திங்கள், 30 நவம்பர், 2009
துபாய் பொருளாதார நெருக்கடி: 20 லட்சம் இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம் பணி நீக்கம் நோட்டீசு அனுப்பினர்
2.1 கோடி சீன செல்போன் இன்றுடன் இணைப்பு ரத்து

சர்வதேச செல்போன் அடையாள எண் (ஐஎம்இஐ) இல்லாத செல்போன்கள் திங்கள்கிழமை முதல் செயல்படாது. ஐஎம்இஐ எண் இல்லாத செல்போன்களுக்கு நவம்பர் 29-ம் தேதியுடன் சேவை அளிப்பதை தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் நிறுத்திக்கொள்ள மத்திய அரசு கெடுவிதித்திருந்தது. அந்த கெடு முடிவடைந்த நிலையில் ஐஎம்இஐ எண் இல்லாத செல்போன்களுக்கான சேவை நிறுத்தப்படவுள்ளது. முன்னணி செல்போன் நிறுவனங்கள் தயாரிப்பில் சந்தைக்கு விற்பனைக்கு வரும் ஒவ்வொரு செல்போனுக்கும் தனித்தனி சர்வதேச செல்போன் அடையாள எண் அளிக்கப்படுகிறது. இந்த எண், அந்த செல்போன் எந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது, அந்த செல்போனின் மாடல் ஆகியவற்றை குறிக்கும். ஐஎம்இஐ எண் குறித்த தகவல்கள் அனைத்தும் அந்த செல்போனுக்கு சேவை அளிக்கும் நிறுவனத்தில் தானாகவே பதிவாகிவிடும். கொரியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் தயாரிக்கப்பட்டு இந்திய சந்தைக்கு வரும் பெரும்பாலான செல்போன்களில் இந்த ஐஎம்இஐ எண் இருப்பதில்லை. பயன் என்ன? ஐஎம்இஐ எண் மூலமாக ஒரு செல்போனில் இருந்து மற்றொரு செல்போனுக்கு சென்ற அழைப்புகள், வந்த அழைப்புகள் குறித்தும், எந்த இடத்தில் இருந்து செல்போன்களுக்கு இடையே தகவல் பரிமாறிக்கொள்ளப்பட்டது என்பதையும் எளிதாக அறிந்துவிட முடியும். சமீபகாலமாக பெரும்பாலான குற்ற சம்பவங்களில் செல்போன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் ஐஎம்இஐ எண் உதவியுடன் அந்த செல்போன்களை பயன்படுத்தியவர்கள், அதில் வந்த அழைப்புகள் குறித்த தகவல்களை குற்ற சம்பவங்களை விசாரிக்கும் அதிகாரிகள் பெற்று வருகின்றனர். ஐஎம்இஐ எண் இல்லாத செல்போன்கள் குற்ற சம்பவங்களில் பயன்படுத்தப்படும் போது குற்றவாளிகள் குறித்து எவ்வித தகவலையும் பெற முடியாது. இதனால்தான் பயங்கரவாதிகள் பெரும்பாலும் ஐஎம்இஐ எண் இல்லாத செல்போன்களை பயன்படுத்தி தங்களது சதித்திட்டங்களை கச்சிதமாக அரங்கேற்றிவிடுகின்றனர். இந்தியாவுக்கு பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இனிமேலும் ஐஎம்இஐ எண்கள் இல்லாத செல்போன்கள் புழக்கத்தில் இருப்பதை அனுமதிப்பது நாட்டின் பாதுகாப்புக்கு உகந்ததல்ல என மத்திய அரசு கருதி, அதுபோன்ற செல்போன்களுக்கு உடனடியாக சேவையை நிறுத்துமாறு அறிவுறுத்தியது.
மாத்தி யோசி : சாதிக்க வேண்டும் என்ற வேகம் வேண்டும்

சமீபத்தில் நோபல் பரிசு பெற்றிருக்கும் வெளிநாடு வாழ் இந்திய விஞ்ஞானி முனைவர் ராமகிருஷ்ணன் கூறியிருக்கும் சில கருத்துகள் சிந்தனைக்குரியவை மட்டுமல்ல, பாராட்டுக்கும் உரியவை.
லண்டன் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் எம்.ஆர்.சி. பரிசோதனைச் சாலையில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் முனைவர் வெ. ராமகிருஷ்ணன் இன்னும் தனது இந்தியத் தொடர்புகளைத் தக்க வைத்துக் கொண்டிருப்பதுடன் இந்தியாவின் வருங்காலம் பற்றிய சிந்தனைகளையும் சுமந்து கொண்டிருப்பது என்பதே நெகிழ வைக்கும் விஷயங்கள்தான். வெளிநாட்டில் வாழ்வாதாரங்களைத் தேடிக் கொண்டு விட்டாலே, தனது வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் காரணமே இந்தியாவிலிருந்து வெளியேறி விட்டதுதான் என்பது, வாழ்வில் வெற்றி பெற்றுவிட்ட வெளிநாடுவாழ் இந்தியர்கள் பலரும் கூறும் குற்றச்சாட்டு.
இந்தியாவின் அரசியல் மற்றும் நிர்வாக அமைப்புகள் திறமைக்கு முன்னுரிமை அளிப்பதில்லை என்றும், லஞ்சமும், ஊழலும், சிபாரிசும்தான் வளர்ச்சிக்கு அளவுகோலே தவிர திறமைக்கு இந்தியாவில் இடமில்லை என்றும் பல வெளிநாடுவாழ் இந்தியர்கள் கூறுவதைக் கேட்டிருக்கிறோம். ஆனால், அவர்களில் இருந்து மாறுபட்டு விஞ்ஞானி ராமகிருஷ்ணன் இந்தியாவின் வருங்காலம் பற்றி வெளிப்படுத்தி இருக்கும் நம்பிக்கையூட்டும் தகவல்கள் நமக்கே வியப்பாக இருக்கிறது. சுதந்திரத்துக்கு முன்பு உலக அரங்கில் புகழ்பெற்ற கணிதமேதை ராமானுஜம், விஞ்ஞானி சி.வி. ராமன் போன்றவர்களைப்போல தற்போது பல மேதைகள் உருவாகாததன் காரணம் பற்றிக் கேட்டபோது, அதற்கு விஞ்ஞானி ராமகிருஷ்ணன் கூறியிருக்கும் பதில் நம்மைச் சிந்திக்க வைக்கிறது.
""கடின உழைப்பும் லட்சிய வெறியும் இருந்தால் உலகம் போற்றும் மேதைகளாகவும், தலைசிறந்த விஞ்ஞானிகளாகவும் உருவாகக்கூடிய திறமைசாலிகள் முன்எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது இருந்தாலும், அவர்கள் கணினி, பொறியியல், நிதி நிர்வாகம் போன்ற படிப்புகளுடன் பன்னாட்டு நிறுவனங்களில் சில லட்ச ரூபாய் அல்லது டாலர்கள் சம்பாதிப்பதுடன் திருப்தி அடைந்து விடுவதுதான் இந்தியாவின் துரதிர்ஷ்டம்'' என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார் அவர். மேலும் கூறுகையில், முந்தைய நாள்களைப்போல அல்லாமல் உலக ஆராய்ச்சிகள் அனைத்துமே இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளும் வசதிகள் இருப்பதால், வெளிநாடுகளுக்குச் செல்லாமல் இந்தியாவில் இருந்தபடியே ஆராய்ச்சிகளைத் தொடர முடியும் என்றும் அவர் தெளிவுபடுத்தி இருக்கிறார்.
தன்னுடைய துறையிலேயேகூட பிரகாசமான எதிர்காலமுள்ள இளம் இந்திய விஞ்ஞானிகள் பலரின் ஆராய்ச்சிக் கட்டுரைகளை இணைய தளங்களிலும், பல ஆய்வரங்கங்களிலும்தான் பார்த்து வியப்பதாகவும் கூறியிருக்கிறார் விஞ்ஞானி ராமகிருஷ்ணன். இந்தியாவின் மிகப்பெரிய குறைபாடு, போதிய ஆராய்ச்சி நிறுவனங்கள் இல்லாமை என்பதை ஒத்துக் கொள்ளும் அவர், எல்லா பல்கலைக்கழகங்களிலும் ஆராய்ச்சி சாலைகளுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி இருக்கிறார். கடந்த முப்பது ஆண்டுகளாக, மருத்துவம், பொறியியல், நிர்வாக இயல், நிதி நிர்வாகம், தகவல் தொழில் நுட்பம் போன்ற படிப்புகளுக்குப் பெற்றோரும், மாணவர்களும் அரசும் முன்னுரிமை கொடுத்து வருவதன் விளைவு, அடிப்படை விஞ்ஞானப் பிரிவுகளான ரசாயனம், பௌதீகம், விலங்கியல், தாவர இயல் போன்றவைகளும், அவற்றின் சிறப்பு இயல்களும் போதிய வரவேற்பு இல்லாமல் இருக்கின்றன. இதன் தொடர்விளைவாக, பெரிய ஆராய்ச்சியாளர்களும், விஞ்ஞானிகளும் இந்தியாவில் உருவாவது கணிசமாகக் குறைந்துவிட்டிருக்கிறது.
அரசும் சரி, விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்காகத் தரப்படும் முக்கியத்துவத்தையும், நிதி ஒதுக்கீடையும் படிப்படியாகக் குறைத்து வருகிறது. மேலைநாடுகளின் ஆராய்ச்சிகளை நாம் பயன்படுத்திக் கொண்டால் போதுமானது என்றும், உயர்மட்ட அடிப்படை விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்காக அரசு நிதியாதாரம் அளிப்பது தேவை இல்லாதது என்றும் ஆட்சியாளர்கள் மத்தியில் ஒரு சிந்தனை ஏற்பட்டிருக்கிறது.
ஒருசில தனியார் நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும்தான் இன்னும் முனைப்பாக அடிப்படை விஞ்ஞான ஆராய்ச்சிக்கான நிதி உதவிகளை வழங்கி வருகின்றன. படிப்பு முடிவதற்குள், கல்லூரி வளாகத்திலேயே நேர்முகத் தேர்வு நடந்து வேலை கிடைத்தால் போதும் என்று மாணவர்களும் நினைக்கிறார்கள். பல லட்சம் ரூபாய் கட்டணம் செலவழித்துப் படிக்க வைக்கும் பெற்றோரும் நினைக்கிறார்கள். தங்கள் குழந்தைகள் வசதியாக வாழ்ந்தால் போதும் என்று நினைக்கும் பெற்றோர்கள் அவர்கள் சாதனையாளர்களாக உலக அரங்கில் புகழ் பெற வேண்டும் என்று விரும்புவதாகத் தெரியவில்லை. இதன் விளைவு, முன் எப்போதையும்விடப் புத்திசாலிகளாகவும், திறமைசாலிகளாகவும் நமது இளைஞர்கள் இருந்தும் நாம் சாதனையாளர்களை உருவாக்காமல் இருக்கும் இந்நிலை ஏற்பட்டிருக்கிறது. அப்துல் கலாம், அமர்த்தியா சென், முனைவர் "வெங்கி' ராமகிருஷ்ணன் போன்ற பல உலக சாதனையாளர்களும் பௌதீகமும், பொருளாதாரமும், ரசாயனமும் படித்தவர்கள்தான் என்பதையும், பணம் சம்பாதிப்பதைவிடக் காலாகாலம் நிலைத்து நிற்கும் சாதனை படைப்பது முக்கியம் என்பதையும் நமது பெற்றோருக்கும், மாணவர்களுக்கும் உணர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்கு அரசு பெரிய அளவில் தொடர்ந்து நிதி உதவி அளித்து ஊக்கமும் ஆக்கமும் தந்தாக வேண்டும். அடிப்படை விஞ்ஞானத்துக்கு முன்னுரிமை அளிக்கும் விதத்தில் கல்விக் கொள்கையை அமைத்து உயர் ஆராய்ச்சிகளுக்கு ஊக்கமளித்தால் மட்டுமே இது சாத்தியம். நோபல் விஞ்ஞானி ராமகிருஷ்ணன் கூறியிருப்பதைப் போல, உலக அரங்கில் தலைசிறந்த விஞ்ஞானிகளை உருவாக்கும் வாய்ப்பும் வசதியும் இந்தியாவுக்கு இருக்கிறது. அதை நாம் தெரிந்தே உதாசீனப்படுத்துகிறோமே, ஏன்?
ஞாயிறு, 29 நவம்பர், 2009
வீரம் விலை போகாது, விவேகம் துணைக்கு வராவிட்டால்!

இலங்கை நிகழ்வுகள் குறித்து தான் எழுதாத கருத்துகளுக்கு வைகோ பதில் அளித்திருப்பதை முதல்வர் கருணாநிதி கண்டித்துள்ளார்.
விவேகம் இல்லாவிட்டால் வீரத்தால் பலன் ஏற்படாது என்ற கருத்தை பல ஆண்டுகளுக்கு முன்பே ஒரு நாடகத்தில் தான் எழுதியிருப்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். முதல்வர் நேற்று வெளியிட்ட கேள்வி பதில் அறிக்கை வருமாறு:
வார இதழ் ஒன்றில் வந்துள்ள பேட்டியில், ‘இத்தனை ஆயிரம் பேர் ஈழத்தில் இறந்தது பிரபாகரனால் ஏற்பட்டது. நான் மௌனமாக அழுவது யாருக்கு தெரியும்?’ என்கிறாரே கருணாநிதி? என்ற கேள்வி கேட்கப்பட்டு பதில் சொல்லப்பட்டிருக்கிறதே? ‘இத்தனை ஆயிரம் பேர் இறந்தது பிரபாகரனால்’ என்று நான் எழுதவே இல்லை. நான் எழுதாததை எழுதியதாக ஒரு கேள்வியை கேட்க செய்து, அதற்கு என்னை தாக்கி பதில் கூறப்பட்டுள்ளது. நான் எழுதியதை மறைத்துவிட்டு கற்பனையாக அந்த இதழின் சிறப்பு செய்தியாளர் கேள்வி கேட்டு, அப்படி நான் எழுதினேனா என்பதை தெரிந்து கொள்ளாமல் ஒருவர் என்னை தாக்கி பதில் சொல்லியிருப்பது என் மீது வசை பாடுவதற்காக இருவரும் சேர்ந்து ஜோடித்த நாடகம்.
‘சகோதர யுத்தம் நடத்தியதால்தான் பிரபாகரன் தோல்வி அடைந்ததாக கருணாநிதி சொல்கிறாரே?’ என்றும் ஒரு கேள்வி கேட்கப்பட்டு அதற்கும் உங்களை தாக்கி பதில் கூறப்பட்டுள்ளதே? பிரபாகரன் தோல்வி அடைந்ததாக நான் சொல்லவில்லை. சகோதர யுத்தம் காரணமாக நாம் பாதிக்கப்பட்டோம் என்று சொல்லியிருக்கிறேன். அதில் என்ன தவறு என்று தெரியவில்லை. ‘மாவீரன் மாத்தையா’ என்று ஒரு துரோகியை நீங்கள் அழைத்து விட்டதாக அந்த இதழுக்கு பேட்டி அளித்தவர் சொல்கிறாரே? மாத்தையாவை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவரே அவர்தான். ‘மாவீரன் மாத்தையா’ என்றுதான் அறிமுகம் செய்துவைத்தார்.
‘வீரத்தை பயன்படுத்திய அளவுக்கு விவேகத்தை பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் சொன்னதெல்லாம் அலட்சியப் படுத்தப்பட்டது என்று வேதனைப் படுகிறாரே கருணாநிதி?’ என்ற கேள்விக்கும் பதில் அளித்தவர் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு உங்களை தாக்கி இருக்கிறாரே? அது நான் எழுதிய கருத்துதான். அதில் என்ன தவறு? வீரத்தை பயன்படுத்திய அளவுக்கு என்று நான் கூறியிருப்பதில் இருந்தே, அவர்களின் வீரத்தைப் பாராட்டியிருக்கிறேன் என்பதை புரிந்து கொள்ளலாம். ஆனால், கண்ணை மூடிக்கொண்டு நம்மை தாக்க வேண்டும் என்ற வெறி கொண்டவர்களுக்கு அப்படித்தான் பதிலளிக்க தோன்றும். வீரம் விவேகம் பற்றி நான் இப்போது கூறவில்லை. பல ஆண்டுகளுக்கு முன் ‘சாக்ரடீஸ்’ ஓரங்க நாடகத்திலேயே ‘வீரம் விலை போகாது, விவேகம் துணைக்கு வராவிட்டால்! தீட்டிய வாளும் தினவெடுத்த தோள்களிலே தூக்கிய ஈட்டியும் மாத்திரம் போதாது தீரர்களே! இதோ நான் தரும் ஆயுதத்தை எடுத்துக்கொள்ளுங்கள்! அறிவாயுதம்! அறிவாயுதம்!’ என எழுதியிருக்கிறேன்.
