சனி, 17 அக்டோபர், 2009

ஜூன் 24ல் கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு

சென்னை : கோவையில் வரும் ஜூன் மாதம் 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடத்திட, சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுப் பணிகள் குறித்து கலந்து ஆலோசிக்க, சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நேற்று கூட்டம் நடந்தது. மொழி அறிஞர்கள், ஆய்வாளர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் கலந்து கொண்டனர்.இந்தக் கூட்டத்தில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுப் பணிகள் குறித்தும், மாநாடு நடைபெறும் நாட்கள் குறித்தும் கலந்துரையாடப் பட்டது. நிதியமைச்சர் அன்பழகன், துணை முதல்வர் ஸ்டாலின், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, தலைமைச் செயலர் ஸ்ரீபதி, ஐம்பெருங்குழு மற்றும் எண்பேராயம் துணைத் தலைவர் வா.செ.குழந்தைசாமி, தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக துணைவேந்தர் ராசேந்திரன், முத்துக்குமார சுவாமி, டாக்டர் ஐராவதம் மகாதேவன், பேராசிரியர்கள் பொன்.கோதண்டராமன், வெங்கடாசலபதி, மணவாளன், க.ப.அறவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில் ஒரு மனதாக எடுக்கப்பட்ட தீர்மானங்கள்: இலங்கையில் ஈழத் தந்தை செல்வா காலத்தில் துவங்கி நடைபெறுகின்ற தமிழ் இனத்தின் உரிமைப் போராட்டத்தின் ஒரு கட்டமாக, இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழக்கக் கூடிய சூழல் உருவாக்கப்பட்டு, முள்வேலி முகாம்களில் அடைபட்டிருக்கும் நிலை நேரில் கண்டறிப்பட்டது. பிரதமர், சோனியா, மத்திய அமைச்சர் சிதம்பரத்தை சந்தித்து, இந்திய மற்றும் இலங்கை அரசுகளின் ஒப்புதலுடன் தமிழக எம்.பி.,க்கள் குழு இலங்கை சென்று வந்துள்ளது. முதற்கட்டமாக 58 ஆயிரம் தமிழர்களை படிப்படியாக வாழ்விடங்களுக்கு அனுப்பி வைப்பதாக இலங்கை அரசு உறுதி தந்திருக்கிறது. அதன்படி அப்பணி துவங்கியுள்ள நிலையில், இந்திய அரசுக்கு இந்தக் கூட்டம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது. இலங்கைத் தமிழர்கள் இன, மொழி உரிமை பெற்றிட அங்கு அரசியல் தீர்வு காண்பது ஒன்றே சிறந்த வழி. அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள, இந்திய - இலங்கை அரசுகள் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.தமிழக முதல்வர், காஞ்சியில் நடந்த அண்ணாதுரை நூற்றாண்டு நிறைவு விழாவில், உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறும் என்று அறிவித்தார். இதற்குரிய கூடுதல் காலம் அளித்திட வேண்டுமென்ற ஆய்வாளர்களின் கோரிக்கையை ஏற்று, ஜூன் அல்லது ஜூலை மாதம் 2010ல் மாநாட்டை நடத்திட முதல்வர் முன்வந்திருப்பதை, இந்தக் கூட்டம் வரவேற்கிறது. மழைக்காலம் மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக் கழக கோடை விடுமுறையை கணக்கிட்டு, ஜூன் மாதம் 24ம் தேதியில் இருந்து 27ம் தேதி வரை மாநாட்டினை நடத்தலாம் என்று இந்தக் கூட்டம் முடிவு செய்கிறது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கருத்துகள் இல்லை: