ஞாயிறு, 18 அக்டோபர், 2009

2050- 2100 உலகம் இப்படி இருக்கப் போகிறது



இன்றைய நவீன உலகில் உள்ள ஒவ்வொரு வசதியும், ஒரே நாள் இரவில் உருவானது அல்ல. பல நாள், பல ஆண்டு முயற்சியின் விளைவாகவே கிடைத்தவை."ஒரு சிறிய விளக்கு செய்யும் உதவியை, ஒரு பெரிய சூரியனால் செய்ய முடியாது. இரவில் ஒளிதர அந்த விளக்கால் மட்டுமே முடியும்' என்றார் பெர்னாட்ஷா. இன்று நாம் பயன்படுத்தும் விமானம், ரயில், மொபைல் உள்ளிட்டவை பல்வேறு கண்டு பிடிப்புகளால் மேம்படுத்தப் பட்டவை. அவை உருவாக்கப்படும் போது இருந்த நிலைக்கும் தற்போது உள்ள நிலை முற்றிலும் மாறிவிட்டன. அதுபோல் எதிர்கால தேவைகளுக்காக இன்று ஏராள மான விஞ்ஞானிகள் உலகம் முழுவதும் உழைத்துக் கொண்டிருக் கிறார்கள். 2100ம் ஆண்டுக்குள் இந்த உலகம் எப்படி இருக்கப் போகிறது என்பது உங்கள் கண்முன் இங்கே...



வயதான உலகம் : *கடல் மட்டம் உயர்வதால் மும்பையில் "கேட் வே ஆப் இந்தியா' தண்ணீருக்குள் இருக்கும்.
*
குற்றவாளிகளை துல்லியமாக அடையாளம் காணும் தொழில்நுட்பம் காவல்துறையினர் வசம் இருக்கும்.
*
பொதுக்கூட்டங்களில் புழுதிவாரி இறைக்கும் நபர்களின் பேச்சுகளை பதிவு செய்யும் பொது ஒழுங்கு ஆணையம் உருவாக்கப்படும். தவறாக பேசுவோர் மீது இந்த ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்யும்.
*
கடற்கரையோரங்களில் மணல் இருக்கிறதோ இல்லையோ கடல்நீர் சுத்திகரிப்பு ஆலைகள் இருக்கும்.
*
மரபணு மாற்றம் செய்யப்பட்ட அழுகாத தக்காளி, கண்ணீர் வரவழைக்காத வெங்காயம் கெட்டுப்போகாதகாய்கறிகள் மார்க்கெட்டில் கிடைக்கும்
*
உலகம் முழுவதிலும் வயதானோர்அதிகம் இருப்பார்கள்.
*
மனித மரபணுக்கள் மூலம்உருவாக்கப்பட்ட சூப்பர் மனித இனம் உருவாக்கப்படும். இன்றைய நிலையில் இதற்கு ஈடு இணையான தலைமுறை இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்.
*
உலக மக்கள் தொகை இன்னும் 70 ஆண்டுகளில் உச்சத்துக்கு சென்று, அங்கிருந்து கீழே சரியத் தொடங்கும். 2070ல் 900 கோடி மக்கள் இருப்பார்கள். ஆனால் 2100ல் 840 கோடி மக்களே இருப்பார்கள்.
*
பருவநிலை மாற்றம் கடுமையாக இருக்கும் என்பதால் 2100ம் ஆண்டு வாக்கில் பஞ்சம் நிலவும். உலகின் பாதிப்பேர் பட்டினியாக இருப்பார்கள்.
*10
மாதம் சுமந்து பிள்ளை பெற்றுக் கொள்வதை விட டெஸ்ட் டியூப் பேபியாக பெற்றுக் கொள்ளலாம் என்று வெளிநாட்டு பெண்கள் நினைப்பார்கள்.
*
வேலை பார்க்கும் இடமும், தங்கியிருக்கும் இடமும் ஒவ்வொருவருக்கும் நிர்ணயிக்கப்படும். அங்கு மட்டுமே அவர்கள் இருக்க வேண்டும்.
*
பொதுவாக ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு "விர்ச்சுவல் ரியாலிட்டி'வழியாக செல்லலாம் என்பதால், போக்குவரத்தை பயன்படுத்தப்பட வேண்டிய அவசியம் குறையும்.



பூமிக்கு அருகில் சுற்றுலா கோள் : விண்வெளிக்கு செல்ல ஆசைப்படுவோர், நிலவுக்கோ அல்லது வேறு கிரகத்துக்கு சென்று வருவது கடினம் என்பதால், பூமியின் வளிமண்டலத்துக்கு சற்று வெளியே, விண்வெளியில் செயற்கையாக ஒரு கோள் உருவாக்கப்படும். அங்கு சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான தங்கும் இடம், உணவு உள்ளிட்ட வசதிகள் இருக்கும். அங்கிருந்து பூமியின் அழகை சுற்றுலாப் பயணிகள் ரசிப்பார்கள். இதுபோன்று சுற்றுலா கோள்களை உருவாக்க நாடுகளிடையே போட்டி இருக்கும்.



எல்லா நாடுகளிலும் செல்லுபடியாகும் நாணயம் : ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு செல்ல வேண்டுமானால், நாம் அந்த நாட்டு நாணயத்தை மாற்றி செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது. எதிர்காலத்தில் எந்த நாட்டு கரன்சியையும் எங்கும் செலவழித்துக் கொள்ளும் வகையில் வழிமுறைகள் உருவாக்கப்படும். தனிநபர்கள், நிறுவனங்கள் சொந்தமாக கரன்சிகளை வெளியிடும் முறை உருவாகும்.



கம்ப்யூட்டர் வைரஸ்களால் போர் : கம்ப்யூட்டர் வைரஸ்களால் இரு நிறுவனங்களுக்கு இடையில் பெரிய பிரச்னை அல்லது இரு நாடுகளுக்கு இடையில் பெரிய சண்டைகூட வரலாம். கம்ப்யூட்டர்களால் மட்டுமே முழுமையாக இயங்கும் நிறுவனங்கள் உருவாகும்.இது தொடர்பாக வழக்குகளே நீதிமன்றங்களில் குவியும். ஏறத்தாழ பாதி மனிதனுக்கு சமமாக இயங்கும் கம்ப்யூட்டர் சாப்ட்வேர்களால் போராட்டங்கள் உருவாகும்.



இயற்கையிலிருந்து மின்சாரம் : எதிர்காலத்தில் மின்சாரம் வழங்கப் போவது, நிலக்கரியோ அல்லது சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய பிற உலைகளோ இல்லை. சூரிய ஒளி மூலம் எல்லா இடங்களிலும் பரவலாக மின்சாரம் எடுக்கப்படும். ஒவ்வொரு வீடும், ஒவ்வொரு அலுவலகமும் தங்களுக்குத் தேவையான சூரிய ஒளி மின்சாரத்தை தாங்களே தயாரித்துக் கொள்ளும் நிலை இருக்கும். இதனால் மின்தடை என்பது இருக்காது.



தண்ணீரால் இயங்கும் வாகனங்கள் : வானத்தில் பறக்கும் கார்எதிர்காலத்தில் இயங்கும் கார்களுக்கு டீசல் தேவையிருக்காது. அதற்குப் பதில் தண்ணீர் இருந்தால் போதுமானது. ஹைட்ரோபவர் டெக்னாலஜி மூலம் இயங்கும் இந்த கார், தண்ணீரில் உள்ள ஹைட்ரஜனிலிருந்து சக்தி பெற்று இயங்கும். சாலையில் இப்போது ஊர்ந்து செல்லும் கார்கள் இனி வானில் ஒன்றன் பின் ஒன்றாக பறந்து செல்லும் ராக்கெட் கார்களாகும்.



"ஆர்டிபிஷியல் டெலிபதி' : நம்முடைய ஐந்து புலனறிவுக்கு (பார்த்தல், கேட்டல், சுவைத்தல், நுகர்தல் மற்றும்தொடுதல்) அப்பாற்பட்டு நம் எண்ணத்தை இன்னொருவருக்கு புரிந்து கொள்ளச் செய்தல் டெலிபதி என்று அழைக்கப்படுகிறது. தற்போது டெலிபதியை சிலர் செய்து வந்தாலும், எலக்ட்ரானிக் உபகரணங்கள் மூலம் எல்லோரும் டெலிபதியை பயன்படுத்தும் காலம் வரும். நீங்கள் காணும் கனவுகளை பகுத்தறிந்து அவற்றை பலிக்க வைக்கும் கருவிகள் உருவாக்கப்படும்.



களத்தில் ரோபோ வீரர்கள் : முக்கிய உலககோப்பை போட்டிகளில் ஒரு சுற்றில், மனித வீரர்கள் ரோபோவை வென்ற பின்னர்தான் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற விதிகள் இருக்கும். மனித வீரர்களை கொண்ட கால்பந்து, கிரிக்கெட், ரக்பி அணிகள் ரோபோ வீரர்களுடன் மோத வேண்டியிருக்கும். ரோபோவுடன் வீரர்கள் சண்டை போட வேண்டிய நிலை ஏற்படலாம்.



உரிமையாளரை அடையாளம் கண்டு கொள்ளும் பொருட்கள்... : வீட்டில் உள்ள "டிவி', கையில் உள்ள மொபைல் போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள்உங்களைப் பார்த்தவுடன் நீங்கள்தான் அந்தகருவியின் உரிமையாளர் என்பதை புரிந்து கொள்ளும். இது பொருட்கள் திருடுபோவதை தடுக்கவும், தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் உதவும். இதற்கான ஆராய்ச்சிகள் தற்போது நடக்கின்றன.



செயற்கை உடல் உறுப்புகள் : உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தற்போது துவங்கிவிட்டது. ஆனால், உறுப்புகள் மனிதர்களிடமிருந்துதான் பெறும் நிலை இப்போது உள்ளது. இதை மாற்றி, மனித உடல் உறுப்பை தனியாக ஆய்வுக்கூடத்தில் வளர்த்து அதை அப்படியே தேவைப்படுவோருக்கு பொருத்தும் நிலை வரலாம். அப்போது உடல் உறுப்பு பாதிக்கப்பட்டு இறப்போர் எண்ணிக்கை பலமடங்கு குறையும்.



பசுமை நகரம் : பசுமை நகரங்களுக்கு எதிர்காலத்தில் மிகுந்தவரவேற்பு இருக்கும். வாகனங்கள் இருக்காது. பிளாஸ்டிக் இருக்காது.கழிவுப் பொருட்கள்வெளியில் இருக்காது. சுகந்த மணமும், சுத்தமான தண்ணீரும், இயற்கையுடன் சேர்ந்த வாழிடங்களுக்கு வரவேற்பு அதிகமாக இருக்கும். இந்தஇடங்களில் வாழ்வதற்காக மக்களிடையேபோட்டி இருக்கும்.

கருத்துகள் இல்லை: