புதன், 20 அக்டோபர், 2010

கண்களை விற்றா சித்திரம் வாங்குவது ?

நகரத்து வாழ்க்கையால் ஏற்படுகின்ற நன்மை,தீமைகளையும்,கிராமத்து வாழ்க்கையால் ஏற்படுகின்ற நன்மை தீமைகளைப் பற்றி அலசுவதே இந்த பதிவின் மைய கருத்தாகும்......


கிராம வாழ்க்கையிலிருந்து நாம் நகர வாழ்க்கைக்கு மாறியதால் சுகாதாரம் 
தரமான கல்வி,மருத்துவ வசதி,நுட்பமான தகவல் தொடர்பு,வசதியான போக்குவரத்து,சுதந்திரமான மனநிலை, கைநிறைய வருமானம் என பெற்றது அதிகம்தான்.ஆனால் இழந்தது அதைவிட பலமடங்கு அதிகம் என்பதை கேள்வியே இல்லாமல் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். உண்மையும் அதுவே?

நவீனங்களின் வரவால் தேவைக்கு அதிகமாக ஓய்வை உடலுக்குக் கொடுத்துவிட்டு,நோய்களை வாங்கி கட்டிகொள்கிறோம்.குறிப்பாக பெண்களைப் பொறுத்தவரை வீட்டுவேலைகளை மட்டும்கூட தாங்களே செய்து வந்தாலே வியாதிகள் எங்கோ ஓடிப்போய்விடும்.உதாரணமாக உடலிலிருந்து வியர்வை வெளியேறும் அளவிற்கு வேலைகள் செய்தால்,
உடம்பில் சேரும் சோடியம் தாது உடம்பை விட்டு வெளியேறும்.

சோடியம் தாது  வெளியேறினால் ரத்த அழுத்த நோய் வருவதற்குன்டான வாய்ப்புகள் மிக குறைவாகும். கூட்டுவது,துணி துவைப்பது போன்ற
குனிந்து  நிமிரும்  வேலைகளைச் செய்தால் தசைகள் வலுப்பெற்று முதுகுவலி ,தண்டுவடவலி ஆகிய நோய்கள் வராமல் தடுக்கப்படும். 


மாவாட்டுவது, அம்மி அரைப்பது,பாத்திரம் கழுவுவது, கிணற்றில் தண்ணீர் இறைப்பது போன்ற வேலைகளைச் செய்வதால் கழுத்து,தோள்பட்டை தசைகள் பலப்படும்.கழுத்து நரம்பு தேய்மானம் ஆவது குறைய கூடும்.கர்ப்பிணி பெண்கள் பிரசவ நாள்வரை சின்ன, சின்ன வீட்டு வேலைகளைச் செய்து வந்தால்  இடுப்பு பலம் பெற்று பிரசவம் சுகமாக அமையும் வாய்ப்புகள் அதிகம்.

இப்படி கிராமத்தில் செய்துவந்த வேலைகள் அத்தனையும் நோயை எதிர்க்கும் திறன் பெற்றதாகவே இருந்தது.

ஆணோ.....பெண்ணோ ... அவரவர் வேலைகளை அவர்களே செய்துவந்தாலே அதிகாலையில் எழுந்து யோகா,நடைபயிற்சி,என்று தனியாக நேரத்தை ஒதுக்கி,பூங்காக்களின் பக்கம் ஓட வேண்டிய அவசியமே இருக்காது.

"வெஸ்டர்ன் டாய்லெட்" களின் வசதியைப் பார்த்து விட்ட நாம் அதை நம்முடைய வீட்டுக்குள்ளும் கொண்டு வந்துவிட்டோம். ஆனால் காலங்காலமாக கிராமங்களில் கடைப் பிடித்துவந்த " உட்கார்ந்து எழுவது " என்ற முறையின் மூலமாக தொடை தசைகள் இறுகி,மூட்டு தேய்மானம் குறைவதோடு,குடல் இறக்க நோய் அண்டாமல் இருப்பதன் ரகசியத்தைப் புரிந்துகொள்ளாமல் விட்டுவிட்டோம்.

தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, முடிகளைப் பலப்படுத்தி
கொட்டாமல் காக்கும்.மஞ்சள் தேய்த்துக் குளிப்பதா,அது
கிரிமி நாசினியாக செயல்பட்டு முகப்பருக்கள் வராமல் காக்கும்.....
ஆலங்குச்சியும்,வேலங்குச்சியும் பல்லை உறுதியாக்கும் .......இப்படி வாழ்க்கைக்கு பயனுள்ள  எத்தனை  எத்தனையோ நல்ல பழக்க வழக்கங்களை மறந்ததால்,அதன்  நேர்மாறான பலன்களைத்தான் இப்போது அடைந்த கொண்டிருக்கிறோம். 

குழந்தைகளுக்கு  அடிப்படைத் தேவைகள் என்பது சத்தான உணவு,
விளையாடுமிடம்,நல்லத் தூக்கம். நகரத்து வாழ்கையில் இந்த மூன்றுமே அவர்களுக்கு முழுமையாகக் கிடைப்பதில்லை.ஊட்டச்சத்து பானங்கள் 
வீடு நிறைய விளையாட்டுப் பொருட்கள், தூங்க தனி பெட்ரூம் ,குளிர்சாதன வசதி, ...என்று எல்லாமே எங்க பிள்ளைகளுக்கு பண்ணிக் கொடுத்துதானே இருக்கிறோம் ....? என்று நீங்கள் சொல்வது புரிகிறது.

ஆனால் அன்று  சிறு தானியங்களில் இருந்த ஊட்டம் நிறைந்த சத்து இன்றுள்ள உணவுப் பொருட்களில் இருக்கிறதா என்று உங்கள் மருத்துவரிடமே கேட்டுபாருங்கள்.எல்லா உணவு பொருட்களின் விளைச்சலும் செயற்கை உரங்கள் மூலமே விளைவிக்கப்படுகிறது.


உங்கள் குழந்தைகளை மண்தரையிலும்,புல்தரையிலும் விளையாடவிட்டு பாருங்கள்.இதில் கிடைக்கின்ற மகிழ்ச்சியை உங்களின் விலை உயர்ந்த விளையாட்டுபொருட்களில் அவர்களுக்கு கிடைகின்றதா என்று பாருங்கள்.
காற்றோற்றமான கிராமத்து வீட்டில் அவர்கள் பாட்டியின் கழுத்தைக் கட்டிக்கொண்டு தூங்குவதையும், குளிர்சாதனம் பொருத்திய, வீட்டின் சாத்திய அறையில் அவர்கள் தனியே உறங்குவதையும் கொஞ்சம் உங்கள் மனத்திரையில் ஓட விட்டுப்பாருங்கள்......நாம் எதையெல்லாம் இழந்து விட்டோம் என்பது வேகவேகமாக உங்களுக்கு புரியும்.....

பாரம்பரிய வாழ்க்கை,கலைகள்,பண்பாடு என்று எல்லாவற்றையும் இழந்து சினிமா,சீரியல்,தீம்பார்க், என்று செயற்கையான பொழுது போக்குகளை கற்றுக்கொண்டு,கலாச்சார சீர்கேடுகளை அறுவடை செய்து கொண்டிருக்கிறோம். மொத்தத்தில் இன்று இயல்பான,இயற்கையான
வாழ்கையை இழந்து நிற்கின்றோம் என்பதே உண்மை.  


உண்மையையை சொல்லப்போனால் " கண்களை விற்று சித்திரம் வாங்க முயற்சி செய்கிறோம் " என்பதே உண்மையிலும் உண்மை.


9 கருத்துகள்:

அன்புடன் மலிக்கா சொன்னது…

hai நாந்தான் பஸ்டா. தெரியலையே..


கண்களுகும் மலர
இதயம் கிடந்து அலர
கடந்துபோன நாட்கள்
வட்டமிட்டவைத்த பதிவு இது

"கண்களை விற்றா சித்திரம் வாங்குவது ?"

காலம் அப்படிதானே ஆகிப்போச்சி என்ன செய்ய..

Unknown சொன்னது…

நீங்கள் தான் முதல் வருகையாளர்.
கவிதை வடிவில் கருத்து சொன்ன உங்களுக்கு என் நன்றிகள்.

ஸாதிகா சொன்னது…

காலத்துக்கேற்றவாறு கட்டுப்பாடுடன் மாறுவதே மனித வளர்ச்சி.நல்ல இடுகை சகோதரரே.

மனோ சாமிநாதன் சொன்னது…

அருமையான தலைப்பு!
அதையும்விட அருமையான கருத்துக்கள்!!
இன்று மிகச் சிறு வயதிலேயே பெண் குழந்தைகள் கழுத்துக்கு பெல்ட் போடுவதும், சிறு கஷ்டம்கூடத் தாங்காமல் அவதிப்படுவதும் இதனால்தான்.
மாற்றங்கள் தேவைதான்.
ஆனால் அழகான மாற்றங்கள் எப்படி வாழ்க்கையில் முன்னேறங்களைக் கொடுக்கிறதோ, அதைப்போலவே தேவையில்லாத மாற்றங்கள் துன்பங்களையே அதிகம் கொடுக்கின்றது!!

Unknown சொன்னது…

வாருங்கள் சகோதரி ஸாதிகா.
வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.

Unknown சொன்னது…

வாருங்கள் திருமதி : மனோ சாமிநாதன் அவர்களே.தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும்,
வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

தங்களைப்போன்றோரின் கருத்தும்,வாழ்த்தும் எங்களைப்
போன்றோர்களை மென்மேலும் ஊக்கப்படுத்தும்.
தாங்கள் அடிக்கடி வந்து உங்கள் கருத்துக்களையும்
எண்ணங்களையும் பதிவு செய்து
எங்களை ஊக்கப்படுத்துகள்.
மிக்க நன்றி ! எங்களின் மூத்த சகோதரியே.

அஹ‌மது இர்ஷாத் சொன்னது…

ந‌ல்ல‌ ப‌திவுங்க‌..

Unknown சொன்னது…

தங்களின் வருகைக்கும்,
வாழ்த்துக்கும் நன்றி
அஹமத் இர்ஷாத்

Shansamy சொன்னது…

Good review,not only for new generation, it is need to update by every one to keep body & soul in fit.

All the best.