வெள்ளி, 16 அக்டோபர், 2009

மரபணு மாற்றபற்ற கத்தரிக்காய் :இந்தியா அரசு அனுமதி

மரபீனி மாற்றுக் கத்தரிக்காயின் வர்த்தக உற்பத்திக்கு மத்திய அரசின் மரபீனி பொறியியல் அங்கீகாரக் குழுமம் (GEAC) அனுமதி அளித்துவிட்டது என்றும், இது குறித்து அரசு இன்னும் முடிவு மேற்கொள்ளவில்லை என்றும் மத்திய சுற்றுச்சூழல் இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
அங்கீகாரக் குழுமம் இந்த ஆண்டு ஜனவரி மாதமே இதற்கு அனுமதி அளித்துவிட்டது என்பதும், தற்போது அமைச்சர் முன்னிலையில் நடந்த கூட்டம், வெளிப்படையாக அறிவிக்கும் முன்பாக நடந்த ஆய்வுக்கூட்டம் என்பதும் சொல்லப்படாத உண்மை. இந்த அறிவிப்பை மத்திய அரசு ஏப்ரல் மாதமே அறிவிப்பு செய்திருக்கும். ஆனால், கிரீன்பீஸ் அமைப்புகள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், மரபீனி மாற்றப்பட்ட கத்தரிக்காய் குறித்து மைக்கோ சமர்பித்த களஆய்வு அறிக்கைகளைப் பெற்று, ஆராய்ச்சியாளர்களிடம் கொடுத்து கருத்து அறிந்தன. அதில் உள்ள குறைபாடுகள் பற்றிப் பேசத் தொடங்கின. அதனால் அரசு இத்தனை மாதங்களாக இந்த அறிவிப்பைத் தள்ளி வைத்து வந்தது.மைக்கோ சமர்ப்பித்த ஆய்வுக்கூட அறிக்கைகள் முறையாகத் தயாரிக்கப்பட்டவை அல்ல என்பதும், பல முடிவுகள் சாதகமாக காட்டப்பட்டுள்ளன, அறிவியல்பூர்வமானவை அல்ல என்பதும் கிரீன்பீஸ் அமைப்புகளின் வாதங்கள். அவற்றில் அவர்கள் குறை சொல்லும் முக்கியமான மூன்று விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை:அ) மரபீனி மாறுதல் புகுத்தப்பட்ட இந்தக் கத்தரிக்காய், அதன் புரதத்தில் எத்தகைய மாற்றத்தைப் பெறுகிறது என்பதற்கும், இந்தப் புரதம் மனிதருக்குத் தீமையாக அமையாது; நச்சுத்தன்மை கட்டுக்குள் இருக்கிறது என்பதற்கும் ஆய்வு முடிவுகள் இணைக்கப்படவில்லை.ஆ) மரபீனி மாற்றப்பட்ட கத்தரிக்காயை உண்போருக்கு இனப்பெருக்கக் கோளாறுகள் ஏற்படுமா என்பது குறித்தும் ஆய்வு முடிவுகள் இணைக்கப்படவில்லை.இ) இந்த ஆய்வு 90 நாள்களுக்குள் ஏற்படும் மாற்றங்களை மட்டுமே கணக்கில் கொண்டுள்ளது. நீண்டகால ஆய்வுகள் இருந்தால்தான், புற்றுநோய் போன்ற உயிர்க்கொல்லி நோய்களுக்கான காரணியாக மரபீனி கத்தரிக்காய் மாறுகிறதா என்பதை அறிய முடியும்.கிரீன்பீஸ் அமைப்பினர் சுட்டிக்காட்டிய இந்தக் குறைபாடுகள் குறித்து மறுஆய்வுகள் செய்யப்பட்டனவா இல்லையா என்ற எந்தத் தகவலும் இல்லாமல், மத்திய அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று மட்டுமே அமைச்சர் கூறியிருக்கிறார்.
அங்கீகாரக் குழுவின் பரிந்துரையை ஏற்று அனுமதிப்பதைத் தவிர அரசு செய்யப்போவது ஏதுமில்லை என்பது மட்டும் நிச்சயம்.உலக நாடுகளில் உற்பத்தியாகும் கத்தரிக்காயில் 26 சதவீதம் இந்தியாவில் விளைகிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாம் இடத்தை வகிக்கிறது. மொத்தம் 4.72 லட்சம் ஹெக்டேரில் 76 லட்சம் டன் கத்தரிக்காய் விளைகிறது. பூச்சிகள் பாதிப்பால் உற்பத்தி இழப்பு ஏற்படுகிறது என்பது உண்மைதான். ஆனால் மரபீனி மாற்றப்பட்ட கத்தரிக்காயால் இந்திய மக்களுக்கும் இந்திய வணிகத்துக்கும் எந்த வகையிலும் லாபம் இல்லை.