அந்த வசனத்தை பல மேடைகளில் பேசிக் காட்டியவர் இப்போது இழித்துரைக்கிறார். எனக்கு இன்னும் அந்த பேச்சுதான் நினைவில் நிற்கிறது.
ஒரே நிகழ்ச்சியில் பேசியதற்காக இரண்டு பேரை கைது செய்து, ஒருவரை விடுதலை செய்து விட்டு, தன் மீது மட்டும் வழக்கு போட்டிருப்பதாக உங்கள் மீது குற்றம் சொல்கிறாரே? ஒரே நிகழ்ச்சியில் பேசியதற்காக கைது செய்யப்பட்டாலும், இருவரும் என்னென்ன பேசினார்கள் என்ற விவரத்தை அறிந்து, தவறாக பேசாதவரை வழக்கிலிருந்து விடுவித்து விட்டு, தவறாக பேசியவர் மீது நடவடிக்கை எடுப்பது முறைதானே? இதில் சட்டத்தை வளைப்பதற்கு என்ன இருக்கிறது? சண்டித்தனமாக பேசி விட்டு, பிறகு எதற்காக புலம்ப வேண்டும்? ‘பிரபாகரனால்தான் இவ்வளவு கஷ்டங்கள் வந்தது என்று கருணாநிதி சொல்கிறார் என்றால், அவர் சிங்கள அரசாங்கத்தின் கொள்கை பரப்பு செயலாளராக மாறிவிட்டதையே காட்டுகிறது’ என்று பேட்டியாளர் சாடியிருக்கிறாரே? அப்படி நான் கூறவில்லை.
24ம் தேதி எழுதிய ஒரு பதிலில்கூட ‘விடுதலைப் போரில் வீழ்த்தப்பட்ட வேங்கை பிரபாகரனுக்காக என் விழிகள் நீரை பொழிகின்றன. அதே நேரம் இளந்தலைவர் ராஜீவ் காந்தியும், அமிர்தலிங்கமும், யோகேஸ்வரனும், முகுந்தனும், சிறீ சபாரத்னமும், பத்மநாபாவும் கொல்லப்பட்டபோது அவர்களை இழந்த மனைவி மக்களும், உற்றார் உறவினரும், நண்பர்களும் கண்ணீர் பெருக்கியபோது அவர்களோடு சேர்ந்து கண்ணீர் சிந்துவதற்கு எனக்கு உரிமை இல்லையா?’ என்று எழுதினேன். இலங்கைத் தமிழர்களுக்காகத்தான் நான் கண்ணீர் வடிக்கிறேன். அதில் புலிகளும் இருக்கிறார்கள், அவர்களின் ஆதரவாளர்களும் இருக்கிறார்கள், எந்த போராளிக் குழுவிலும் சேராத அப்பாவிகளும் இருக்கிறார்கள் என்பதுதானே உண்மை.
புலிகளுக்கு தோல்வி ஏற்பட்டதை நினைத்து மௌனமாக குதூகலித்தவர் நீங்கள் என்று சொல்லியிருக்கிறாரே?
மனசாட்சியை விற்று விட்டவர்கள் அப்படித்தான் கூறுவார்கள். ஈழ தமிழருக்காக 1956 முதல் குரல் கொடுத்தவன் நான். அவர்களுக்காக சிறை சென்றவன். நான் சிறைபட்டதற்காக பல இளைஞர்கள் தீ வைத்துக் கொண்டு தங்கள் இன்னுயிரை போக்கிக் கொண்டார்கள். சட்டமன்ற உறுப்பினர் பதவியை நானும் பேராசிரியரும் இலங்கை தமிழருக்காக ராஜினாமா செய்தோம். புலிகளுக்கு உதவியதாக காரணம் கூறப்பட்டு எனது ஆட்சியே கலைக்கப்பட்டது & ஒருமுறை அல்ல, இரண்டு முறை. விடுதலை புலிகளுக்கும் நிதி வசூலித்து கொடுக்க முன்வந்தேன். ஆனால் அவர்கள் வாங்கிக் கொள்ளவில்லை. இன்னும் பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம். ஆனால் புலிகளின் தலைவரை கைது செய்து இந்தியாவிற்கு கொண்டு வர சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதாவை இவர் நேற்றுகூட சந்தித் திருக்கிறார். புலிகளை பற்றி ஜெயலலிதா பேசாத பேச்சா? அவரின் இனிய சகோதரர் இவர். இவர் கூறுகிறார், புலிகளுக்கு தோல்வி ஏற்பட்டதை கண்டு நான் குதூகலித்ததாக!
தமிழ்ச் செல்வன் மறைந்தபோது நான் கண்ணீர் கவிதை எழுதினேன். அதனை கண்டித்து அறிக்கை விட்டவர் ஜெயலலிதா. சந்திரஹாசனையும், பாலசிங்கத்தையும், சத்யேந்திராவையும் தமிழக காவல்துறை கைது செய்து நாடு கடத்தியபோது, அதை நிறுத்தாவிட்டால் பிரதமருக்கு கறுப்புக் கொடி காட்டப்படும் என்று தி.மு.க. அறிவித்து போராட்டம் நடத்தியது. அதன் காரணமாக நாடு கடத்தும் உத்தரவு திரும்பப் பெறப்பட்டது. அப்படிப்பட்ட என்னைப் பார்த்து நான் புலிகள் படுகின்ற துன்பத்தை கண்டு மகிழ்ச்சி அடைவதாக பேட்டி கொடுக்கிறார்.
அந்த வார இதழும் அதை வெளியிட்டு மகிழ்ந்திருக்கிறது. ஒரு வகையில் எனக்கோர் மகிழ்ச்சி. நாம் பிரிவினை கேட்டு ‘தமிழ்நாடு தமிழருக்கே & திராவிட நாடு திராவிடருக்கே!’ என முழங்கியபோது, ‘எலி வளை எலிகளுக்கே’ என்று கேலிச் சித்திரம் வரைந்து நம்மை கேலி செய்த ஏடு அது. அந்த காலம் மாறி, இன்று எலிகள் அல்ல புலிகள் என்று ஏற்றுக்கொண்டிருப்பது & அதுவும் தமிழ் ஈழம் கேட்கிற அளவுக்கு மாறியிருப்பது மகத்தான மாறுதல். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.
சனி, 28 நவம்பர், 2009
வெளிநாடுகளில் அரசியல் கட்டமைப்பு ஏற்படுத்தி பிரபாகரன் வழிகாட்டலில் தொடர்ந்து போராடுவோம்: விடுதலைப்புலிகள் மாவீரர் தின அறிவிப்பு

அந்த மாவீரர் தின உரையின் ஒரு பகுதி வருமாறு:-
எமது லட்சியப்பாதை அனைவரையும் அரவணைத்து புதிய சூழல்கள், புதிய நட்புகளை தேடி உலக தமிழர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு எமது விடுதலையினை வென்றெடுக்க முன்வருமாறு இந்த புனித நாளில் கேட்டுக்கொள்கின்றோம்.
தியாக திருநாள் வாழ்த்துக்கள்
அன்பு வலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும்
என் இனிய " தியாக திருநாள் (ஹஜ்ஜு பெருநாள் )
வாழ்த்துக்கள்.
என் இடுகைகள் வெளி வர காரணமா இருந்த இருக்கின்ற
தமிழ்மணம், தமிலிஷ், திரட்டி, தமிழ்வெளி, போன்ற
இணைய தளத்திற்கும் என்னுடைய நெஞ்சர்ந்த்த
நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.
அனைவருக்கும் " இனிய தியாக திருநாள் "
வாழ்த்துக்கள்.
அன்புடன்
அபுல்பசர்
வெள்ளி, 27 நவம்பர், 2009
இயற்கையை நேசிப்போம்:பாதுகாப்போம்

அமெரிக்கர்களைப்போல உலகில் உள்ள அனைவரும் வாழ வேண்டும் என்றால் தற்போது உள்ளதைப் போன்று 5 பூமிகள் இருக்க வேண்டும் என அமெரிக்காவில் வாஷிங்டனை மையமாகக் கொண்டு செயல்படும் "குளோபல் ஃபுட்பிரிண்ட் நெட்வொர்க்' என்ற அமைப்பு ஆய்வு மேற்கொண்டு கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ஆவணத்தில் தெரிவித்துள்ளது.நாம் வெளியிடும் கரியமில வாயுவை பூமி மறுசுழற்சி செய்து வெளியிடும் வேகத்தைவிட 44 சதவீதம் வேகமாக இயற்கை வளங்களை நாம் பயன்படுத்துகிறோம். அதாவது ஓராண்டில் நாம் பயன்படுத்திய இயற்கை வளங்களை மறு சுழற்சி செய்து மறுபடியும் நமக்கு அளிக்க இயற்கைக்கு ஒன்றரை ஆண்டுகள் தேவைப்படுகிறதாம்.இதேரீதியில் நாம் செயல்பட்டால், 2030 வாக்கில் தற்போது உள்ளதைப் போன்று இயற்கை வளங்களுடன் கூடிய இன்னும் ஒரு பூமி தேவை என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.1961-ல் உலக இயற்கை வளத்தில் பாதி அளவுக்குத்தான் பயன்படுத்தியுள்ளோம். சராசரி அமெரிக்கர் 23 ஏக்கர் பரப்பளவில் உள்ள இயற்கை வளங்களை அனுபவிக்கிறார். சராசரி ஐரோப்பியர் அதில் பாதி அளவு பரப்பளவில் உள்ள இயற்கை வளங்களை அனுபவிக்கிறார்.ஆனால், மலாவி, ஹைதி, நேபாளம், வங்கதேசம் போன்ற நாடுகளில் உள்ளவர்கள் 1.25 ஏக்கர் பரப்பளவில் உள்ள இயற்கை வளங்களையே அனுபவிக்கின்றனர். இதனால், அந்த நாடுகளில் அடிப்படைத் தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய முடியவில்லை என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.உலக மக்கள்தொகையில் 4 சதவீதம் மட்டுமே உள்ள அமெரிக்கர்கள், 25 சதவீதம் கரியமில வாயுவை வெளியேற்றுகிறார்கள் என மற்றோர் ஆய்வு தெரிவிக்கிறது. இயற்கையை மனிதன் இப்படிச் சுரண்டுவதால் ஓசோன் படலம் சிதைவு, புவி வெப்பமடைதல், போதிய மழையின்மை, பனிக்கட்டி உருகுதல் போன்றவை நிகழ்கின்றன.பனிக்கட்டி உருகுவதால் கடல் நீர்மட்டம் 0.2 மீ. முதல் 1.5 மீ. வரை உயரக் கூடும் என ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் மாலத்தீவு போன்ற நாடுகள் கடலில் மூழ்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக அச்சம் ஏற்பட்டுள்ளது.இயற்கையைச் சுரண்டியதால் ஏற்பட்ட விளைவுகளை நமது தமிழகத்தில் ஊட்டி, குன்னூர் பகுதிகளில் அண்மையில் கண்டோம். மழை நீர்ப் பாதையை அடைத்தது, வனங்களை அழித்து கான்கிரீட் காடுகளாக மாற்றியது, மரங்களை வெட்டி தேயிலைத் தோட்டங்களாக்கியது, சட்டவிரோதமாக கல்குவாரிகளை நடத்துவது போன்றவற்றால் சமீபத்தில் பெய்த பேய் மழைக்கு நிலச்சரிவு, பூமி பிளவு போன்றவை ஏற்பட்டு 40-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியாகினர். ஆயிரக்கணக்கானோர் வீடு,வாசல்களை இழந்து தவித்து வருகின்றனர்.நமது நாட்டிலும் 33 சதவீதம் வனப் பகுதி இருக்க வேண்டிய இடத்தில் 20 சதவீதத்துக்கும் குறைவான வனப் பகுதியே உள்ளது.இப் பிரச்னைக்குத் தீர்வுதான் என்ன? "இயற்கை அன்னை நமது தேவைகளைப் பூர்த்தி செய்வாள். ஆனால், நமது பேராசைகளைப் பூர்த்தி செய்ய மாட்டாள்' என்றார் மகாத்மா காந்தி."போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து, அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' போன்றவற்றை நமது முன்னோர் சிறுவயதிலேயே மனங்களில் விதைத்தனர்.இயற்கையை வழிபடுவதை நமது முன்னோர்கள் நமக்குச் சொல்லிக் கொடுத்துள்ளனர். நிலம், நீர், ஆகாயம், காற்று, நெருப்பு ஆகிய பஞ்சபூதங்களை வழிபட வழிவழியாக நமது மூதாதையர்கள் கற்பித்து வந்துள்ளனர். தமிழ்நாட்டில் பஞ்சபூதத் தலங்கள் உள்ளதே இதற்கு சாட்சி.பூமியைத் தாயாகக் கருதி பூஜை செய்வது, இயற்கை உரங்களைப் பயன்படுத்தி விவசாயம் செய்வது போன்றவை அதன் ஓர் அங்கம்தான். ஆனால், குறுகிய காலத்தில் அதிகப் பணம்சம்பாதிக்க ரசாயன உரங்களையும், பூச்சிக் கொல்லிகளையும் பயன்படுத்தி உணவு அளித்த தாயையே மலடாக்க இன்று நாம் துணிந்துவிட்டோம்.கங்கா மாதா, காவிரித் தாய் என நதிகளைத் தாயாகக் கருதும் வழக்கம் நம் நாட்டில்தான் உண்டு. குளத்திலோ, ஆற்றிலோ எச்சில் துப்புவது, சிறுநீர் கழிப்பது, மலஜலம் கழிப்பது போன்றவை பாவம் என கற்பித்தனர். ஆனால், பாவங்களைப் போக்குவாள் என்று கருதப்படும் கங்கையைத் தூய்மைப்படுத்த பல்லாயிரம் கோடி ரூபாய் வேண்டும் என மத்திய அரசு இப்போது திட்டம் தீட்டி வருகிறது.மரங்களையும் தெய்வமாகக் கருதிய மக்களைக் கொண்ட நாடு இது. ஆனால், இன்று சகட்டுமேனிக்கு மரங்கள் வெட்டப்படுகின்றன. இந்த நிலை நீடித்தால், வாழ்வதற்கே தகுதியில்லாத பூமியைத்தான் நமது சந்ததிக்கு விட்டுச் செல்ல வேண்டியிருக்கும். நாம் இஷ்டப்படி வாழ்ந்துவிட்டு இயற்கைக்கு லஞ்சம் கொடுத்துத் தப்பிக்க முடியாது.இப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண அரசுகளிடையே பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன. ஆனால், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் பொறுப்பை வளரும் நாடுகள் மேல் சுமத்தப் பார்க்கின்றன. அரசாங்கம் ஒருபக்கம் முயற்சிகளை மேற்கொண்டாலும், நாமும் நம் பங்குக்கு சில விஷயங்களைச் செய்ய முடியும்."அறத்தை நாம் காத்தால் அறம் நம்மைக் காக்கும்' என்ற சொற்றொடர் ஒன்று உண்டு. அதுபோல, "இயற்கையை நாம் காத்தால் இயற்கை நம்மைக் காக்கும்'.அமெரிக்க பாணி வாழ்க்கை முறையைப் பின்பற்றி நுகர்வோர் கலாசாரத்தில் மூழ்காமல், நமது தேவைகளைக் குறைத்துக் கொள்ளலாம்; நீர் நிலைகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தலாம். பிளாஸ்டிக் பயன்பாடு சமூகத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. பிளாஸ்டிக்கைப் பயன்படுத்த மாட்டேன் என உறுதி ஏற்கலாம்.மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்தலாம். பெட்ரோல் பயன்பாட்டால் மாசு கடுமையாக அதிகரித்து வருகிறது. தவிர்க்கமுடியாத நேரம் தவிர மற்ற நேரங்களில் பொது வாகனப் போக்குவரத்தைப் பயன்படுத்தலாம். வாய்ப்புள்ள இடங்களில் மரங்களை நட்டுப் பராமரிக்கலாம்.இப்படி அனைவரும் செயல்படத் தொடங்கினால், சுற்றுச்சூழல் மாசுபடாத உலகை விட்டுச் சென்றோம் என நமது அடுத்த தலைமுறை நம்மை வாழ்த்தும்.
துபாய் ரியல் எஸ்டேட் சந்தையில் வீசியது புயல்.., இந்திய பங்குச் சந்தையில் பாதிப்பு

துபாய் ரியல் எஸ்டேட் சந்தையில் ஏற்பட்ட நிதி பாதிப்பு உலக அளவில் பெரும் பாதிப்பை சந்தையில் ஏற்படுத்தியது. இந்திய பங்குச் சந்தையில் அதன் எதிரொலியாக 600 புள்ளிகள் இன்று மதியம் சரிந்தன. "துபாய் வேர்ல்ட்' என்ற அமைப்பு ஐக்கிய அரபு அரசு ஆதரவு பெற்றது. பெரிய நிதிச்சந்தை நிறுவனம். துபாய் ஷேக் முகமது பின் அல் மக்தூம் சொத்தை நிர்வகிக்கும் நிறுவனம் .மாபெரும் இந்த நிறுவனத்தின் துணை நிறுவனம் "நக்ஹீல்' என்பதாகும். பிரமாண்ட அடுக்குமாடிக் கட்டடங்கள், மற்றும் பல்வேறு வர்த்தக நிறுவனங்களில் தொடர்புடைய இந்த நிறுவனம் பொருளாதார சிரமத்தில் சிக்கியது. அதை அறிந்த ஷேக் உடனடியாக அந்த நிறுவனத்தை சிக்கனப்படுத்த நிர்வாகத்தை மாற்றினர். அதற்குள் 5900 கோடி டாலர் ( 2.70 லட்சம் கோடி ரூபாய்) நஷ்டத்தை சமாளிக்க முடியாமல் திணறுகிறது என்ற தகவல் கசிந்தது. உரிய அளவு வர்த்தகத்திற்கு பணம் இல்லை.
துபாய் அரசிடம் பணத்திற்கு பஞ்சம் இல்லை, சமாளித்து விடலாம் என்று அறிவித்த போதும் உலக அளவில் ரியல் எஸ்டேட் , மற்றும் வங்கிகள் சந்தையை வெகுவாகப் பாதித்தது. அது பாரீசில் எதிரொலித்தது, ஓரளவு ஜப்பான் சந்தை தப்பியது. ஐரோப்பிய சந்தைகள் அடி வாங்கின. அமெரிக்க வங்கிகள் பாதிப்படைந்திருக்கிறதா என்பது தெரியவில்லை. என்றுமே "துபாய் வேர்ல்டு' அமைப்பில் சூரியன் அஸ்தமிக்காது என்ற கோஷம் இப்போது அர்த்தமற்றதாக மாறிவிட்டது. இந்த நிலையை உணர்ந்து சவுதி வங்கிகள் தங்கள் வங்கிப் பணப் பரிவர்த்தனையை இவர்களுடன் நிறுத்திக் கொண்டன, இந்தோனேஷியாவில் இருந்து இங்கே வந்த "இஸ்லாமிய நிதி' கதி என்ன ஆகும் என்று தெரியவில்லை. இதன் பாதிப்பால் அபாரமாக ஏறிய தங்கத்தின் விலையும் சற்று சரிந்தது.
பங்குச் சந்தை : மும்பையில் பங்குச் சந்தை துபாய் புயலில் சிக்கி அதிக அளவு இழப்பைச் சந்தித்தது. திடீரென வர்த்தகத்தில் 590 புள்ளிகள் சரிந்தன. அப்போது, குறியீட்டெண் 16,264.86 ஆக இருந்தது. "நிப்டி'யும் 176 புள்ளிகள் இழந்தது. துபாய் கட்டுமானத்துடன் தொடர்பு கொண்ட எல் அண்ட் டி பங்குகள் 4.89 சதவீதம் சரிந்தது. ஐ.சி.ஐ.சி.ஐ., பங்கு மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் சரிந்தன.
இன்னும் நான்கு அல்லது ஐந்து நாளில் ஐக்கிய அரபு எமிரேட் அரசு எடுக்கும் நடவடிக்கைகளைப் பொறுத்து இதன் பாதிப்பு குறித்த மற்ற தகவல்கள் வெளிவரும்.
பாதிப்பு நமக்கு வருமா? "துபாய் ரியல் எஸ்டேட்டில் ஏற்பட்ட பாதிப்பு அங்கு வாழும் வெளிநாட்டு இந்தியர் தங்கள் பணத்தை இங்கு அனுப்பும் அளவு குறையாது, ஏனெனில், பெரிய பாதிப்பு ஏற்பட்டிருந்த போது அங்கிருந்து வரும் பண அளவு குறையவில்லை' என்று நிதித்துறைச் செயலர் அசோக் சாவ்லா தெரிவித்தார். அதே சமயம் எந்த அளவு இந்த பாதிப்பு அங்கே ஏற்பட்டிருக்கிறது என்பதை நிதித்துறை முழுவதும் ஆராயும் என்று கூறினார். ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரெட்டி கூறுகையில் , "மத்திய கிழக்கில் இப்போது ஏற்பட்டிருக்கும் பிரச்னையால் நமக்கு பாதிப்பு பெரிய அளவில் வராது ' என்றார்.
தோண்ட,தோண்ட, ஊழல் புதையல்
சென்னை விமான நிலைய கார்கோ (சரக்கு) பிரிவில் சி.பி.ஐ., அதிகாரிகள் நடத்திய சோதனையில், கடந்த ஆண்டில் அரசுக்கு சேர வேண்டிய பல கோடி ரூபாய் கஸ்டம்ஸ் வரி தொகையை, அதிகாரிகள் மோசடி செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. இதைத் தொடர்ந்து, சி.பி.ஐ., அதிகாரிகள், கார்கோ பிரிவில் தங்கள் சோதனையை நேற்றும் தொடர்ந்தனர்.
சென்னை விமான நிலையத்தில் நடந்த சி.பி.ஐ., சோதனையில் கைது செய்யப்பட்ட அதிகாரிகளிடம் நடத் திய விசாரணையின் அடிப்படையில் ஏர் கார்கோ காம்ப்ளக்சில் சி.பி.ஐ., அதிகாரிகள் தொடர்ந்து சோதனையிட்டு வருகின்றனர். இந்த வழக்கில், மேலும் நான்கு கஸ்டம்ஸ் அதிகாரிகளும், நான்கு ஏஜன்டுகளும் கைதாவார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், சி.பி.ஐ., அதிகாரிகளால் முடக்கி வைக்கப்பட்டுள்ள பார்சல்கள் குறித்த விசாரணை நேற்று துவங்கியது. அந்த பார்சல்கள் எந்த நிறுவனங்களுக்கு சொந்தமானவை; அவற்றின் ஏற்றுமதி, இறக்குமதியில் என்னென்ன முறைகேடுகள் நடந்துள் ளன; யார், யார் சம்பந்தப்பட்டுள்ளனர்; எவ்வளவு லஞ்ச தொகை பேரம் பேசப்பட்டது என்பது குறித்து விசாரணை தீவிரமாகி உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் சென்னை விமான நிலைய கார்கோ மூலம், 22 ஆயிரத்து 560 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கையாளப்பட் டுள்ளன. இந்த பொருட்களுக்கு உண்மையான வரி விதிப்பு விதிக்கப்பட்டிருந்தால், அரசுக்கு பல கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருக்கும். ஆனால், பத்தில் ஒரு பங்கு கூட வரியாக வசூலிக்கப்படவில்லை. இது தான் தற்போதைய விசாரணை தீவிரத்திற்கு காரணம்.
வழக்கமாக, ஏர் கார்கோவில் இருந்து பொருட்களை டெலிவரி எடுப்பது, இரவு 7 மணிக்கு துவங்கி நள்ளிரவு 1 மணி வரை நடக்கும். வெளியாட்கள் தங்களை கண்காணிக்கக் கூடாது என்பதற்காக கஸ்டம்ஸ் அதிகாரிகள் இப்படி ஒரு ஏற்பாட்டை செய்துள்ளனர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 23ம் தேதி மாலை சரியாக 6 மணிக்கு ஏர் கார்கோ பிரிவிற்குள் சோதனை தொடங்கிய போது, 30 பார்சல்கள் டெலிவரி செய்யப்படாமல் கிடந்தன. அதில், உபயோகப்படுத்தப்பட்ட பழைய துணி என்று குறிப்பிடப்பட்டிருந்த பார்சல் ஒன்றில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், தங்க கட்டிகள் இருந்தன. மேலும், சில பார்சல்களில் விலை உயர்ந்த எலக்ட்ரானிக் பொருட்கள் காணப்பட்டன. இந்த வகையில், பெரும்பாலான பார்சல்கள் உரிய மதிப்பு குறிப்பிடாமல், குறைந்த மதிப்பிட்டு, கேட்பாஸ் தயார் செய்யப்பட்டுள்ளதையும், இதன் மூலம் அரசுக்கு சேர வேண்டிய பல லட்சம் ரூபாய் கஸ்டம்ஸ் வரி மோசடி செய்யப்பட்டிருப்பதையும் சி.பி.ஐ., அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, அந்த பார்சல்கள் அனைத்தும் முடக்கி வைக்கப்பட்டன.
இந்நிலையில், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்றும் தங்கள் சோதனையை தொடர்ந்தனர். அப்போது, முடக்கி வைக்கப்பட்ட பார்சல்களின் உரிமையாளர்களை போன் மூலம் தொடர்பு கொண்டு, உரிய வரியைச் செலுத்திவிட்டு டெலிவரி எடுக்கும்படி உத்தரவிட்டனர். முதற்கட்டமாக, மூன்று பார்சலுக்கு சொந்தமான நிறுவனங்கள் நேரடியாக வந்து, உண்மையான மதிப்பிற்கு வரி கட்டிவிட்டு பார்சல்களை டெலிவரி எடுத்துச் சென்றன. இதேபோல், மற்ற பார்சல் உரிமையாளர்களையும் வரவழைத்து, முடக்கப்பட்டுள்ள பார்சல்கள் குறித்த விசாரணையில் சி.பி.ஐ., அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சி.பி.ஐ., சோதனையைத் தொடர்ந்து சென்னை விமான நிலைய கஸ்டம்ஸ் பிரிவில் நடந்து வரும் லஞ்ச, லாவண் யம் குறித்து பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. பல புகார் மனுக்கள் பிரதமருக்கும், சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. இதனால், கஸ்டம்ஸ் பிரிவில் சி.பி.ஐ., தொடர்ந்து சோதனை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலைக்கு இரண்டு "புல்' லஞ்சம்: சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து சென்னைக்கு பொருட்களை கடத்தும் ஏராளமான, "குருவி'கள் உள்ளனர். இவர்கள், பெரிய வியாபாரிகளின் கண்காணிப்பில் உள்ளனர். தினசரி 100 பேர், "குருவி'களாக சென்னை விமான நிலையத்திற்கு வருகின்றனர். இவர்களிடம் சில கஸ்டம்ஸ் அதிகாரிகள் லஞ்சமாக பணத்தை பெறுவதில்லை. மாறாக, ஒவ்வொரு, "குருவி'யும் தலா இரண்டு "ஜானிவாக்கர்' பிராண்டு மது பாட்டில்களை கொடுத்துவிட வேண்டும். ஒவ்வொரு பாட்டிலும் 1,200 ரூபாய் மதிப்புடையது. இவ்வாறு தினசரி சேகரிக்கப்படும் நூற்றுக்கும் மேற்பட்ட பாட்டில்களை விற்பதன் மூலம் பல ஆயிரம் ரூபாய் பணம் கிடைக்கிறது. இந்த பாட்டில்களை வாங்குவதற்காகவே சென்னை நகரில் பல ஏஜன்டுகள் செயல்பட்டு வருவதாகவும், அவர்களும் சி.பி.ஐ.,யின் பார்வையில் சிக்கியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
கோடிகளில் புரண்டனர்: சென்னை விமான நிலைய கார்கோவில், முறைகேடாக வரும் சரக்குகளை வெளியே எடுத்துச் செல்ல கஸ்டம்ஸ் அதிகாரிகள் லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்று வந்தனர். இது குறித்து சி.பி.ஐ., நடத்திய சோதனையில், ஒன்பது கஸ்டம்ஸ் அதிகாரிகள், இரண்டு ஏஜன்டுகள் உட்பட 11 பேர் கைது செய்யப் பட்டனர். அவர்களிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் தனியாக விசாரணை நடத்தினர். இதில், மற்ற அதிகாரிகளின் முறைகேடுகள் குறித்து அவர்கள் தகவல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. சி.பி.ஐ., பார்வையில் விழுந்துள்ள அந்த நான்கு அதிகாரிகளில், இரண்டு அதிகாரிகளுக்கு சென்னையில் பல கோடி ரூபாய் மதிப்பில் வீடுகளும், வெவ்வேறு மாவட்டங்களில் விவசாய நிலங்களும் இருப்பது தெரியவந்துள்ளது.
வியாழன், 26 நவம்பர், 2009
வரலாற்று சம்பவம்: பூட்டோ தூக்கில் போடப்பட்டார்; கருணை காட்ட ஜியா மறுப்பு

முடிந்த தொடர்... முடியாத வரலாறு: யாருக்கு ?

இலங்கை வன்னிப் பகுதியில் வாழ்ந்த பண்டாரக வன்னியன் என்ற தமிழ் மன்னரின் கதை முடியாத வரலாறாக வாழும் என்று முதல்வர் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். இன்று விடுதலைப் புலிகள் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த தினம். அதை நினைவில் கொண்டு முதல்வர் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறாரா என்று தெரியவில்லை. இதுதொடர்பாக, அவர் புதன்கிழமை எழுதியுள்ள கடித விவரம்: "முரசொலி'யில் இரண்டாவது முறையாக வெளிவந்துகொண்டிருந்த "பாயும்புலி பண்டாரக வன்னியன்' என்ற வரலாற்று காவியம் முடிவடைந்துவிட்டது. ஆனால், அந்த வீர காவியம் வாழ்ந்து கொண்டே இருக்கும். இந்த நாவலில், வஞ்சிக்கப்பட்ட நல்ல நாச்சியார், "நானும் தமிழன் தானே' என்று கூறுகிற காக்கை வன்னியனை நோக்கி, "நீ தமிழன் தான்! இனத்தால், மொழியால், உன் உடலில் ஓடும் ரத்தத்தால் நீ தமிழன் தான்! ஆனால் சூடு, சொரணை இல்லாத தமிழன்! பணத்துக்காகப் பாத பூஜை செய்யும் தமிழன்! பதவிக்காக மானத்தை அடகு வைக்கும் தமிழன்!' என்று சினந்து கூறுவதாக அமையும். இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கிய நிதியமைச்சர் க. அன்பழகன், ""இது இன்றைய தமிழ் மண்ணில் எவ்வளவு பேருக்கு ஏற்புடையதாக அமையும் என எண்ணத் தோன்றுகிறது'' என்று குறிப்பிட்டுள்ள்ர். மற்றொரு இடத்தில் வெள்ளைக்கார மேஜர், "எதிரிகள் கஷ்டப்பட்டுப் பிரித்து வைக்கத் தேவை இல்லாமலே, தாங்களாகவே பிரிந்து நிற்கும் இனமும் தமிழ் இனம்தான்!' என்று கூறுவதாக அமையும். ""இந்தக் கூற்று எவ்வளவு வேதனையோடு நம் நெஞ்சில் அதிர்கிறது'' என்று தான் கொண்ட அதிர்வை அன்பழகன் அணிந்துரையில் எடுத்துக்காட்டுகிறார். இந்த வீரனது சிலை திறப்பு விழா 1982-ம் ஆண்டு நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் கலாநிதி வித்யானந்தன், ""வன்னிப் பிரதேச மக்களுக்கு மட்டுமின்றி, நம்பிக்கை தளர்ந்து போயிருக்கும் ஈழத் தமிழர் யாவருக்கும் நம்பிக்கையும், தேசப்பற்றும், உரிமைக் குரலும் அதிகரிக்க இச்சிலை உதவும். நல்ல தலைவர்களை மக்கள் விரும்பவும், இனம் கண்டு கொள்ளவும், புதிய தலைவர்கள் தோன்றவும் இந்த சிலை வழிவகுக்கும்'' என்று குறிப்பிட்டுள்ளார். உண்மையிலேயே அந்த சுதந்திரப் போர் வீரன் தோற்கடிக்கப்பட்டானா? அத்துடன் அவனது போர் முழக்கம் முற்றுப்பெற்றுவிட்டதா? அல்லது மீண்டும் ஆர்ப்பரித்துக் கிளம்பியதா அந்த அரிமா? இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் "பாயும் புலி பண்டாரக வன்னியன்' தொடர் சித்திரம், பதில் அளிக்கத்தான் செய்கிறது! விளக்கமான பதில்! வீரம் கொப்பளிக்கும் பதில்! அந்த நாவலின் முடிவில், குருவிச்சியின் மூச்சு நின்று போனது தெரியாமலே குதிரை மீது அவளை அணைத்தவாறு பண்டாரக வன்னியன், ஆங்கிலேயரிடமிருந்து தப்பிவிட்டதாக வரும். மணக்கோலம் பூண்டு வாழ்வின் சுவை அறியத் துடித்தவள், இலட்சியத் திருவிளக்காய், பிணக்கோலம் பூண்டு பண்டாரகனின் குதிரையில் வேகமாய்ப் போய்க்கொண்டிருந்தாள்; அவள் உயிருடன் இருப்பதாகவே கருதிக்கொண்டு அவனும், அவனைப் பின்தொடர்ந்த தமிழ் வீரர்களும் காட்டுப் பாதையில் நெடுந்தூரம் சென்றுகொண்டிருந்தனர் என்று முடியும். காட்டுப்பாதையில் சென்று அவர்கள் அன்று காட்டிய பாதை வீரமறவர்களின் பாதை! பண்டாரக வன்னியன் ஒருவனல்ல; அவனைப் போல பலர்; உறுதியும் வாய்மை ஒளியும் உணர்வும் கொண்டவர்கள் தோன்றிட, அந்த மாவீரனின் வரலாறு பயன்படத் தவறவில்லை. எனவே, அது வாழும் வரலாறு என்று முதல்வர் கருணாநிதி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மும்பை சம்பவம்:முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு

மும்பை: மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 195 பேரைகொன்று குவித்த சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, மும்பையில் அசம்பாவிதங்கள் நடப்பதை தடுக்க 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடந்த 1993ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி தாவூத் இப்ராகிம் கோஷ்டி நடத்திய தொடர்வெடிகுண்டு தாக்குதலுக்கு பிறகு மும்பை பல தீவிரவாத தாக்குதல்களைசந்தித்துள்ளது.
இதற்கு நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் பலியாகி இருக்கின்றனர். இவைஎல்லாவற்றையும் விட கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி, பாகிஸ்தான்தீவிரவாதிகள் கடல் வழியாக ஊருடுவி வந்து மும்பையில் நடத்திய தாக்குதல்உச்சக்கட்ட கொடூரமாக அமைந்தது. சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், தாஜ்மஹால் ஒட்டல், ட்ரைடன்ட் ஓட்டல், நாரிமன் ஹவுஸ், காமா மருத்துவமனைஉள்ளிட்ட இடங்களில் கண்ணில் பட்டவர்களை எல்லாம் நவீன துப்பாக்கிகளால்சரமாரியாக சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் தீவிரவாதிகள் கொன்றுகுவித்தனர்.
அதில் பலியான உயிர்களின் எண்ணிக்கை 195. இந்த பயங்கர சம்பவத்தின்முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தாக்குதலில்கொல்லப்பட்டவர்கள், தீவிரவாதிகளை ஒழிக்க உயிரை தியாகம் செய்தவர்களைநினைவு கூறும் வகையில் மும்பையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளுக்குஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. நினைவு சின்னம்: இந்த தாக்குதலுக்கு பிறகுமும்பை காவல் துறையை பலப்படுத்துவதற்காக வாங்கப்பட்ட நவீனஆயுதங்கள், தளவாடங்கள் மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்களுடன் கேட்வேஆப் இந்தியாவில் இருந்து மெரைன் டிரைவ் வரை போலீசார் நடத்தும்அணிவகுப்பு இன்று காலை நடக்கிறது.
முன்னதாக, கேட்வே ஆப் இந்தியாவில் சர்வமத அமைதி பிரார்த்தனை கூட்டம்நடக்கிறது. மாலை 6 மணிக்கு மெரைன் டிரைவ் போலீஸ் ஜிம்கானாவில் அரபிக்கடலை நோக்கி அமைக்கப்பட்டுள்ள தியாகிகள் நினைவு சின்னத்தை மத்தியஉள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் திறந்து வைக்கிறார். கூட்டு பிரார்த்தனை: தீவிரவாதிகளின் தாக்குதலில் அதிகப்பட்சமாக சத்ரபதி சிவாஜி ரயில்நிலையத்தில் 57 பேர் கொல்லப்பட்டனர். அங்கு இன்று பல நிகழ்ச்சிகள்நடக்கின்றன.
கொல்லப்பட்டவர்களின் நினைவாக காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரைமலரஞ்சலி செலுத்தப்பட்டு, கூட்டு பிரார்த்தனை கூட்டம், ரத்த தான முகாம், பாதுகாப்பு முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு முகாம் ஆகியவைநடத்தப்படுகின்றன. ரயில்வே பாதுகாப்பு படையின் பேண்டு வாத்திய குழுவும்அஞ்சலி கீதம் இசைக்கிறது. இந்த நினைவு தினத்தின்போது அசம்பாவிதங்கள்நடப்பதை தடுக்க நகரம் முழுவதும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் இரவு முதலே முக்கிய சாலைகளில் போலீசார் சோதனைசாவடிகளை அமைத்து, வாகனங்களை சோதனை செய்த பிறகே நகருக்குள்அனுமதிக்கின்றனர். கடலோர பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படையினர் உஷார் நிலையில்வைக்கப்பட்டுள்ளனர்.
புதன், 25 நவம்பர், 2009
கல்வியின் வெற்றியை தாய்மொழியே சாதிக்கும்!
லிபரான் கமிஷன் அறிக்கை:வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட 68 பேர் மீது குற்றச்சாட்டு

புது தில்லி, நவ. 24: பாபர் மசூதி இடிப்பை நடத்தி முடித்து வகுப்பு கலவர நிலைக்கு நாட்டை கொண்டுசென்றதில் பாஜக மூத்த தலைவர்கள் வாஜ்பாய், எல்.கே.அத்வானி, சங்க பரிவாரங்களின் நிர்வாகிகள் உள்ளிட்ட 68 பேருக்கு பங்கு உள்ளது என்று லிபரான் கமிஷன் குற்றம்சாட்டியுள்ளது.அயோத்தியில் பாபர் மசூதியானது 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி கரசேவகர்களால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. இதற்கு பாஜக, விஎச்பி, ஆர்எஸ்எஸ் உள்ளிட்டவை காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் இதை மறுத்த பாஜக, சங்கபரிவாரங்கள் இந்துக்களின் மனக் குமுறலே மசூதி இடிப்பில் முடிந்தது என்று குறிப்பிட்டு வருகின்றனர். பாபர் மசூதி இடிப்பு குறித்து விசாரித்த லிபரான் கமிஷன், தனது அறிக்கையை கடந்த ஜூன் 30ம் தேதி அரசிடம் ஒப்படைத்தது. இந்நிலையில் அந்த அறிக்கையின் சில பகுதி ஆங்கில நாளேடு ஒன்றுக்கு ரகசியமாக கசிந்து புயலை கிளப்பிவிட்ட நிலையில் மறுநாள் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டது. வகுப்பு நல்லிணக்கத்தை சீர்குலைக்கச் செய்யும் அளவுக்கு பூதாகர பிரச்னையாகிப்போன பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்துக்கு சங்கபரிவார அமைப்புகள், அதிகாரிகள் உள்ளிட்ட 68 பேர் மீது கடுமையாக குற்றம் சுமத்தியுள்ளது லிபரான் கமிஷன். 4 தொகுப்புகளில் 1000 பக்கம் கொண்டுள்ளது லிபரான் அறிக்கை. இந்த அறிக்கை குற்றம்சுமத்தியுள்ள 68 பேரில் முதலில் இடம்பெறுபவர்களாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி ஆகியோர் உள்ளனர். பாஜக தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, அப்போதைய உத்தரப்பிரதேச முதல்வர் கல்யாண் சிங், விஎச்பி அமைப்பைச் சேர்ந்த கிரிராஜ் கிஷோர், அசோக் சிங்கால் உள்ளிட்டோரையும் இந்த கமிஷன் பாபர் மசூதி இடிப்பில் குற்றம்சாட்டியுள்ளது. 16ம் நூற்றாண்டு வரலாற்றுச்சின்னமாக திகழ்ந்த பாபர் மசூதியை தகர்க்க சங்கபரிவாரங்கள் முடிவெடுத்தாலும் அதில் பாஜகவின் மிதவாதத் தலைவர்கள் எனக் கூறிக்கொள்ளும் வாஜ்பாய், அத்வானி ஆகியோருக்கும் பங்கு உள்ளது என லிபரான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இந்த தலைவர்களுக்கு சந்தேகத்தின் பலனைக் கொடுத்து பாபர் மசூதி இடிப்புக் குற்றத்திலிருந்து விடுவிக்கக்கூடாது என்றும் லிபரான் தெரிவித்துள்ளார். மக்கள் வைத்திருந்த நம்பிக்கைக்கு மாறாக இவர்கள் நடந்துள்ளனர். செய்யக்கூடாத குற்றச்செயலை செய்துள்ளனர் இந்த போலி மிதவாதிகள். இதைவிட பெரிய துரோகமோ குற்றமோ ஜனநாயகத்தில் நடந்து இருக்க முடியாது. மசூதி இடிப்பில் பிரதான பொறுப்பு ஆர்எஸ்எஸ், விஎச்பி, பஜ்ரங் தளம், சிவசேனை, பாஜக ஆகியவற்றின் மேல்சுற்று தலைவர்களுக்கு உள்ளது. இந்துக்களின் மனக்குமுறலால் தன்னிச்சையாக வெளிப்பட்ட ஆவேசம் மசூதி இடிப்பு என்றும், முன்கூட்டியே திட்டமிட்டு இது நடத்தப்பட்டதல்ல என்றும், வெளிநாட்டு சக்திகள் அரங்கேற்றிய சதி என்றும் தமது கற்பனைக்கேற்ப பலர் பலவிதமாக கூறினர். ஆனால் இவையெல்லாம் பொய்யென லிபரான் கமிஷன் மேலும் தெரிவித்துள்ளது.நரசிம்மராவ் மீது குறையில்லை: அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவை பாபர் மசூதி இடிப்பை தடுக்கத் தவறியதாக குறை சொல்ல இயலாது. அயோத்தியில் என்ன நடக்கிறது என்பதை படம்பிடித்துக் காட்டமுடியாதபடி உளவு அமைப்புகள் செயலிழந்து கிடந்தன. அப்போதைய கல்யாண் சிங் அரசு கோரியபடி மத்திய படைகள் அனுப்பப்பட்டபோதும் அந்த படைகளை சம்பவ இடத்தில் நிறுத்தாமல் அப்பால் நிறுத்தியது மாநில அரசு. மேலும் மாநில உயர்நீதிமன்றம் நியமித்த உச்சநீதிமன்ற பார்வையாளரும் நடுநிலைமையாக செயல்படவில்லை. மசூதி கூரைமுகடுகள் இடிக்கப்பட்டபோது அவர் சம்பவ இடத்திலேயே இல்லை என்று கமிஷன் மேலும் குறிப்பிட்டுள்ளது. பாபர் மசூதி இடிப்புக்குப்பிறகு 10 நாள் கழித்து அமைக்கப்பட்ட லிபரான் கமிஷன் 48 முறை நீட்டிப்புப் பெற்றது. கடந்த ஜூன் மாதம் 30ம் தேதி அரசிடம் அறிக்கையை தாக்கல் செய்தது.
செவ்வாய், 24 நவம்பர், 2009
வரலாற்று சம்பவம்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பூட்டோவுக்கு மரண தண்டனை

இறுதியில் பூட்டோ தூக்கிலிடப்பட்டார்.
எதிரிக்கு எதிரி நண்பனா?
ரஷ்ய படைகளை ஆப்கனில் இருந்து வெளியேற்றியதில் இந்தக் கூட்டத்துக்கு முக்கியப் பங்கு உண்டு. அதுதான் இப்போது தலிபான் அமைப்பாக மாறி, வளர்த்து விட்ட அமெரிக்காவுக்கே குடைச்சல் கொடுத்து வருகிறது. இப்போது அந்த தலிபானை ஒழிக்க, அந்த அமைப்புக்கு எதிரான பழங்குடி மக்களுக்கு ஆயுதம் கொடுக்க முடிவு செய்துள்ளது அமெரிக்கா.
ஆப்கனில் தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்ற கதைதான் நடக்கிறது. கடைநிலை ஊழியரில் தொடங்கி அதிபர் கர்ஸாய் வரை ஊழல் கொடி கட்டிப் பறக்கிறது. அமெரிக்கா கொட்டிக் கொடுக்கும் டாலர்கள் அரசியல்வாதிகளின் பையை நிரப்பி வருகிறது. இவ்வளவு கொடுத்தும் பயனில்லை. அங்கு நேட்டோ படைகளுக்கு தலிபான் தீவிரவாதிகள் தண்ணி காட்டி வருகிறார்கள். அவர்களை அடக்க ஆப்கன் ராணுவமும், போலீசும் பத்தவில்லை. அவர்கள் தயாராகும் வரை, அவர்களுக்குப் பதிலாக இப்போதைக்கு, தலிபானுக்கு எதிரானவர்களை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது அமெரிக்கா.
மீண்டும் ஒரு அப்பாவி கூட்டத்தை, தீவிரவாதக் கூட்டமாக மாற்றத் தயாராகி விட்டது.
தீவிரவாத அமைப்புகளை அழிக்க ராணுவம், அதிரடிப்படை என முறையான அமைப்புகளை உருவாக்கி தாக்குவதுதான் பலன் தரும். அப்படி இல்லாமல், ஏறக்குறைய கூலிப் படை போல் செயல்படும் கூட்டங்களுக்கு ஆயுதமும், டாலரும் அள்ளிக் கொடுத்தால், இன்று ஆதரவாக இருக்கும் கூட்டம், எப்போது வேண்டுமானாலும் எதிராகத் திரும்பும். உலக வரலாற்றில் இதுபோன்ற சம்பவங்கள் திரும்பத் திரும்ப நடந்திருக்கின்றன. இருந்தாலும் அதிலிருந்து யாரும் பாடம் கற்பதில்லை. அமெரிக்காவும் விதி விலக்கல்ல.
அமெரிக்காவிலும் பட்டினி கிடக்கறாங்க மக்கள்

வாஷிங்டன் : அமெரிக்காவில், ஏழில் ஒரு குடும்பம் வீதம் போதுமான உணவின்றி பட்டினியில் வாடுகின்றனர் என்றால் நம்ப முடிகிறதா? உண்மை தான். போதுமான உணவின்றி அமெரிக்க மக்கள் தவிப்பதற்கு, பொருளாதார நெருக்கடியும், வேலையின்மையும் தான் காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில், அரசின் உணவுப்பாதுகாப்பு அமைப்பு , பதினான்கு ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்டது. விவசாய அமைச்சகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட இந்த அமைப்பு, ஒவ்வொரு ஆண்டும், அமெரிக்கர்களின் உணவுப்பாதுகாப்பு பற்றி சர்வே எடுத்து வருகிறது. சமீப காலமாக எடுக்கப்பட்ட சர்வேக்களில், அமெரிக்காவில், போதுமான உணவு இல்லாமல், பற்றாக்குறையுடன் காலம் தள்ளும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. கடந்தாண்டு அமெரிக்காவில், 4.90 கோடி பேர் போதிய உணவின்றி தவித்துள்ளனர். அதாவது, ஏழு குடும்பங்களில் ஒன்று வீதம் பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது . இவர்களில், மூன்றில் ஒரு பங்கினர் மிக மோசமான நிலையில் உணவின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், சில வேளை உணவு சாப்பிடாமல் பட்டினியாக இருக்க வேண்டிய நிலை உள்ளது.எஞ்சியுள்ள மூன்றில் இரண்டு பங்கினருக்கு, சாப்பிட போதுமான உணவு கிடைத்தாலும், மிக விலை குறைந்த, உணவுகளே சாப்பிடுகின்றனர்.அமெரிக்காவில், இந்தாண்டு 5.60 லட்சம் குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் பசியால் வாடுகின்றனர். முந்தைய ஆண்டு, 3.23 லட்சம் குழந்தைகள் மட்டுமே பசியால் வாடினர். இந்தாண்டு உணவின்றி இருப்போரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது, நாட்டின் உணவு பாதுகாப்பின்மையே காட்டுகிறது.ஆனால், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, வரும் 2015ம் ஆண்டிற்குள் குழந்தைகள் பட்டினிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, ஆய்வாளர்கள் கூறுகையில்,"பசியால் வாடுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு, வேலையின்மை வீதம் கடந்தாண்டு இறுதியில், 4.9 சதவீதத்தில் இருந்து 7.2 சதவீதமாக அதிகரித்ததே காரணம். தற்போது அந்த வீதம், 10.2 சதவீதமாக உள்ளது. மேலும், உணவுப் பொருட்களின் விலையேற்றமும், இதற்கு ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது'என்றனர்.
வேலை வாய்ப்புக்கு உறுதி அளிக்கும் கல்வி முறை
நன்றி:
தினமணி