சனி, 24 அக்டோபர், 2009

திருமாவளவனை திமுக கூட்டணி தவிர்ப்பது ஏன்?


சென்னை, அக். 23: விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவனை திமுக கூட்டணியினர் தவிர்ப்பது ஏன் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
அவர் மீது முதல்வர் கருணாநிதி கோபத்தில் உள்ளதாகத் தெரிகிறது.
இதன் வெளிப்பாடாகவே, பிரதமரைச் சந்திக்க வெள்ளிக்கிழமை தில்லி சென்ற எம்.பி.க்கள் குழுவில் திருமாவளவன் இடம்பெறவில்லை என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுக தலைமையின் இந்தச் செயலால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடும் அதிர்ச்சியில் உள்ளது.
காங்கிரஸ் தலைமையின் கோபத்தை குறைக்கவே, திமுக இத்தகைய நடவடிக்கையில் இறங்கி இருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
எம்.பி.க்கள் குழுவில்... இலங்கையில் போர் முடிந்த பிறகு, அங்கு அல்லல்படும் தமிழர்களின் நிலையை ஆராய திமுக அணி எம்.பி.க்கள் அண்மையில் அங்கு சென்றனர். இந்தக் குழுவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனும் இடம்பெற்றிருந்தார்.
இலங்கையில் இருந்து சென்னை திரும்பிய பிறகு தொல். திருமாவளவன் மட்டும் இலங்கையில் தமிழர்கள் அல்லல்படுவதாகவும், அந்த நாட்டு அதிபர் ராஜபட்சவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் எனவும் அறிக்கையும், பேட்டியும் கொடுத்தார்.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, சென்னையில் வியாழக்கிழமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது.
முதல்வர் கோபம்... திருமாவளவனின் இந்த நடவடிக்கைகள் முதல்வர் கருணாநிதியை கோபப்படுத்தி இருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கை சென்ற திமுக அணி எம்.பி.க்கள் தங்களது அறிக்கையை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வெள்ளிக்கிழமை அளித்தனர். தில்லி சென்ற குழுவில் இரண்டு எம்.பி.க்கள் இடம்பெறவில்லை. ஒருவர், திமுக எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன். அவர் அலுவல் பணி காரணமாக அமெரிக்கா சென்றுள்ளதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. மற்றொருவர் தொல்.திருமாவளவன்.
கூட்டணியில் இருந்து... "தில்லி செல்லும் தகவல் அவருக்கு தெரிவிக்கப்படவில்லை' என்பதால் பிரதமரைச் சந்திக்கும் குழுவில் அவர் இடம்பெறவில்லை' என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
""திருமாவளவன் சென்னையில் வெள்ளிக்கிழமை இருந்தார். திமுக - காங்கிரஸ் எம்.பி.க்கள் குழு பிரதமரைச் சந்தித்த தகவல் பத்திரிகையாளர்கள் மூலமே தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட அந்தக் கட்சியின் எம்.பி.க்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைமை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றது. கடைசி வரை முடியவில்லை. பிரதமரைச் சந்திக்கும் தகவல் தெரிவிக்கப்படாதது ஏன்? திமுக அணியில் நாங்கள் இருப்பதை அந்தக் கட்சியின் தலைமை நெருடலாகப் பார்க்கிறதா? இந்தச் செயலை திமுக அணியில் இருந்து எங்களை வெளியேற்றுவதற்கான முயற்சியாகவே பார்க்கிறோம்'' என விடுதலைச் சிறுத்தைகள் கூறுகின்றனர்.
காங்கிரûஸ சமாதானப்படுத்த... முதல்வரின் கோபம் ஒருபுறம் இருந்தாலும், தங்கள் தலைமையை சமாதானப்படுத்தவே திருமாவளவனை திமுக ஓரங்கட்டுவதாக காங்கிரஸ் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
""இலங்கை செல்லும் எம்.பி.க்கள் குழுவில் திருமாவளவன் இடம்பெற்றதற்கு காங்கிரஸ் கட்சியின் ஒருசாரார் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்பையும் மீறி, திருமாவளவன் இலங்கை சென்றார். இந்த நிலையில், மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
இலங்கைப் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில், திமுக தலைமையின் மீதுள்ள கோபத்தை வெளிக்காட்டவே மத்திய அரசு இப்படிப்பட்ட "சோதனை' நடவடிக்கையில் இறங்கியிருக்கலாம். இந்தக் கோபத்தை தணிக்கும் வகையில் திருமாவளவனை தில்லியில் இருந்து சற்று தள்ளி வைக்க திமுக விரும்பி இருக்கலாம். அதன் எதிரொலியே, பிரதமரைச் சந்தித்த எம்.பி.க்கள் குழுவில் திருமாவளவன் இடம்பெறவில்லை'' என காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.

கருத்துகள் இல்லை: