திங்கள், 21 டிசம்பர், 2009

புது பொலிவுடன் சென்னை மெரீனா கடற்கரை


மெரினா கடற்கரை ரூ.26 கோடியில் உலக தரத்துக்கு இணையாக அழகுபடுத்தப்பட்டுள்ளது. இதை முதல்வர் கருணாநிதி நேற்று திறந்து வைத்தார்.

உலகின் 2வது நீண்ட கடற்கரையான மெரினாவுக்கு தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். கடந்த 1884ல் அன்றைய கவர்னர் மவுண்ட் ஸ்டூவர்ட் எல்பின்ஸ்ட்ன் கிராண்ட் டஃப் என்பவர்தான் கடற்கரையில் முதன்முதலாக அழகான நடைபாதை அமைத்து ‘மெரினா‘ என்று பெயர் சூட்டினார். ‘‘பெருமை வாய்ந்த மெரினா கடற்கரை, உலக தரத்துக்கு இணையாக அழகுபடுத்தப்படும்’’ என்று முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார்.

அதன்படி, முதல் கட்டமாக தலைமை செயலகம் எதிரில் ரூ.10 கோடியில் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்ட நடைபாதை, அழகிய புல்வெளி, வண்ண பூங்கா அமைக்கப்பட்டது. இதை முதல்வர் கருணாநிதி கடந்த மே மாதம் திறந்து வைத்தார்.

இரண்டாவது கட்டமாக காமராஜர் சாலையில் நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை ரூ.25.92 கோடியில் 3.10 கி.மீ. தூரத்துக்கு அழகுபடுத்தப்பட்டது.

கிரானைட் கற்கள் பதிக்கப்பட்ட நடைபாதை, அலங்கார விளக்குகள், புல்வெளிகள், நீரூற்று, நடைபயிற்சிக்கான தனிபாதை, வாகனங்கள் நிறுத்த இடம், நவீன கழிப்பிட வசதி என பல அம்சங்களுடன் மெரினா கடற்கரை அழகுபடுத்தப்பட்டுள்ளது.  கடல் பறவை வடிவில் சாலை விளக்குகள், அலங்கார மின்விளக்குகள் பொருத்தப்பட்டு மெரினா கடற்கரை ஜொலிக்கிறது.

அழகுபடுத்தப்பட்ட மெரினா கடற்கரை திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். காந்தி சிலை அருகே அமைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை, முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். பின்னர், அவர் சர்வீஸ் சாலையில் காரில் சென்று கடற்கரை அழகை ரசித்தார். காமராஜர் சாலையில் செம்மொழி அலுவலகம் எதிரே அமைக்கப்பட்டிருந்த பெயர் பலகையையும் முதல்வர் திறந்து வைத்து மரக்கன்று நட்டார்.

மெரினாவை அழகுபடுத்த மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து முதல்வரிடம் மேயர் மா.சுப்பிரமணியன், மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி ஆகியோர் விளக்கினர். நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஆ.ராசா, அமைச்சர் ஆற்காடு வீராசாமி உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள், தலைமை செயலர் ஸ்ரீபதி, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை காந்தி, காமராஜர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் தமிழ்ச் சான்றோர்களின் சிலைகள் அமைந்துள்ளன. இந்த சிலைகள் உள்ள பகுதியை சுற்றிலும் கிரானைட் கற்கள் பதித்து அழகுபடுத்தப்பட்டுள்ளது. சிலைகளின் மீது ஒளிவீசும் வகையில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை: