திங்கள், 18 அக்டோபர், 2010

ரசிக்கத் தெரிந்த மனமே ! உனக்கு ?


பெயின்ட் விற்பனை செய்கிற கடையில் சமீபத்தில் பார்த்த
ஒருகாட்சி.....
பெயின்ட் வாங்க வந்த ஒருவர் " வீட்டுக்குள்ள என்ன கலர் பெயின்ட் அடிச்சா நல்லா இருக்கும் ? இருகிறதுலேயே நல்ல கலர் எது ? என்று கேட்டார். கடைக்காரர்  அழகாக ஒரு பதில் சொன்னார்.....


" கலர்ல நல்ல கலர், கெட்ட கலர்னு ஒன்னும் கிடையாது. உங்களுக்கு எந்த கலர் பிடிக்குதோ அது நல்ல கலர்.உங்களுக்கு பிடிக்காத கலர்,
இன்னொருத்தருக்குப் பிடிக்கும். அதனால எல்லா கலருமே நல்ல கலர்தான்!"

எல்லா மனிதர்களுக்குள்ளும் எதோ ஒரு ரசனை இருக்கிறது.அதைக் கவனிப்பதைவிட,ரசிப்பதைவிட,அடுத்தவரின் ரசனைப்பற்றியே அதிகம் யோசிக்கிறோம்.நம் சமூக சூழலும்,நல்ல ரசனை,மோசமான ரசனை என்று பிரித்துவைத்து இருக்கிறது. அது காலத்துக்கு ஏற்ப மாறிக்கொண்டே  இருக்கிறது.

ரசனை என்பது அவரவரின் தனிப்பட்ட குணாம்சம்.சாந்தமாக,வாழ்வியல் சூழல் சார்ந்ததாக,அனுபவங்கள் ஒட்டியதாக, சுய உணர்வோடு தொடர்பு உடையதாக இருக்கும்போது,உயர்வான ரசனை,மட்டமான ரசனை,என்று தரம் பிரிப்பது எப்படிச் சரியாக இருக்கும்?

ஒரு வகையில் ரசனை என்பதே ஒரு கற்பிதம்தான்.ஐஸ்வர்யா ராய் அழகு என்று சொல்லப்பட்டதால்,அவர் அழகானவர் என்று ஏற்றுக்கொள்கிறோம்.
ஒரு பெண்ணுக்குரிய அழகியல் அம்சங்கள் என்று தனிப்பட்ட முறையில் நாம் வைத்து இருக்கிற ரசிப்புச் சித்தாந்தங்களுக்குள் அவர் வருகிறாரா, இல்லையா என்றெல்லாம் யோசிக்க முடிவதில்லை. 


நாம் கொண்டாடுகிற,பெருமை பேசிக்கொள்கிற உயர்வினை,
மதிப்பீடுகளாக நாமே சித்தரிக்கிற நமது பல ரசனைகள்,புறச் சூழல்களாலும்,செயற்கையான ஏற்பாடுகளாலும்,நம்முள் புகுத்தப்பட்டவைதான்.இதில் உயர்வான ரசனை
கேவலமான ரசனை என்று பாகுபாடு செய்வது எப்படி நியாயமாகும்?

இயற்கை எழிலையும் நிலவின் அழகையும் ரசிக்காத ஒருவர் நல்ல ரசனை இல்லாதவர் என்கிற முடிவுக்கு வர முடியாது. அவருக்கு புழுதிக் காடும்  எருமைக்கூட்டமும் பிடித்து இருக்கலாம்.தத்தித் தத்தி ஓடும் அணில் அழகானது என்பது உங்கள் ரசனையாக  இருந்தால், அங்குலம் அங்குலமாக நகரும் ஆமை இன்னொருவரின் ரசனையாக இருக்கலாம்.

அழகான ரசனை என்று தனியாக ஒரு பட்டியல் தயாரித்துக் கொள்வது
உண்மையில் அது போலித்தனத்தின் வெளிப்பாடு. உங்களால் எதை எல்லாம் இயல்பாக ரசிக்க முடிகிறதோ அவை எல்லாம் அழகானவைதான்.


செடிக்குச் செடி தாவும் பட்டாம்பூச்சி உங்களுக்குள் ஒரு பரவசத்தை ஏற்படுத்தலாம்.அதற்காக பன்றிக் குட்டியை ரசிக்கிறவனுக்கு ரசனை கெட்டவன் என்று பட்டம் கட்டமுடியாது. நம்முடைய பெரும்பான்மையான ரசிப்புத்தன்மைகள்,நம்மைவிடப் பெரிய ஆட்கள் என்று நம்புகிற மனிதர்களிடம் இருந்து கடன் வாங்கப்பட்டவை.
அழகான ஆங்கிலம் பேசுகிற,அழுக்கு இல்லாத சட்டை உடுத்துகிற,
பரவலாகப் பலராலும் கவனிக்கப்படுகிற மனிதர்கள் முன்மொழிந்த ரசனைகளை நாம் வழிமொழிகிறோம்.பிறகு,அதையே சிறந்த ரசனை என்று கொண்டாடுகிறோம்.அதை அடுத்தவர் மீதும் திணிக்கிறோம்.அதை ஏற்காதவரை  ரசனை  இல்லாதவர் என்றும் விமர்சிக்கிறோம்.

இந்த உலகம் பல்வேறு ரசனைகளால் ஆனது. இங்கு மணிரத்தினம் படம் ஓடும்.பேரரசு படம் ஓடும். கௌதம் மேனன் படம் ஓடும்.
எஸ்.பி.முத்துராமன் பாணி படம் ஓடும்.சசிகுமார் ஒரு பக்கம் தன படைப்பை முன் வைப்பார்.கே.எஸ்.ரவிகுமார் இன்னொரு படைப்பை 
முன்னிருத்துவார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரசனை.

இந்த நிலையில் அந்த இயக்குநரின் படங்களைப் பார்ப்பது உயர்வான ரசனை என்றும்,வேறொரு இயக்குநரின் படங்களைப் பார்ப்பது மட்டமான ரசனை என்றும் அந்த உணர்வியலைப் பாகுபாடு செய்வது இயல்புக்கு விரோதமானது.பெயின்ட் கடைக்காரர் சொன்னது மாதிரி, ரசனையிலும் நல்ல ரசனை,கெட்ட ரசனை என்ற வேறுபாடு இல்லை..


உங்களது ரசனை உயர்வானது என்று எப்படி நம்புகிறீர்களோ.அதே போல் அடுத்தவரின் ரசனையும் உயர்வானதே.உங்களுக்கு பிடிக்கவில்லை என்று முத்திரை குத்த முனைவது நம் பிடிவாததத்தையே காட்டுகிறது.ரசனை என்றால் அது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இலக்கணம் எதுவும் வகுக்கமுடியாது. அது மாறிக்கொண்டே இருக்கக்கூடியது.

இன்றைக்கு நீங்கள் கொண்டாடும் ஒரு விஷயத்தை நாளை மாற்றிக்கொள்ள வாய்ப்பு உண்டு. அப்படி இருக்கும்போது,இதுதான் சிறந்தது என்று எதையும் சொல்வதற்கு இல்லை.

சில இசைக்கு தலை ஆடும்,சில இசைக்கு கால் ஆடும்,ஓர் இசை காதைக் கிழிக்கும், ஓர் இசை காற்றில் தவழும்,ஒரு நிறம் கண்ணை பறிக்கும்,ஒரு நிறம் லேசாய் மிளிரும். ஓர் ஓவியத்தில் உருவம் தெரியும்,இன்னொன்றில் கோடுகள்தான் புரியும்.கண்ணில் நீர் வர காரம் சாப்பிடுதல் ஒரு ரசனை,உறைப்பே இல்லாமல் ஆகாரம் என்பது இன்னொரு ரசனை.இதில் எதுவுமே நிரந்தரமானது அல்ல.

நீங்கள் இன்றைக்கு சிறந்த ரசனை என்று நினைத்துப் போற்றும் ஒன்றை நாளை நீங்களே விமர்சிக்கலாம்.அப்படி இருக்க ரசனைகளில் ஏற்றத் தாழ்வு பார்க்க வேண்டியது இல்லை. ரசனை என்பது சொந்த உணர்வுகளின் வெளிப்பாடு.அதை யாரிடமும் கடன் வாங்க வேண்டியது இல்லை. பிரபலமாக நிறையப்பேர் ஏற்றுக்கொண்டதால், அது சிறந்த ரசனையாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்கள் ரசனைகளையும்,ரசிப்புத் தன்மையையும் உங்களுக்குள் தேடுங்கள். 

இன்னும் வரும்.............

 நன்றி : திரு: கோபிநாத் 
            மற்றும் ஆனந்தவிகடன்

11 கருத்துகள்:

ஸாதிகா சொன்னது…

ரசனைமிகு அலசல்.

அஹமது இர்ஷாத் சொன்னது…

Thank For Your Sharing..

i Enter your blog Come Malware Attack..i don't know why?

Eeva சொன்னது…

நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!

Unknown சொன்னது…

தங்களின் வருகைக்கும்
கருத்துக்கும் மிக்க
நன்றி @ சகோதரி ஸாதிகா.

Unknown சொன்னது…

தங்களின் கருத்துக்கு நன்றி
@அஹமத் இர்ஷாத்.
Malware இருப்பதாக எனக்கு தெரிய வில்லை. நானும் பலமுறை செக் பண்ணி பார்த்துவிட்டேன்.
நீங்களும் இன்னொருமுறை செக் பண்ணிபார்கவும்.இருந்தால் எனக்கு தெரியபடுத்தவும்.

Unknown சொன்னது…

தங்களின் அழைப்பிற்கு நன்றி
ஈவா. நான் jeejix .com உறுப்பினராக இருக்கிறேன்.

ALHABSHIEST சொன்னது…

என்ன ஒரு ரசனையான பதிவு.

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

அருமையான் அலசல்..

கிரி சொன்னது…

முழுப்பதிவும் ஏற்றுக்கொள்கிறேன். கோபிநாத் அட்டகாசமாக கூறியுள்ளார். பகிர்ந்தமைக்கு நன்றி

Unknown சொன்னது…

தங்களின் வருகைக்கும்,
கருத்துக்கும் நன்றி
@ சிவா

Unknown சொன்னது…

வருகைக்கும்,கருத்துக்கும்
நன்றி .
@ வெறும்பய
@ கிரி