செவ்வாய், 13 அக்டோபர், 2009

ஐ.பி.எஸ்., அதிகாரியான ஏழை விவசாயி மகன்’

ரயிலில் குடும்பத்துடன் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்யும் எளிமையான ஐ.பி.எஸ்., அதிகாரி டி.கே.ராஜேந்திரன்.


சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றது குறித்த தனது அனுபவங்களை அவர் பகிர்ந்துகொண்டதாவது: திருவண்ணாமலை அருகில் இருக்கும் ஓலைப்பாடி கிராமத்தில் பிறந்தேன். மொத்தமே நூறு குடும்பம்தான் இருக்கும். அப்பா விவசாயி. அம்மாவுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. தமிழ் மீடியம் ஸ்கூல்ல தான் படித்தேன்.


காலையிலேயே எழுந்து மாடுகளை மேய விடணும். அப்புறம், அப்பா பால் கறந்து கொடுப்பார். அதை வாடிக்கையாளர்கள் வீட்டில் ஊற்றிவிட்டு, ஸ்கூலுக்குப் போவேன். எங்க ஊரில், மழை பெய்ஞ்சு கிணறு நிறைஞ்சா தான் விவசாயம். இல்லாட்டி, கஷ்ட ஜீவனம் தான். ஸ்கூல்ல, ஹரிகிருஷ்ணன்னு ஒரு ஆசிரியர் இருந்தார். அவர் தான் ரொம்ப ஊக்கப்படுத்துவார். நல்ல புத்தகங்களைப் படித்து, அதிலுள்ள கருத்துக்களைச் சொல்வார். அவரால்தான், நன்றாகப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.


பட்ட மேற்படிப்பிற்காக, சென்னை பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். கோடம்பாக்கத்தில் இருந்த பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில் தங்கிப் படிச்சேன். அப்பா கஷ்டப்பட்டு உழைத்து அனுப்புற பணத்தை, கொஞ்சம் கூட வீணாக்கக் கூடாதுன்னு, ரொம்ப சிக்கனமா இருப்பேன்.
கல்லூரிப் படிப்புடன், மத்திய அரசுப் பணிக்கான தேர்வையும் எழுதினேன். அதில் தேர்வாகி, குருப் டி அதிகாரியாக எனக்கு வேலை கிடைத்தது. ஆனால், அதில் சேர எனக்கு விருப்பமில்லை. ஐ.பி.எஸ்., அதிகாரியாக வேண்டும் என்பது தான் என் லட்சியம். இன்னும் அதிகமாக படித்தேன். ஒரு நாளுக்கு 14 மணி நேரம் படிப்பேன்.


ஐ.பி.எஸ்., தேர்வு எழுதி அதில் தேர்ச்சி அடைந்து டில்லிக்கு நேர்முகத் தேர்வுக்கு சென்றேன். டில்லியில் இன்டர்வியூ முடிந்து எங்க கிராமத்துக்கு வந்து விவசாயம் செய்ய ஆரம்பிச்சிட்டேன். ரிசல்ட் வந்ததே தெரியாது. ஒரு நாள், வயலில் நின்னுக்கிட்டு இருந்தபோது, எங்கப்பா ஒரு கடிதம் கொண்டு வந்தார். உடனே சைக்கிளை எடுத்துக்கொண்டு, வேட்டவலம் லைப்ரரிக்குச் சென்று, ஒரு வார ஆங்கில நாளிதழ்களைப் பார்த்து, நான் ஐ.பி.எஸ்., அதிகாரியா தேர்வானதை உறுதிப்படுத்திக்கிட்டேன். இதை முதல்ல யார்கிட்ட சொல்றதுன்னு தெரியல. எங்கப்பா, அம்மாகிட்ட சொன்னா அவங்களுக்கு புரியல. எனக்கு படிப்பு சொல்லிக் கொடுத்த ஹரிகிருஷ்ணன் சார் வீட்டுக்கு ஓடிப்போய் சொன்னேன். என் வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியான நாள் அது.

2 கருத்துகள்:

யூர்கன் க்ருகியர் சொன்னது…

great!

Unknown சொன்னது…

தங்களின் எண்ணங்களுக்கு என்னுடைய நன்றிகள்.