திங்கள், 12 அக்டோபர், 2009

இந்தியாவின் மற்றொரு மணிமகுடம்

அணு ஆயுதம் சுமந்து செல்லும் பிரிதிவி- 2 ஏவுகணை : வெற்றிகரமாக ‌சோதித்தது இந்தியா

Top world news stories and headlines detail

பாலசோர்: தரையிலுள்ள ஒரு இலக்கிலிருந்து மற்றொரு தரை இலக்கை துல்லியமாக தாக்கும் வல்லமை கொண்ட பிரிதிவி -2 ஏவுகணையை இந்தியா இன்று ( திங்கட் கிழமை) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சோதனை நடத்தியது. ஐந்து நிமிட இடைவேளையில் இரண்டு ஏவுகணைகள் அடுத்தடுத்து சோதனை செய்யப்பட்டுள்ளன. சரியாக காலை 10.28 மணிக்கு முதல் ஏவுகணையும், 10.33 மணிக்கு இரண்டாவது ஏவுகணையும் ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டன. இந்த சோதனையை கண்டு பாகிஸ்தான் மிரண்டு போய் ஆட்சேபம் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரிதிவி -2 ஏவுகணை ஒரு குறுகிய தூர ஏவுகணையாகும். 9 மீட்டர் நீளமும் 1.1 மீட்டர் அகலமும் கொண்ட இந்த ஏவுகணை, 250 கி.மீ., வரை சென்று தாக்கும் வல்லமை கொண்டதாகும். திரவ எரிபொருளில் இயங்கக்கூடிய இந்த ஏவுகணையில், ஆயிரம் கிலோ எடை கொண்ட வெடிகுண்டுகளை பொருத்த முடியும். அணுஆயுதங்களையும் தாங்கிச்செல்லும் இந்த ஏவுகணைகளை கடலில் பயணிக்கும் கப்பலில் இருந்து கூட தரை இலக்கை தாக்கும் வகையில் ஏவலாம்.



கடந்த 1996ம் ஆண்டு இந்தியா, முதன்முறையாக பிருத்வி-2 ரக ஏவுகணையை சோதித்து பார்த்தது. பின், 1999ம் ஆண்டு இந்திய விமானப்படையில், இந்த ஏவுகணை சேர்க்கப்பட்டது. தொடர்ந்து ஜூன் 2000, மார்ச் 2001, டிசம்பர் 2001, ஜனவரி 2004 மற்றும் மார்ச் 2004 ஆகிய ஆண்டுகளில் பிருத்வி-2 சோதித்துப்பார்க்கப்பட்டது. கடைசியாக கடந்த 2006ம் ஆண்டு வெற்றிகரமாக பிருத்வி சோதித்துப்பார்க்கப்பட்டது. இந்தியாவிடம் இதுவரை 70 பிருத்வி-2 ரக ஏவுகணைகள் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 10 முதல் 30 ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.



கடந்த அக்டோபர் 1ம் தேதி, சீனா தனது தேசிய தினக்கொண்டாட்டத்தின் போது, 52 வகையான புதிய ஆயுதங்களை முதன்முறையாக உலகின் பார்வைக்கு வைத்து அசத்தியது. ஆசியாவின் தலைமையாகத் தானே இருக்க வேண்டும் என்ற சீனாவின் வேட்கையை இந்த செயல் உலகிற்கு எடுத்து காட்டியது. தர்மசங்கடமான இந்த சூழலில் இந்தியாவும் தனது ஆயுத பலத்தை காட்ட ஏவுகணை சோதனைகளை நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.



இதனையடுத்து, இன்று ( 12 ம் தேதி திங்கட்கிழமை ) பிருத்வி-2 ஏவுகணை, ஒரிசாவிலுள்ள சண்டிப்பூர் ஏவுகணை சோதனை மையத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. இந்தச்சோதனை வெற்றிகரமாக நடந்தது இயக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ‌தொடர்ந்து, பிரம்மோஸ், கே-15 மற்றும் அக்னி -2 ஏவுகணைகளும் விரைவில் சோதிக்கப்படவுள்ளன.

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

ம். நல்ல விசியம்தான்.

Unknown சொன்னது…

தங்களின் எண்ணங்களுக்கு என்னுடைய நன்றிகள்.