அமெரிக்கா மட்டுமே மரபீனி மாற்றுப் பயிர் நிறுவனங்களை ஆதரிக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் இந்த மரபீனி மாற்றப்பட்ட உணவுப்பொருள்களுக்குத் தடை விதித்துள்ளது. இந்தத் தடை உலக வர்த்தக நிறுவனத்தின் (ரபஞ) சட்ட திட்டத்துக்கு எதிரானது. இருந்தாலும்கூட, தைரியமாகத் தடை விதித்துள்ளது. தடையை நீக்க வேண்டும் என்று மான்சான்டோ, மைக்கோ உள்ளிட்ட அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றன.இந்தியாவில் 56 உணவுப் பயிர்களுக்கு மரபீனி மாற்றுப் பயிர் களஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் நெல், சோளம், தக்காளி, உருளை ஆகியனவும் உள்ளன. இதில் முதல் வர்த்தக உற்பத்தி அனுமதியைப் பெறுவது மரபீனி மாற்றுக் கத்தரிக்காய்.இந்தியாவில் மரபீனி மாற்றப்பட்ட கத்தரிக்காய் சந்தைக்கு வரும்போது, அவற்றின் மீது லேபிள் ஒட்டப்படுமா என்பது குறித்து இன்னும் மத்திய அரசு விளக்கம் சொல்லவில்லை. அத்தகைய சட்டம் கொண்டுவரப்பட்டாலும், உற்பத்தி அதிகம்; விலை மலிவு என்ற காரணத்தால் நாட்டுக் கத்தரிக்காயுடன் கலந்து விற்கப்படும் ஆபத்து நிறையவே இருக்கிறது.மரபீனி மாற்றுக் கத்தரிக்காயின் வர்த்தக உற்பத்திக்கு அப்படியென்ன தேவை இருக்கிறது? என்று கேட்டால் அதற்கு கிரீன்பீஸ் அமைப்பினர் சொல்லும் முதல் காரணம், இதன் மூலம் காப்புரிமை என்கிற பெயரில் விதைகளை இந்திய விவசாயி பயன்படுத்தும்போதெல்லாம் இதை அறிமுகப்படுத்திய பன்னாட்டு நிறுவனத்துக்கு "ராயல்டி' செலுத்தியாக வேண்டும். இரண்டாவதாக, அமெரிக்காவில் மரபீனி மாற்றப்பட்ட உணவுப் பொருள்களுக்கு வரவேற்பில்லை. அங்குள்ள விவசாயிகளும் அதை விரும்புவதில்லை. ஆகவே அவர்களது தொழில்நுட்பத்தை இந்தியாவில் விற்க முயற்சிக்கிறார்கள்.உலகமயமாக்கல், பொருளாதார சீர்திருத்தம் என்கிற பெயரில் "ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி' என்கிற கதையாகிவிட்டது இந்தியாவின் நிலைமை. திட்டமிட்டு விவசாயத்தை அழிக்க முனைந்து செயல்படுகிறார்கள். என்ன அரசோ? என்ன ஆட்சியோ?

2 கருத்துகள்:

Sundararajan P சொன்னது…

மரபணு மாற்று கத்தரிக்காய் குறித்து விழிப்புணர்வு செய்திகளை பதிவு செய்தமைக்கு நன்றி.

அடுத்த ஆண்டு துவக்கத்தில் இது குறித்து விரிவான விவாதங்களை நடத்திய பின்னரே மரபணு மாற்று உணவுப்பொருட்களை சந்தையில் அனுமதிப்பது குறித்து இறுதி முடிவு மேற்கொள்ளப்படும் என்று மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

நாம் சுறுசுறுப்பாக செயல்பட்டு மரபணு மாற்றுத்தொழில் நுட்பத்தால் ஏற்பவிருக்கும் தீய விளைவுகள் குறித்த மக்களிடம் எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய நேரமிது.

-சுந்தரராஜன்,
பூவுலகின் நண்பர்கள்
www.poovulagu.org

ரோஸ்விக் சொன்னது…

I don't find any adult content in your blog. then why you keep adult content on? make it off from your blogger settings.

the sameway you can switch of the word verification for comments. if you do so, you may get more reply comments.

Thanks
http://thisaikaati.blogspot.com