வெள்ளி, 23 அக்டோபர், 2009

சென்னை ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராட்டம்; மனைவியை பார்த்து வாசிம் அக்ரம் கண்ணீர்


சென்னை, அக். 23-

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம்அக்ரம். இவரது மனைவி ஹியூமா (வயது 38). சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார்.
மேல் சிகிச்சைக்காக லாகூரில் இருந்து ஆம்புலன்ஸ் விமானம் மூலம் சிங்கப்பூர் கொண்டு சென்றனர். வழியில் பெட்ரோல் நிரப்பு வதற்காக அந்த விமானம் சென்னையில் தரை இறங்கியது. அப்போது ஹியூமாவின் உடல் நிலை மோசமானது. உடனடியாக அவரை சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். தேவையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. அப்பல்லோவில் உள்ள பல மருத்துவ நிபுணர்கள் ஹியூமாவின் உடல் நிலையை பரிசோதித்தனர். தொடர்ந்து டயாலிசிஸ் செய்யப்படுகிறது.
ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் போதே அவருக்கு சுயநினைவு இல்லை. 2 நாட்களாக சிகிச்சை அளித்தும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இன்னும் சுய நினைவு திரும்பவில்லை. மூச்சுத்திணறல் ஏற்படுவதால் செயற்கை முறையில் சுவாசம் அளிக்கப்படுகிறது. தொடர்ந்து உயிருக்கு போராடுகிறார்.
வாசிமின் 2 மகன்களும் லாகூரில் உறவினர்களுடன் இருக்கிறார்கள். மனைவி ஹியூமாவை வாசிம் அக்ரம் அருகில் இருந்து கவனித்து வருகிறார். அவரது மைத்துனர் அமீர்அலியும் உடன் இருக்கிறார்.
தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடும் மனைவியை அடிக்கடி சென்று பார்த்து விட்டு தனது அறையில் கண்ணீர் விட்டு அழுதபடியே அக்ரம் இருக்கிறார். மைத்துனர் அமிர்அலி அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்.
எனது மனைவி குணம் அடைய எல்லோரும் கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்று அக்ரம் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தார்.

கருத்துகள் இல்லை: