திங்கள், 30 ஆகஸ்ட், 2010

என்ன நடக்கிறது காஷ்மீரில் ?

 
பாரமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்த 14  வயது " வாமிக்  பாரூக்குக்கு " டாம் அண்ட் ஜெர்ரி கார்டூன்கள் என்றால் அவ்வளவு பிரியம். அறிவியல் பாடங்களில் அவன்தான் பள்ளியில் முதல் மாணவன்.பள்ளியிலிருந்து வீடு திரும்பியதும் நீல நிற யுனிபார்மைக் கழற்றி வைத்துவிட்டு பக்கத்துவீட்டு நண்பர்களுடன்,விளையாடப் போனான். தெருவோர வியாபாரியான அவனின் அப்பா வீட்டில் இல்லை.

பாரூக்கின் அம்மா மைசூன் வீட்டில் இரவு உணவு தயாரித்துக்கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்கு வெளியே ஒரு பெரும் சப்தம் கேட்டது.மைசூனுக்கு சர்வ நிச்சயமாய் தெரிந்தது அது துப்பாக்கி சூடு என்று. பதத்தற்றதுடன் வெளியே ஓடி வந்தார். அங்கே பாரூக்,தலையில் பாய்ந்த குண்டுடன் ரத்தம் வழிய இறந்துகிடந்தான்.

ஒரே மகன் பாரூக் அவர்களை விட்டுப் போய்விட்டான். இப்போது அவனின் பெற்றோர்கள் இந்திய ராணுவத்தை எதிர்த்து போராடி காயம்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்டு இருக்கும் ரத்ததான முகாமில் இருக்கிறார்கள்.


" காஷ்மீர் மக்கள் எதற்காக சுதந்திரம் கேட்கிறார்கள் என்பது எனக்கு எப்போதும் புரிந்தது இல்லை. என் செல்ல மகன் பாரூக் இறந்த பிறகு எனக்கு எல்லாம் தெளிவாக புரிகிறது.எங்களுக்கு தேவை துப்பாக்கிகள் அல்ல; சுதந்திரம்! என்கிறார் மைசூன்.இவர் மட்டும் அல்ல; எந்தவித இயக்கப் பின்னணியும் இல்லாத சாதாரண காஷ்மீர் பெண்கள் இன்று போராட்டக்களத்தில் நிற்கிறார்கள்.

ராணுவத்தின் துப்பாகிகளை எதிர்த்து 15 வயது சிறுவன் கல் எறிகிறான்.ஒரு முஸ்லிம் பெண் கையில், கற்களைப் பொருக்கி இளைஞர்களுக்குத் தருகிறார்.காஷ்மிரின் போராட்ட வரலாற்றில் இத்தகைய காட்சிகள் புத்தம் புதியவை .பற்றி எரியும் காஸ்மீரில் இந்திய ராணுவத்தின் துப்பாக்கி சூட்டில்   கடந்த 60 நாட்களில் 53 பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.

ஆனாலும் காஷ்மீரில் இன்னும் போராட்டம் தொடர்கிறது." இத்தனை நாட்கள் இயக்கங்கள் துப்பாக்கியால் " சுட்டபோது அவற்றை பாகிஸ்தான் தருகிறது என்றார்கள்.இப்போது அந்த மக்கள் கற்களைக் கொண்டு போராடுகின்றனர். "கற்களையுமா பாகிஸ்தான் "  தருகிறது என்று காட்டமாகக் கேட்கிறார் காஷ்மீர் பிரச்சனையில் தொடர்ந்து அக்கறை காட்டிவரும் பேராசிரியர் கிலானி.


ஐந்து லட்சம் ராணுவத்துருப்புகள்,பல்லாயிரகணக்கான துணை ராணுவப் படைகள்,உள்ளூர் போலீஸ்,என காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் ராணுவத்தால் நிரப்பப்பட்டு இருக்கிறது. ஏன் ? என்ன  நடக்கிறது காஷ்மீரில்?. அதற்கு காஷ்மிரின் வரலாறு கொஞ்சமாவது தெரிந்து கொள்ளவேண்டும்.  

காஷ்மீரில்  நடப்பது வெறுமனே இந்து-முஸ்லிம் பிரச்சினையோ,
இந்தியா -பாகிஸ்தான் நாடுகளுக்கிடையான இடமபிடிக்கும்  போட்டியோ அல்ல; அதன் ஆணி வேர் இந்திய பிரிவினையில் இருந்து தொடங்குகிறது. 
காஷ்மீரில் பெரும்பான்மையாக முஸ்லிம் மக்கள் இருந்தபோதிலும்,
சுதந்திரத்தின் போது" ஹரிசிங்"  என்ற இந்து மன்னர்தான் காஷ்மீரை ஆண்டு வந்தார். அவர் இந்தியாவுடனோ,அல்லது பாகிஸ்தானுடனோ காஷ்மீரை இணைக்க மறுத்துவிட்டார்.

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

வாலிபக் கவிஞன் வாலி ! சிறப்புப் பார்வை -1

 
ஊக்குவிக்க ஆளிருந்தால் ஊக்கு விற்கும் ஆள்கூட தேக்கு விற்பான் !
கவிஞர் வாலியின் இளைமைக்கால கவிதை வரிகள்.  

தமிழ் சினிமாவின் எவர்க்ரீன் வாலிபன்.பக்தி இலக்கியம் எழுதினால் ஸ்ரீராமன். சினிமா பாட்டெழுத வந்துவிட்டால் வாலிபனாகிவிடுவார் இந்த வாலிபக்கவிஞன்.
வாலியின் பெற்றோர் பெயர் : ஸ்ரீனிவாச அய்யங்கார்-பொன்னம்மாள்.
ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்ட வாலி பிறந்தது, வளர்ந்தது திருவரங்கத்தில். தன் நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு ‘நேதாஜி” என்னும் கையெழுத்துப் பத்திரிக்கையைத் துவக்கினார். 

அதன் முதல் பிரதியை வெளியிட்டவர் எழுத்தாளர் கல்கி. அன்று திருச்சி வானொலி நிலைய அதிகாரி பார்த்தசாரதி அவர்களும் வந்திருந்ததால் வானொலிக்கு கதைகள் நாடகங்கள் எழுதிக் கொடுக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

திருவரங்கத்தில் வாலி அவர்கள் நடத்திய அந்தக் கையெழுத்துப் பத்திரிக்கையில் பல இளைஞர் கூட்டமே பங்கேற்றுக் கொண்டது. அப்படிப் பங்கேற்று கொண்டவர்களில் ஒருவர் பின்னாளில் பெரும் புகழ்பெற்ற எழுத்தாளரான சுஜாதா.

வாலி எப்பவும் உடுத்துவது, நூலாடையாக இருந்தால் வெள்ளை,சில்க்காக இருந்தால் சந்தன நிறம்.இவை தவிர வேறெதையும் விரும்புவதில்லை.


வாலி படங்களிலும் நடித்திருக்கிறார். பொய்க்கால் குதிரை, சத்யா,
பார்த்தாலே பரவசம், ஹே ராம், இவர் நடித்த படங்கள்.
 
அம்மா,பொய்க்கால் குதிரை, நிஜ கோவிந்தம்,பாண்டவர் பூமி,
கிருஷ்ணா விஜயம், என மொத்தம் 15  புத்தகங்கள் எழுதி இருக்கிறார். இதில் கவிதை,
உரைநடை,சிறுகதை என எல்லா வகையும் இதில் அடக்கம்.
 மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், கவிஞர் வாலி இருவரும் சிறந்த நண்பர்களாக இருந்தவர்கள். 1964 -ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த படகோட்டி படத்தில் இவர் எழுதிய 

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்  
அவன் யாருக்காகக்  கொடுத்தான் 
ஒருத்தருக்கா கொடுத்தான் 
இல்லை ஊருக்காக கொடுத்தான்

என்ற இந்த ஒரு பாட்டின் மூலம் ஒட்டு மொத்த தமிழகத்தையும் திரும்பிப் பார்க்கவைத்த கவிஞர். 

புதன், 25 ஆகஸ்ட், 2010

யாருக்கு அவமானம் ! இந்திய அரசே சிந்தித்து பார் !


"உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் இந்தியர் தானா' என, மத்திய மனிதவள அமைச்சகம் கேள்வி எழுப்பிய விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், தனக்கு ஐதராபாத் பல்கலை வழங்கவிருந்த கவுர டாக்டர் பட்டத்தை ஆனந்த் ஏற்க மறுத்துள்ளார். 

பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளதால், ஆடிப் போன மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல்,  செஸ் சாம்பியன் ஆனந்திடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன் ஆனந்த். இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமை இவருக்கு உண்டு. உலக செஸ் சாம்பியனும் கூட. இந்தியாவைச்  சேர்ந்த இளைய தலைமுறையினர், செஸ் விளையாட்டில் சாதிப்பதற்கு முன்னோடியாக விளங்கியவர்.இவரது சாதனைகளை பாராட்டும் வகையில், இந்திய அரசு இவருக்கு பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது. 

சர்வதேச அளவில் நடக்கும் செஸ் போட்டிகளில் பங்கேற்பதற்கு வசதியாக இவர், ஸ்பெயினில் தங்கியுள்ளார்.இந்நிலையில், ஐதராபாத் பல்கலைக் கழகம், ஆனந்துக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க  முடிவு செய்தது. இதற்கான கோப்புகளை கடந்தாண்டு மத்திய மனித வள அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தது. ஆனால், இது தொடர்பாக முடிவு எடுப்பதில் மனிதவள அமைச்சகம் தாமதித்தது. 

ஆனந்த், ஸ்பெயின் குடியுரிமை பெற்றவர் என்ற தகவல், மனிதவள அமைச்சகத்துக்கு கிடைத்தது தான் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.எனவே, ஆனந்த் இந்திய குடியுரிமை உடையவர் தான் என்பதை நிரூபிக்கும்படியும், அதற்கான சான்றுகளை அளிக்கும்படியும் மனிதவள அமைச்சகம் சார்பில், ஐதராபாத் பல்கலைக்கு வலியுறுத்தப்பட்டதாக தெரிகிறது.


இதற்கிடையே, ஐதராபாத்தில் தற்போது நடந்து வரும் சர்வதேச கணிதவியலாளர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆனந்த் நேற்று வந்தார். அந்த தேதியிலேயே அவருக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்க, ஐதராபாத் பல்கலை திட்டமிட்டது. ஆனால், மத்திய மனிதவள அமைச்சகத்திடம் இருந்து இதுகுறித்து எந்த பதிலும் வரவில்லை. 

இதனால், பட்டமளிப்பு விழாவை தள்ளி வைப்பதாக அறிவித்தது. இந்த தகவலால், ஆனந்த்  வருத்தம் அடைந்தார். இதற்கு பதிலடியாக,"எனது குடியுரிமை குறித்து கேள்வி எழுப்பி, சர்ச்சையை கிளப்பிய இந்த டாக்டர் பட்டத்தை ஏற்கப்போவது இல்லை என, ஆனந்த் அதிரடியாக அறிவித்தார். 

சனி, 21 ஆகஸ்ட், 2010

ஆக்டோபசை அடுத்து முதலை ! பலிக்குமா ஆருடம்  
ஆஸ்திரேலியாவில் இன்று நடைபெறும் பிரதமர் தேர்தலில்  50 
ஆண்டுகளில் இல்லாதகடும் போட்டி நிலவுகிறது. அதில் தற்போதைய பிரதமர் "ஜூலியா"  வெற்றி பெறுவார் என முதலை ஒன்று ஜோசியம் கூறியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான பொது தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தற்போதைய பெண் பிரதமர் ஜூலியா ஜிலார்ட் போட்டியிடுகிறார்.அவரை எதிர்த்து எதிர் கட்சி வேட்பாளராக " டோனி அபார்ட் " களத்தில் நிற்கிறார். 

கடந்த சில மாதங்களாக இந்த இருவருக்கும் இடையே கடும்போட்டி நிலவுகிறது. தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கிறது.தேர்தல் பிரச்சாரத்தின் போது அவ்வப்பொழுது எடுக்கப்பட்ட கருத்து கணிப்புகளில் இரண்டுபேருக்குமிடையே சிறிதளவு இடைவெளியே இருப்பதாக கருத்து கணிப்புக்கள் தெரிவித்தன.

இந்த தேர்தலில் யாருக்கு வெற்றி என்பதை உறுதியாக கூறமுடியாத நிலையில் அரசியல் பார்வையாளர்கள் உள்ளனர்.ஆனால் இபொழுது உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் முடிவை தன ஜோசியத்தின் மூலம் கூறி உலகப் புகழ் பெற்றுவிட்ட " ஆக்டோபஸ் பால் " இந்த தேர்தலில் " ஜூலியா" வெற்றிபெறுவார் என்று கணித்துள்ளது. 

இதை பின்பற்றி ஆஸ்திரேலியாவில்,சிட்னியில் உள்ள முதலை பண்ணையில் உள்ள " ஹேரி " என்ற முதலையும் இந்த தேர்தலில் " ஜூலியா வெற்றிபெறுவார் என்று கணித்துள்ளது. இந்த முதலையின் தொட்டிக்கு மேல் இரண்டு கயிறுகளில் கோழி கறி,மற்றும் களத்தில் உள்ள இரண்டு வேட்பாளர்களின் படங்களும் கட்டி தொங்கவிடப்பட்டது.

ஒரு நிமிடம் இரண்டு படங்களையும் அதன் உடன் இணைக்கப்பட்ட கோழி கறியையும் உற்று நோக்கிய " ஹேரி " ஜூலியா படம் இருந்த கோழி கறியை கவ்விசென்றது. இதனை அடிப்படையாக வைத்து இந்த தேர்தலில்" ஜூலியா" வெற்றிபெறுவார் என்று  கணிக்கப்பட்டுள்ளது. 


இந்த ஜோசியம் பலிக்குமா என்று ஆஸ்திரேலியா மக்கள் ஆவலுடன் தேர்தல் முடிவை எதிர்பார்த்து காத்திருகின்றனர்.


செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் காமன்வெல்த் பாடல்கள்

    
காமன்வெல்த் போட்டிக்காக இசையமைத்த பாடல், இன்னும் 10 நாட்களில் வெளியிடப்படும். இது உலக கோப்பை கால்பந்து பாடலைவிட பிரபலமாகும்,'' என, இசையமைப்பாளர் ரஹ்மான் உறுதி தெரிவித்துள்ளார்.

டில்லியில் வரும் அக்டோபரில்(3-14) காமன்வெல்த் போட்டி நடக்க உள்ளது. இப்போட்டிக்கான மையநோக்கப் பாடலை, ஆஸ்கர் விருதுகள் வென்ற, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இப்பாடல் "பிரிவியூ' நிகழ்ச்சிக்கு மீடியா குழுவினர் நேற்று அழைக்கப்பட்டிருந்தனர். 
 
பாடலை இயக்கிய ஷியாம் பெனகல், தயாரிப்பாளர் பரத்பாலா, அமைச்சர் குழு தலைவர் ஜெய்ப்பால் ரெட்டி மற்றும் காமன்வெல்த் போட்டிகள் அமைப்புத் தலைவரான சுரேஷ் கல்மாடி ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஆனால் மையநோக்கப் பாடல் ஒலிபரப்பப்படவில்லை.  

இதுகுறித்து ரஹ்மான் கூறியது:
அறிமுக நிகழ்ச்சி பெரிய அளவில் திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது வெளியிடப்படும் பாடல் இந்தியர்களின் மனதில் இடம்பெறும். இந்த பாடல் நிச்சயம் இந்தியர்களை பெருமை கொள்ளச் செய்யும். கொஞ்சம் பொறுமையாக இருந்தால் எல்லாம் சாதகமாகவே நடக்கும்.
காமன்வெல்த் பாடலுக்கான பணியில் நான் கடந்த ஆறுமாதமாக ஈடுபட்டுள்ளேன். இதற்காக என்னுடைய மற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்திருந்தேன். இதிலிருந்தே இந்நிகழ்ச்சியை எந்தளவுக்கு தீவிரமாக எடுத்துக்கொண்டேன் என உங்களுக்குத் தெரியும்.

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

இனிய சுதந்திரத் தின நல்வாழ்த்துக்கள் !இன்றைய நாள் நம்வாழ்வில் ஒரு பொன்னாள்! ஆம் இன்று 
நம்முடைய  64 வது  சுதந்திர நாள். அடிமை சங்கிலி அறுக்கப்பட்டு 
சுதந்திர காற்றை சுவாசித்த இனியநாள் .

110 கோடி மக்களைக்  கொண்ட நம் பாரதம்  பல்வேறு கலாச்சாரங்கள்
மொழிகள்,பழக்கவழக்கங்கள்,மதங்கள்,ஆகியவற்றால் பிண்ணி பிணைக்கப்பட்டது. இன்று அத்துணை வேறுபாடுகளையும் மறந்து நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம்.

இன்று அணைத்து சுதந்திரமும் நமக்கு கிடைத்திருகிறது.எழுத்து சுதந்திரம்,பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம்,தனி மனித சுதந்திரம், இப்படி எல்லா சுதந்திரங்களையும் அனுபவித்தவர்களாக நாம் இருக்கிறோம்.காரணம் நாம் வாழ்வது சுதந்திர இந்தியாவில். 

ஒன்றுபட்டு வாழும் நம் தேசத்தில்,ஆங்காங்கே வன்முறைகளும்,தீவிரவாத தாக்குதல்களும், மதக் கலவரங்களும் நடைபெற்றாலும் அத்தனை தீய சக்திகளையும் ஒருமுகமாக,ஒன்றுபட்ட இந்தியர்களாக நின்று அந்த தீய சக்திகளை வென்று காட்டுகிறோமே அதுதானே நம் ஒற்றுமை !

இந்த ஒற்றுமை என்றென்றும் நிலைத்து நின்று,நாம் அனைவரும் பிறப்பால் இந்தியர்கள் என்று இந்த உலகுக்கு காட்டுவோம். எல்லா துறைகளிலும் வளர்ச்சி அடைந்த இந்தியாவை, ஒரு வல்லரசு இந்தியாவை படைத்துக் காட்டுவோம்.

அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவை அந்நியரிடமிருந்து மீட்டு ,சுதந்திரம் பெற  தமது,உடல்,பொருள்,ஆவி  அத்துனையையும் இழந்து நமக்கு சுதந்திரம் வாங்கித் தந்த அத்தனை சுதந்திரப் போராட்ட வீரர்களையும்,அவர்களின் தியாகத்தையும் இந்த நன்னாளில் நினைவு கூர்வோம். 

அந்த தியாக தீபங்கள் கண்டக் கனவை நனவாக்குவோம்.

வாழ்க பாரதம்                                  வளர்க இந்தியர் ஒற்றுமை

பட்டொளி வீசி பறக்கட்டும் நம் தேசிய கொடி
                              பாரெங்கும் பரவட்டும்  இந்தியர் ஒற்றுமை 

இந்த இனிய நாளில் வலைப்பூ பதிவர்களுக்கும்,வலைப்பூ நண்பர்களுக்கும்,வலைப்பூ வாசகர்களுக்கும்  என்  

                "இனிய சுதந்திர  தின நல்வாழ்த்துக்கள்" 


நட்புடன்

.

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

பிளாக்பெரியை தொடர்ந்து கூகுளுக்கும் சிக்கல் ஆரம்பம்


   
பிளாக்பெரியை தொடர்ந்து கூகுள் மற்றும் ஸ்கைப் இணையதளங்களின் மெசேஜ் சேவைகளை தடை செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

பிளாக்பெரி மொபைல் போன்கள் வாயிலாக அனுப்பப்படும் இமெயில்கள் மற்றும் மெசேஜ்கள் மூன்றாவது நபர் படிக்க முடியாத அளவுக்கு மிக சிக்கலான கோடிங் பயன்படுத்தி ரகசிய குறியீடுகளாக மாற்றப்படுகிறது. பிளாக்பெரி பயன்படுத்தும் தீவிரவாதிகளுக்கு இடையிலான செய்தி பரிமாற்றத்தைக் கண்காணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதால், சாதாரண கோடிங்குக்கு மாற வேண்டும்; அல்லது கோடிங் ரகசியத்தை இந்தியாவுக்கு தர வேண்டும் என்ற கோரிக்கை பிளாக்பெரி முன்பு வைக்கப்பட்டது.

இதற்கு சம்மதிக்காத பட்சத்தில் பிளாக்பெரி மெசேஜ் சேவைக்கு தடை விதிக்கப்படும் என்று கூறி 31 தேதி வரை கெடு விதிக்கப்பட்டுள்ளது. பிளாக் பெரியை போல் கூகுள் மற்றும் ஸ்கைப் இணையதளங்களும் சிக்கலான கோடிங்கை பயன்படுத்தி வருகின்றன. 

இதனால் பிளாக்பெரியைப் போல் கூகுள் மற்றும் ஸ்கைப் நிறுவனங்களும் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. பிளாக்பெரி பிரச்னை தீர்ந்தவுடன், கூகுள் மற்றும் ஸ்கைப் பிரச்னைகளை கையில் எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

புனித ரமழானை வரவேற்போம் !
புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம், அவனது அருளும் சாந்தியும் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் குடும்பத்தினர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!


நம்மை நோக்கி வந்திருக்கும் இம்மாதம் பல சிறப்புக்களை தன்னகத்தே கொண்ட ஒரு மாதமாகும். இம்மாதத்தில் ஒரு முஸ்லிம் கடைபிடிக்கவேண்டிய அனைத்து ஒழுங்கு முறைகளையும் அல் குர்ஆனும், அஸ்ஸுன்னாவும் தெளிவு படுத்தியுள்ளது.
ரமழான் மாதத்தில் முஸ்லிமான, வயது வந்த, புத்தி சுவாதினமுள்ள, ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் நோன்பு நோற்பது கடமையாகும்.’இறைவிசுவாசிகளே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது எப்படி நோன்பு விதியாக்கப்பட்தோ அதே போன்று உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது நீங்கள் அதன் மூலம் இறையச்சமுடையவர்கள் ஆகலாம்‘ (அல்பகரா 2:183).


ரமழான் மாதத்திற்குரிய பிறையை பார்ப்பதன் மூலமோ பிறை தென்படாத பொழுது ஷஃபானை முப்பதாக கணக்கிடுவதன் மூலமோ நோன்பு நோற்பது கடமையாகும். ‘பிறைப் பார்த்து நோன்பு வையுங்கள், மேக மூட்டம் போன்ற காரணங்களால் பிறை தென்பட வில்லையானால் ஷஃபானை முப்பதாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி).

ரமழான் மாதத்தின் சிறப்பு:ரமழான் மாதம் எத்தகையது என்றால் மனிதர்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய, சத்தியத்தை அசத்தியத்தை பிரித்துக் காட்டும் அல் குர்ஆன் அருளப் பெற்றது, உங்களில் எவர் அம்மாதத்தை அடைவாரோ அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்கட்டும்‘ (அல்பகரா 2: 185).
‘ரமழானின் ஒவ்வொரு இரவிலும் ஜிப்ரீல் (அலை) நபி (ஸல்) அவர்களை சந்தித்து அல்குர்ஆனை ஓதிக்காட்டுவார்கள்’ (புஹாரி)..
இச்செய்திகள் அல்குர்ஆனுக்கும் ரமழானுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை தெளிவுபடுத்துகிறது. அல் குர்ஆனுடனான தொடர்பை குறைத்துக்கொண்ட அதிகமான முஸ்லிம்கள் இச் சந்தர்ப்பத்திலிருந்தாவது அல் குர்ஆனை படிப்பதன் மூலம், அதனை ஆராய்வதன் மூலம், அதன் வழி நடப்பதன் மூலம், வாழ்க்கையின் எல்லா சந்தர்ப்பங்களிலும் அதை தீர்வாக ஆக்கிக் கொள்வதன் மூலம் அதன் பக்கம் நெருக்கத்தை
அதிகப்படித்துக் கொள்ளவேண்டும்.

இரண்டாவது சிறப்பு:ரமழான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின வாசல்கள் திறக்கப்படும், நரகத்தின் வாசல்கள் மூடப்படும், ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்‘ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).

திங்கள், 9 ஆகஸ்ட், 2010

மன அழுத்தத்தைப் போக்க புதிய வழிகள் !எவ்வளவுதான் வேலைச் சுமை , கஷ்ட நஷ்டங்கள் இருந்தாலும் தன்னம்பிக்கையுடன் கடவுள் நம்பிக்கையும் இருந்தால் மன அழுத்தத்தில் இருந்து விரைவில் விடுபடலாம் என  விஞ்ஞானிகள் ஆய்வின் மூலம் கண்டுப்பிடுதுள்ளனர்.

மன அழுத்தத்தில் இருந்து விடுபடும் வழிகள் பற்றி கனடாவின் " டோ" நகரில் உள்ள " ஸ்கார்பேரோ பல்கலைக்கழக " விஞ்ஞானிகள் சமிபத்தில் மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவில் இதற்கான காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளது.  

குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு,அவர்களை தவறு செய்தவர்கள்,தவறு செய்யாதவர்கள் என்று இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஆய்வை மேற்கொண்டனர். இரு தரப்பினது மூளையின் செயல்பாடுகளும் ஆராயப்பட்டன.

தவறு செய்யாதவர்களுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் இருந்தது.இதுவே தங்களை நல்லபடியாக வழி நடத்தும் என்ற நம்பிக்கையும் அவர்களிடம் அதிகம் இருந்தது. அவர்களது வெற்றிக்கு இந்த நம்பிக்கையே காரணமாக இருக்கிறது.

அதிக தவறுகள் செய்கிறவர்களிடம் தன்னம்பிக்கையின்மை,பயம் போன்ற எதிர்மறை எண்ணங்கள் அதிகமாக இருந்தது ஆய்வில்  தெரியவந்தது.இதுவே இவர்களிடம் மன அழுத்தம் அதிகமாக இருபதற்கு முக்கிய காரணங்களாக கண்டறியப்பட்டுள்ளது.

ஆகவே தன்னம்பிக்கையுடன்,கடவுள் நம்பிக்கையும் இருந்தால் 
மன அழுத்தம் கணிசமாக குறையும் என விஞ்ஞானிகள் இந்த ஆய்வின் மூலம் தெரிவித்துள்ளனர்.
                                                                                                                    நட்புடன்

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் -3 வது டெர்மினல்

புது டெல்லியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள " இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின்" மூன்றாவது முனையத்தின் கண்கவர் படங்கள்.

வியாழன், 5 ஆகஸ்ட், 2010

சென்னை மெட்ரோ ரயில்: ஒரு சிறப்புப்பார்வை ! (பகுதி- 2 )

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்ட பணிகள் அசோக் நகர் முதல் கோயம்பேடு வரை 100 அடி சாலையில் போர்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது என்பதை பகுதி-1 -இல் பார்த்தோம்....

மேம்பாலங்கள் அமைத்து அதில் ரயிலை இயக்குவது நாம் பார்த்த ஒன்று.
இந்தியாவில் இது போன்ற ரயில் தடங்கள் அதிகமாக இருக்கிறது. ஆனால் சுரங்கபதை அமைத்து அதில் எப்படி ரயிலை இயக்கப்போகிறார்கள் என்பதை பார்ப்போம்.

இப்போது பறக்கும் ரயிலில் செல்லும்போது கட்டிடங்கள்,மொட்டை மாடிகளை கண்டி ரசிக்கிறோம்.மெட்ரோ ரயிலில் கட்டிடத்தின் அடித்தளத்தை ரசித்தபடி பயணம் செய்யலாம்." டனல் போரிங் மெஷின் " என்னும் நவீன துளையிடும் இயந்திரம் மூலம் பூமிக்கடியில் ஆழத்துக்கு தோண்டி சுரங்கப் பாதை அமைக்கிறார்கள்.

பூமிக்கு மேல் எந்த அதிர்வையும் இந்த பாதை வழியாக செல்லும் ரயில்கள் ஏற்படுத்தாது. 19  இடங்களில் அண்டர் கிரௌண்ட் ரயில்வே நிலையங்கள் அமைய போகிறது. சரியாக அண்ணா சாலை எல்.ஐ.சி கட்டிடத்திற்குக் கீழே ஒரு ரயில் நிலையம் அமையப்போகிறது.

 

இப்படி அமையும் ரயில்வே நிலையங்கள் எப்படி இருக்கும்....


ரயில் மற்றுமின்றி ரயில்வே நிலையங்களும் முழு குளிர்சாதனம் வசதியுடன் அமையும்.கதவுகள் சென்சார் சிஸ்டம் முறையில் இயங்கும்.நிலையங்கள் பற்றிய விபரங்கள் ரயிலுக்கு உள்ளேயே அறிவிக்கப்படும்.முழுவதும் தானியங்கி முறைதான். 

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் திட்ட மதிப்பீடு ரூ.14,600 கோடி. ஒரு கிலோ மீட்டர் பாதை அமைக்க சுமார் ரூ.250 கோடி செலவு. திட்ட மதிப்பில்  59% ஜப்பானின் " அனைத்து நாடுகள் நட்புறவுக்கான அமைப்பு" கடனாக வழங்குகிறது.மீதமுள்ள தொகையை மத்திய,மாநில அரசுகள் பகிர்ந்துகொள்கின்றன.....


இந்த திட்டத்தை முடிக்க 2015 -ம் ஆண்டு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும் அதற்கு முன்பாகவே திட்டத்தை முடிக்க தமிழக அரசும்,இத்திட்டத்திற்கு பொறுப்பேற்றுள்ள துணை முதலமைச்சருமான திரு.மு.க ஸ்டான்லின் அவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார். 

இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்த ரயில் பாதைக்கான மேம்பால பணிகள் முடிவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேம்பால பணிகள் முடிவடைந்ததும் முதல் கட்டமாக " கோயம்பேடு - பரங்கிமலை " "சைதாபேட்டை - விமான நிலையம் " மார்கத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தால் ஏற்படப் போகும் நன்மைகள்:-

சென்னை சென்ட்ரலில் இருந்து அண்ணா நகருக்கு பஸ்சில் செல்ல ஒரு மணி நேரம் ஆகின்றது. அதவும் கூட்டத்தில் பிதுங்கியபடி செல்ல வேண்டிய சூழ்நிலை. இனி அந்த பிரச்சினை இருக்காது. 15  நிமிடங்களில் இந்த ரயிலில் குழு குழு வசதியுடன் சென்று விடலாம்.

ஆறு பெட்டிகளுடன் இயங்கவுள்ள இந்த ரயிலில் ஒரே சமயத்தில் 
1500 பேர் பயணம் செய்யலாம்.இந்த எண்ணிக்கை, குறைந்த பட்சம் 16 பஸ்கள், 300 கார்கள் அல்லது 750   டூ வீலர்கள்
சாலைகளில் இருந்து விலகி கொள்வதற்கு சமமானது.

அதுவும் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் என்ற விகிதத்தில் இயக்கப்பட உள்ளதால் ட்ராபிக் ஜாமே இல்லாமல் போய்விடும்.பஸ்ஸை விட கட்டணம் குறைவாக இருக்கும்,உடனுக்குடன் ரயில் இருப்பதால் கூட்ட நெரிசல் இருக்காது.ரயில் நிலையங்களை ஒட்டி ஷாப்பிங் மால்கள், சினிமா தியாட்டர்கள் வர வாய்ப்புகள் அதிகம். ஒட்டு மொத்தத்தில் சென்னையின் வளர்ச்சி விகிதம் உயரும் என்பதில் சந்தேகமில்லை.பாதுகாப்பு எப்படி :-

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு முதன்மை ஆலோசகராக இருப்பது டெல்லி மெட்ரோ ரயில் கழகம்.அந்த கழகம் தந்திருக்கும் பாதுகாப்பு பற்றிய அறிக்கையில் " எல்லா சாதகபாதகங்களையும் முறையாக ஆய்வு செய்தே திட்டப் பணிகளை தொடங்கியுள்ளோம்.மேலும் அதி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.கட்டுமானங்கள் மிக உறுதியாக இருக்கும்.
பாதுகாப்பு  பற்றி அச்சப்படவே தேவையில்லை என்கிறது அந்த அறிக்கை.உலகெங்கும் பல நாடுகளின் நகரங்களில் மெட்ரோ ரயில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.அந்த வரிசையில் இணையப்போகிறது
" நம் சென்னை ". அந்த இனிய அனுபவத்திற்கு நாம் எல்லோரும் தயாராகுவோம்!

நட்புடன்

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

ஏ.டி.எம் இயந்திரம் உருவான வரலாறு !

  
இன்று பெட்டிக்கடைகளைப்போல் உலகெங்கும் இருக்கிற மொத்த ATM  களின் எண்ணிக்கை  17  லட்சத்திற்கும் அதிகம் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

பணம் எடுக்க என்று  மட்டும் இல்லாமல் ஏராளமான் வங்கி சேவைகளையும்,ரயில்வே டிக்கெட், சினிமா,மற்றும் பில் கட்டணங்கள், உள்பட பல வசதிகளையும் ஏ.டி.எம். வழங்குகிறது.

காரிலிருந்து இறங்காமலேயே பணம் எடுக்கும் வசதியுள்ள " டிரைவ் இன் ஏ.டி.எம்," வேனில் வீடு தேடிவரும் "மொபைல் ஏ.டி.எம்"  கேரளாவில் " படகு ஏ .டி.எம் " என ஏ.டி.எம் பல வகையிலும் நம் வாழ்க்கையோடு பிண்ணிப்பிணைந்த  ஒன்றாகிவிட்டது. 

இப்படி பல புதுமைகளைக்கொண்ட  இந்த ஏ.டி.எம். உருவாக பிள்ளையார் சுழிப் போட்டவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த " ஜான் ஷெப்பர்ட் பாரன்".இந்த ஏ.டி.எம் இயந்திரங்கள் உருவான கதை சுவராஸ்யமானது.ஒரு நாள் அவசரத் தேவைக்காக வங்கிக்கு பணம் எடுக்க சென்றபோது,வங்கி பூட்டப்பட்டு இருந்ததால் மிகுந்த ஏமாற்றம்  அடைந்தார் பாரன்.

வீடு திரும்பிய பாரன் குளிக்க சென்றார்.குளித்துகொண்டிருந்த பாரனுக்கு,இன்றைக்கு அவசரதேவைக்கு பணம் எடுக்கமுடியாமல்  போனதைப் பற்றிய சிந்தனையே மனதில்  ஓடிக் கொண்டிருந்தது. அந்த சிந்தனையின் போது உதித்ததுதான் இந்த ஏ.டி,எம், இயந்திரம்.

1967-ம் ஆண்டு ஜூன் 27 அன்று வடக்கு லண்டனில் "பார்கிளேஸ்  வங்கியில்" பாரன் உருவாக்கிய ஏடிஎம் முதல்  முதலில் நிறுவப்பட்டது. ரசாயனக் குறி இடப்பட்ட சிறப்புக் காசோலையையும்,ஆறு இலக்கம் கொண்ட " பின் " எண்ணையும் கொண்டு அதில் பணம் பெற முடிந்தது. 

ஆறு இலக்கம் கொண்ட " பின் " நம்பரை நினைவில் வைத்துக்கொள்வது  சற்று சிரமமாக இருக்கிறது, எனவே அதை  4  இலக்கம் கொண்ட எண்களாக  மாற்றி தாருங்கள் என்று மனைவி " கரோலின் " கூறியதை ஏற்று,ஆறு இலக்கம் கொண்ட " பின் " நம்பரை நான்கு இலக்கமாக குறைத்தார் பாரன். 

பாரானின் மற்றுமொரு கண்டுப்பிடிப்பு : மீன்களைத் தின்னும் சீல்களை அச்சுறுத்தும்படி திமிங்கல ஒலி எழுப்பும் மீன் பண்ணைகளுக்கான கருவி.
இத்தனைக்கும் சொந்தக்காரரான " ஷெப்பர்ட் பாரன் " இந்தியாவில் ஷில்லாங்கில் பிறந்தவர் என்பது இன்னுமொரு சிறப்பு.    


திங்கள், 2 ஆகஸ்ட், 2010

சென்னை மெட்ரோ ரயில் : ஒரு சிறப்புப் பார்வை !
சென்னைக்கு வரமாக வரப்போகிறது மெட்ரோ ரயில் !

சென்னையின் இப்போதைய மக்கள் தொகை ஏறக்குறைய 1 கோடியை நெருங்கிவிட்டது.தினமும் சென்னையைக் கடக்கும் வாகனங்களின் எண்ணிக்கை 50  லட்சத்துக்கும் அதிகம். வருடந்தோறும் பல லட்ச வாகனங்கள் புதிதாக சாலைக்கு வருகின்றன.

இதுதவிர பேருந்துகளில் மட்டும் நாளொன்றுக்கு 40  லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பயணம் செய்கின்றனர்.சென்னையில் எங்கு பார்த்தாலும் போக்குவரத்து நெரிசல். 10  அல்லது 15  கிலோமீட்டர் தூரத்தை கடக்க  1  மணி நேரத்திற்கும் மேலாகிவிடுகிறது. சாலைகளின் பெரும்பகுதியை  கார்களும்,இருசக்கர வாகனங்களும்,ஆட்டோக்களும் அடைத்துகொள்கிறது.

சென்னையின் பஸ் பயணம் என்பது மிகக்கொடுமையான பயணங்களில் ஒன்றாகிவிட்டது. என்ன தான் குளிர் சாதன பேருந்துகள் விட்டாலும் போக்குவரத்து நெரிசலில் மாட்டிகொள்ளும் போது,பஸ் பயணம் போதுமடா சாமி என்றாகிவிடுகிறது.
 
 
இந்த போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் அருமருந்தாக வரப்போவதுதான் 
" சென்னை மெட்ரோ ரயில் திட்டம் ". 
மெட்ரோ  ரயில் இரண்டு வழித்தடங்களில் பயணிக்கப்போகிறது.மொத்தம் 45 கிலோ மீட்டர் தூரம்.இன்னும் 5 ஆண்டுகளில் மெட்ரோ ரயில் சென்னை மக்களை சுமந்து செல்ல தயார் ஆகிவிடும்.

முதல் வழித்தடம்: வடசென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து  பிராட்வே, சென்ட்ரல், ஸ்பென்சர் பிளாசா,ஜெமினி மேம்பாலம்,சைதாப்பேட்டை, கிண்டி,வழியாக சென்னை விமான நிலையம். இதில் வண்ணாரப்பேட்டையில் இருந்து சைதாப்பேட்டை வரை ( மொத்தம் 14.5  கி.மீ.) சுரங்கப்பாதையாகவும்,மீதமுள்ள பாதை மேம்பாலங்களிலும் அமையப்போகிறது.

இரண்டாவது வழித்தடம்: சென்னை சென்ட்ரலில் தொடங்கி வேப்பேரி,கீழ்ப்பாக்கம்,அமிஞ்சிக்கரை,அண்ணா நகர், கோயம்பேடு, வடபழனி,அசோக் நகர் வழியாக பரங்கிமலையில் நிறைவடையும்.இதில் சென்ட்ரலில் இருந்து அண்ணா நகர் வரை ( 9 .7  கி.மீ.) சுரங்கப்பாதையாகவும் அமைக்கபடுகிறது. புற நகர் ரயில்,பறக்கும் ரயில்,மற்றும் பேருந்து நிலையங்கள் அனைத்தும் இந்த மெட்ரோ ரயில் பாதையுடன் இணைக்கப்படும்.
 
இந்த திட்டத்தில் பயன்படுத்தப்படும் அத்தனை தொழில் நுட்பமும் அதி நவீன தொழில்நுட்பமே.ஒரே தூணில் கட்டப்படும் மேம்பாலங்கள். 30  மீட்டருக்கு ஒரு தூண்.அதில் இரண்டு ட்ராக். இத்திட்டத்தின்  முதல் கட்ட பணிகள் (அசோக் நகர் முதல் கோயம்பேடு வரை ) போர்கால வேகத்தில் நடைபெற்று வருகின்றன. ....  

இன்னும் வரும் ............