செவ்வாய், 24 நவம்பர், 2009

எதிரிக்கு எதிரி நண்பனா?

எதிரிக்கு எதிரி நண்பன். அந்த நண்பனே எதிரியாக மாறிவிட்டால், அவனோட எதிரி நண்பன். அவனும் எதிரியா மாறிட்டா... அவனோட எதிரி நண்பன். இதுதான் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை. ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் இருந்தபோது, அங்கிருந்த பழங்குடி மக்களுக்கு ஆயுதம் கொடுத்து, பயிற்சி கொடுத்து தீவிரவாதிகளாக மாற்றியது அமெரிக்கா. துப்பாக்கியையே பார்த்திராத அந்த மக்களுக்கு ஏவுகணைகளையும் ஏ.கே. 47களையும் அறிமுகம் செய்து வைத்தது. அப்பாவிக் கூட்டம் அராஜக கூட்டமாக மாறியது.

ரஷ்ய படைகளை ஆப்கனில் இருந்து வெளியேற்றியதில் இந்தக் கூட்டத்துக்கு முக்கியப் பங்கு உண்டு. அதுதான் இப்போது தலிபான் அமைப்பாக மாறி, வளர்த்து விட்ட அமெரிக்காவுக்கே குடைச்சல் கொடுத்து வருகிறது. இப்போது அந்த தலிபானை ஒழிக்க, அந்த அமைப்புக்கு எதிரான பழங்குடி மக்களுக்கு ஆயுதம் கொடுக்க முடிவு செய்துள்ளது அமெரிக்கா.

ஆப்கனில் தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்ற கதைதான் நடக்கிறது. கடைநிலை ஊழியரில் தொடங்கி அதிபர் கர்ஸாய் வரை ஊழல் கொடி கட்டிப் பறக்கிறது. அமெரிக்கா கொட்டிக் கொடுக்கும் டாலர்கள் அரசியல்வாதிகளின் பையை நிரப்பி வருகிறது. இவ்வளவு கொடுத்தும் பயனில்லை. அங்கு நேட்டோ படைகளுக்கு தலிபான் தீவிரவாதிகள் தண்ணி காட்டி வருகிறார்கள். அவர்களை அடக்க ஆப்கன் ராணுவமும், போலீசும் பத்தவில்லை. அவர்கள் தயாராகும் வரை, அவர்களுக்குப் பதிலாக இப்போதைக்கு, தலிபானுக்கு எதிரானவர்களை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது அமெரிக்கா.

மீண்டும் ஒரு அப்பாவி கூட்டத்தை, தீவிரவாதக் கூட்டமாக மாற்றத் தயாராகி விட்டது.
தீவிரவாத அமைப்புகளை அழிக்க ராணுவம், அதிரடிப்படை என முறையான அமைப்புகளை உருவாக்கி தாக்குவதுதான் பலன் தரும். அப்படி இல்லாமல், ஏறக்குறைய கூலிப் படை போல் செயல்படும் கூட்டங்களுக்கு ஆயுதமும், டாலரும் அள்ளிக் கொடுத்தால், இன்று ஆதரவாக இருக்கும் கூட்டம், எப்போது வேண்டுமானாலும் எதிராகத் திரும்பும். உலக வரலாற்றில் இதுபோன்ற சம்பவங்கள் திரும்பத் திரும்ப நடந்திருக்கின்றன. இருந்தாலும் அதிலிருந்து யாரும் பாடம் கற்பதில்லை. அமெரிக்காவும் விதி விலக்கல்ல.

கருத்துகள் இல்லை: