வெள்ளி, 30 அக்டோபர், 2009

பிரதமற்கு ஜெயலலிதா சவால்?

ராசாவை நீக்க பிரதமருக்கு துணிவு இருக்கிறதா?: ஜெயலலிதா கேள்வி


சென்னை, அக். 29: "ஸ்பெக்ட்ரம்' அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் புகாருக்கு ஆளாகியுள்ள மத்திய அமைச்சர் ஆ. ராசாவை பதவி நீக்கம் செய்யும் துணிவு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இருக்கிறதா என அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் தவறான கொள்கையை கடைபிடித்ததன் காரணமாக ரூ.60 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக நாட்டிற்கு இழப்பு ஏற்பட்டது. எனவே, இதில் உள்ள முறைகேடுகளை சிபிஐ விசாரிக்க வேண்டும் என மத்திய கண்காணிப்பு ஆணையம் கேட்டுக் கொண்டது. அதன் அடிப்படையில் தொலைதொடர்பு அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது. அண்மைக் காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்த மிகப்பெரிய ஊழலுக்கு தலைமை தாங்கிய மத்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ. ராசா, பதவி விலக முடியாது என அறிவித்துள்ளார். இது பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடைபெறாது என்பதற்கு இடமளிக்கிறது. அவர் அவ்வாறு அறிவித்ததில் வியப்பேதும் இல்லை. தி.மு.க.வில் இருக்கும் ஒருவரிடமிருந்து யாரும் எவ்வித நியாயத்தையும் எதிர்பார்க்க முடியாது. பிரமதர் மன்மோகன் சிங், ராசாவை ராஜிநாமா செய்யச் சொல்லவில்லை. இது ஆச்சர்யம் அளிக்கிறது. தனக்கு முன்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் பின்பற்றிய அதே முறையைத்தான் தானும் பின்பற்றியதாகவும், பிரதமரின் அனுமதியுடன்தான் அனைத்தும் நடைபெற்றதாகவும் ராசா பகிரங்கமாக கூறியுள்ளார். இதை மன்மோகன் சிங் ஒப்புக் கொள்கிறாரா? அதனால்தான் ராசா ராஜிநாமா செய்ய வேண்டாமென்று நினைக்கிறாரா? அமைச்சர் பதவியிலிருந்து ராசாவை நீக்கினால்தான் இந்த வழக்கில் நியாயம் கிடைக்கும் என்று நான் ஏற்கெனவே வலியுறுத்தி இருந்தேன். இல்லையெனில், மத்திய அமைச்சர் ராசா சொல்வதை கேட்கக்கூடிய சில துறை அலுவலர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்து, சிபிஐ தனது பணியை நிறுத்தி விடும். அலைக்கற்றை ஒதுக்கீட்டில் யாரும் பயனடையவில்லை எனில், அலைக்கற்றை ஒதுக்கீட்டை ஏன் அடிமாட்டு விலைக்கு அரசு விற்றது? யாராவது ஆதாயம் அடைந்தார்கள் என்றால், யார் அந்த பயனாளிகள்? இந்தக் கேள்விகளுக்கு பதில் கிடைக்காவிட்டால், சிபிஐ விசாரணைக்கு எந்த அர்த்தமும் இருக்காது. தொலை தொடர்பு துறையின் சில அதிகாரிகளிடம் மட்டுமின்றி, அத்துறை அமைச்சர் ஆ. ராசாவின் பங்கு குறித்தும் சிபிஐ ஆழமாக விசாரிக்க வேண்டும்.தொடர்புகள் பற்றி விசாரணை... 2004-ல் ராசாவுக்கு நெருக்கமானவர்களால் வெறும் ஒரு லட்ச ரூபாய் பங்கு முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டு, இன்று பல ஆயிரம் கோடிகள் மதிப்புடையதாக விளங்கும் "கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ்' கட்டுமான நிறுவனத்திற்கும், "ஸ்வான் டெலிகாம்' நிறுவனத்திற்கும் உள்ள தொடர்பை அறிய வேண்டும். இ.டி.ஏ. குழுமம், ஸ்வான் டெலிகாம் நிறுவனங்களுக்கும் உள்ள தொடர்பு, இ.டி.ஏ. மற்றும் முதல்வர் கருணாநிதிக்கும் இடையேயான தொடர்பு ஆகியவை குறித்தும் விசாரணை நடத்த வேண்டும். இது போன்ற முழுமையான விசாரணை நடத்தினால்தான், தலைமைச் செயலக வளாகம், புதிய மாநில நூலகம், நெடுஞ்சாலைத் துறை மேம்பாலங்கள் உள்பட பல்வேறு முக்கியக் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரும் இ.டி.ஏ. குழும இயக்குநர்களுக்கும், முதல்வர் கருணாநிதிக்கும் உள்ள நிதித் தொடர்புகள் குறித்த உண்மை நிலையும் தெரியும். மேலும் தமிழக அரசின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள, சர்ச்சைக்குரிய, அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை பெற்றுள்ளது இ.டி.ஏ. குழுமத்தின் "ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ்' நிறுவனம்தான் என்பதும் தெரிய வரும். கருணாநிதி குடும்ப உறுப்பினர்களின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் "ஸ்டார் ஏர்லைன்ஸ்' நிறுவனத்தை பதிவு செய்ததும் இந்த இ.டி.ஏ. குழுமம்தான் என்பதும் வெளிப்படும். 1960, 1970-ம் ஆண்டுகளில் இருந்த "ஈஸ்ட் கோஸ்ட் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்' என்ற நிறுவனத்தின் ஒரு பகுதிதான் இ.டி.ஏ. குழுமம். கருணாநிதி முதல்வராக இருந்தபோது, 1972-73-ம் ஆண்டுகளில் அண்ணா சாலை, அண்ணா மேம்பாலம் மற்றும் இதர மேம்பாலங்கள் கட்டும் பணியையும் இந்த நிறுவனத்திடம்தான் ஒப்படைத்தார். இதில் உள்ள சில தொடர்புகள் குறித்து சர்க்காரியா விசாரணை ஆணைய அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. ஆனால், இதில் உள்ள எல்லா உண்மைகளும் வெளிச்சத்திற்கு வர வேண்டுமானால், ராசாவை மத்திய அமைச்சரவையிலிருந்து தூக்கி எறியும் துணிச்சல் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வர வேண்டும். இதை மன்மோகன் சிங் செய்வாரா? என ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.

1 கருத்து:

ttpian சொன்னது…

தமிழ் செம்மொழி:
கனிமொழி என் மகள்
அழகிரி மந்திரி
மஞசள் துண்டு:கதை விசனம்
மீனவன் இருந்தால் என்ன? செத்தால் என்ன?
தமிழ் வழ்க:மு.க வாழ்க!
மு.க மனைவிகள் வாழ்க!