வியாழன், 24 டிசம்பர், 2009

ஆர்.எஸ்.எஸ்.யின் வெற்றியா?அத்வானியின் தோல்வியா?


ராஷ்ட்ரீய சுயம் சேவக் சங்கம் ​(ஆர்.எஸ்.எஸ்.)​ விரும்பியபடியே மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து எல்.கே.அத்வானி விலகிவிட்டார்.​ ஆனால்,​​ இதன் மூலம் அத்வானியின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகிவிட்டது என்று அர்த்தம் கொள்ள முடியாது.​ 

ஆர்.எஸ்.எஸ்.,​​ பா.ஜ.க.,​​ அத்வானி இணைந்து கட்சியை வலுப்படுத்த புதிய செயல்திட்டத்தை உருவாக்கியுள்ளனர்.​ அதிகாரப் பங்கீட்டு அடிப்படையிலான இத்திட்டம் நல்ல திட்டம்தான்.பாஜகவின் அடுத்த தலைவர் நிதின் கட்கரி என்று ஆர்.எஸ்.எஸ்.​ தலைவர் மோகன் பாகவத் அறிவித்தபோது,​​ அதை அத்வானி உள்ளிட்ட பலரும் ஏற்றுக்கொண்டனர்.​ நிதின் கட்கரியைத் தேர்ந்தெடுத்ததில் தனக்கும் முக்கிய பங்கு உண்டு என்று அத்வானி கூறியிருந்தார்.​ 

அதேபோல்,​​ அத்வானி தன்னை அணுகி,​​ கட்சித் தலைவர் பதவியை ஏற்குமாறு கேட்டுக் கொண்டதாக நிதின் கட்கரியும் ஒப்புக்கொண்டிருந்தார்.​ இதன் மூலம் தனக்கு அத்வானியின் ஆதரவு உள்ளது என்பதை மறைமுகமாக நிதின் சுட்டிக்காட்டியுள்ளார்.நாடாளுமன்றத்தில் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களாக யார் இருக்க வேண்டும் என்று தீர்மானிப்பதிலும் அத்வானிக்கு முக்கிய பங்கு இருந்தது.​

மக்களவையில் அத்வானிக்குப் பதிலாக எதிர்க்கட்சித் தலைவராக சுஷ்மா ஸ்வராஜும்,​​ மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக அருண் ஜேட்லியும் தொடர்ந்து நீடிப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.​ இதை சங்கப்பரிவாரங்களின் தலைவர்களும் ​ ஏற்றுக்கொண்டுவிட்டனர்.பாஜகவின் சட்டவிதிகள் திருத்தியமைக்கப்பட்டு,​​ நாடாளுமன்றக் குழு தலைவர் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டு,​​ அதன் தலைவராக எல்.கே.அத்வானி இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.​ 

இதற்கு அத்வானியின் எதிர்ப்பாளர்களான மூத்த தலைவர்கள் பலர் எதிர்ப்புத் தெரிவித்தும் ஒன்றும் நடக்கவில்லை.​ ஏனெனில் இதற்கு ஆர்.எஸ்.எஸ்.​ எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்பதுதான்.பாஜக நாடாளுமன்றக் குழு தலைவராக எல்.கே.அத்வானி தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும்,​​ ஆர்.எஸ்.எஸ்.​ அமைப்பு இதில் அதீத ஆர்வம் காட்டவில்லை.​ கட்சியில் எந்தச் சலசலப்பும் இல்லாமல் வழிநடத்திச் செல்ல அவரால்தான் முடியும் என்று நினைத்திருக்கலாம்.

அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பராக் ஒபாமா,​​ தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஹிலாரி கிளின்டனுக்கு வெளியுறவு அமைச்சர் பதவி கொடுத்து அவரது ஆதரவை உறுதி செய்தது போலத்தான் இதுவும்.​ இல்லையெனில் அத்வானியின் ஆதரவாளர்களான அடுத்த தலைமுறையினர் நிதின் கட்கரிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும்.

சோனியா காந்தி எம்.பி.யாவதற்கு முன்னதாகவே அதாவது 1998 ல் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் பதவியை அவருக்கு அளிப்பதற்காக காங்கிரஸ் கட்சி சட்டவிதிகளைத் ​ திருத்தி அமைத்தது.​ அதன் பிறகுதான் சோனியா காந்தி,​​ கட்சியில் முக்கியத்துவம் பெற்று அதிக சக்திவாய்ந்தவராக உருவானார்.​ 1999,​ 2004,​ 2009 தேர்தல்களிலும் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் அளவுக்கு வலுப்பெற்றது.

இப்போது பாஜகவும் சட்டவிதிகளைத் திருத்தியமைத்து அத்வானிக்குப் புதிய பதவியைப் பெற்றுத் தந்துள்ளது.​ ஆனால்,​​ சோனியாவுக்கும் அத்வானிக்கும் வித்தியாசம் உள்ளது.​ சோனியா,​​ ஆளும் காங்கிரஸ் அரசின் முக்கிய சக்தியாக இருந்து வருகிறார்.​ அத்வானி,​​ பாஜகவின் நம்பிக்கைக்குரிய ஆலோசகராகப் பார்க்கப்படுகிறார்.புதிய பதவிக்கு வந்துள்ளதன் மூலம் அத்வானி அரசியலிலிருந்து ஓய்வுபெற்றுவிடுவார் என்று யாரும் கருத வேண்டாம்.​ 

அதாவது பாஜக நாடாளுமன்றக் கட்சித் தலைவரானதன் மூலம் மக்களவை,​​ மாநிலங்களவை இரண்டிலும் எதிர்க்கட்சித் தலைவராக யாரை நியமிக்கலாம் என்று முடிவு செய்யும் அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.​ அதேபோல அவர்களை நீக்கவும் அவருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.​ அவசரப்பட்டு அவர் எந்த முடிவும் எடுக்கமாட்டார் என்றாலும்,​​ முக்கிய முடிவுகள் எடுக்கும் விஷயத்தில் அத்வானியை கட்சி மேலிடம் ஒதுக்கிவிட முடியாது என்பதுதான் இதன் சாராம்சம்.

பாஜக நாடாளுமன்றக் கட்சித் தலைவராக அத்வானி இருப்பதால் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான சுஷ்மாவுடன் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி இணைந்து செயல்பட வழிவகுக்கும்.​ இருவருக்கும் காபினெட் அமைச்சருக்கு இணையான அந்தஸ்து,​​ சலுகைகள் கிடைக்கும் என்றாலும்,​​ மரபின் அடிப்படையில் பார்த்தால் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியைவிட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி சற்று உயர்ந்ததுதான் என்று கூற வேண்டும்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் உள்ளவர்களுக்கு அரசு நிர்வாகத்தில் உரிய அங்கீகாரம் கிடைக்கும்.​ வெளிநாட்டிலிருந்து முக்கியப் பிரமுகர்கள் யாராவது வந்தால்,​​ இங்குள்ள எதிர்க்கட்சித் தலைவர்களையும் மரியாதை நிமித்தம் சந்திப்பதுண்டு.​ மேலும்,​​ அரசு ஏதாவது குழு நியமித்தால் அதில் எதிர்க்கட்சித் தலைவருக்கும் முக்கிய இடம் இருக்கும்.​ முக்கிய நியமனங்களில் எதிர்க்கட்சித் தலைவரைக் குழுவில் சேர்க்காமல் எந்த முடிவையும் அரசால் எடுக்க முடியாது.அத்வானியின் ஆதரவு இல்லாமல் சுஷ்மா ஸ்வராஜ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியிருக்க முடியாது.​ 

அதுமட்டுமல்ல;​ அப்பதவியில் அவர் தொடர்ந்து நீடிக்க வேண்டுமானாலும் அதற்கு அத்வானியின் ஆதரவு தேவை.​ எனினும் அத்வானிக்குப் பதிலாக சுஷ்மாவைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் கட்சிக்குள் நிலவிவரும் உட்பூசலுக்கு தீர்வு காண முடியாது.முதலாவதாக,​​ பாஜகவில் அடுத்த தலைவர் யார் என்கிற சர்ச்சை எழுந்தது.​ அதற்கு ஒருவழியாகத் தீர்வுகாணப்பட்டுவிட்டது.​ இரண்டாவதாக,​​ பாஜகவின் அன்றாடச் செயல்பாடுகளில் ஆர்.எஸ்.எஸ்.​ இயக்கத்தின் தலையீடு இருக்கக்கூடாது என்று கட்சியின் முக்கியத் தலைவர்கள் சிலர் கருத்துத் தெரிவித்தனர்.​ 

பாஜகவின் முக்கியப் பதவியில் அத்வானி நீடிப்பது சங்கப்பரிவாரங்கள் தலையீட்டை எதிர்ப்பவர்களின் கரங்களை வலுப்படுத்தும்.ஆர்.எஸ்.எஸ். ​ ஆதரவாளரான நிதின் கட்கரி கட்சித் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.​ கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பதவிக்கு ஆர்.எஸ்.எஸ்.​ பிரசாரகர்களை அவர் நியமிக்கக்கூடும்.அத்வானி உள்ளிட்ட முக்கிய தலைவர்களைப் பதவியிலிருந்து அகற்றும் அல்லது இடைநீக்கம் செய்யும் அதிகாரமும் அவருக்கு உள்ளது.​ 

ஆனாலும்,​​ சங்கப்பரிவாரங்கள் தங்கள் இஷ்டம்போல் செயல்பட முடியாது.மூன்றாவதாக,​​ பாஜகவின் நிலைப்பாடு என்ன?​ நாங்கள் மாறுபட்டவர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்ள பாஜக என்ன செய்யப்போகிறது?​ இளைய தலைமுறையினரின் வாக்குகளைப் பெற அக்கட்சி என்ன செய்யப்போகிறது?​ என்பது முக்கியமான விஷயமாகும்.பாஜகவில் உள்கட்சிப் பூசல்கள் அதிகரித்து,​​ அக்கட்சிக்குக் கெட்டபெயர் ஏற்பட்ட நேரத்தில் புதிய தலைவராக நிதின் கட்கரி பொறுப்பேற்றுள்ளார்.​ 

சமீபத்தில் நடைபெற்ற தேர்தல்களில் அக்கட்சி தோல்வியையே சந்தித்துள்ளது.​ விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் நாட்டில் தலைதூக்கிய போதிலும் ஆளும் காங்கிரஸ் கட்சியை திக்குமுக்காட வைக்கும் அளவுக்கு பாஜகவால் ஏதும் செய்ய முடியவில்லை.சங்கப்பரிவாரங்களைத் திருப்திப்படுத்தி,​​ எதிர்ப்பாளர்களைச் சமாளித்து கட்சியை நடத்திச் செல்லவேண்டிய பொறுப்பு,​​ புதிய தலைவரான நிதின் கட்கரிக்கு உள்ளது.​ மாநில அளவில் தலைவராக அவர் பேசப்பட்டவர்தானே தவிர தேசிய அளவில் அவர் எந்தப் பொறுப்பையும் இதுவரை வகிக்கவில்லை.

நாகபுரியைச் சேர்ந்த நிதின் கட்கரிக்கு ஆர்.எஸ்.எஸ்.​ பின்னணி இருக்கிறது.​ அதன் தலைவர் மோகன் பாகவத்துடன் சேர்ந்து பணியாற்றினாலும்,​​ அவருடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகச் சொல்ல முடியாது.​ எனினும் 52 வயது இளைஞரான நிதின்,​​ பாஜகவுக்கும் சங்கப்பரிவாரங்களுக்கும் பாலமாக இருப்பார் எனத் தெரிகிறது.​ 

காங்கிரசில் ராகுல் காந்தி எப்படி இளைஞர் படையை வழிநடத்திச் செல்கிறாரோ அதேபோல நிதின் கட்கரியும் பாஜகவை வழிநடத்திச் செல்வார் என்ற எதிர்பார்ப்பு பலரிடம் உள்ளது.பாஜகவில் அடல் பிகாரி வாஜ்பாய்,​​ எல்.கே.அத்வானி ஆகிய இருவரும் ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்கு மேலாக கட்சியின் வளர்ச்சிக்குப் பாடுபட்டு வந்துள்ளனர்.​ சில சமயங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டபோதிலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் திறம்படச் செயலாற்றி வந்தனர்.​ 

அவர்களின் காலம் முடிவுக்கு வந்துவிட்டது.புதிய தலைவரான நிதின்,​​ கட்சியில் எந்தக் கோஷ்டியையும் சேராதவர்.​ அது அவருக்குச் சாதகமான அம்சம்.​ அவரது தலைமையில் பாஜக புதிய கட்டத்தில் அடியெடுத்து வைக்கிறது.​ வாஜ்பாய்க்கு அடுத்தபடியாக கட்சியில் சிறந்த பேச்சாளராக இருப்பவர் சுஷ்மா ஸ்வராஜ்,​​ அதேபோல அருண் ஜேட்லியும் புதிய உத்திகளுடன் செயல்படக்கூடிய திறன்பெற்றவர்.​ இவர்களை அரவணைத்து நிதின் கட்கரி கட்சியை எப்படி கொண்டு செல்லப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கருத்துகள் இல்லை: