செவ்வாய், 6 அக்டோபர், 2009

நானோ தொழில் நுட்பம்

அடுத்த 5 ஆண்டுகளில் நானோதொழில்நுட்ப துறையில் லட்சக்கணக்கில் வேலைவாய்ப்பு - ஐஐடி தலைவர் PDFக்கு மாற்ரவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…

சென்னை, அடுத்த 5 ஆண்டுகளில் நானோதொழில்நுட்பத் துறையில் லட்சக்கணக்கில் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று கான்பூர் ஐ.ஐ.டி. தலைவர் அனந்தகிருஷ்ணன் கூறினார்.

சென்னை கிண்டியில் உள்ள தமிழக அரசின் நிறுவனமான அறிவியல் நகரம் அமைப்பானது கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு நானோதொழில்நுட்பம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான 4 நாள் பயிற்சி முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளது.

இதன் தொடக்கவிழா அறிவியல் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் கான்பூர் மற்றும் ராஜஸ்தான் ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களின் தலைவர் எம்.அனந்தகிருஷ்ணன் கலந்துகொண்டு பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார். அவர் பேசும்போது கூறியதாவது:-

நானோதொழில்நுட்பம் அனைத்து துறைகளையும் ஆக்கிரமிக்கக் கூடியதாக உருவாகி வருகிறது. அறிவியல் துறையில் எதிர்காலத்தில் வேறொரு புதிய துறை உருவாக வாய்ப்பு இல்லை என்று சொல்லும் அளவுக்கு இதன் வளர்ச்சி பிரமிக்கத்தக்கதாக அமைந்துள்ளது.

அதிக சக்திவாய்ந்த பொருட்களை மிகச்சிறியதாக உருவாக்குவதுதான் நானோதொழில்நுட்பத்தின் அடிப்படை ஆகும்.

1960-களில் கம்ப்ïட்டர் என்றால் ஒரு பெரிய அறை அளவுக்கு இருந்தது. ஆனால், இன்று அதன் உருவம் மேஜை மீது வைக்கக்கூடிய அளவுக்கு சிறிதாக்கப்பட்டுவிட்டது. செயல்திறன் பலமடங்கு கூடியிருக்கிறது. செல்போன் வந்தபோது அது ஒன்றரை கிலோ எடை கொண்டதாக இருந்தது. ஆனால், இன்று அதிக செயல்திறனுடன் மிகச்சிறிய அளவிலான செல்போன்கள் வந்துவிட்டன.

தற்போது சென்னை நகரின் முக்கிய பிரச்சினையாக கார் பார்க்கிங் பிரச்சினை இருந்து வருகிறது. எதிர்காலத்தில் காரை பைகள் போன்று கைகளில் மடக்கி வைத்துக்கொண்டு, பின்னர் மீண்டும் அதை விரித்துவிட்டு செல்லக்கூடிய அளவில் கார்கள் வடிவமைக்கப்படும். இதெல்லாம் நடக்கக்கூடிய காரியமா? என்று தற்போது சிரிக்கக்கூடியதாக கூட தோன்றலாம். ஆனால் எதிர்காலத்தில் நானோதொழில்நுட்பம் காரணமாக இது உண்மையில் நடக்கும்.

நானோ என்ற கிரேக்க வார்த்தைக்கு குள்ளம் என்று பொருள். நானோ அளவுகோலை 100 கோடியில் ஒரு பங்கு என்று குறிக்கிறார்கள். அந்த காலத்தில் தமிழில் கீழ்க்காணி, கீழ்முந்திரி, இம்மி அளவு, அடிசாரம் என்றெல்லாம் அளவுகோல்கள் இருந்துள்ளன. கீழ்க்காணி என்றால் 25 ஆயிரத்து 600-ல் ஒரு பங்கு. கீழ்முந்திரி என்பது ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 400-ல் ஒரு பங்கு ஆகும்.

இதேபோல், இம்மி அளவு என்றால் 10 லட்சத்து 75 ஆயிரத்து 200-ல் ஒரு பகுதி. அடிசாரம் என்பது 18 லட்சத்து 38 ஆயிரத்து 400-ல் ஒரு பங்கு ஆகும். இவ்வளவு மிகச்சிறிய அளவுகோல்களை தமிழர்கள் எதற்காக பயன்படுத்தினார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை மருந்துகள் தயாரிக்கும்போது இவை பயன்படுத்தப்பட்டிருக்கலாம். இதுகுறித்து எல்லாம் ஆய்வு செய்யலாம்.

இவ்வாறு அனந்தகிருஷ்ணன் கூறினார்.

தொடக்கவிழா முடிவடைந்த பிறகு கான்பூர் ஐ.ஐ.டி. தலைவர் அனந்தகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில், "தகவல் தொழில்நுட்பத் துறையில் எப்படி 10 லட்சம், 20 லட்சம் என்று வேலைவாய்ப்புகள் ஏற்பட்டதோ அதைப் போன்று நானோதொழில்நுட்ப துறையிலும் அடுத்த 5 ஆண்டுகளில் லட்சக்கணக்கிலான வேலைவாய்ப்புகள் உருவாகும். இந்த துறையின் வளர்ச்சிக்கு தேவையான ஆய்வக வசதிகளை மத்திய-மாநில அரசுகளும், தனியார் துறையினரும் செய்துகொடுக்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

இந்த 4 நாள் பயிற்சி முகாமில் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த கல்லூரிகளில் படிக்கும் முதல் ஆண்டு எம்.எஸ்சி. இயற்பியல் மாணவ-மாணவிகள் 75 பேர் கலந்துகொண்டுள்ளனர். அவர்களுக்கு நானோதொழில்நுட்பம், நானோஎலக்ட்ரானிக்ஸ், நானோமெடிசின், நானோகெமிஸ்ட்ரி உள்ளிட்டவை குறித்து நிபுணர்கள் விளக்கிக் கூறுவார்கள். அவை தொடர்பான ஆய்வு மையங்களையும் மாணவ-மாணவிகள் பார்வையிடுவார்கள்.

கருத்துகள் இல்லை: