வியாழன், 22 அக்டோபர், 2009

சர்வதேச குற்றவாளிகளின் சொர்க்கம் நேபாளம்


காத்மாண்டு : நேபாள நாடு, உலகளவில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளின் புதிய சொர்க்க பூமியாக மாறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நேபாள நாட்டின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஜப்பா மாவட் டத்தின் கார்பிட்டா சோதனைச் சாவடி வழியாக ஒருவர், சமீபத்தில், இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்றார். இவர், பாஸ் போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்த போதும், ஒரு வார்த்தை கூட நேபாள மொழியில் பேசாததால், சந்தேகமடைந்த போலீசார் அவரை, பாஸ்போர்ட் வினியோகிக்கப்பட்ட இடமான சன்சாரி மாவட்ட அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவரை கைது செய்த போலீசார் கூறுகையில், "கைது செய்யப்பட்டவர், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த அஷ்ரப் அலி என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரை கைது செய்ய, இன்டர்போல் போலீசார் உத்தரவு பிறப்பித்துள்ளனர்' என்றனர்.இதற்கிடையில் அஷ்ரப் அலி, மாவட்ட அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து நேபாள நாட்டின் போலி குடியுரிமை பெற்றதாக பத்திரிகை செய்தி ஒன்று தெரிவிக்கிறது. அலிக்கு போலி பாஸ்போர்ட் வினியோகிக்க பரிந்துரை செய்த, நகராட்சி அதிகாரி, கடந்த திங்களன்று கைது செய்யப்பட்டார். இந்தியா மற்றும் வங்க தேசத்தினரால் தேடப்பட்டு வரும் சர்வதேச குற்றவாளியான, சுப்ரடா பாயேன் என்பவரை, கடந்த மாதம், இதே எல்லை சோதனை சாவடியில் போலீசார் கைது செய்தனர். இவர், மேற்கு வங்கத் தில் ஆயுத கடத்தலில் ஈடுபட்ட போது பிடிபட்டு, பின் ஜாமீனில் வெளி வந்து நேபாள நாட்டில் தஞ்சம் புகுந்தவர். இவரிடமும், நேபாள நாட்டின் பாஸ்போர்ட் உள்ளது.இவரை தற்போது நேபாள நாட்டின் பத்ரபூர் சிறையில் அடைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதே போன்று, சர்வதேச அளவில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் பலர், நேபாள நாட்டில் இருந்து பிற இடங்களுக்கு செல்லும் போது கைது செய்யப்படும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனால், சர்வதேச அளவில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் பலர் நேபாளத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது.இதற்கு நேபாள நாட்டில் கடந்த 13 ஆண்டுகளாக நிலவி வரும் சட்டம் ஒழுங்கு பிரச்னை, அரசியல் நிலையற்ற தன்மை மற்றும் அதிகாரிகளிடையே பரவியுள்ள ஊழல் ஆகியவையே காரணம் என கூறப்படுகிறது. சர்வதேச அளவிலான குற்றவாளிகளுக்கு நேபாள நாட்டில் அடைக்கலம் கொடுப்பதில், அந்நாட்டின் அரசியல்வாதிகளுக்கு தொடர்பிருப்பதாகவும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன.

கருத்துகள் இல்லை: