கு உண்டு.
அதே நேரம் தாயகத்திலுள்ள அனைத்து தமிழ் முஸ்லிம் கட்சிகளும் எமது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக கடந்த காலத்தில் செயற் பட்டது போன்று இனிவரும் காலங்களிலும் ஒற்றுமையோடும் தன்னல மற்றும் செயற்பட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.

எமது லட்சியப்பாதை அனைவரையும் அரவணைத்து புதிய சூழல்கள், புதிய நட்புகளை தேடி உலக தமிழர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு எமது விடுதலையினை வென்றெடுக்க முன்வருமாறு இந்த புனித நாளில் கேட்டுக்கொள்கின்றோம்.
புலம் பெயர்ந்து வாழும் தமிழீழ உறவுகளே, தமிழ் நாட்டு உடன் பிறப்புக்களே, உலகெலாம் பரந்து வாழும் தமிழ்மக்களே, மாவீரர்களின் லட்சியக்கனவு நிறைவேறும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம். சிங்களத்துடன் இனிமேலும் சேர்ந்து வாழ முடியாது. சிங்களம் நீதி வழங்கும் என்று நினைப்பது பேதைமை.

சிங்கள தேசத்தை நம்பி ஏமாறுவதற்கு உலகத் தமிழினம் தொடர்ந்தும் தயாராக இல்லை.
தாயக விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த முப்பதினா யிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களின் தியாகங்களும் இப்போராட்ட காலத்தில் கொல்லப்பட்ட ஓர் லட்சத்திற்கும் மேற்பட்ட எமது மக்களின் இழப் புகளும் ஒவ்வொரு தமிழரின் மனதிலும் விடுதலைத் தீயை மூட்டி யுள்ளது. காலம் காலமாக சிங்களப் பேரினவாதி களால் ஏமாற்றப்பட்ட கசப்பான வரலாறுகளை நினைவிற்கொண்ட எமது விடுதலைப் பயணத்தைத் தொடர்வோம்.
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் வழிகாட்டலில், எந்தத் தடைகள் வந்தபோதும் எமது உரிமைகளுக்காக இறு திவரை போராடிய மாவீரர்கள் காட்டிய பாதையில் தொடர்ந்தும் போராடி தமிழீழத் தனியரசைக் கட்டியமைப்போம் என இந்நாளில் நாம் அனைவரும் உறுதி எடுத்துக் கொள்வோம்.
இவ்வாறு அந்த உரையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: